2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பாஜகவிற்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் இருந்த கட்சிகளில் ஒன்றான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைப் பற்றியும் அதன் தலைவரான ‘தீதி’ என்று அழைக்கப்படும் மம்தா பானர்ஜி பற்றியும், அவரே ஒரு பாசிச மனோபாவம் உள்ளவர் என்பதைப் பற்றியும், இடதுசாரி இயக்கங்களுக்கு எதிராக கொடூரமான தாக்குதல்களை திட்டமிட்டு நடத்துகின்ற கிரிமினல் மாஃபியா கும்பலின் தலைவி என்பதையும் விமர்சனமாக முன் வைத்திருந்தோம்.
கொடூரமான கொலைகார பாசிச பயங்கரவாத அமைப்பான பாஜகவிற்கு எதிராக போராடுவதற்கு குறைந்தபட்ச ஜனநாயக சிந்தனை கொண்ட சக்திகளை ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள பாசிச பாஜகவிற்கு எதிரான அரசியல் கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு இந்தியா கூட்டணி முயற்சித்தது. ஆனால் பாசிச குணம் கொண்ட மம்தா போன்றவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இருப்பினும் மேற்கு வங்க தேர்தலிலேயே இடதுசாரிகள், காங்கிரசு ஓரணியாகவும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனியாகவும் போட்டியிட்டதை தான் நாம் பார்த்தோம். இதற்கு முக்கிய காரணம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவியான மம்தா இந்த வகையிலான கூட்டமைப்பை கட்டுவதில் விருப்பமின்றியே இருந்தார்.
யார் இந்த மம்தா?
”1990-களில் நரசிம்மராவ் அமைச்சரவையில் மனித வளத்துறை அமைச்சர், வாஜ்பாயின் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சர், 2009 ஐ.மு.கூ-II அரசில் மீண்டும் ரயில்வே அமைச்சர் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசில் பங்கேற்று, இமேஜை உயர்த்தும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அதுவும் கடைசி காலங்களில் பதவிகளை தூக்கி எறிந்து போராட்டம் நடத்தியவர் மம்தா பானர்ஜி. பொதுக் கூட்ட மேடையில் தனது தலைக்கு தானே சுருக்குப் போட்டுக் கொள்ளப் போவதாக மிரட்டுவது, நாடாளுமன்றத்தில் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் முகத்தில் விசிறி அடிப்பது, மாற்றுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் சட்டைக் காலரைப் பிடித்து கதறக் கதற வெளியில் இழுத்துக் கொண்டு தள்ளுவது போன்றவையெல்லாம் தீதியின் அதிரடி அரசியல் காட்சிகள்.
ஆனால் இந்த அதிரடி காட்சிகளே மேற்குவங்கத்து மக்களை திரட்டுவதற்கு போதுமானதாக இருந்தது. அந்த அளவுக்கு போலிக் கம்யூனிஸ்டுகளின் மீது அவர்களுக்கு வெறுப்பு. இத்தகைய வரலாற்று விபத்துதான் தீதியை உருவாக்கிய அரசியல் களம் மற்றும் காலம். அத்தகைய “தீதிய” போராட்டங்களின் ஒரு பகுதியாக 1997-ம் ஆண்டு காங்கிரசிலிருந்து வெளியேறி அகில இந்திய திரிணாமூல் காங்கிரசை ஆரம்பித்தார் மம்தா. மேற்கு வங்கத்தில் 1977 முதல் ஆட்சியில் இருந்த ஜோதிபாசு-புத்ததேப் பட்டச்சார்யா அரசுகள் மக்களுக்கு எதிரான குற்றங்களின் சுமையில் மண்ணைக் கவ்விய போது 2011-ல் மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக ஆட்சி பீடத்தில் ஏறி அம்மாநிலத்தில் ‘ஜனநாய’கத்துக்கு புத்துயிர் ஊட்டினார். அந்த ஊட்டலில் கதற ஆரம்பித்த ஜனநாயகம் இன்று வரை கத்துவதை நிறுத்தவில்லை. தீதியும் அதை நெரிப்பதை நிறுத்தவில்லை” என்று 2014 ஆம் ஆண்டு வாக்கிலேயே எமது இணையதளத்தில் எழுதி இருந்தோம்.
மேற்குவங்க மாநிலத்தில் பதவியேற்ற காலத்திலிருந்து தனக்கு எதிராக கேள்வி கேட்கின்ற பத்திரிக்கையாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் யாராக இருந்தாலும், ’நீ என்ன மாவோயிஸ்ட் கட்சியைச் சார்ந்தவரா’ என்று எதிர் கேள்வி எழுப்பும் மம்தா பானர்ஜி அதற்கு மேலாக சென்று தன்னை விமர்சிக்கின்ற பேராசிரியர்களை உதைப்பதற்கு தனது மாணவர் அமைப்பை தயார்படுத்தி ரவுடித்தனங்களில் ஈடுபட்டே வந்துள்ளார்.
திருத்தல்வாத கம்யூனிஸ்டுகள் மேற்குவங்கத்தை ஆண்ட போது முதலீடு செய்ய விரும்பாத டாட்டா உள்ளிட்ட நிறுவனத்தினர் மட்டுமின்றி தமிழக முதலாளியான டிவிஎஸ் உட்பட பலரும் முதலீடு செய்வதற்கு முன் வந்தது தற்செயலான செயல் அல்ல.
அதேபோல கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக களமாடிய ’வீராங்கனை’ என்ற முறையிலேயே முதலாளித்துவ ஊடகங்களும், அமெரிக்காவிலிருந்து வெளியாகின்ற டைம்ஸ் பத்திரிகை உட்பட அனைவரும் மம்தாவை ஆதரித்தே எழுதியுள்ளனர். இவை அனைத்தும் மம்தாவின் ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கைகளுக்கு கிடைத்த அங்கீகாரங்கள் தான் என்பதை விமர்சித்து புதிய ஜனநாயகம் இதழில் எழுதியுள்ளோம் என்ற போதிலும், தற்போது கொல்கத்தா பயிற்சி மருத்துவர் விவகாரத்தில் மம்தா பானர்ஜியின் அணுகுமுறை அவர் பாசிச மனோபாவம் கொண்டவர் தான் என்பதை மீண்டும் நிரூபிக்கின்ற வகையிலேயே உள்ளது.
ஆர்ஜி கர் என்ற அரசு மருத்துவமனையில் பயிற்சி மாணவர் 31 வயதில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலையும் செய்யப்பட்டுள்ளார் என்பது உடல் கூறாய்வு மூலம் வெளியே தெரிய வருகின்றது.
இந்த கொடூரமான கொலை நடந்து ஒன்பது மணி நேரம் வரை இதுகுறித்து யாருக்கும் தகவல் கிடைக்கவில்லை. அதன் பிறகு இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் அவர்களது மகள் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக முதலில் கூறப்பட்டது. சிறிது நேரம் கழித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகப் போனில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த ஜூனியர் டாக்டரின் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்தபோது போலீஸ் நடவடிக்கை நடப்பதாகக் கூறி மூன்று மணி நேரம் வேறு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.
படிக்க:
♦ கொல்கத்தா மருத்துவர் பாலியல் வல்லுறவு கொலை! நீதிக்கான மருத்துவர்களின் போராட்டம்!
♦ குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை சட்டபூர்வமாக்கும் ஈராக்!
இந்த கொலைகார ஆர்ஜி கர் கல்லூரி முதல்வரான சந்தீப் கோஷின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படாமல், கொல்கத்தாவில் உள்ள தேசிய மருத்துவக் கல்லூரியின் முதல்வராக அவர் நியமிக்கப்பட்டார். மம்தாவின் இந்த முடிவானது, போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் ஜூனியர் டாக்டர்களின் கோபத் தீயில் எண்ணெய் வார்த்தது.
மேற்கு வங்க மாநிலத்தில் மாணவர்கள், பெண்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வீதியில் இறங்கி போராடத் துவங்கினர்.
இதனை பயன்படுத்தி கொண்ட மம்தா பானர்ஜி தனது ஆதரவாளர்களை திரட்டி மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியுள்ளார். ”திடீரென மருத்துவமனை வளாகத்தில் 7000 பேர் குவிந்திருக்கிறார்கள். தாக்குதல் தொடர்பான வீடியோ கிடைத்துள்ளது. கண்ணீர் புகைக் குண்டுகளை காவலர்கள் வீசுகிறார்கள். இந்த தாக்குதலில் 15 காவலர்கள் காயமடைந்தனர். ஆனால், சம்பவம் நடந்த இடம் பாதுகாப்பாக இருந்துள்ளது” என்று நீதிபதி இந்த சம்பவம் பற்றி விமர்சித்துள்ளார்.
”ஆர்.ஜி.கர் மருத்துவமனை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தூக்கிலிட வேண்டும். வங்கதேசத்தைப் போல இங்கும் எனது ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடக்கின்றன. எனக்கு அதிகாரப் பேராசை இல்லை. இந்தச் சம்பவத்தில் சி.பி.எம் மற்றும் பா.ஜ.க-வினர் அரசியல் செய்கின்றனர். ஆர்.ஜி மருத்துவமனை மீதான தாக்குதலின் பின்னணியில் இவர்களே உள்ளனர்” என்று அரை உண்மையை பேசுகிறார். கொல்கத்தாவில் நடந்த இந்த பாலியல் வன்முறை- படுகொலையை பயன்படுத்திக் கொண்டு பாஜக கலவரத்தில் ஈடுபட முயல்வது உண்மைதான். அதிர்ச்சியூட்டும் படியான பொய்யான தகவல்களை கோடி மீடியா மூலம் பரப்பி மேற்கு வங்க அரசை கலைப்பதற்கான அரசியல் ஆயுதமாக இந்த பிரச்சினையை பயன்படுத்தி வருகிறது பாஜக.
ஆனால், மேற்குவங்க மாநிலத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள இந்த மருத்துவமனையை சேர்ந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தனது பொறுப்பை தட்டிக் கழிக்கின்ற மம்தா இதற்கு எதிராக போராடுகின்ற இடதுசாரிகள் மீது பழி போடுவதும் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மீது கொடூரமான முறையில் தாக்குதலை தொடுப்பதும் என்ற வகையிலேயே செயல்பட்டுக் கொண்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் தீதி ஆட்சிக்கு வந்தது முதல் திருத்தல்வாத கம்யூனிச இயக்கங்களைச் சார்ந்தவர்கள் போராடுவதை கொடூரமான முறையில் ஒடுக்குவதும் தனது கட்சி குண்டர்களையும், கிரிமினல்களையும் கொண்டு தெருச்சண்டைகளில் ஈடுபடுவதும் தொடர்ச்சியான வாடிக்கையாகியுள்ளது. பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணியில் இருக்கிறார் என்பதாலேயே அவரது பாசிச நடவடிக்கைகளை ஒரு போதும் ஆதரிக்க முடியாது.
முகம்மது அலி.