ஃபோர்டு: பன்னாட்டு நிறுவனமும், பலியாகும் தொழிலாளர்களும்!


”எனது பாட்டியை கேன்சருக்கு பறிகொடுத்துவிட்டேன்”. நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மாசுபடுத்தப்பட்ட நிலத்தில் என் வாழ்நாள் முழுவதையும் கழித்திருக்கிறேன். எனது முன்னோர்கள் வெறுங்காலோடு நடந்து வளர்ந்ததை போன்றதொரு நிலத்தை நான் விரும்புகிறேன். எனது சமூகத்திற்கான எதிர்காலத்தை உங்களால் தர முடியுமா?” மேற்கண்ட கேள்விகள் ஃபோர்டு நிறுவனத்தை நோக்கி எழுப்பப்பட்டவை. ஃபோர்டு நிறுவனம் தனது 119- வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்த 16.06.2022 தேதியன்று, நியு ஜெர்சியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆதிவாசி இனத்தை சேர்ந்த ஏஞ்சல் எனும் 22 வயது பெண் எழுப்பிய கேள்விகள் இவை.

1955 முதல் 1980 வரையிலான காலத்தில் அமெரிக்காவில் மாவாஹ் எனுமிடத்தில் கார் உற்பத்தியில் ஈடுபட்ட ஃபோர்டு நிறுவனம், அவ்வாலை கழிவுகளை பழங்குடி மக்களின் நிலத்தில் கொட்டி அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது. இக்கழிவுகளை அகற்றுவதற்கு 2019 –இல் மாவட்ட நிர்வாகத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, தான் ஏற்றுக்கொண்ட 16 கோடி ரூபாயை கூட தராமல் ஏமாற்றி, அவர்களின் வாழ்வை சிதைத்திருக்கிறது ஃபோர்டு நிறுவனம்…

”லாபம் மட்டும் உனக்கு; நட்டம் வந்தால் எனக்கா?” ”நேற்று வரை தொழிலாளி; இன்று நான் ஏமாளி” மேற்கண்ட முழக்கங்கள் சென்னையின் மறைமலைநகரின் ஃபோர்டு ஆலை மதில்களில் கடந்த 20 நாட்களாக எதிரொளித்து வருபவை. 13500 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் நியு ஜெர்சியின் ஆதிகுடிகளும், சென்னை தொழிலாளர்களும் வெவ்வேறு மொழிகளில் ஃபோர்டு நிறுவனத்தை நிறுவனத்தை நோக்கி எழுப்பிய எந்த கேள்விக்கும் ஃபோர்டு நிறுவனம் பதிலளிக்க தயாராக இல்லை.

நியு ஜெர்சியில் ஆதிவாசி மக்களின் வாழ்வை அழித்த அதே கொலைகார ஃபோர்டு தான் தற்போது தமிழக தலைநகரத்தில் அரை லட்சம் தொழிலாளர் குடும்பங்களின் தலையில் மண்ணள்ளி கொட்டுவதற்கான வேலைகளை செய்து வருகிறது. 90 நிமிடங்களுக்கு ஒரு காரை உற்பத்தி செய்து, இருபது ஆண்டுக்கும் மேலாக உழைத்தவர்களின் குடும்பங்களின் அடுப்பை அணைத்து அவர்களின் வாழ்வை இருட்டில் தள்ளியிருக்கிறது போர்டு இந்தியா நிறுவனம். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிய ஆலையை நட்ட காரணம் காட்டி ஜூலை 30-ஆம் தேதியுடன் மூடிவிட போவதாக அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பை அடுத்து உற்பத்தி நிறுத்தம், சங்கத்துடன் பேச்சுவார்த்தை, அற்பமான இழப்பீட்டு தொகையில் நகர்வதால் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், என குடும்பத்துடன் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஊன் உறக்கமின்றி, ஆலை வாயிலிலேயே கிடந்து போராடுகிறார்கள். குழந்தைக்கு பால் வாங்கவும் வெளியே செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

போராட்டக்களத்தில் பெண் ஒருவர் பேசுகையில், “நான் சின்ன வயசுல ரொம்ப கஷ்டப்பட்டேன். ஒரு ரூபாய் சாக்லேட் கூட வாங்கி சாப்பிட முடியாத குழந்தையா நா இருந்தேன். நானா படிச்சு, உழைச்சி முன்னேறி என் பசங்கள நல்லா பாத்துக்குற நெலமை வந்திருக்கும் போது, நீ போயி மொதல்ல இருந்து வான்னு என்னை துரத்துது ஃபோர்டு. இப்ப நான் என்னதான் செய்ய முடியும்? “35 வயதில் இருக்கிறோம். இனிமேல் யார் எங்களுக்கு வேலை தருவார்கள்? வீடு திருமணம், கல்வி என பல்வேறு EMI கட்டி வருகிறோம். ஒருவேளை நட்ட ஈடு கொடுக்கப்பட்டாலும், அது எங்களது கடன்களை அடைக்க உதவுமே ஒழிய நிச்சயமாக எங்கள் வாழ்க்கையை பாதுகாக்காது. நாங்கள் கும்பலாக தற்கொலை செய்து கொண்டால் தான் எங்கள் பிரச்சனையை இந்த சமூகம் பார்க்குமா? அப்படியாவது இந்த அரசு எங்களை பார்க்குமா? என்கிறார் மற்றொரு தொழிலாளி. நிச்சயமான திருமணமொன்று ஆலை மூடல் காரணமாக நின்று விட்டதாக கூறுகிறார்கள் தொழிலாளிகள்.

ஜூன் மாதம் சம்பளம் வரவில்லை என்றால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை உருவாகி இருக்கிறது. 2500 நேரடி தொழிலாளர்கள் மட்டுமின்றி, ஒப்பந்த தொழிலாளர்கள், ஃபோர்டு ஆலைக்கு உதிரி பாகங்கள் உற்பத்தி செய்து கொடுத்த நிறுவனங்கள், பஸ் கம்பனி, கேண்டீன், துணிக்கடை நகைக்கடை, மளிகைக்கடை, பெட்டிக்கடை என அனைத்து வகையான சார்பு தொழில்களும் முடக்கப்பட்டு முட்டுச்சந்தில் நிற்கிறது.

நிர்வாகமோ, மிரட்டியும் நிர்பந்தித்தும் போராட்டத்தை ஒடுக்கும் சதித் திட்டத்திலும் ஈடுபட்டு வருகிறது. கீழ்தரமான வகையில் கழிப்பறைகளை பூட்டி வைப்பது, போராட மாட்டேன் என மிரட்டி கையொப்பம் வாங்குவது, மீதமுள்ள உற்பத்தியையும் செய்து முடித்தால் மட்டுமே, செட்டில்மென்ட் குறித்து பேசுவேன் என பல வகைகளில் தொழிலாளார்களை சித்ரவதை செய்து வருகிறது. பன்னாட்டு ஆலைகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் போது, ”முதலீடுகளை ஈர்க்கிறோம், தொழில் வளத்தை பெருக்குகிறோம், நாட்டை முன்னேற்றுகிறோம்” என வாய்ச்சவடால் அடிக்கும் அரசுகளோ இதுவரை போர்டு ஆலை பிரச்சனை குறித்து அதிகாரப்பூர்வமாக வாய்திறக்கவில்லை.

தொழிலாளர்களின் இந்த அவல நிலைக்கு காரணமென்ன? யார்?

உதிரி பாகங்கள் இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கிறது என்பதால் 1953 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறிய ஃபோர்டு நிறுவனம் 1990 களுக்கு பிந்தைய பொருளாதார சீர்த்திருத்தங்கள், ஆட்டோமொபல் துறை வளர்ச்சியின் காரணமாக மீண்டும் இந்தியாவில் 1995-ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டு களமிறங்கியது. மீண்டும் இந்தியாவில் ஆலையை துவங்க வந்த போது, முதலில் மஹாராஷ்ட்ராவில் தான் போர்டு ஆலை வருமென யூகிக்கப்பட்டது. போர்டு நிபுணர் குழு புனே, குர்கான், மற்றும் சென்னை என மூன்று இடங்களை தேர்வு செய்தது. பல்வேறு காரணிகளை மதிப்பிட்டும், மஹராஷ்ட்ராவின் மனோகர் ஜோஷியுடன், ஜெயலலிதாவை ஒப்பிடுகையில் ஜெயா மேலானவராக தெரிந்ததாலும், சென்னை தேர்வு செய்திருக்கிறார்கள்.

முப்போகம் விளைந்த விவசாய நிலங்களை பிடிங்கி முதலாளிகளிடம் கொடுத்து விட்டு, விவசாயிகளின் வாரிசுகளை அதே முதலாளிக்கு கூலி அடிமைகளாக மாற்றி வைப்பதற்கு பெயர் தான் தொழில் வளர்ச்சி. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தற்போது வரை முதலாளிகளின் சொர்க்கபுரியாக இருந்து வருகிறது. நிலம், நீர், மின்சாரம், வரிவிலக்கு, உழைப்பு சக்தி, போலிசு பாதுகாப்பு என சகல வசதிகளும் செய்து கொடுத்து, தேவைப்படும் வரை இயற்கை வளங்களையும், உழைப்பையும் உறிஞ்சிவிட்டு, லாபத்தை சுருட்டிக் கொண்டு ஓடலாம் என ஏற்பாடு செய்து கொடுத்தால் எந்த முதலாளிக்கு தான் கசக்கும்?  அப்படி ஏற்பாடு செய்து தரப்பட்ட மறைமலைநகர் இடம் தான் ஃபோர்டு முதலாளிக்கு இனித்தது. தொழிலாளர்களை கசக்கி பிழிந்து உற்பத்தியை உயர்த்தி, ஆலையை விரிவாக்கி, அதில் கிடைத்த லாபத்தை கொண்டு குஜராத்திலும் ஒரு ஆலையை துவங்கி இந்திய தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல உறிஞ்சிய ஃபோர்டு, குஜராத் ஆலையை டாடாவுக்கு கொடுத்து விட்டு, சென்னை தொழிலாளர்களுக்கு டாட்டா காட்டி விட்டு போக போகிறது.

இந்தியாவில் ஆலைகளை மூட போகிறோம் என அறிவித்த அதே 2021 செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவின் டெனிசி நகரத்தில் 3600 ஏக்கர் நிலத்தில் 5.6 பில்லியன் டாலர் பணத்தில் 6000 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தோனேசியாவில் எலான் மாஸ்க்கின் டெஸ்லாவும், ஃபோர்டும் முதலீடு செய்வதற்கான பேச்சுவாத்தைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கோடிகளின் முதலீடு செய்ய முடிகிற நிறுவனம் தான் சென்னை தொழிலாளர்களை பாதுக்காக்க முடியாது என்கிறது.

படிக்க

செட்டில்மெண்ட் மூலம் ஒரு தற்கால நிவாரணமும், வேறு ஒரு நிர்வாகத்தின் கீழ் வேலை என்பது மற்றொரு முதலாளிக்கு தொழிலாளிகளை அடிமையாக்குவது என்பதாகவே முடியும். இத்தனை ஆண்டு காலம் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிய ஃபோர்டு நிர்வாகத்திடம் அபராதத் தொகை வசூலிப்பதும், அரசுக்கு தேவையாக வாகன உற்பத்தியை நடத்தி ஃபோர்டு ஆலையை அரசுடைமை ஆக்குவதும் தான் பாதிக்கப்பட்ட ஃபோர்டு தொழிலாளர்களுக்கான உண்மையான நீதியாக இருக்க முடியும். கொடி பிடிப்பதும் கோஷம் போடுவதும் ஃபோர்டு தொழிலாளர்களின் விருப்பத்துக்கு மாறானது என்றாலும், தொழிலாளிகள் தனது வரலாற்று பாத்திரத்தை ஆற்ற நிலைமை கோருகிறது. முதலாளித்துவத்தின் அதிதீவிரமான லாபவெறி தொழிலாளர்கள் மென்மேலும் ஓட்டாண்டியாக்கி வீதியில் தள்ளி வருகிறது. ”நேற்று வரை தொழிலாளி; இன்று நான் போராளி” என்கிற முழக்கத்தை எழுப்பிய வண்ணம் போராடுகிறார்கள் ஃபோர்டு தொழிலாளிகள். இழப்பதற்கு ஏதுமற்ற தொழிலாளி வர்க்கம் தான் போராட தலைமையேற்று தன்னை போல ஒடுக்கப்படும் பிற வர்க்கங்களையும் காப்பாற்ற முடியும்.  ஃபோர்டு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கேளாத செவிகளுக்கு கேட்க வைப்பது ஜனநாயக சக்திகளின், தொழிற்சங்கங்களின் முதற்கடமை.  அவர்களின் போராட்டத்தில் களத்தில் நின்று கரம் கோர்ப்போம்! ஆலையை அரசுடைமையாக்கக் கோரி போராடுவோம்.

  • செல்வா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here