கடந்த ஆகஸ்ட் 23ந்தேதி ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்கட்டமைப்பு துறையில் உள்ள பொதுசொத்துக்களின் மதிப்பை வெளிக்கொணரும் வகையில் 6 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய பணமயமாக்கல் திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தின்கீழ் அடையாளங்காணப்பட்ட சொத்துக்கள் அடுத்த நான்கு ஆண்டுகளில் பணமயமாக்கப்படும் என்று நிதி அயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பும் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் தனியார்வசம் விடப்பட்டுள்ளன. இருப்பினும் மொத்த நாட்டையும் ஒரே திட்டத்தின் அடிப்படையில் தூக்கி கொடுப்பதுதான் இந்த திட்டத்தின் மிகப் பெரும் சதித்தனம். நாட்டை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பது என்ற பழைய கள்ளை விற்க Disinvestment, Public-Private Partnership, Privatisation ஆகிய பழைய மொந்தைகளின் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ள புதிய மொந்தையே இந்த தேசிய பணமயமாக்கல் திட்டம்.

நிர்மலா சீத்தாராமன்
இந்தியாவை கார்ப்பரேட்டுகளுக்கு குத்தகைக்கு விடும் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.

இந்த அறிவிப்பு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றது. “70 ஆண்டுகளில் நாட்டு மக்களின் கடும் உழைப்பில் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் 7 ஆண்டுகளில் விற்கப்படுவதாக” ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அதே போல் “இவை மோடியின் சொத்துக்கள் அல்ல! இந்த நாட்டின் சொத்து. மோடியால் நாட்டின் சொத்துக்களை, பொது மக்களின் சொத்துக்களை இது போல விற்பனை செய்ய முடியாது. இது பாஜக என்ற ஒரு கட்சி விவகாரம் அல்ல, மாறாக, இது இந்நாட்டின் விவாகரம். இது ஒரு கெடுவாய்ப்பான முடிவு” என இத்திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி. ஆனால் மோடி அரசின் பரிவாரங்களோ இதனை நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மாபெரும் திட்டம் என பரப்பி வருகின்றனர். முடங்கிக் கிடக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படும் பொதுத்துறை சொத்துக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டம் என நிர்மலா சீதாராமன் தெரிவிக்கிறார். அதை லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களே செய்யலாமே என்று கேட்டால் தனியாருக்கு அந்த ’திறமை’ உள்ளதாக கூறுகிறார்.

தேசிய பணமாக்கல் திட்டம் என்பது தேசிய உள்கட்டமைப்பு மறுநிர்மாண திட்டத்தின் ஒரு பகுதியாகவே கொண்டுவரப்படுகிறது. தேசிய உள்கட்டமைப்பு திட்டத்திற்கு 111 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு வேண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதில் 83-85% வழமையான முதலீட்டு வழிகளிலும் 15-17% த்தை சொத்து மறுசுழற்சி மற்றும் பணமாக்கல் ஆகியவற்றின் மூலமாகவும் திரட்ட திட்டமிட்டுள்ளது. அந்த 15% யை நிறைவேற்றுவதற்கான முதல்படியே இந்த 6 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை சொத்துக்களை பணமயமாக்கும் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் சாலைகள் (27%), ரயில்வே (25%), மின்சாரம் (15%), எண்ணெய் மற்றும் வாயு குழாய் (8%), தொலைதொடர்பு (6%) உள்ளிட்ட மிகமுக்கியமான துறைகளில் உள்ள பொதுத்துறை சொத்துக்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது சென்னை, வாரணாசி உள்ளிட்ட 25 விமான நிலையங்கள், 40 இரயில் நிலையங்கள்,15 இரயில்வே விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட தேசத்தின் சொத்துகளில் தனியார் முதலாளிகள், கார்ப்பரேட்டுகள் குறிப்பிட்ட துறைகளை மட்டும் தேர்வு செய்து முதலீடு செய்யலாம். வேர் ஹவுஸ் எனப்படும் பெரும் குடோன்கள், திரைப்பட, விளையாட்டு அரங்குகளை நீண்டகால குத்தகை எடுக்கலாம். அதாவது ’அண்ட வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே’ என்று அக்ரஹார அம்பிகள் பாணியில் கார்ப்பரேட்டுகள் நாட்டின் சொத்துகளை சூறையாட உள்ளனர்.

நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஏற்கனவே மோடி அரசு பெட்ரோல், டீசல் மீது வசூலிக்கும் செஸ் (CESS) வரி 2 லட்சம் கோடிக்கும் மேல் சாகர்மாலா, பாரத்மாலா போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. அதன் மூலம் மேம்படுத்தப்பட்ட சாலைகளும், துறைமுகங்களும்கூட இத்திட்டத்தின்கீழ் தாரைவார்க்கப்படும். இந்த பணமாக்கல் திட்டம் என்பதை பொதுசொத்துக்களை விற்பதல்ல; மாறாக, குறிப்பிட்ட காலத்திற்கு தனியாரின் கட்டுப்பாட்டில் விடுவதன் மூலம் பணம் திரட்டுவது, அதன் மூலம் ஒன்றிய நிதி பற்றாக்குறையை குறைப்பது என விளக்கமளிக்கின்றனர்.

இதனை நடைமுறைபடுத்த National Bank for Financing Infrastructure and Development சட்டம், 2021 ஐ நிறைவேற்றியுள்ளது. அந்த சட்டத்தின் அடிப்படையில் அந்த வங்கியை தொடங்கி அதில் 20,000 முதலீடு செய்துள்ளது மோடி அரசு. இத்திட்டம் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் பொதுசொத்துக்களை விற்பதன் மூலம் 6 லட்சம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. 2019-ல் கார்ப்பரேட் வரி குறைப்பு செய்ததன் மூலம் அந்த ஆண்டு ரூ.1.5 லட்சம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. அடுத்த நான்கு ஆண்டுகளில் அதே இழப்பு ஏற்படும் எனக் கணக்கிட்டாலும் அரசுக்கான வருவாய் இழப்பு 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வந்துவிடும். இது திட்டமிட்டே பானையில் ஒட்டை போட்டுவிட்டு தண்ணீர் பற்றாக்குறை என நாடகமாடுவதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.

இதற்கு முன் சொத்துக்களை விற்பது என்ற திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்கும் திட்டம் பல ஆண்டுகளாக முயற்சிக்கப்பட்டு தோல்வியை தழுவியுள்ளது. அதே போல் சமீபத்தில் 12 ரயில்வே வழித்தடங்களை விற்கும் திட்டமும் தோல்வியே அடைந்தது. 3 வழித்தடங்களுக்கான ஏலம் மட்டுமே நடந்தது. அதிலும் ஒரு அரசு நிறுவனம் உட்பட இரு நிறுவனங்கள் மட்டுமே கலந்துகொண்டன. இது மட்டுமல்ல, கடந்த 2020-21 நிதியாண்டு, பொதுசொத்துக்களை விற்று 2.1 லட்சம் கோடி திரட்டும் மோடி அரசின் திட்டத்தில் 10% மட்டுமே நிறைவேறியது.

இந்த தோல்விகள் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக தனியார் முதலீட்டாளர்கள் புதிய முதலீடு செய்ய விருப்பமின்றி இருப்பதை காட்டுகிறது. ஆனாலும் மோடி விடுவதாயில்லை, நாட்டை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்க்க விடாமுயற்சி எடுத்து வருகிறார். உலக அளவில் நிதிமூலதனக் கும்பல் தொழிலில், அதாவது உற்பத்தி துறைகளில் முதலீடு செய்வது கேள்விக்குறியாகி வருகிறது. வட்டி தொழிலில் அதாவது நிதிமுதலீட்டில் மட்டும் தான் ஆர்வம் செலுத்தி வருகின்றனர் என்பது தனியாக விவாதிக்க வேண்டிய பொருளாகும்.

மோடி கும்பலின் இந்த பணமாக்கல் திட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ள 6 லட்சம் கோடி ரூபாய் இலக்கை அடைய முடியாது என்பது ஒன்றிய அரசுக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் இத்திட்டத்தை அறிவிப்பதன் நோக்கம் “வந்த விலைக்கு” அடிமாட்டு விலைக்கு நாட்டின் சொத்துக்களை கொடுத்து விடுவதுதான். இந்த திட்டம் நிறைவேறுமாயின் ரயில், சாலை, மின்சாரம் என அடிப்படையான கட்டுமானங்கள் அனைத்தும் கார்ப்பரேட்டுகள் வசம் சென்றுவிடும். இந்த திட்டம் முறியடிக்கப்படாவிட்டால், மொத்த நாட்டையும் அம்பானி மட்டும்கூட குத்தகைக்கு எடுக்க முடியும். அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் இரு முனைகளுக்கு (அம்பானி) ரிலையன்ஸ், அதானி பெயர்கள் சூட்டப்பட்டதை போல அந்த நிறுவனங்களுக்கும் சூட்டப்படலாம். பிறகு நம் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தைக்கூட அம்பானி ரயில் தண்டாவாளத்தில் தலையை வைத்து அதானி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட வேண்டி வரும்.

நூற்றாண்டுகளாக இந்திய நாட்டு மக்கள், குறிப்பாக தொழிலாளி வர்க்கம் இரத்தம் சிந்தி உருவாக்கிய தேசத்தின் சொத்துக்களை விற்பனை என்ற பெயரிலும், பணம் திரட்டுவது என்ற பெயரிலும் வாரிக் கொடுக்க மோடி – ஆர். எஸ்.எஸ் கும்பலுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. தேர்தல் அரசியல் முறையில் ஐந்து ஆண்டுகளுக்கு நாட்டை வழிநடத்தும் அதிகாரம் மட்டுமே மோடி கும்பலுக்கு மக்கள் கொடுத்தது. ஆனால் அதனையே தனது எஜமானர்களுக்கு தடையின்றி சேவை செய்யும் வாய்ப்பாக கருதிக் கொண்டு கார்ப்பரேட்டுகளின் அடியாளாக மாறி பாசிச வழிமுறையில் மக்கள் சொத்துக்களை சூறையாடுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

பாசிஸ்டுகள் தேர்தலில் தோல்வி அடையும் வரை காத்திருக்க தேவையில்லை. ஏனென்றால் சொல்லிக் கொள்ளப்படும் ’ஜனநாயக வழிமுறைகளை’ அவர்களே மதிப்பது கிடையாது எனும் போது நாம் ஏன் அதனை பிடித்து தொங்க வேண்டும். பாசிஸ்டுகளை வீட்டுக்கோ அல்லது அவர்கள் விரும்பும் நிலவறைக்கோ ஓடும் வகையில் விரட்டியடிக்கும் புதிய வழிமுறையை முன்னெடுப்போம். தேசத்தின் சொத்துக்களையும், இறையாண்மையையும் பாதுகாப்போம்.
சதாம் ஹூசேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here