பயங்கரவாதிகளாக முத்திரைக் குத்தப்பட்ட முஸ்லிம்கள் சிலரின் அவலக் கதை:

¶ அக்டோபர் 12, 2005 அன்று ஹைதராபாத் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலோடு தொடர்பிருப்பதாக முஹம்மது அப்துல் சலீம், முஹம்மது ஜாஹிர் உள்ளிட்ட இருபது நபர்கள் கைது செய்யப்பட்டு 2007 ல் வழக்கு விசாரணைக்கு வந்தது. இவர்கள் அனைவரும் 12 ஆண்டுகள் கழித்து 2017 ஆகஸ்ட் 10 ஆம் நாள் குற்றமற்றவர்களாக விடுதலை செய்யப்பட்டனர்.

¶ 2008 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டதாக ஜார்கண்டைச் சார்ந்த மன்சூர் இமாம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 13 ஆண்டுகளுக்குப் பின் மன்சூரும் அவருடனான 28 நபர்களும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்டுள்ளனர். ராஞ்சி பல்கலையில் தங்கப்பதக்கம் பெற்ற மன்சூர் தன் வாழ்நாளில் ஒரு முறை கூட குஜராத் சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

¶ டிசம்பர் 2001 – முஸ்லிம் கல்வி வளர்ச்சி குறித்து அகில இந்திய சிறுபான்மை கல்வி வாரியம் நடத்திய மூன்று நாள் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பேராசிரியர் அப்துல் ஹை உள்ளிட்ட கல்வியாளர்கள், மாணவர்கள் 127 பேர் தடைசெய்யப்பட்ட சிமி இயக்கத்தவர் என்று குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். தீவிரவாதிகளாக முத்திரைக் குத்தப்பட்ட இவர்கள் அனைவருக்கு எதிராக ஆதாரம் ஏதுமில்லை என்று 19 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தீராத அவப்பெயரும் சமூக புறக்கணிப்பும் இவர்களின் வேலை, தொழில், குடும்பம் என அனைத்தையும் சீரழித்துள்ளது.

¶ உபி சிறப்பு அதிரடிப் படை 2007 ல் HuJI இயக்கத்தோடு தொடர்புடையவர்களாக சித்தரித்து ஐந்து முஸ்லிம்களைக் கைது செய்து சிறையில் வைத்தது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் குற்றமற்றவர்களாக கருதப்பட்டு 2016ல் விடுதலை செய்யப்பட்டனர்.

¶ மே 21, 2010 – 1997 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து புறப்பட்ட மூன்று ரயில்களில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களில் சம்பந்தப்பட்டதாக தீவிரவாத குற்றத்தில் கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீபா உள்ளிட்ட எட்டு நபர்கள் 13 வருடத்திற்குப் பின் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

¶ மே 30, 2016: பாபரி மஸ்ஜித் இடிப்பு முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் ரயில் நிலையத்தில் நடந்த ஐந்து குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து நிஸாருதீன் ஷா எனும் பார்மசி பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் 1994 ஆம் ஆண்டு ஹைதராபாத் போலீஸால் கைது செய்யப்பட்டார். 23 வருட சிறைக்குப் பின் உச்சநீதிமன்றத்தால் குற்றமற்றவர் என்று 2016 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். “8150 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் நீங்கள் பார்ப்பது ஒரு நடைப்பிணம்” என்பதைத் தவிர சொல்வதற்கு நிசாரிடம் ஒன்றுமில்லை.

¶ இவருடன் சிவில் என்ஜினியரான இவரது மூத்த சகோதரர் ஜஹீருதீன் அஹமது, சிறையில் இருந்த காலத்தில் நுரையீரல் புற்றுநோயால் பீடிக்கப்பட்டு 2008, மே 9 ஆம் நாள் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 2016ல் இவரும் குற்றமற்றவராக விடுதலை ஆனார். இவருடன் மேலும் நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர்.

¶ இஸ்லாமிய பிரச்சாரகர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் IRF தடை செய்யப்பட்ட 2016 ஆம் ஆண்டில் அதில் பணிபுரிந்த அர்ஷி குரேஷி என்பவரை, இளைஞர்களை மூளைச் சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கு ஆள் சேர்ப்பதாக குற்றம் சுமத்தி தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. இது தொடர்பாக எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப் படாததால் ஆறு ஆண்டு சிறைக்குப் பின் 2022 ல் விடுவிக்கப்பட்டுள்ளார்.

¶ 2017 : சபர்மதி எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு தொடர்பாக 2001 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட குல்ஜார் அஹமது பானிக்கு எதிராக ஆதாரங்கள் ஏதுமில்லாததால் பாரபங்கி கூடுதல் அமர்வு நீதிமன்றம் 16 ஆண்டுகளுக்குப் பின் விடுவித்தது..

¶ 1996 டிசம்பர் முதல் 1997 அக்டோபர் வரை டெல்லியில் இருபது இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் முக்கிய குற்றவாளியாகவும் பயங்கரவாதியாகவும் குற்றம் சுமத்தப்பட்டு 1998 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆமிர்கான் என்ற 20 வயது இளைஞன் 2012 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டுளளார். தனது நெடிய போராட்டத்தை விளக்கி “Framed as a Terrorist: My 14-year Struggle to Prove My Innocence”.என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் ஆமீர்கான்.


இதையும் படியுங்கள் : முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்! பிஜேபி கட்சியின் தேர்தல் வெற்றிக்காக RSS, VHP- இந்துத்துவா அமைப்புகள் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தின.


இந்த பட்டியல் அனுமார் வாலை விட நீண்டது. விடுவிக்கப்பட்ட இவர்கள் கூட கருணை – இரக்கத்தின் அடிப்படையில் வெளியில் வரவில்லை. உடல், பொருள், நற்பெயர் என்று அனைத்தையும் இழந்த பெரும் சூதில் தோற்று வெற்றிப் பெற்றுள்ளனர். அந்த அவலக் கதைகளை எழுத்தில் வடிக்க இயலாது. முஸ்லிம்களுக்கு எதிரான நியாயம் இப்படி சுழன்றடித்து அவர்களை சருகாக வீசியெறியும் இந்த சூழலில் தான் –

எங்காவது ஒரு வெடிச்சத்தம் காதில் கேட்டவுடன் ‘இவர்களை நீங்கள் கண்டிக்க மாட்டீர்களா? உங்கள் சமூகம் பகிஷ்கரிக்காதா? மௌனமாக ஆதரிக்கிறீர்களா? ஏன் உங்களிடம் இப்படி ஒரு மெத்தனம்? இஸ்லாம் இதைத்தானே போதிக்கிறது?’ என்றெல்லாம் எங்களை நடுவீதியில் நிற்கவைத்து கேள்விகளால் துளைக்கிறீர்கள். நாங்களும் கையைத் தூக்கி ஒவ்வொரு முறையும் ‘அவர்கள் நாங்களில்லை’ என்று பெருங்குரலெடுத்து அரற்றுகிறோம். இருந்தாலும் நீங்கள் திருப்தி அடைவதில்லை.. ‘ஏன் பாய் இப்படி’ என்ற வினா எங்கள் விலா எலும்பை ஒடிக்கிறது.

இதோ மேற்கூறிய பட்டியலில் உள்ள நூற்றுக்கணக்கான பேர்களும் இன்னும் பலரும் எந்த ஆதாரமும் இல்லாமல் தீவிரவாதிகளாக – பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதை நீதி மன்றங்களே ஒத்துக் கொண்டுவிட்டன. இப்போது உங்கள் திருப்திக்காக இவர்களை கொடியவர்களாக சபித்த, தூற்றிய எங்கள் பழியை எப்படித் துடைப்பது? சரி.. அதுவும் விதி என்று நொந்து கொள்வோம். இவ்வளவு கேள்விகளை எங்களை நோக்கி எழுப்பும் நீங்கள் யாரும் மேற்சொன்ன சம்பவங்களின் உண்மை குற்றவாளிகள் யார் என்ற கேள்வியை எழுப்பி இந்த அரசையும் அதன் அமைப்புகளையும் நெருக்க தவறிவிடுகிறீர்களே.. அது ஏன்

வன்முறை – வெறிச் செயல்கள் எல்லா சமூகங்களுக்கும் பொதுவானவை. இந்து பெயரில் நடந்த – நடக்கிற ஓராயிரம் சம்பவங்களுக்கு இங்கு கை தூக்கி சரண்டைந்தவர்கள் 100 கோடி இந்துக்களில் எத்தனை பேர்? சாதாரண ஊர் பேர் தெரியாத ஆசாமிகளை விட்டு விடுங்கள். சுவாமி அசீமானந்தா, புரோகித், பாபு பஜ்ரங்கி, மாயா கோட்னானி, பிராக்யா சிங், பிரதாப் சிங் உள்ளிட்ட இந்து பெருந்தலைகளை அந்த சமூகம் கைவிட்டு விட்டதா? சொல்லப் போனால். பதவி, அதிகாரம் தந்து அவர்களுக்கு முன்னைவிட சிறப்பு செய்திருக்கிறது. ‘ஏன் சார் இப்படி’ என்று நாங்கள் கேட்டிருக்க வேண்டாமா?

யாரை வேண்டுமானாலும் தீவிரவாத முத்திரைக் குத்தி கைது செய்வோம் என்று கொக்கரிக்கும் அதிகார அமைப்பில் – அவர்கள் சொன்னவுடன் நீங்க ஒத்துக்கொண்டு போக வேண்டியது தானே என்று நடுநிலையாளர்களும் கேட்காமல் கேட்பது எங்கள் செவிப்பறைகளை அறைகிறது. எங்களுக்கு உள்ள அச்சம் என்னவெனில், இந்த குற்றச்சாட்டில் இருந்து எங்களில் யாரும் தப்பிக்க முடியாது என்றளவில் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. சமயம் வாய்த்தால் நீங்களும் அந்த கயிறை அறுத்துவிடத்தான் ஓடோடி வருகிறீர்கள்.

அப்படி ஒரு நிலைமை ஏற்படும் போதெல்லாம் – ஜிம்பாப்வேவுடன் பாகிஸ்தான் தோற்றுப் போனதை ஜீரணிக்க இயலாமல் போன பாகிஸ்தானியர்கள் தங்கள் டிவி பெட்டிகளை நடு ரோட்டில் போட்டு உடைத்த மாதிரி (பார்க்க படம்)நாங்களும் எங்கள் நம்பிக்கைகளை உடைத்துக் கொண்டிருக்கிறோம்..

எந்த நம்பிக்கையையும்
உறுதி செய்யாது
உயரத்தில் பறக்கிறது
ஓர் கொடி
– இன்குலாப்

  • கோட்டை கலீம்

முகநூல் பகிர்வு 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here