ந்த ஆண்டின் முதல் நான்கு வாரங்களில், மெட்டா, அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள், டிக்டோக் மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸ் உட்பட கிட்டத்தட்ட 100 தொழில்நுட்ப நிறுவனங்கள் கூட்டாக சுமார் 25,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளன.

AI, சைபர் செக்யூரிட்டி மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற வளர்ந்து வரும் துறைகள் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய மையப் புள்ளிகளாக மாறுவதால், தொழில்நுட்பத் துறையின் எதிர்காலம் வேகமாக புதிய வகையில் உருவாகி வருகிறது.

அதாவது செயற்கை நுண்ணறிவுத்திறனை பயன்படுத்துகின்ற ஆற்றலை கற்றுக் கொள்ள வேண்டும்; குவாண்டம் கம்ப்யூட்டிங் கோருகின்ற தேர்ச்சியை பெற்றுக் கொள்ள வேண்டும்; கிளவுட் மவுண்ட், 3d பிரின்டிங் போன்ற நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகின்ற ஊழியர்கள் புதுப்புது தேர்ச்சி மற்றும் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஏகாதிபத்திய முதலாளித்துவ தொழில்நுட்ப ஜாம்பவான்களான பிக் டெக்(big tech) நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.

தகவல் தொழில்நுட்பத் துறையில் நடந்து வரும் நவீன மாற்றங்களுக்கு உகந்த வகையில் உங்களை தயார் படுத்திக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் அதில் நீடிக்க முடியாது என்று ஏற்கனவே பணியாற்றி வருகின்ற ஆயிரக்கணக்கான ஊழியர்களை தனது நிறுவனங்களில் இருந்து தூக்கி விசிறியடித்து வருகிறது பிக் டெக் கார்ப்பரேட்டுகள்.

இதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இலட்சக்கணக்கானவர்கள் இது போன்ற நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.Intel, IBM மற்றும் Cisco போன்ற பெரிய நிறுவனங்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 2024 ஆம் ஆண்டு துவங்கிய கடந்த 9 மாதங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன.

ஆப்பிள், சிஸ்கோ, ஐபிஎம் மற்றும் இன்டெல் போன்ற நிறுவனங்களில் 27,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பணிநீக்கம் ஒரு சுனாமி அலையைப் போல பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் சுழண்டு அடிக்க துவங்கியுள்ளது.

“இந்த பணிநீக்கங்கள், பொருளாதார மந்தநிலை மற்றும் IT தயாரிப்புகளுக்கான தேவை குறைந்து வருவதால், தொழில்நுட்ப நிறுவனங்களும் கூட சந்தை மாற்றங்களிலிருந்து விடுபடவில்லை என்பதை நினைவூட்டுகின்றன.” என்று பணி நீக்கத்திற்கான காரணங்களை ஆராய்ச்சி செய்து ஊடகங்கள் வெளியிடுகின்றன.

ஆனால் கார்ப்பரேட் முதலாளி தனது லாபவெறியின் காரணமாக தனது நிறுவனத்தில், தான் எதிர்பார்க்கின்ற லாப உத்தரவாதம் தேவை என்ற காரணத்தினால் செலவுகளை குறைப்பது என்ற போர்வையில் முதல் வேலையாக அதன் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதை வேகமாக நிகழ்த்த துவங்கி உள்ளனர்.

“2025-ம் ஆண்டுக்குள் 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான செலவினக் குறைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இன்டெல் நிறுவனம் 15 சதவீத ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.

சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் சுமார் 7 சதவீத பேரை உடனடியாக பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது.

சீனாவில் தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதால், ஐபிஎம் நிறுவனம் சுமார் 1,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

ஜெர்மனி நிறுவனமான Infineon, 1,400 பேர்களைப் பணியில் இருந்து நீக்க முடிவெடுத்திருக்கிறது. மேலும் 1,400 ஊழியர்களைக் குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றுகின்ற ஊழியர்கள் நிரம்பியுள்ள நாடுகளுக்கு இடமாற்றம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.. இதன் மூலம் ‘உனக்கு கொடுக்கும் சம்பளம் அதிகம்! இங்கு பார் எந்த அளவிற்கு போட்டி நிலவுகிறது என்பதை ஊழியர்களின் சிந்தனைக்குள் விதைப்பதற்கு இது போன்ற புதிய வழிமுறைகளை‘ கையாள்கிறது.

ஆக்‌ஷன் கேமரா உற்பத்தியாளரான GoPro நிறுவனம் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அதன் ஊழியர்களில் சுமார் 15 சதவீத ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம், தனது ஆப்பிள் புக்ஸ் ஆப்ஸ் மற்றும் ஆப்பிள் புக் ஸ்டோர் குழுக்களை உள்ளடக்கிய அதன் சேவைக் குழுவிலிருந்து சுமார் 100 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

டெல் டெக்னாலஜிஸ் அதன் விற்பனைக் குழுக்களை மறுசீரமைப்பதாகக் கூறி, சுமார் 12,500 பணியாளர்களை அதாவது அதன் உலகளாவிய பணியாளர்களில் 10 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பட்டியலில் இன்னும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப கார்ப்பரேட்டுகள் வரிசை கட்டி நிற்கின்றன.

ஏகாதிபத்திய நிதி மூலதன கொள்ளையானது தான் உற்பத்தி செய்யும் பண்டங்களை விற்பனை செய்வதன் மூலம் லாபம் ஈட்டுவது மட்டுமல்ல, தனது ஆலையில் உற்பத்தி செய்து கொடுக்கின்ற தொழிலாளிகளின் உழைப்பை எந்த அளவிற்கு சுரண்ட முடியுமோ அந்த அளவிற்கு சுரண்டி கொழுப்பதும் லாபத்தை ஈட்டுவதற்கு மற்றொரு வழிமுறையாக கையாளுகின்றனர்.

“லாபம் லாபம் மேலும் லாபம் என்பதுதான்” முதலாளித்துவத்தின் அரிச்சுவடி ஆகும். இந்த லாபவெறி கொண்ட பிக் டெக் நிறுவனங்கள் அது அமெரிக்க அடிப்படையில இருந்தாலும் சரி! சீன அடிப்படையில் இருந்தாலும் சரி அவை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீமிகு உற்பத்தியில் குதிக்கின்றன.

படிக்க:

♦ சரிந்து வீழும் ஏகாதிபத்திய முதலாளித்துவம்! விளைவு – வேலை இழப்பு, பொருளாதார மந்தநிலை! 

குறிப்பிட்ட பிராண்டுகள், குறிப்பிட்ட பொருட்கள் மலை மலையாக உற்பத்தி செய்யப்பட்டு குவிக்கப்படுகிறது. ஆனால் அதனை வாங்கி நுகர்வதற்கு உலகம் முழுவதும் உள்ள நுகர்வு சந்தை தயாராக இல்லை என்பதால் உற்பத்தி செய்த பொருட்கள் அனைத்தும் தேக்கமடைகின்றன.

இதனால் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதும்; இன்னொரு புறம் ஆட்குறைப்பு செய்வதும்; இன்னொரு புறம் குறைந்த கூலிக்கு அதிக உற்பத்தியை செய்கின்ற நவீன கொத்தடிமைகளாக மாற்றப்படுவதும் நடக்கின்றது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையின் ஊழியர்கள் இந்த நவீன கொத்தடிமைகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதால் தான் வீட்டில் இருந்தே வேலை (work from home) என்ற சுரண்டல் முறையில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 12 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை வேலை செய்கின்றனர்.

வேலை நேரம் என்பது எவ்வளவு என்பது கணக்கு அல்ல, மாறாக அன்றைக்கு செய்ய வேண்டிய வேலையை எவ்வளவு நேரம் செய்தாலும் அது பற்றி கவலை இல்லை, ஆனால் கொடுத்த வேலையை முடித்துவிட்டு தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் அல்லது கம்ப்யூட்டரை shutdown செய்ய வேண்டும் என்பதுதான் மேலிடத்து உத்தரவுகள் ஆகும். இந்த வழிமுறைகளின் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் அனைத்து விதமான வேலைகளும் ஊழியர்களின் உழைப்பை ஒட்ட சுரண்டி வருகிறது.

இந்த லாபவெறிக்கு எதிராக போராடாமல் ஆட்குறைப்பு செய்வதை மட்டும் தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. நவீன தொழில்நுட்பங்கள் மிகை உற்பத்தியின் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் வேலையை பறித்துக் கொண்டுள்ளது என்பது தான் ஏகாதிபத்திய முதலாளித்துவம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து துறை ஊழியர்களுக்கும் கொடுத்துள்ள தண்டனையாகும்.

இவை அனைத்தையும் தொகுப்பாக புரிந்து கொண்டு உலகம் முழுவதும் எந்த மூலையில் பணியாற்றினாலும் கார்ப்பரேட் நிறுவனத்தில் ஊழியராகவோ, தொழிலாளியாகவோ இருந்தால் தன்னை சக தொழிலாளிகளுடன் இணைத்துக் கொள்வது, சங்கமாக திரள்வது, லாபவெறி கொண்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பது ஒன்றே தீர்வு.

  • ஆல்பர்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here