இந்தியாவில் உற்பத்தியை நடத்தும் ஏகாதிபத்திய நிதி மூலதனக் கொள்ளைக் கூட்டத்தின் தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து கொடுப்பதையே ’தேசபக்தி’ என்று கூச்சல் போட்டு வந்தது மோடி கும்பல். அதற்காக ஆர்எஸ்எஸ் – மோடி முன்வைத்த ’ஆத்ம நிர்பார் பாரத்’ திட்டம் படுதோல்வி அடைந்து இருப்பதையே ஃபோர்டு நிறுவனத்தின் கதவடைப்பு மற்றும் வெளியேற்றம் காட்டுகிறது.

மோடியின் குஜராத் மாடல் இந்தியாவின் முன்னுதாரணம் என்று பீற்றப்பட்டு அது படுதோல்வி அடைந்ததை போலவே ’மேக் இன் இண்டியா’-வும் தோல்வி அடைந்து விட்டது. குஜராத்திலிருந்தும், இந்தியாவின் ’டெட்ராய்ட்’ என்று அழைக்கப்படும் தமிழகம்- சென்னையிலிருந்தும் ஃபோர்டு தொழிற்சாலை வெளியேறி இருப்பது முக்கியமான பின்னடைவாகும். ஏற்கனவே அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ், ஹார்லி டேவிட்சன், இத்தாலியின் ஃபியட் நிறுவனங்களை தொடர்ந்து ஃபோர்டு நிறுவனமும் வெளியேறி இருப்பது மோடியின் தற்சார்பு கொள்கைக்கு கிடைத்த அடியாகும்.

 

இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகின்ற சென்னையை சுற்றி ஆட்டோமொபைல் தொழில் மையம் உருவாகியுள்ளது. நாட்டின் ஆட்டோமொபைல் தொழில் உற்பத்தியில் 30 சதவீதத்தையும், ஆட்டோ மொபைல் உதிரிப்பாக உற்பத்தி துறையில் 35 சதவீதத்தையும் சென்னை அளிக்கிறது.

கொள்ளைக் கூட்டம் ஃபோர்டு!
நட்டம் என்பது ஃபிராடு!

சென்னை மறைமலை நகரில் உள்ள இந்த ஃபோர்டு நிறுவனம், 1995 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, 1995-ல் கார் உற்பத்தியை துவங்கியது. அன்று முதல் ஆண்டுக்கு 2 லட்சம் கார்கள், 2.5 லட்சம் கார் இன்ஜின்கள் என்ற உற்பத்தி இலக்குடன் கடந்த 26 ஆண்டுகளில் சுமார் 52 லட்சம் கார்களை உற்பத்தி செய்து தள்ளியுள்ளனர்.

தொழிலாளர்களின் கடும் உழைப்பில். கிடைத்த அபரிமிதமான லாபத்தைக் கொண்டு குஜராத் – சனந்த் பகுதியில், இரண்டாவது மிகப் பெரிய ஆலையை துவங்கியது ஃபோர்டு நிறுவனம். ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்கள் என்ற உற்பத்தி இலக்குடன் அதில் 14,000 கோடி ரூபாயை முதலீடு செய்தது.

2021 ஏப்ரல் முதல் 2021 ஜூன் வரையுள்ள காலாண்டில் மட்டும் 14,19,430 எண்ணிக்கையிலான கார்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுள்ளது. இதில் 2.39% ஃபோர்டு நிறுவனம் உற்பத்தி செய்தவைதாம். அது மட்டுமில்லை இந்தியாவில் இருந்து கார் இன்ஜின் 40% அளவும், கார்களில் 25% அளவும் 35 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. ஃபோர்டு நிறுவனம்.

2020 ஆம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த மணிஷேக் என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், உலக அளவில் இந்தியா கார் உற்பத்தியில் 5 இடத்தை பிடித்திருப்பதாகவும், இதில் ஃபோர்டு நிறுவனம் ஒரு நிமிடத்திற்கு 8.6 கார்களை தயாரிப்பதாகவும் கூறியுள்ளது. உலக அளவில் ஃபோர்டு நிறுவனம் நிமிடத்திற்கு 12.2 கார்களை தயாரிக்கும் 5 ஆம் இடத்தில் உள்ளது. அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களின் பட்டியலில் ஃபோர்டு 4 ஆம் இடத்தில் உள்ளது. ஒரு நிமிடத்திற்கு 2,85,198 டாலர்கள் வருவாயாக ஈட்டுகிறது. அதாவது நிமிடத்துக்கு 2 கோடியே 2 லட்சத்தி 96 ஆயிரத்து 276 ரூபாய் வருவாய் கொட்டுகிறது.

ஆனால் இந்த உண்மைகளை மறைத்து விட்டு, கடந்த 10 ஆண்டுகளில் இந்திய சந்தையில் சுமார் 2 பில்லியன் டாலர்கள் (ரூ15 ஆயிரம் கோடி) இழப்பை சந்தித்து விட்டதாகவும் அதனால் ஆலைகளை மூடுவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் நேரடியாக 4,000 நிரந்தர பணியாளர்களும், விற்பனையகங்கள், சேவை மையங்கள், உதிரி பாகங்களை தயாரிக்கும் சிறு தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டு 40,000 பேருக்கு வேலை பறிபோகும் என்று அஞ்சப்படுகிறது. ஃபோர்டுக்கு மட்டும் நேரடியாக 170 டீலர்களும், 400-க்கும் மேற்பட்ட விற்பனையகங்களும் உள்ளன.

கொரானாவுக்கு பிறகு 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடந்த கார் விற்பனையில் மாருதி, ஹூண்டாய், டாடா, கியா, மஹிந்திரா கார் நிறுவனங்களின் தயாரிப்புகள் அதிக விற்பனையை செய்து கல்லா கட்டியது. இந்த சந்தைப் போட்டியில் ஃபோர்டு மிகவும் பின் தங்கி விட்டது. இதனால் 50% உற்பத்தி குறைந்துள்ளதையே, இதுவரை நடந்த மொத்த உற்பத்தியும் ஆண்டுக் கணக்கில் குறைவாக நடந்து வருவதைப் போல சாதிக்கின்றனர். அது ஈரோடு சமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும்.

மோடி ஊர் ஊராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆட்டோமொபைல் துறையில் 2085 கோடி டாலர் மதிப்புள்ள அந்நிய முதலீட்டை எடுத்து வந்தார். இதனால் விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒவ்வொரு நிறுவனமும் தனது உற்பத்தி கொள்ளளவை விரிவுபடுத்தியது. இதனால் நடந்த ஒரே விசயம் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி உலகின் ஐந்தாம் இடத்தில் இருந்து நான்காவது பெரிய ஆட்டோமொபைல் தொழில்துறை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்ததது தான்.

தான் எதிர்பார்க்கும் லாப உத்திரவாதம் கேட்டுக் கொண்டுதான் முதலீடு போடுகிறார்கள். போட்ட முதலீட்டை விட அதிகம் சுரண்டிக் கொள்கிறார்கள் ஆனாலும் ஏன் ஓடுகின்றனர் என்றால் காரணம் இதுதான்!. ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் உண்மையான ‘சக்சஸ் பார்முலா’. திடீரென்று பயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகளைப் போல ஒரு இடத்தை திட்டமிட்டு உற்பத்தி நடத்தி லாபம் பார்த்து விட்டு அங்கிருந்து வேறொரு பகுதிக்கு ஓடிவிடும். இதன் மூலம் நிரந்த தொழிலாளர் பிரச்சனை இருக்காது. புதிய பகுதியில் ஆலை உற்பத்திக்கு தேவையான நிலம், மின்சாரம், நீர் ஆதாரம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் அரசிடம் இலவசமாக பெறுவது, அங்கும் குறிப்பிட்ட காலம் உற்பத்தி நடத்தி விட்டு ஒடிவிடுவது இதுதான் லாபம் கொழிக்கும் ’சக்சஸ் பார்முலா’ ஆகும்.

இந்தியாவில் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகள் அமுலாக துவங்கிய காலத்தில் 5 துறைகளில் முன்னேற்றம் காணப்பட்டது. அதில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்றாகும். இந்தத் துறையில் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ 35 மில்லியன் பேர் பணிபுரிகிறார்கள் ஆனால் இந்த ’குமிழி பொருளாதார வளர்ச்சியானது’ நீடித்து நிற்கவில்லை. 2019 ஆம் ஆண்டு வெடித்து கடும் நெருக்கடியை சந்தித்தது.

அதன் எதிரொலியாக வாகன உற்பத்தி சந்தையானது 2019-ஆம் ஆண்டு முதலே சரியத் தொடங்கி விட்டது. அதாவது கொரானா காலத்திற்கு முன்பாகவே இந்தியாவில் பொருளாதாரம் மிகவும் தேக்க நிலைக்கு சென்றது. அதில் முக்கியமாக வாகன உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவு மிகவும் மோசமானது, அந்த சரிவானது அதற்கு முன்பு 20 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை விட மிக மோசமாக இருந்தது…

2019 காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதாக கூறிக்கொண்ட மோடி அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் வாகன உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையை கையாள்வது குறித்தும் கூறப்பட்டது. மக்களின் வரிப்பணத்திலிருந்து பொதுத்துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாயை வாரி வழங்கியது. மோடி அரசின் பாணியில் சொன்னால் ’நிதியை வங்கியில் செலுத்தி’, அவர்கள் குறைந்த வட்டியில் வீடு மற்றும் வாகன கடன் வழங்க கூறுவதே அந்த திட்டம். இந்த திட்டமானது 2008 ஆம் ஆண்டு தீராத, மீண்டு எழவே முடியாத பொருளாதார நெருக்கடியில், அமெரிக்கா போன்ற மேல்நிலை வல்லரசுகளே வீழ்ந்த, ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கை தோல்வி அடைந்த முறையாகும். ஆனால் இதுவே சரிந்த பொருளாதாரத்தை காக்கும் வழியாக மோடி அரசால் முன் வைக்கப்பட்டது.

ஜான் மேனார்டு கீன்ஸ் முன்வைத்த புளித்துப் போன பொருளாதார சீர்திருத்த வழிமுறைகளைத் தான் மோடி அரசு கையாண்டது. ஆனால் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2019 ஆம் ஆண்டு பயணிகள் வாகனங்களில் உள்நாட்டு விற்பனை 30.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. 2018 ஆம் ஆண்டு 2,90,931 ஆக இருந்த வாகன உற்பத்தி 2019 ஆம் ஆண்டு 2,00,790 ஆக குறைந்தது என்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் அப்போது தெரிவித்திருந்தது.

2019 மே மாதத்தில் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹூண்டாய் மோட்டார்ஸ் மற்றும் இதர முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் உற்பத்தி நிறுத்த தினங்களை அறிவித்திருந்தனர். இதன் உப விளைவாக நாடு முழுவதும் 786 வாகன டீலர் நிறுவனங்கள் மூடப்பட்டன. சுமார் 40 ஆயிரம் பேர் வேலை இழந்தனர் குறிப்பாக மராட்டியத்தில் 64 டீலர்களும், தமிழகத்தில் 35 டீலர்களும், டெல்லியில் 27 டீலர்களும், பீகாரில் 26 டீலர்களும் தனது விற்பனையை நிறுத்திவிட்டு நிறுவனங்களை இழுத்து மூடினர்.

கொரானாவுக்கு முன்பாகவே சொந்த வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. 2019 ஆம் ஆண்டு வாகனங்களை சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு ஆகின்ற செலவு 6 முதல் 8 சதவீதம் வரை அதிகரித்திருந்தது. 2020 ஆய்வின் படி உலக அளவில் இந்தியா கார் விற்பனையாகும் சந்தையாக வளர்ந்துள்ளதாக மணிஷேக் என்ற பிரிட்டன் நிறுவனம் கூறியுள்ளது. இதையெல்லாம் எதிர்பார்த்து நாக்கை தொங்கப் போட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இன்று தள்ளாடுகிறது.

2008 வரை அமெரிக்காவில் கொடி கட்டி பறந்த ஃபோர்டு நிறுவனம், மீளமுடியாத பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு பின்னடைவை சந்திக்க துவங்கியது. அது வரை அதிக பெட்ரொல் குடிக்கும் கார்களை வாங்கி மகிழ்ந்த அமெரிக்கர்கள், சிறிய குறைவான பெட்ரோலில் ஓடும் ’எகானமி மாடல்’ கார்களான ஜப்பான் தயாரிப்புக்கு மாறியவுடன், ஃபோர்டு வீழத் துவங்கியது. ஜப்பானுக்கு போட்டியாக தானும் எகானமி தயாரிப்பில் இறங்கியது. ஆனால் வாங்கும் சந்தை இல்லாமல் ஆலை மூடல்களை அப்போதிருந்தே துவங்கி விட்டது. தனது 100% லாப இலக்கில் 1,2% குறைந்தாலும் நட்டம் என்று கூச்சலிடுகின்றனர்.

லாப வெறி கொண்ட ஃபோர்டு கம்பெனி 2021 ஏப்ரலில் தனது தயாரிப்புகளான பிகோ, ஆஸ்பையர், பிரீஸ்டைல், இகோஸ்போர்ட், எண்டேவர் உள்ளிட்ட 5 வகையான மாடல்களின் விலையை உயர்த்தி கொள்ளையடித்தது. இகோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யுவி, டைட்டானியம் பிளஸ், எஸ்இ மற்றும் எஸ் வேரியண்ட்களின் விலையை 20,000 முதல் 70,000 வரை உயர்த்தி கொள்ளையடித்தது. அது போலவே பிற மாடல்களிலும் லாபம் பார்த்தது. இந்த ஃபோர்டு தான் நட்டம் அடைந்து விட்டதாக கதையளக்கின்றனர்.

ஆத்ம நிர்பார் அல்ல!
கார்ப்பரேட் தர்பார்!!

இந்த அளவு போர்டு தோல்வி அடைந்தற்கு என்ன காரணம்? ஒரு வகையில் ’ஆத்ம நிர்பாரின் தந்தை’ ஃபோர்டு நிறுவனத்தின் அமெரிக்க முதலாளி ஹென்றி ஃபோர்டு தான் என்று கூறலாம். ஒரு ஆலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு (Product) தேவையான அனைத்து பாகங்களின் உற்பத்தியையும் அந்த ஆலைக்குள் மட்டும் நடத்தாமல், அயல்பணி ஒப்பந்த சேவை (Outsourcing) மூலம் வெளியில் தயாரிப்பது, இதன் மூலம் ஆலைக்குள் தொழிலாளிகளை குறைத்து கொடுரமான உழைப்பு சுரண்டலையும், மலிவான விலைக்கு உற்பத்தியையும் நடத்துவது என்பதையே ஃபோர்டிசம் என்று கூறுகின்றனர். தொழிற்சாலைகள் உற்பத்திக் கூடங்களாக இருப்பது மாற்றப்பட்டு ஒன்று திரட்டும் கூடங்களாக ஆக்கப்படுவது தான் இதன் சூக்குமம் ஆகும்.

முதலாளித்துவ லாப வெறியை அடிப்படையாக கொண்ட இந்த முறையை, ’அதிக உற்பத்தி – அதிக விற்பனை’ என்ற சூத்திரம் என்றும், இதுதான் அமெரிக்காவின் நடுத்தர மக்களை குறி வைத்து ஏவப்பட்டது என்றும் வியந்து பாராட்டினர். இதுபோலத் தான் ஆத்ம நிர்பார் என்ற பெயரில் “பொருளும் – பிராண்டும் அன்னியனுடையது. அதன் உற்பத்தி மட்டும் இந்தியனுக்கு என புதிய கொள்கை உருவாக்கப்பட்டது. மேட் இன் இண்டியா காலாவதியாகி, மேக் இன் இண்டியாவாக உருவெடுத்தது.”

என்னதான் மோடி தலைகீழாக நின்றாலும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி முதலீடு செய்வது வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தனியார் முதலீடுகள் தரை தட்டி இருப்பதாக பொருளாதார ஆய்வு அமைப்பு கூறுகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பு செய்தாலும் ஏன் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்குகின்றனர் என்றால் இன்னமும் கட்டுப்பாடுகள் இருப்பதுதான் என்று முதலாளித்துவ பொருளியல் அறிஞர்கள் முன்வைக்கிறார்கள்.

மற்றொரு புறம் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை நாசப்படுத்தி உற்பத்தியை முடக்குவதாக தொடர்ந்து விமர்சித்து கொண்டுள்ளனர். ஆனால் தொழிலாளர்கள் ஓய்வு, ஒழிச்சல் இன்றி கொடூரமாக சுரண்டப்படுகின்றனர். மக்களிடம் அடிப்படை தேவைகளைக் கூட வாங்க முடியாத வாங்கும் சக்தி இல்லாமல், வேலையின்மை பெருகி இருப்பதும், விவசாயமும் திட்டமிட்டு ஒழிக்கப்படுவதுதான் முதன்மை காரணம். அதற்கு பிறகுதான் இரண்டு சக்கர, நான்கு சக்கர நுகர்வுகளிடம் செல்லமுடியும் என்பதே நிதர்சனம்.

கார்ப்பரேட் நிறுவனங்களில் தொழிற்சங்கம் வைத்துக் கொள்வதற்கு அனுமதிக்க மாட்டோம் தாராளமாக தைரியமாக முதலீடு செய்யுங்கள் என்று அப்பட்டமாக அறிவித்த போதிலும் கார்ப்பரேட்டுகள் மனம் இறங்கவில்லை. கொரானாவை உருவாக்கியதாக கூறப்படும் சீனாவிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள அமெரிக்க கார்ப்பரேட்டுகளுடன் மோடி கும்பல் எங்கள் நாட்டிற்கு வாருங்கள் அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என்று அழாத குறையாக வருந்தி வருந்தி அழைத்து பார்த்தனர். ஆனாலும் மோடி மஸ்தான் வித்தை பலிக்கவில்லை.

2025ல் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட பொருளாதாரமாக இந்தியாவை உருவாக்குவது என்று வாய்ச்சவடால் அடித்த மோடி கும்பலுக்கு ஆப்பு என்ற வகையில் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று இந்தியாவின் பொருளாதாரம் 2.3 பில்லியன் டாலரைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது என்று அம்பலப் படுத்தியுள்ளது.. ஆனால் கொரானாவுக்கு பிறகு பிரிட்டன் மற்றும் இந்தியாவில் பொருளாதாரம் வளர்ந்து வருவதாக முதலாளித்துவ ஊடகங்கள் ஊளையிடுகின்றன. 2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 7 முதல் 8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2019-20 நிதியாண்டில் நான்காம் காலாண்டில் 3.6 சதவீதமாக சரிந்தது என்பதுதான் உண்மை.

மேக் இன் இந்தியா திட்டமும் ஜிடிபியில் 25 சதவீத உற்பத்தி ஆக இருக்க வேண்டும் என்ற இலக்கு கடந்த ஏழு ஆண்டுகளில் 15 சதவீதம் என்ற அளவில் அதிலேயே தேங்கி நிற்கிறது. 2016 முதல் இந்திய பொருளாதாரத்தில் உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்புகள் பாதியாக குறைந்துள்ளது என்று சென்டர் ஃபார் எக்கனாமிக் டேட்டா ஆன் அனலைசிஸ் அமைப்பின் தரவுகள் கூறுகிறது.

இதுதான் ஏகாதிபத்திய ‘வெட்டுக்கிளிகள்’ நமக்கு தந்த பரிசாகும். ஃபோர்டு ஆலை மூடல் என்பது தனிப்பட்ட ஒரு ஆலையின் பிரச்சனை அல்ல தோல்வி அடைந்துள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் பிரச்சனை. நோக்கியா, ஃபாக்ஸ்கான் வரிசையில் இன்று ஃபோர்டு நிற்கிறது. பன்னாட்டு கம்பெனிகளையும், கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டத்தையும் எதிர் கொள்ளும் அரசியல் தலைமை கொண்ட தொழிற்சங்கங்களே இன்றைய தேவை! வெறும் சேவை நிறுவனங்களை போல செயல்படும் அமைப்புகளினால் இதனை சாதிக்க முடியாது.

ஆய்வு-ஓய்வு-சாய்வு கொள்கைகளை தூக்கி எறிந்து போர்க்குணத்துடன் வீதியில் இறங்குவோம். கார்ப்பரேட்டுகளுக்கு சாவுமணி அடிக்கும் வகையில் ஆலைகளை தொழிலாளர்களே நிர்வகிக்கும் புதிய அமைப்பு முறையை உருவாக்குவோம். இதுநாள் வரை வரைமுறையின்றி தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சிய கொலைவெறி பிடித்த ஏகாதிபத்திய டிராகுலாக்களின் கதையை முடிப்போம். கார்ப்பரேட் கொள்ளையர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் கொண்ட புதிய ஜனநாயக அரசமைப்புக்காக போராடுவோம்! விவசாயிகள் – தொழிலாளர்களின் ஒற்றுமையை உருவாக்கி. இதனை சாதிப்போம்.

  •  பா. மதிவதனி.

1 COMMENT

  1. கட்டுரையாளர் பா.மதிவதினிக்கு வாழ்த்துகள்!

    ஆய்வு-ஒய்வு – சாய்வு கொள்கை பற்றி இன்னும் எளிமையாக சொன்னால் நன்றாக இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here