ற்கெனவே அதானி குழுமத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க் நிறுவனம் மீண்டும் இடியை இறக்கி இருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க்  நிறுவனத்தின் அறிக்கை இப்பொழுது இந்திய பங்குச் சந்தையை முறைப்படுத்தும் செபி(SEBI)யின் தலைவர் மாதபி புரி புன்ச் மீது இடியை இறக்கி இருக்கிறது.

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Securities and Exchange Board of India) செபி(SEBI) என்று அறியப்படுகிறது. இந்த வாரியம், இந்தியாவில் பங்குச் சந்தைகள், நிதிச் சந்தைகள் ஆகியவற்றை ஒழுங்கு படுத்துவதற்கான  கட்டுப்பாட்டு அமைப்பு. செபியின் தலைவராக உள்ளவர் எந்த நிறுவனத்திலும் முதலீடு செய்யக்கூடாது என்பது விதி.

பெர்முடா மற்றும்  மொரீசியஸ்  நாடுகளை தலைமையகமாகக் கொண்ட வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் அதானியின் சகோதரரான வினோத் அதானி முதலீடு செய்து இருந்த அதே நிறுவனங்களில், மாதபி புன்ச் மற்றும் அவரது கணவர் தவல் புன்ச் -ம் முதலீடு செய்து இருந்தனர் என்பது தற்பொழுது மிகப் பெரிய சந்தேகத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளன.

இப்படிப்பட்ட நிழல் நிறுவனங்கள் மூலமாகத்தான் அதானி குழுமம் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டிருந்ததாக  ஹிண்டன்பர்க் நிறுவனம் சென்ற ஆண்டு ஜனவரி-ல் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாதபி 2017 ஏப்ரல் முதல் 2022 மார்ச் வரை செபியின் முழு நேர உறுப்பினராக இருந்துவந்த நிலையில்  2022 ஆம் ஆண்டு மார்ச்சில் செபியின் தலைவராக மாதபி பொறுப்பேற்றார். அப்படி, தலைவராக பொறுப்பேற்கும் பொழுது சிங்கப்பூரை சேர்ந்த அகோரா பார்ட்னர்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.  செபியின் தலைவராக பொறுப்பேற்ற இரண்டு வாரத்திற்கு பிறகுதான் தனது பெயரில் இருந்த  அனைத்து பங்குகளையும் தனது கணவரான தவல் புன்ச் பெயருக்கு மாற்றியுள்ளார்.

அதே சமயம், மும்பையில் உள்ள அகோரா அட்வைசரி பிரைவேட் லிமிடெட் என்ற ஆலோசனை நிறுவனத்தின் 99 சதவீத பங்குகளை மாதவி வைத்திருக்கிறார்.  இந்த நிறுவனத்தின் இயக்குனராக அவரது கணவர் உள்ளார்.

360 One WAM என்ற  நிதி மேலாண்மை நிறுவனத்தின் மூலம் இந்த தம்பதியினர் அதானி குழும பங்குகளில் முதலீடு செய்து இருக்கிறார்கள். இந்த நிறுவனமானது  IIFL என்ற நிதி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது செபியின் தலைவரான மாதபி  எந்தெந்த நிறுவனத்தில் எப்பொழுது முதலீடு செய்தார் என்ற விவரங்கள் IIFL ன் ஆவணத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் மாதவி புன்ச் தனது சம்பளத்தின் மூலம் வந்த வருமானத்திலிருந்து தான் இந்த முதலீட்டை மேற்கொண்டதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால், இந்த காலகட்டத்தில், இந்தக் கணவன் மனைவி ஜோடி தங்கள் சம்பளத்தில் வந்த தொகையை விட நான்கு மடங்கு அதிகமாக  முதலீடு செய்தது எப்படி என்று ஹிண்டன்பர்க் கேள்வி எழுப்பி இருக்கிறது.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் செபியின் உறுப்பினராக மாதவி புன்ச் நியமிக்கப்பட்டார். அப்படி நியமிக்கப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகத்தான் 360 One WAM நிறுவனத்தின் மூலம் தன்பெயரில் செய்திருந்த முதலீடுகள் அனைத்தையும் தனது கணவர் பெயருக்கு மாதபி புன்ச் மாற்றி இருக்கிறார்.

செபியின் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பாகவும் பொறுப்பேற்ற பின்பும் பிற நிறுவனங்களில் தான் செய்துள்ள முதலீடுகளை மறைப்பதற்கான முயற்சிகளில் மாதபி புன்ச் ஈடுபட்டு இருந்தார் என்று ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றம் சாட்டுகிறது. மேலும் தனது முதலீடுகளையும் நிதி செயல்பாடுகளையும் மறைக்கும் நோக்கத்தில் தனது பெயரில் இருந்த நிறுவனப் பொறுப்புகளையும் பங்குகளையும் தனது கணவரின் பெயருக்கு மாற்றினார் என்றும் இந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

இப்படிப்பட்ட மாதபி புன்ச்,  செபி -ன் தலைவராக 2022-ல் பொறுப்பேற்ற போது அதானி குழுமம் பங்கு வர்த்தகத்தில் மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டது குறித்தான வழக்கை விசாரிக்கும் பொறுப்பை  செபி தனது கைகளில் எடுத்துக் கொண்டது.

அதானியுடன் மறைமுக தொடர்புகளைக் கொண்டுள்ள  வெளிநாட்டு நிறுவனங்களின் மூலமாக  அதானி குழுமப் பங்குகள் திடீரென்று விலைக்கு வாங்கப்பட்டு மிகப்பெரும் விலையேற்றங்களை சந்தித்தன. இதன் மூலம் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக கடந்த ஆண்டு ஜனவரியில் இதே ஹிண்டன்பர்க் நிறுவனம் ஒரு அறிக்கையை  வெளியிட்டது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கும்  குற்றச்சாட்டுகள் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செபி-யால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சமயத்தில், 2022-ல்,  மாதபி புன்ச்-ஐ அதானி இரண்டு முறை சந்தித்து பேசி உள்ளார்.

படிக்க: 

 பங்கு சந்தையில் 32 லட்சம் கோடி இழப்பு! யாருக்கு லாபம்?

 அதானி குழுமத்தின் வர்த்தக மோசடிகளுக்கு பின்புலமாய்  இருந்த மர்ம மனிதன் வினோத் அதானி!

இந்த நிலையில் தான் அதானி குழுமத்தின் மீதான  செபியின் விசாரணை இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதானி குழுமத்திற்கும் செபி-ன்  தலைவரான மாதபி புன்சுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது இதன் மூலம் தெரிகிறது. மாதபி புன்ச் செபியின் விதிகளை மதிக்காத  ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்று ஹிண்டன்பர்க் அறிக்கை கூறுகின்றது.
அதானி குழுமத்தின் ஊழலை விசாரிக்கும் செபி-ன் தலைவராக மாதபி புன்ச் இருக்கிறார். விசாரணை விளங்கிவிடும்.

“ஹிண்டன்பர்க் அறிக்கை அடிப்படை ஆதாரமற்றது….. இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மையை கெடுக்க வேண்டும் என்பதற்கான வெளிநாட்டின் சதி…..
எதிர்க்கட்சிகளும் இதற்கு உடந்தையாக உள்ளன….” என்பன போன்ற கருத்துக்களை சங்கிகளும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். செபியும் மாதவி புன்ச்சும் கொடுத்துள்ள விளக்கங்கள் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்வது போலவே உள்ளது. இதுவரை மாதவி புன்ச் மீது மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விசாரணைக்கும் உத்தரவிடவில்லை‌.

பங்குச் சந்தையில் இன்று நடுத்தர வர்க்கம் வரை அதிகம் பங்கேற்கிறார்கள்‌. அவர்கள் பணத்தை சுரண்டும் மோசடிகளையே அதானி குழுமம் செய்து வருகிறது. அதற்கு துணையாக மோடி- மாதவி புன்ச் கும்பல் வேலை செய்து வருகிறது. இந்த மோசடிகளுக்கு முடிவுகட்ட இந்த கும்பலை அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிவதே தீர்வை தரும்.

குமரன்

ஆதாரம்: The wire 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here