2024 பாரா ஒலிம்பிக் தொடரில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,456 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து 84 வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டையில் இறங்கினர். அதில் 6 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். நடப்பு ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா பதக்கங்ளை குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 20ஐ தாண்டியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த பாரா ஒலிம்பிக் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8 வரையிலான பத்து நாட்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்தியா 7 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 13 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இதையடுத்து இந்தியா பதக்கப் பட்டியலில் 19 வது இடத்தில் உள்ளது.
மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அதே மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த நித்யஸ்ரீ சிவன் பேட்மிட்டன் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதோடு தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு ஆண்களுக்கான டி-63 உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். இந்த அடிப்படையில் பார்த்தால் கலந்து கொண்ட ஆறு பேரில் நான்கு பேர் பதக்கங்களை வென்றுள்ளனர்
இந்த 2024 பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு நல்ல உடல் திறன் உள்ள வீரர்களை உருவாக்குவதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் பல நூறு கோடிகளை செலவு செய்கின்றபோது இந்தியா வெறும் 470 கோடி ரூபாயை செலவு செய்து இருக்கிறது.
இதையே மிகவும் பெருமையாக கருதிக் கொண்டு யார் யாருக்கு செலவு செய்தோம் என்பதையும் கீழ்க்கண்டவாறு பட்டியலிடுகிறது. “இந்திய அரசாங்கம் செலவு செய்த 470 கோடியில், நீரஜ் சோப்ரா, பி.வி.சிந்து போன்ற சிறந்த வீரர்களாகக் கருதப்படும் 16 துறையைச் சேர்ந்த வீரர்களின் பயிற்சிக்கு ₹5.72 கோடி செலவிடப்பட்டது. இதில் அதிகபட்சமாகத் தடகள விளையாட்டிற்கு மட்டும் 96.08 கோடி ஒதுக்கப்பட்டதாக இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) மிஷன் ஒலிம்பிக் செல் (MOC)” தெரிவித்துள்ளது.
ஆனால் பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கு சென்ற வீரர்களுக்கு இதுபோன்று கூட தொகையை செலவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகத்தில் எப்படி மாற்றுத்திறனாளிகளை ஒதுக்கி வைத்து இழிவுபடுத்துகிறார்களோ அதே போல தான் இந்திய ஒன்றிய அரசாங்கம் பாரா ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளுகின்ற வீரர்களை போற்றுவதற்கு பதிலாக பல்வேறு வகையில் புறந்தள்ளி உள்ளது.
ஊனமுற்றவர்களை இழிவாக பார்க்கின்ற இந்திய சமூக அமைப்பில் தமிழகத்தில் தான் அவர்களை ‘மாற்றுத் திறனாளிகள்’ என்று பெயர் சூட்டி வரவேற்கின்றது. பிற மாநிலங்களில் பெரும்பாலும் சொந்த முயற்சியிலும், ஸ்பான்சர் களின் மூலமும் மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடிகிறது.
இவ்வளவு பின்னடைவுகள் இருந்தாலும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்த வீரர்கள் ஒலிம்பிக்கில் சாதித்ததை காட்டிலும், மாற்றுத் திறனாளிகள் பாரா ஒலிம்பிக்கில் சாதித்தது பல மடங்கு உயர்வானது.
அந்த வகையில் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு தனது தனித்திறமையை வெளிப்படுத்தி இதுவரை 29 பதக்கங்களை குறித்துள்ள இந்திய வீரர்களை நாம் கவுரவத்துடன் அணுக வேண்டும் என்பது மட்டுமின்றி மிகச் சிறப்பான வரவேற்பை வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் உடலில் ஒரு சில ஊனங்கள் இருந்தாலும் மனதில் இல்லை என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர். இன்னமும் அவர்களின் திறமையை மதித்து உரிய பயிற்சி கொடுத்தால் உலக அரங்கில் முன்னிலையில் உள்ள சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கடுமையான போட்டியை கொடுப்பார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
படிக்க:
♦ ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டிய வினேஷ் தகுதிநீக்கம்: ‘சதி இல்லை’ நம்புங்கள்!
♦ பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இந்தியா சாதிக்குமா?
இயல்பாகவே பெண்களை அடிமையாக நடத்துகின்ற பார்ப்பன இந்து மதம் இது போன்ற மாற்றுத்திறனாளிகளை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களை உருவ கேலி செய்வது, மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது என்பது புராண, இதிகாச காலங்களில் இருந்தே துவங்கிவிட்டது.
ராமாயணத்தில் உடல் உறுப்புகள் ஊனமுற்றவர்களை கூனி என்றும், சகுனி என்றும் இழிவுபடுத்தியதைப் போல இன்றளவும் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளை அவர்களின் ஊனத்தை குறிப்பிட்டு இழிவு படுத்துவது அவமானகரமானது என்பதை நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள மனிதர்கள் நேர்மையுடன் சிந்திக்க வேண்டும் என்பதுதான் இந்த ஒலிம்பிக்கில் மாற்றுத்திறனாளிகள் பெற்ற வெற்றி தெரிவிக்கின்ற செய்தியாகும்.
- முகம்மது அலி.