தற்போது இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷில் மாணவர் போராட்டம் பற்றி படர்ந்து வருகிறது. போராட்டத்திற்கு எதிரான அரசின் அடக்குமுறையால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
எதற்காக இந்த போராட்டம்?
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக இந்தியாவின் உதவியுடன் முத்தி வாகினி என்ற அமைப்பை உருவாக்கி போராட்டம் நடத்தினர் அன்றைய போராளிகள்.
இப்படி 1971இல் பங்களாதேஷ் சுதந்திரம் பெற்றது. இந்த சுதந்திரத்திற்காக போராடி உயிரை விட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் இன்று வரை 30 சதவீதம் இட ஒதுக்கீடு தரப்பட்டு வருகிறது.
அதாவது, மூன்றில் ஒரு பங்கு வேலை வாய்ப்புகளை முன்னாள் சுதந்திரப் போராளிகளின் வாரிசுகளே தொடர்ந்து அனுபவிக்கின்றனர்.
ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்கள் செய்த தியாகத்திற்காக தொடர்ச்சியாக பலன் அனுபவிப்பது சரியா?
இந்தியாவில் தலைமுறை தலைமுறையாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டு வந்ததன் விளைவாக, ஆயிரம் ஆண்டு அடிமைத்தனத்தில் உரிமைகள் பறிக்கப்பட்டு வந்ததன் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து இட ஒதுக்கீடு தரப்படுகிறது. இது நியாயமானது. ஆனால் வங்காள தேசத்தில் நடப்பது இதைப்போன்றதல்ல.
அநீதியான இத்தகைய இட ஒதுக்கீட்டை எதிர்த்து தான் மாணவர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர். மாணவர் மீதான அடக்குமுறைக்கு எதிராக பொதுமக்களும் களத்திற்கு வந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு, தீ வைப்பு என அரசின் மற்றும் ஆளும் கட்சியின் அமைப்புகளாலும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு பங்களாதேஷ் கொளுந்து விட்டு எரிகிறது.
இடஒதுக்கீடு தருவதால் என்ன பிரச்சனை?
சுமார் 17 கோடி மக்கள் தொகை கொண்ட வங்காள தேசத்தில் தொழில்துறை வளர்ச்சியானது இளைஞர்கள் அனைவருக்கும் ஆன வேலைவாய்ப்பை தரும் அளவில் இல்லை.
குறிப்பாக சர்வதேச நிதி மூலதனமானது வங்காளத்தில் இருந்து உலக சந்தைக்காக ஆண்டுதோறும் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆடைகளை தயாரித்து வாங்குகிறது. அதாவது சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்பில் ஆயத்த ஆடைகள் வங்காளதேசத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆனால் வங்கதேசத்திலோ சுமார் 1.8 கோடி இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக தெருவில் நிற்கின்றனர். ஆயத்த அஆடைத்துறையில் வேலை கிடைத்துள்ள 40 லட்சம் பேரும் உத்தரவாதமான சம்பளத்தைப் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ்பவர்கள் அல்ல.
வியர்வை கூடங்கள் என்று அழைக்கப்படும் மிக மோசமான நவீனகொத்தடிமைகளை போன்று சுரண்டப்படுபவர்களே அதிகம். இந்த அவலத்தை வங்காளத்தில் ஆலைகளில் அவ்வப்போது நடக்கும் தீ விபத்துகள் எடுத்துக் காட்டுகின்றன.
படிக்க: பங்களாதேஷ் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் போராட்டம்: அவர்களிடம் பாடம் கற்போம்!
ஆலைகளில் நெருப்பு பிடித்தால் தொழிலாளர்கள் தப்பிப்பதற்கு எவ்வித வசதிகளும் செய்யப்படுவதில்லை. இருக்கும் ஒவ்வொரு சதுர அடியையும் உற்பத்திக்கானதாக மட்டுமே ஒதுக்கி சுரண்டி வருகின்றனர்.
எனவே, விபத்துகளின் போது நடக்கும் தொழிலாளர்களின் படுகொலைகள் கார்ப்பரேட்டுகளின் கொடூர சுரண்டலை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.
அதாவது உலக தரத்திலான துணிகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் அவசர காலங்களில் வெளியேறுவதற்கு கூட போதுமான வசதிகள் இல்லாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வேலை வாங்குகிறார்கள். இந்த எதார்த்தம் தான் அரசு வேலையை நோக்கி இளைஞர்களை தள்ளி விடுகிறது.
ஆளுங்கட்சி எதிர்க்கட்சி முரண்பாடு!
வங்கதேசத்தை ஆண்டு வரும் அவாமி லீக் கட்சியின், ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் தமது கட்சியினருக்கு, தமக்கு ஆதரவாளர்களுக்கு அனைத்து அரசு வேலைகளையும் ஒதுக்குவதாகவும், தேர்தல்களை கூட நேர்மையாக நடத்தாமல் எதிர்க்கட்சிகள் தேர்தல்களை புறக்கணித்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் நிலைமை உள்ளது.
ஏழ்மையில் இருந்து விடுபட்டு, ஏகாதிபத்தியங்களின் சுரண்டலுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டதாக ‘வளர்ச்சியை’ நோக்கி முன்னேறும் வங்கதேசத்தில் ஊழலும் தலைவிரித்தாடுகிறது. இதை ஷேக் ஹசினாவே ஒத்துக் கொண்டுள்ளார்.
தலை விரித்தாடும் ஊழல்!
இந்தியாவில் எப்படி மோடி தலைமையிலான பாஜக அரசு வரலாறு காணாத ஊழல்களை செய்து வருகிறதோ, தேர்தல் முடிவுகளை அரங்கேற்றி வருகிறதோ, அதே பாணியில் ஒரு சர்வாதிகாரியாகத்தான் ஷேக் ஹசீனா ஆட்சி செய்து வருகிறார்.
ஊழல் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு தடாலடியாகவும் பதில் அளித்துள்ளார். அதாவது ஒரு பியூன் மட்டுமே சுமார் 280 கோடி ரூபாய்க்கு சொத்துக்கு வைத்துள்ளது தெரிய வந்ததாகவும், சர்வ சாதாரணமாக ஹெலிகாப்டரில் பயணித்து வந்ததாகவும், அவர் மீது தனது அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அடித்து விட்டுள்ளார். ஆனால் அந்தப் பியூன் யார் என்றோ எங்கு பணிபுரிந்தார் என்றெல்லாம் சொல்லவில்லை.
ஆனால் ஊழல் புகார்களோ முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள், வரி வசூல் செய்யும் உயர் அதிகாரிகள், அரசு வேலைக்கு ஆள் எடுக்கும் துறையின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் என பலர் மீதும் ஊழல் புகார் எழுப்பப்பட்டுள்ளது.
இளைஞர்களை தூண்டிய கள நிலைமை!
வளர்ச்சித் திட்டங்களால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்; இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும். அப்படி இல்லாமல், அனைத்து வேலைகளிலும் ஊழல்களை செய்து ஆளும் கட்சிக்கு சாதகமாக இருப்பவர்கள் கொழுக்கவும், ஆளும் கட்சியினரின் வாரிசுகளை இட ஒதுக்கீடு மூலம் அரசு வேலைகளை நிரப்பவுமே முடிகிறது என்றால் இதை எப்படி வங்கதேச இளைஞர்கள் சகிப்பார்கள்?
இந்த சூழல்தான் இளைஞர்களை போராட்ட களத்திற்கு தள்ளி விட்டுள்ளது.
ஒடுக்கும் சேக் ஹசீனா!
இந்தியாவில் இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் என்று வேறு மதத்தினராக அடையாளப்படுத்தப்பட்டு ஆர் எஸ் எஸ் குண்டர்களால் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் நடக்கிறது. இந்துக்களிலேயே ஆதிக்க சாதி தாழ்த்தப்பட்ட சாதி என்று பிளவுபடுத்தப்பட்டு தலித்துகள் கொல்லப்படுகின்றனர்.
ஆனால், தற்போது வங்கதேசத்தில் நடந்த வரும் போராட்டத்தில், ஆளும் கட்சியினரின் அமைப்புகள் மூலம் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களில் இத்தகைய மதப் பிளவு இல்லை. போராடுபவர்களும் போராட்டத்தை ஒடுக்குபவர்களும் என இரு தரப்பினரும் இஸ்லாமியர்களே!
இதில் ஒரே ஒரு வித்தியாசம் எதுவென்றால், அன்றைய இந்தியாவின் துணையோடு அல்லது இந்திய உளவுத்துறையின் வழிகாட்டுதலோடு உருவாக்கப்பட்ட முக்தி வாஹினியில் இணைந்தவர்கள் ஒருதரப்பாகவும், அன்றைய மேற்கு பாகிஸ்தானை ஆதரித்து அல்லது சுதந்திரப் போராட்டத்திற்காக களமிறங்காமல் நடுநிலை வகித்தவர்கள் மற்றொரு தரப்பாகவும் மாற்றப்படுகின்றனர் என்பதுதான்.
இன்று போராட்ட களத்தில் இருப்பவர்களை பிரதமர் ஷேக் ஹசீனா அவதூறுக்கு உள்ளாக்குகிறார். அதாவது,1970 களில் மேற்கு பாகிஸ்தானுக்கு கைக்கூலிகளாக செயல்பட்டவர்களின் வாரிசுகள் என்று வெறுப்பை தாக்குகிறார். தமது வெறுப்பு பேச்சின் மூலம் பாசிசம் ஆரியர்களிடையே மட்டுமின்றி எந்த மதத்திலும், எந்த கட்சியிலும் வேர் பிடித்து வளரும் என்பதை நிரூபிக்கிறார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் டெல்லியில் காவலர்கள் கண்முன்னே கையில் கைத்துப்பாக்கியுடன் காவி கிரிமினல்கள் ராஜநடை போட்டதை நாம் பார்த்துள்ளோம்.
அதே காட்சி தான் டாக்காவிலும் நடக்கிறது. ஒருபுறம் போராடும் மாணவர்கள் என்றால், மறுபுறம் பங்களாதேஷ் சத்ரா லீக் எனப்படும் காவல்துறையுடன் ஆளும் அவாமின் கட்சியின் மாணவர் பிரிவும் இணைந்தே தாக்குதலை நடத்துகிறது. இதன் எதிர்வினையாக போராட்டக்காரர்களும் தீவிர எதிர்ப்பை காட்டுகின்றனர்.
நெருக்கடியில் நிதி மூலதனம்; ஒடுக்கப்படும் உழைக்கும் மக்கள்!
உலகஅளவில் நிதி மூலதனமானது தனது தங்கு தடையற்ற சுரண்டல்களுக்கு ஏற்ற வகையில் பாசிஸ்டுகளையே அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்கிறது. அவர்களும் கடும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை உள்ளிட்ட நிலைமைகளால் வெடித்திடும் போராட்டங்களை அடக்குமுறைகள் மூலமே எதிர்கொள்கின்றனர். கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு துணையாக நின்று போராட்டக் களத்திற்கு வரும் தமது குடிமக்களை கொடூரமாக ஒடுக்கவும் செய்கின்றனர்.
வங்காளதேசம் போன்று உழைக்கும் மக்கள் தமது அடிப்படை வாழ்வாதார உரிமைக்காக போராட்ட களத்தில் குதிப்பது மென்மேலும் அதிகரித்து வருகிறது. அதற்கு எதிரான அடக்குமுறைகளும் தொடர்ந்து அதிகரிக்கவே செய்கிறது.
தனி ஒரு நாட்டில், தனி ஒரு பகுதியில், தனி ஒரு துறையில் நடக்கும் போராட்டமாக இனி மேலும் இவை சுருக்கி பார்க்கப்படக்கூடாது. போராட்டங்கள் ஏகாதிபத்தியங்களையும், நிதியாதிக்க கும்பல்களையும், இவர்களின் வளர்ப்பு பிராணிகளான பாசிச சர்வாதிகாரிகளையும் மொத்தமாக தூக்கி எறியும் திசையில் உலகு தழுவிய அளவில் முன்னேற வேண்டியுள்ளது.
– இளமாறன்.
இட ஒதுக்கீட்டை எதிர்த்து வங்கதேசத்தில் நடக்கும் போராட்டத்தை இந்தியாவில் உள்ள சங்கிகள் கொண்டாடுவார்கள்.