பாஜக அரசு நிறைவேற்றிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் லாரி ஓட்டுநர்கள் செய்த போராட்டம் பாசிஸ்டுகளை அசைத்து பார்த்துள்ளது. நேற்றைய தினம் வட மாநிலங்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளது அவர்களின் போராட்டம்.

கடந்த டிசம்பர் மாதம் 3 குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை 143 எம்பிக்களை பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு நைச்சியமாக  நிறைவேற்றியது. இதற்கு எதிராக இந்தியா முழுவதும் எதிர்ப்புகள் இருந்தாலும் மக்கள் மத்தியில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

பாஜக அரசு சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருதத்தில் மாற்றியதேயொழிய மற்றவை எல்லாம் காலனியாட்சி சட்டங்களைவிட மோசமான முறையிலேயே திருத்தியுள்ளது. இந்திய தண்டனைச் சட்டமான புதிய பாரதிய நியாய சன்கிதாவில் ஹிட் அண்ட் ரன்(HIT AND RUN) பிரிவில் அரசு கொண்டு வந்திருக்கும் திருத்தத்தின்படி   10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் 7 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.

அதாவது விபத்து ஏற்படுத்தியவுடன் ஓட்டுநர் காவல்துறை அல்லது தாசில்தாருக்கு தகவல் தெரிவிக்காமல் தப்பித்தால் சிறை, அபராதம் என்கிறது அரசு. விபத்து ஏற்படுத்தியவர் அந்த இடத்தில் இருந்தால் அவரின் நிலை என்னவாகும். மக்கள் வேடிக்கையா பார்ப்பார்கள். ஓட்டுநரின் உயிருக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஓட்டுநரை அடித்தே கொன்றுவிடுவார்கள்.

முன்பிருந்த இந்திய தண்டனைச் சட்டத்தின் ஹிட் அன்ட் ரன் பிரிவில் சாலை விபத்தில் ஒருவர் எதிர்பாராதமாக கொல்லப்பட்டால் ஓட்டுநருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். தற்போது கொண்டு வந்திருக்கும் சட்டத்தின் படி பார்த்தால் 10 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க நேரிடும். இது ஓட்டுனர்களின் வாழ்க்கையே நாசமாகும் ஆபத்து உள்ளது. அதனாலயே நாடு தழுவிய அளவில் லாரி ஓட்டுநர்கள் மூன்று நாட்கள் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

போராட்டம் காரணமாக குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுனர்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினார்கள். இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் விலை அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. இந்தியாவில் பல இடங்களில் பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் இருப்பதை நாம் தொலைக்காட்சிகளின் வாயிலாக பார்க்க முடிந்தது.

பெட்ரோல் பங்குகளை முற்றுகையிட்ட மக்கள்

இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகம் நிகழ்வதற்கு ஓட்டுனர்களை மட்டும் காரணம் கூறுவது தவறு. பல ஆயிரம் கோடி சுங்கவரி மூலம் சுரண்டும் அரசு தரமான சாலைகளை அமைத்துக் கொடுப்பதில்லை. பல ஊர்களில் குண்டும் குழியுமான சாலைகள் உள்ளது. சாலையினால் நடக்கும் விபத்திற்கு அரசு தானே பொறுப்பேற்க வேண்டும்?

கார்ப்பரேட்டுகளின் உற்பத்தி பொருளை குறிப்பிட்ட நாட்களுக்குள், குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று முதலாளி கொடுக்கும் நெருக்கடியால் தரமற்ற சாலைகளில் பயணிக்கும் ஓட்டுநர்கள் தங்களது வேலையை காப்பாற்றிக் கொள்ள, தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள, தங்களின் உயிரையும் பணயம் வைத்து தான் சரக்குகளை கொண்டு சேர்க்கிறார்கள். அப்படி போகும் போது நடக்கும் விபத்திற்கு முதலாளிகள் தானே பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் தானே குற்றவாளிகள். ஆனால் ஓட்டுநர்கள் மட்டும் பலி கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?

முதலாளிகள் தாங்கள் தயாரித்த பொருட்களை ஏற்றுமதிக்காகவோ அல்லது விற்பனைக்காகவோ நகர்த்த வேண்டுமானால் ஓட்டுநர்கள் இல்லாமல் சாத்தியம் இல்லை. பல்லாயிரம் கிலோமீட்டர் பொருட்களை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பை கையால்வதும் ஓட்டுநர்கள் தான்.

அதுமட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல், டீசல், காய்கறி உள்ளிட்ட பொருட்களையும் 140 மக்களிடம் கொண்டு சேர்க்கும் மிக முக்கியமான வேலையும் ஓட்டுனர்களே செய்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:

அதனால்தான் ஓட்டுநர்கள் சீற்றம் கொண்டு  போராடுகிறார்கள். மகாராஷ்டிராவில் ஓட்டுநர்கள் போராட்டத்தில் சில இடங்களில் வன்முறையாக மாறியது. மும்பை – பெங்களூரில் நெடுஞ்சாலையில் திரண்டு இருந்த கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அதே நேரத்தில் சோலாப்பூர், கோலாப்பூர், நாக்பூர் மற்றும் கோட்டியா மாவட்டங்களிலும் சாலை மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மத்திய பிரதேசத்தில் கருப்பு சட்டத்தை வாபஸ் பெறுங்கள் என்ற கோஷங்களுடன் லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மாவட்டங்களில் பஸ் மற்றும் டிரக் டிரைவர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஹிட் அண்ட் ரன் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஹனுமன்நகர் மாவட்டத்தில் டிரக் மற்றும் பஸ் டிரைவர்களும் ஒன்றிய அரசை கண்டித்து நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒன்றிய அரசை கண்டித்து கடும் எச்சரிக்கை விடுக்கும் விதமான கோஷங்களை எழுப்பினர்.

ஓட்டுனர்களின் போராட்டத்தை பார்த்து குலைநடுங்கிய ஒன்றிய பாஜக அரசு, மோட்டார் சங்கங்களின் நிர்வாகிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் இந்த ஹிட் அண்ட் ரன் சட்ட திருத்தத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லா “அனைத்திந்திய மோட்டார் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் விவாதித்தோம் இதன் அடிப்படையில் பாரதிய நியாய சன்கிதா 106/2 நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஓட்டுனர்களின் போராட்டத்தில் இது தற்காலிக வெற்றி தான். நமக்கு விவசாயிகள் போராட்டம் ஏற்படுத்திய அனுபவம் உள்ளது மூன்று வேளாண் திருத்த சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற்றாலும் மீண்டும் அமல்படுத்த துடிக்கிறது. அதுபோல நிலைமை ஓட்டுனர்களுக்கு மீண்டும் ஏற்படலாம்.

2014 ஆட்சிக்கு வந்த பிறகு மோடி மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களை இந்திய மக்களின் மீது திணித்து வருகிறது. விவசாயிகளின் உறுதியான 1 வருட போராட்டத்தின் விளைவாக புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற்றது. ஆனால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளுக்கு இதுவரை செவிகொடுக்க மறுக்கிறது.

குற்றவியல் சட்டங்கள் மூன்றும் காலனிய சட்டங்களே. ஒட்டு மொத்த மக்கள் விரோத சட்டங்களை தூக்கியெறிய ஒன்றிணைந்து போராடினால் வென்று காட்டலாம் என்பதற்கு லாரி ஓட்டுனர்களின் போராட்டமே முன்னுதாரணம்.

  • நந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here