மூகத்தில் அநீதிக்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் அட்வைஸ் தான் இந்த கட்டுரையின் தலைப்பு.

இவர்களின் அட்வைசுக்கு பஞ்சமே இல்ல.  “நான் அன்னைக்கே சொன்னேன் நீ தான் கேட்கல, இத்தனை வருசமா போராடி என்னத்த சாதிச்சீங்க. அங்க பாரு உங்கூட படிச்சவன், வேலை செய்யவன்லாம் இன்னக்கி வீடு கட்டி செட்டிலாயிட்டான். நீ தான் இன்னமும் போராட்டம் புரட்சின்னு சுத்திகிட்டு இருக்க.”

இப்படி சமூக மாற்றத்திற்காக போராடுகிற இளைஞர்கள் வாழ்க்கையை தொலைத்ததாகவும், வாழத்தெரியாதவர்கள் என்றும் குடும்பமும், சக நண்பர்களும் சதா காலமும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பேசுவதையும் நிறுத்த போவதில்லை. நாம் போராடுவதையும் நிறுத்தப் போவதில்லை.

ஏனென்றால் நமக்கு உதாரணமாய் நமது தோழன் பகத்சிங் இருக்கிறான். இந்த சமூகத்தின் பார்வையில் இவனும் “வாழத்தெரியாதவன்”. 1907 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப்பில் செப்டம்பர் 28 ஆம் தேதி பிறந்தார்.

தனது 12 ஆம் வயதில் ஜாலியன் வாலாபாக்கில் நடத்த ஏகாதிபத்திய படுகொலையில் உயிர் நீத்த மக்களின் ரத்தத்தில், நாட்டை ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திடம் இருந்து மீட்க உறுதி பூண்டான் மாவீரன் பகத்சிங்.

காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதால் மனமுடைந்த பகத்சிங் சிறுவயதிலே காந்தி போராட்ட வழிமுறையின் மீது நம்பிக்கையிழந்தார்.

பகத்சிங்கின் குடும்பம் சமூக பற்றோடும், தேச விடுதலைக்கு போராடியும் வந்தது. பொருளாதார ரீதியில் வசதியான குடும்பமாகவே இருந்தது. ஏனென்றால் ஒருமுறை ஆங்கிலேய காவல்துறையால் பகத்சிங் கைது செய்யப்பட்ட போது அவரது தந்தை அன்றைய பண மதிப்பில் 60,000 ரூபாய் கொடுத்து பெயிலில் எடுத்தார்.

தனது பள்ளிப்படிப்பை முடித்த பகத்சிங், லாகூரில் உள்ள NATIONAL COLLEGE-ல் படித்தார். அங்கு படிக்கும் போது தான் கம்யூனிச அரசியலின் அறிமுகம் கிடைத்தது. பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முயன்ற போது தனது புரட்சிகர லட்சியங்களுக்கு தடையாகி விடுமோ என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறினார்.

கல்லூரி காலத்தில் சந்திரசேகர் ஆசாத்தால் வழிநடத்தப்பட்ட HRA (Hindustan republican Association) அமைப்பில் இணைந்தார். இதிலிருந்தே அவரது புரட்சிகர பயணம் தொடர்ந்தது. காந்தியைப் போல் அஹிம்சை வழியில் ஆங்கிலேய ஏகாதிபத்திய கும்பலை விரட்ட முடியாது என்பதை உணர்ந்த பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் தேர்ந்தெடுத்த வழி தான் சோசலிச பாதை.

பின்னர் HSRA (Hindustan socalist Republic Association) என்ற பெயரில் மாற்றப்பட்டு இயங்கியது HRA. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆரம்பக் கட்டத்தில் ஒன்றாக இணைந்து போராடிய இந்து – முஸ்லீம்களுக்கு இடையே இன்று இந்தியாவை அடக்குமுறை செலுத்தி ஆண்டுக் கொண்டிருக்கும் பாசிச பாஜக – ஆர்.எஸ்.எஸ்–ன் முன்னோர்கள் மக்களை பிளவுபடுத்தி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்தனர்.

மதவாதத்தை தீவிரமாக எதிர்த்த பகத்சிங் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக வீதி நாடகங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். HRA அமைப்பின் வெகுஜன அமைப்பான நவ் ஜவான் பாரத் சபா அமைப்பை உருவாக்கினார். அதன் முக்கிய இரு விதிகள் வகுப்பு வாத அமைப்புகள் மற்றும் வகுப்புவாத கருத்துகளை பரப்பும் கட்சிகளுடன் எந்த தொடர்பும் இல்லை மற்றும் மதத்தை தனிப்பட்ட நம்பிக்கையாக கருதும் மக்களிடையே பொதுவான சகிப்புத்தன்மை உணர்வை உருவாக்குதல்.

மதவாதம் இந்திய புரட்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என்பதை இயங்கியல் பார்வையில் உணர்ந்தார் பகத்சிங். ஏப்ரல் 8, 1929 அன்று தொழிலாளர் விரோத சட்ட மசோதாவுக்கு எதிராக பாராளுமன்றத்தின் உள்ளே குண்டு வீசினார். பின்னர் தான் கொண்டு வந்திருந்த பிரசுரத்தில் இருந்ததை வாசித்து விட்டு ‘இந்திய புரட்சி ஓங்குக’, ஏகாதிபத்தியம் ஒழிக என்று கோஷமிட்டனர்.

பாராளுமன்றத்தில் குண்டு வீசிவிட்டு தப்பிக்க முயலாமல் கைதாகினர். சிறை சென்று நீதிமன்றங்கள் மூலம் அவர்களது நியாங்களையும் ஆங்கிலேய காலனியாதிக்கத்தின் சுரண்டலையும் அம்பலப்படுத்தி பேசினார் பகத்சிங். இதனால் இந்திய மக்களிடையே நாளுக்கு நாள் பகத்சிங்கின் செல்வாக்கு உயர்ந்தும், காந்தியின் செல்வாக்கு குறைந்ததும் ஆங்கிலேய ஏகாதிபத்திய கும்பலை கிலியடைய வைத்தது. அதனாலேயே பழைய கேஸை தோண்டியெடுத்து பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உள்ளிட்ட மூவருக்கும் தூக்குத்தண்டனை விதித்தது.

சிறை சென்றும் அங்கும் உரிமைக்காக போராட்டம் நடத்தினார்கள் பகத்சிங்கும் அவரது நண்பர்களும். தூக்கில் இருந்து தப்பிக்க எத்தனையோ வழிகள் இருந்தும் நாட்டு மக்களின் நலனுக்காக என்னைப் போன்று பலர் உருவாக வேண்டும் என்று தந்தை கருணை மனு கொடுத்ததை நினைத்து மனம் நொந்த பகத்சிங் தன்னை அவமான படுத்திவிட்டதாக தந்தையை கண்டித்தார்.

சிறையிலும் தோழர் லெனினின் நூல்களை படித்தவர் தூக்கிலிடும் முன்பு தான் புரட்சியாளர் தோழர் லெனினுடன் உரையாடிக் கொண்டிருப்பதாகவும் சிறிது நேரத்தில் வந்துவிடுவதாகவும் கூறினார். மார்ச் 23 1931 அன்று பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவரும் தூக்கிலிடப்பட்டார்கள். இறக்கும் போது பகத்சிங்கின் வயது 23. ராஜகுருவின் வயது 22.

ஆம் நாங்கள் பகத்சிங்கின் வாரிசுகள். அவர் விட்டுசென்ற பணியை நாங்கள் செய்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இழப்பதற்கு ஏதுமற்றவர்கள். பகத்சிங் வழியில் ஏகாதிபத்திய கும்பலையும் அவர்களுக்கு சேவகம் செய்யும், மக்களை மத ரீதியில் பிரித்தாளும் பார்ப்பன பாசிச காவி கும்பலையும் வீழ்த்த போராடுகிறோம்.

பகத்சிங் கூறியது போல் “அநீதிகளுக்கு எதிரான எங்களின் இந்த போராட்டம் எங்களோடு தொடங்கவும் இல்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதும் இல்லை.”

புரட்சி ஓங்குக!

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here