இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும், பொருளாதார தலைநகரான மும்பையிலும் கடந்த சில தினங்களாக கடுமையான பேய் மழை பொழிந்து வருகிறது. முக்கியமான போக்குவரத்து சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் அனைத்தும் நீரினால் சூழப்பட்டு மக்கள் வாழ்க்கைத் தேவைக்காக வீட்டிற்கு வெளியில் செல்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
நகரப்பகுதி மட்டுமின்றி நகரத்தை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகள், உழைக்கும் மக்கள் வசிக்கின்ற தாழ்வான பகுதிகள் போன்றவை அனைத்தும் வெள்ளைக்காடாகி மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது.
மும்பையில் ஒரே நாளில் 30 செ.மீ. மழை கொட்டியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 30 செ. மீட்டர் மழை பெய்தது. இது கடந்த 2005-ம் ஆண்டுக்குப்பின் பெய்த இரண்டாவது மிகப் பெரிய மழைப்பொழிவு ஆகும். இதனால் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தில் 50-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல விமானங்கள் இந்தூர், ஹைதராபாத், அகமதபாத்போன்ற இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டது. வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.
டெல்லியில் 88 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூன் மாத இறுதியிலும், ஜூலைன் துவக்கத்திலும் கனமழை பெய்தது. டெல்லியில் கடந்த 1936-ம் ஆண்டில் 234 மில்லிமீட்டர் மழை பெய்தது. அதற்குப் பிறகு சென்ற ஜூன் மாதத்தில் 228 மில்லிமீட்டர் மழை டெல்லியில் பதிவாகியுள்ளது.
கடந்த சில தினங்களாக இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் அசாம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேச மாநிலத்தில் 13 பேரும், பீகாரில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் ஃபதேபூர், ரேபரேலி, மெயின்புரி, புலந்த் சாகர், கன்னௌஜ், கௌசாம்பி, பிரதாப்கர் உள்ளிட்ட 45 மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் கனமழை பெய்துள்ளது.
அசாமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மொத்தமுள்ள 29 மாவட்டங்களில் சுமார் 24.2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் தொடர்பான விபத்தில் சிக்கி இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். துப்ரி மாவட்டத்தில் 7.78 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 63,490 ஹெக்டேர் விளைநிலங்களும் நீரில் மூழ்கின.
கச்சார், கம்ரூப், ஹைலகண்டி, ஹோஜாய், துப்ரி, நாகோன், மோரிகான், கோல்பாரா, பார்பெட்டா, திப்ருகார், நல்பாரி, தேமாஜி, போங்கைகான், லக்கிம்பூர், ஜோர்ஹாட், சோனிட்பூர், கோக்ரஜார், கரீம்கஞ்ச், தெற்கு சல்மாரா, தர்ராங் மற்றும் டின்சுகியா ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் 47,103 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நீரில் மூழ்கியுள்ள திப்ருகர் நகரில் கடந்த 8 நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெரிய நதிகளுள் ஒன்றான பிரம்மபுத்திரா, பராக் மற்றும் அதன் கிளை ஆறுகள் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் வடிகால்களில் தண்ணீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், ரங்கா தேசிய உயிரியல் பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 77 விலங்குகள் உயிரிழந்தன. 94 விலங்குள் மீட்கப்பட்டன என அசாம் மாநில அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேபோன்று பேய் மழை சென்ற ஆண்டுகளில் தமிழகத்தில் பெய்த போது தமிழகத்தின் அரசு சரியாக நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை சென்னை போன்ற மாநகரங்களில் உள்கட்டமைப்பை சரியாக மேம்படுத்தவில்லை என்று பார்ப்பன கும்பலின் பத்திரிகைகள், ஊடகங்கள் ஓலமிட்டன.
இந்து, தினமணி, தினமலர், எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் பேய் மழைக்கு அடிப்படையான புவி வெப்பமயமாதல் என்ற நிகழ்ச்சி போக்கை தனியே ஒரு மாநிலம் மட்டும் கட்டுப்படுத்தி விட முடியும் என்பதைப் போல ஊதி பெருக்கி திமுக-விற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டனர் என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
தற்போது பாஜக ஆளக்கூடிய மாநிலங்கள் அனைத்திலும் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இது இயற்கையின் சீற்றம், வரலாறு காணாத பேய் மழை என்று ஆட்சியாளர்களுக்கு சிறிதும் தொடர்பே இல்லை என்பதைப் போல இதே பார்ப்பன கும்பல் எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்..
படிக்க: 200 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு: தென் மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிப்பு!
இந்த பேய் மழைக்கு ஒரு மாத காலத்திற்கு முன்னர் இந்தியாவெங்கும் வெப்ப அலைகள் தாக்கி வந்தது என்பதை நாம் அறிவோம். இந்த நூற்றாண்டிலேயே அதிக வெப்பம் பதிவானதாக வானிலை அறிக்கை தெரிவித்தது.
குறிப்பாக, ராஜஸ்தான், ஹரியானா, டெல்லியில் 52 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பம் பதிவானது. அதிலும், டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதேபோனற அதிக வெப்பம் அடுத்த இரு நாள்களுக்கும் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வகம் தெரிவித்து உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து 18வது நாளாக வெப்ப அலை வீசியது அந்த மாநிலத்தில் சுரு என்னும் பகுதியில் 50.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
அதிக வெப்பம், அதிக பேய் மழை போன்றவற்றுக்கும் இந்த நூற்றாண்டில் புவி வெப்பமயமாதலின் காரணமாக பருவநிலை மாறியுள்ள காரணத்தை பற்றி போகிற போக்கில் பேசுவதும், மழை, வெள்ளம், புயல், வெப்பம் போன்றவை தற்காலிக நிகழ்வுகளைப் போல கடந்து போகச் செய்வதில் பார்ப்பன கழிசடை ஊடகங்களின் பங்கு முக்கியமானது.
மனித குலத்திற்கு பெரும் கேடு விளைவித்து வரும் முதலாளித்துவம் தோன்றிய கி.பி 1800 காலகட்டத்தில் இருந்து பூமிக்கு அடியில் கிடைக்கின்ற புதைபடிவ கனிமங்களையும், எரி பொருட்களையும் பயன்படுத்த துவங்கியதன் காரணமாகவே புவி வெப்பமயமாதல் நிகழ்ச்சி போக்கு அதிகரித்துள்ளது. இது பற்றி புதிய ஜனநாயகம் இதழில் பல கட்டுரைகளை எழுதியுள்ளோம்.
படிக்க: அதிகரிக்கும் வெப்ப அலைத்தாக்குதலும் கூரையை கொளுத்தும் ’வளர்ச்சியும்’!
மனித குலம் பல நூற்றாண்டுகளாக சேமித்து வைத்துள்ள இயற்கை சமநிலையை முதலாளித்துவம் நாசமாக்குவதால் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. பொதுவாகப் புவிவெப்பமடைதலால் கடல் வெப்பம் அதிகரித்துள்ளமை, காற்றழுத்தத் தாழ்வு நிலைகளை உருவாக்குகிறது. கடுமையான வெப்பத்தை ஒழுங்குபடுத்த இயற்கையின் வழிதான் காற்றழுத்தத் தாழ்வுநிலை, ஏனெனில் காற்றழுத்த தாழ்வு நிலை காற்றைக் குளிராக்கி மழை பெய்ய வைக்கிறது
இந்த புவி வெப்பமயமாதல் நிகழ்ச்சி போக்கு முதலாளித்துவம் தோன்றிய இரண்டு நூற்றாண்டுகளுக்குள் பூமியை பல மடங்கு நாசமாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக 1880 முதல் 1980 வரை நூறாண்டுகளில் 0.8 டிகிரி செல்சியஸ் புவியின் வெப்பம் உயர்ந்தது> ஆனால் 1980 முதல் 2010 வரை 30 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியசாக வெப்பம் உயர்ந்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் 2100 ஆம் ஆண்டு 4.5 டிகிரி செல்சியசாக புவி வெப்பம் உயர்ந்துவிடும்.
மனித குலத்திற்கு எதிரான ஏகாதிபத்திய முதலாளித்துவம் புவியின் வெப்பத்தை ஒன்றரை டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் அதனை தாண்டியே புவி வெப்பம் அதிகரித்துக் கொண்டுள்ளது. சுரண்டல், லாபவெறி கொண்ட முதலாளித்துவம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது.
ஏகாதிபத்திய முதலாளித்துவ லாபவெறியால் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் பருவநிலையை கடுமையாக பாதிக்கின்றது. கோடை காலங்களில் கடுமையான வெப்பம், வெப்ப அலை அதிகரிப்பதும் மழைக்காலங்களில் பேய் மழை, பெரு வெள்ளம் என்று மாறி மாறி மனித குலத்தை தாக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது வட மாநிலங்களில் பெய்து வருகின்ற கடுமையான கனமழையை, பேய் மழையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய காலகட்டங்களை முன்கூட்டியே அவதானித்து வானிலை ஆராய்ச்சி மையங்கள், வானிலை அறிக்கைகளை வெளியிடுகின்ற போதிலும் மாநிலங்களை ஆளுகின்ற அரசாங்கம், இந்திய ஒன்றியத்தை ஆளுகின்ற பாசிச பாஜக அரசும் நிரந்தரமாக இதனை கட்டுப்படுத்துவதற்கு குறைந்தபட்ச திட்டங்களைக் கூட மேற்கொள்வதில்லை.
ஒரு எடுத்துக்காட்டாக, வடக்கில் பெரும்பாலான ஆறுகளில் கனமழை, பெரு வெள்ளம் ஓடி மக்களின் வாழ்க்கை நாசப்படுத்துகின்ற போது தெற்கில் கடும் வறட்சி நிலவுகின்றது. இதனை கணக்கில் கொண்டு நாடு முழுவதும் உள்ள பெரிய நதிகளை ஒன்றிணைப்பது, ஆற்றின் போக்குகளை நாசமாக்காமல் பாதுகாப்பது, ஆற்றுப் படுகைகளிலும், கழிமுகங்களிலும், நீர் பிடிப்புப் பகுதிகளிலும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றுவது போன்றவை தற்காலிக தீர்வுகளாக உள்ளது.
இந்த தற்காலிக தீர்வுகளை அமல்படுத்திக் கொண்டே மனித குலத்தையும், புவிக் கோளத்தையும் பாதுகாப்பதற்கு நிரந்தர தீர்வு தேட வேண்டியுள்ளது. அத்தகைய நிரந்தர தீர்வானது. மனித குலத்தை இயற்கை பேரழிவுகளில் இருந்து பாதுகாக்கின்ற சோசலிச சமுதாயத்தை உடனடியாக நிறுவுவதை நோக்கி பாட்டாளி வர்க்கம் செயல்பட வேண்டும் என்பதே இன்றைய காலகட்டத்தில் முதன்மை தேவையாக மாறி உள்ளது.
- ஆல்பர்ட்