முதலாளித்துவம் பெற்றெடுத்த ஜனநாயகம் என்ற ஆட்சி வடிவம் உலகம் முழுவதும் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் உலகு தழுவிய சர்வாதிகாரத்தை பாதுகாப்பதற்கு பொருத்தமான ஆட்சி வடிவங்களை தான் அவர்கள் முன்னிறுத்துகிறார்கள்.
போலி ஜனநாயகம், தாராளவாத ஜனநாயகம் போன்ற பெயரளவிலான ஜனநாயக வழிமுறைகள் நிதி மூலதனத்தின் சர்வாதிகாரத்திற்கு எதிராக உள்ளது என்பதால் இனி மேலும் முகமூடி எதற்கு என்று அதனை கழட்டி எறிந்து விட்டு பாசிச சர்வாதிகாரத்தை ஆட்சி வடிவமாக முன்னிறுத்தி வருகின்றனர்.
2008 ஏகாதிபத்திய முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிக்கு பிறகு பல்வேறு நாடுகளில் வலதுசாரிகள் என்று அழைக்கப்படும், சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயகத்திற்கு எதிராக பிற்போக்கான சாதி, மத, இனவெறியர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் ஆட்சியை கைப்பற்றி மக்களின் பொருளாதார நெருக்கடிகளுக்கு உண்மை காரணத்தை மூடி மறைத்து மக்களை இனவெறியிலும், மதவெறியிலும் ஆழ்த்தி வருகின்றனர்.
இந்த சூழலில் 2024 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் நடைபெற உள்ள தேர்தல்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தை அதாவது தாராளவாத ஜனநாயகத்தை மீண்டும் உயிர்த்தெழச் செய்யுமா அல்லது பாசிச சர்வாதிகார ஆட்சி முறைகளே தொடருமா என்பது உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ தேர்தல் அறிஞர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் 2024 இந்தியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பாஜக பல்வேறு தில்லுமுல்லுகளை செய்தும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத, சிறுபான்மை அரசாங்கமாக அமைந்துள்ளது. அதுபோலவே மத்திய கிழக்கு நாடுகளில் கடைந்தெடுத்த பிற்போக்கு மதவாத நாடான ஈரான், இந்தியாவின் முன்னாள் காலனிய எஜமானரான பிரிட்டன் மற்றும் பிரான்சு அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோ போன்றவற்றுக்கு நடந்த தேர்தல்களில் சில மாற்றங்கள் நடந்துள்ளது.
பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பெரும்பாலான முடிவுகள் வந்துவிட்டன. தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 இடங்களில் 412 இடங்களை வென்றுவிட்டது. கன்சர்வேடிவ் கட்சி இதுவரை 121 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த 2019 தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி 364 இடங்களைக் கைப்பற்றியதால், போரிஸ் ஜான்சன் பிரதமரானார். ஆனால் இம்முறை நிலைமை முற்றிலும் எதிர்மாறாக உள்ளது. பிரிட்டனில் ஆட்சி அமைக்க 326 இடங்களைப் பெற வேண்டும். இதுவரை வெளியான முடிவுகளின் படி தொழிலாளர் கட்சி – 412 இடங்களிலும் கன்சர்வேடிவ் கட்சி – 121 இடங்களிலும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி – 71 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கிறது. தற்போது பிரதமராக இருக்கும் ’இந்திய மருமகனான’ ரிஷி சுனக் தனது பதவியை இழந்துள்ளார். தேசிய சுகாதார சர்வீஸை மறுசீரமைப்பது, புதிய ஆசிரியர்களை பணியமர்த்துதல், பள்ளிகளில் இலவச காலை உணவு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் LGBT+ பிரிவுக்கான உரிமைகள் எனத் தொழிலாளர் கட்சி அளித்த வாக்குறுதிகளின் மூலமாக தேர்தலில் வென்ற தொழிலாளர் கட்சியின் தலைவர் வழக்கறிஞரான சர் கெய்ர் ஸ்டாமர் பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்ல்ஸ்-ஐ பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்து, அவரது அதிகாரப்பூர்வ அழைப்பின் படி புதிய பிரதமர் பதவியை சர் கெய்ர் ஸ்டாமர் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த தேர்தல் முடிவுகளைப் பற்றி கருத்து கூறியுள்ள அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரெம்ப், லிபரல் டெமாக்கரடிக் கட்சியின் வெற்றியை வரவேற்றுள்ளது கவனிக்கத்தக்கது.
படிக்க:
♦ஐரோப்பிய ஒன்றியத்தில் தலை விரித்தாடும் பாசிச பயங்கரவாத கட்சிகளின் தேர்தல் வெற்றி!
அதேபோல பிரான்சு நாட்டிலும் 577 இடங்களைக் கொண்ட பிரான்சு நாடாளுமன்றத்தில் போலி இடதுசாரிகள் கூட்டணி 180 இடங்களில் வென்றுள்ளது. மையவாத கொள்கை கொண்ட இமானுவேல் மாக்ரோன் கட்சியான சென்டரிஸ்ட் கட்சி 159 சீட்களை பெற்றுள்ள நிலையில், மரைன் லீ பென்னின் தேசிய பேரணி என்றழைக்கப்படும் வலதுசாரி கூட்டணி 142 இடங்களை மட்டுமே பெற்றுள்ளன. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான 289 சீட்கள் யாருக்கும் கிடைக்காததால் அங்கு தொங்கு நிலை நாடாளுமன்றம் உருவாகியுள்ளது. இந்த தேர்தல்களில் எதிர்பார்த்ததைவிட திருப்பமாக போலி இடதுசாரிகள் கை ஓங்கி உள்ளது. இதனால் போலி இட்துசாரிகளும், தற்போதைய பிரதமரான மெக்ரானும் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
அது போலவே மெக்சிகோ நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் மெரேனா என்ற போலி இடதுசாரி கட்சி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. 128 செனட் உறுப்பினர்கள், 500 கீழவை உறுப்பினர் தேர்தலில் 58.3-60.7% வாக்குகளைப் பெற்றதால் 61 வயதான கிளாடியா ஷீன்பாம் அங்கு அதிபராகத் தேர்வாகியுள்ளார். ஏற்கனவே இவர் மெக்சிகோ நகர மேயராக இருந்துள்ளார்.. பெட்ரோல் விலை கட்டுப்பாடு, கிரிமினல் குற்றங்கள், போதை மருந்து கடத்தல் மற்றும் சுற்றுச்சூழல் விவகாரத்தில் முக்கியத்துவம், முதியோர் ஓய்வூதியம், இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை போன்ற வாக்குறுதி கொடுக்கும் இவர், வலதுசாரி வேட்பாளரான சோசிட்டிவ் கல்வெஸ் என்பவரை மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த 200 ஆண்டுகளில் முதல் பெண் அதிபர் என்று போலி இடதுசாரிகள் குதூகலிக்கின்றனர்.
அது போலவே தீவிர இஸ்லாமிய பழமைவாத நாடான ஈரான் நாட்டிலும் அதே நிலை தான். அங்கு கடந்த 3 ஆண்டுகளாக அதிபராக அதி தீவிர பழமைவாதியான இப்ராஹிம் ரைசி இருந்தார். அவரது ஆட்சியில் தான் இசுலாமிய கலச்சார காவலர்கள் ஈரானில் மீண்டும் கொண்டு வரப்பட்டனர். இந்த இசுலாமிய மதவெறி பிடித்த, கலாச்சார காவலர்களால் மஹ்ஸா அமினி என்ற இளம்பெண் கொல்லப்பட்ட நிலையில், அங்கு 2022 செப்டம்பரில் தொடங்கிப் பல மாதங்கள் போராட்டங்கள் நடந்தது. இதனால் ஈரான் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்தது. மதகுருமாரும், இஸ்லாமிய பிற்போக்குவாதியுமான ரைசி ஆட்சியில் பல பழமைவாத கொள்கைகள் கொண்டு வரப்பட்டன
அதே சமயம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை எதிர்த்து வந்தச் சூழலில் இவர் கடந்த மே மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கு அதிபர் தேர்தல் நடந்த நிலையில், சீர்திருத்தவாதியாக அறியப்படும் மசூத் பெசெஷ்கியன் பழமைவாதியான சயீத் ஜலிலி வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் ஈரான் நாட்டில் பல முக்கிய மாற்றங்கள் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் தொடங்கி பிரான்ஸ் வரை, ஈரான் முதல் மெக்சிகோ வரை இப்போது பல நாடுகளில் வரிசையாக வலதுசாரிகளை மக்கள் நிராகரித்து வருவதாகவும், இடதுசாரி கொள்கை கொண்ட கட்சிகளை வெற்றி பெற வைப்பதாகவும் எழுதி வருகின்றனர்.
முதலாளித்துவ ஆட்சி வடிவங்களில் நயவஞ்சகமானது, மூடு திரை போட்டு மக்களை ஏய்த்து வருகின்ற ஜனநாயக ஆட்சி வடிவமாகும். பிற்போக்கு வலதுசாரிகளுக்கு எதிராக தற்போதைக்கு இந்த முதலாளித்துவ ஜனநாயகம் மீண்டு வருவதாக தோன்றுகின்ற போதிலும் பாசிச சர்வாதிகார ஆட்சி வடிவத்திற்கு மாற்றாக இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக நாம் கருத முடியாது. ஏனென்றால் தற்போது பதவிக்கு வந்துள்ள புதிய ஆட்சியாளர்கள் ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் சுரண்டல் தன்மை கொண்ட பொருளாதாரக் கொள்கையை தான் கடைபிடிக்கப் போவதாகவே அறிவித்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது பற்றி பின்னர் விரிவாக எழுதுவோம்.
எனவே, உலகம் முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள சில மாற்றங்களை கண்டு பிரமையில் வீழக்கூடாது. ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை முற்றாக ஒழித்துக் கட்டுகின்ற சோசலிசப் புரட்சியை நடத்தி முடிக்கும் வரை நாம் ஓயக்கூடாது.
- மருது பாண்டியன்.