டிசம்பர் 2023 – ல் நாடாளுமன்ற வளாகத்திற்குள் இரு இளைஞர்கள் நுழைந்து வண்ணப் புகை வீசிய சம்பவத்தில், வெளியில் நின்று சர்வாதிகாரத்திற்கு எதிராக கோஷமிட்ட நீலம் ஆசாத் (38 வயதான டியூஷன் ஆசிரியை) மற்றும் அவருடன் சேர்த்து 4 பேர் அன்று கைது செய்யப்பட்டு இன்றுவரை சிறையில் உள்ளனர்.

வேலையின்மை நெருக்கடியை கண்டு கொள்ளாத மோடி அரசு!

ஹரியானாவின் மத்தியில் அமைந்துள்ள ஜிந்த் மாவட்டத்தின் காசோ குர்த் மற்றும் காசோ கலான் கிராமங்களுக்கு சேவை செய்யும் வகையில் ஒரு சமூக நூலகத்தினை நடத்தி வந்த நீலம், அங்கு மாணவர்களுக்கு இலவசக் கல்விப் பயிற்சியும் அளித்து வந்தார்.

அவர் கைது செய்யப்படும் வரை, அந்த நூலகத்தின் சுவர்களில் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங், சமூக சீர்திருத்தவாதிகள்  ஜோதிராவ், சாவித்திரிபாய் புலே மற்றும் புரட்சிகர பஞ்சாபி கவிஞர் பாஷ் ஆகியோரின் உருவப்படங்கள் தொங்கவிடப் பட்டிருந்தன. இளைஞர்களுக்கான வேலையின்மை மற்றும் விவசாயிகள் படும் துயரங்களின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக பாராளுமன்றத்தின் பாதுகாப்பை மீறி இந்த செயலில் ஈடுபட்டதாக அவர்கள் பின்னர் தெரிவித்தனர்.

முதுகலை பட்டதாரியான நீலம் ஆசாத் பயங்கரவாதத் தடுப்பு சட்டமான UAPA – வில் கைது செய்யப்பட்டு, ஏழு மாதங்களாக பிணைகூட மறுக்கப்பட்டு சிறையில் வாடுகிறார். அவரது அம்மா சரஸ்வதி தேவி “எனது மகள் கைது செய்யப்பட்டவுடன் எனது வீட்டில் அனுமதியின்றி நுழைந்த பத்திரிகையாளர்கள் எனது மகளை தீவிரவாதியாக சித்தரித்து கேள்வி கேட்டனர். அவருக்கு பொருத்தமான வேலை கிடைக்காததால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத்திட்டம்) இரு மாதங்களாக வேலை செய்து தினம் தோறும் 380 ரூபாய் சம்பளம் பெற்று வந்தார்” என்று கூறினார்.

நீலம் ஆசாத்-ன் தாய் சரஸ்வதி தேவி. அவர் தனது மகள் கிராமத்தில் மாணவர்களுக்கு நடத்தி வந்த டியூசனை காண்பித்தார்.

பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நீலம், ஏழ்மை நிலையில் இருக்கும் சூழலிலும் தலித் மக்களின் அடையாளமான அம்பேத்கரை ஆசானாக ஏற்றவர். எனவேதான் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு மக்களுக்கும் இலவசக் கல்வி போதனையும், யுபிஎஸ்சி பயிற்சியும்  வழங்கி வந்தார். அவர் நடத்தி வந்த நூலகத்துக்கு “முற்போக்கு நூலகம்” என பெயர் வைத்திருந்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்ட அனைவரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு இடையிலான ஒற்றுமைக்குக் காரணம் படித்தும் வேலை  கிடைக்காததும், இந்த சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையும்தான். இந்தியா முழுவதும் இது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளதாலும், ஆளும் பாசிச பாஜக அரசு இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் எவ்வித அக்கறையும் செலுத்தாத நிலையிலும்தான் தங்களது எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்தனர்.

வீழ்ச்சியடையும் வேலை வாய்ப்பு!

சர்வதேச தொழிலாளர் அமைப்பானது (ILO) தனது அறிக்கையில், இந்தியாவின் 37 கோடி இளைஞர்களில் குறைந்தது 10 கோடி பேர் கல்வி, வேலை வாய்ப்பு அல்லது பயிற்சியில் (Training) இல்லை என தெரிவித்துள்ளது. 2000 ஆம் ஆண்டில் படித்த இளைஞர்களில் 35% பேர் வேலையில்லாத நிலையில் இருந்தனர். அந்த எண்ணிக்கை 2022 – ல் கிட்டத்தட்ட இரு மடங்காக அதாவது 66% ஆக அதிகரித்துள்ளது என அறிக்கை கூறுகிறது.

அதேபோல இந்தியாவின் வேலை இல்லாதவர்களில் 83% பேர் இளைஞர்கள் என்றும் தெரிவிக்கிறது. இந்த தரவுகளை எதிர்த்து தொழிலாளர் அமைச்சகம் 2022 – ல் இளைஞர்களின் (15 முதல் 29 வயது வரை) வேலையின்மை 5% தான் என்றும், அதேசமயம் பெரியவர்களுக்கான (30 முதல் 59 வயது) வேலையின்மை விகிதம் வெறும் ஒரு சதவீதம்தான் என்றும் பச்சையாகப் புளுகியது.

2023 – ல் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்ட அறிக்கையில்,  இளைஞர்களின் வேலையின்மை விகிதம் அதிர்ச்சியூட்டும் வகையில் 45.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. மே 2024 -ல் இந்தியப் புள்ளியல் அமைச்சகத்தின் ஆய்வறிக்கையின் படி, நம் நாட்டில் தகுதிக்கான வேலை பெற முடியாமல் 62.3% பேர் உள்ளதாக தெரிய வருகிறது. அவர்களுக்கு பொருத்தமான வேலையோ, போதுமான வேலை நேரமோ வழங்காமல் அவர்களின் திறனை குறைவாகப் பயன்படுத்தும் நிலை உள்ளது.

இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக 2009 முதல் 2012 வரை பணியாற்றிய கௌஷிக் பாசு, “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) உயரும்போதும், மக்கள் தொகையின் அடிமட்ட மக்கள் தங்களது வருமானத்தில் வீழ்ச்சியை சந்திக்கிறார்கள். இதுவே குரோனி முதலாளித்துவத்தின் தன்மை” என்கிறார். மேலும் “தரவுகள் சேகரிப்பு மற்றும் வெளிப்படை தன்மையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. ஆனாலும் அடிமட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாத வகையில், அந்த தரவுகளை வெளியிட மறுக்கும் நிலை உள்ளது.

25 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ அல்லது பட்டம் பெற்ற இளைஞர்கள் அனைவருக்கும் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் காங்கிரஸ் கட்சியின் தொழிற் பயிற்சித் திட்டம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இருந்தாவது ஆளும் அரசு திட்டங்களை எடுத்து நடைமுறைப்படுத்தலாம். இதன் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் உதவித்தொகை என்பதை உத்தரவாதப்படுத்த முடியும்” என்கிறார்.

வளர்ந்து வரும் சமூகங்களுக்கான ஆய்வு மையத்தின் (CSDS)  தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், அதிகரித்து வரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு மற்றும் குறைந்த வருமானம் போன்றவையே மக்களின் மனதில் முக்கியப் பிரச்சனையாக இருந்தது என்பதை சுட்டிக் காட்டியது. அவர்களது துன்பங்களும், துயரங்களும் ஏற்படுத்திய அதிருப்திதான் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் செய்திருக்க வேண்டும்.

அரசாங்கம் இப்போதாவது இந்தப் பிரச்சனையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதையெல்லாம் பாசிஸ்டுகளிடம் எதிர்பார்க்க முடியுமா?

இந்தியாவில் உயிர் வாழ்வதே கடினம்தான்!

காங்கிரஸ் தலைமையிலான அரசில் 13வது நிதிக் கமிஷனின் பொருளாதார ஆலோசகராக இருந்த ராய், 10 கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு  இல்லாதது குறித்தும், இந்த இளைஞர்களின் வேலையின்மை விகிதத்தையும் ஆராய வேண்டியது அவசியம் என வலியுறுத்துகிறார். இந்தப் பிரச்சனை குறித்து ஆராய்ந்தால் இது ஒரு கட்டமைப்பு தோல்வி என்பதை ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கும் என்கிறார் அவர்.

நீலம் ஆசாத் நூலகம் அமைந்த காசோ கலனைச் சேர்ந்த 36 வயதான ரிங்கு, குருஷேத்ரா பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியலில் பிஏ பட்டமும், கணினி பயன்பாடுகளில் இரண்டு பட்டயமும் பெற்றுள்ளார். அவர் 100 நாள் வேலை திட்டத்தில் சேர வேலை அட்டைக்காக(Job Card) விண்ணப்பித்து உள்ளார்.

அவர் கூறும் போது, “நான் வேலைக்காக தொடர்ந்து முயற்சித்தேன். எந்த வேலையும் கிடைக்க வில்லை. இப்போது தினக் கூலியாக கிடைத்த வேலையை செய்து வருகிறேன். விரைவில் வேலை அட்டை கிடைக்கும் என நம்புகிறேன் என்கிறார். ஒவ்வொரு மாதமும் 15 முதல் 20 நாட்கள் வேலை கிடைக்கும் போது, அவரால் மாதத்திற்கு 8000 சம்பாதிக்க முடிகிறது. மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ள நிலையில், “உயிர் வாழ்வதே கடினமாக உள்ளது” என்கிறார்.

மேலும் “சமீபத்தில் ஹரியானா அரசு இஸ்ரேலில் பணி புரிவதற்காக இங்குள்ள கட்டுமான மற்றும் முறைசாராத் தொழிலாளர்களை விண்ணப்பிக்கக் கோரி இருந்தது. போர்ச்சூழல் இல்லாமல் இருந்தால் நானும் விண்ணப்பித்து இருப்பேன். எங்களது ஊர்களில் தொழிற்சாலைகளோ, வேறு நிறுவனங்களோ இல்லை. டெல்லி, குர்கான் அல்லது சண்டிகர் போன்ற நகரங்களுக்குத்தான் செல்ல வேண்டும். காசோ கலனில் நீலம் உருவாக்கி இப்போது செயலிழந்து கிடக்கும் அந்த நூலகத்தை வெறித்துப் பார்த்தபடியே நாம் விரும்புவதற்கு என்ன இருக்கிறது” என விரக்தியில் பேசுகிறார்.

அதிகரிக்கும் கல்வியும், சரியும் வேலை வாய்ப்பும்!

இங்கிலாந்தில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும்,  பொருளாதார நிபுணருமான சந்தோஷ் மல்ஹோத்ரா, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை 2010 – ல் 58 % லிருந்து 2015-ல் 85 % ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கல்லூரிகளில் 10% ஆக இருந்தது 27 சதவீதமாக அதிகரித்தது. இது பெரும்பாலும் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடந்துள்ளது. படிப்பு விகிதம் அதிகரித்துள்ள அதே வேளையில் வேலை வாய்ப்பு விகிதம் நேர் எதிராக சரிந்து வருகிறது. பாஜக அரசு உரிய வேலை வாய்ப்புகள் உருவாக்க தவறியதே இன்றைய நெருக்கடிகளுக்கு காரணம் என்கிறார் அவர்.

2014 தேர்தலின் போது ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாய்ச்சவடால் அடித்தார் மோடி. அப்படி நடந்திருந்தால் கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கி, படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வழங்கியிருக்க முடியும். ஆனால் இன்றைய நிலையோ மிகவும் அபாயகரமானதாக உள்ளது.

மற்றொரு பொருளாதார நிபுணரான ரத்தின் ராய் “விவசாயம், ஆடை உற்பத்தி, அனைவருக்கும் வீடு, மருத்துவம் மற்றும் கல்வி ஆகியத் துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும். இந்த ஐந்து துறைகளில் தன்னிறைவு அடைந்தால் மக்கள் அனைவருக்கும் அந்தந்த பகுதிகளிலேயே வேலைகளை உத்தரவாதமாக வழங்க முடியும். வேலை தேடி புலம்பெயர்ந்து அகதிகள் போல அலைய வேண்டிய அவசியம் ஏற்படாது” என்கிறார்.

படிக்க: சரிந்து வீழும் ஏகாதிபத்திய முதலாளித்துவம்! விளைவு வேலை இழப்பு, பொருளாதார மந்தநிலை!

மேலும் சரியான யோசனையுடன் திட்டங்களை அமலாக்கினால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க முடியும். அனைவருக்கும் வீடு திட்டத்துக்காக நிலங்களை ஏழை மக்களுக்கு அளிக்க வேண்டும். மாறாக சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கோ, விமான நிலையங்களுக்கோ அளிக்கக்கூடாது. அரசு நிலங்கள் குறைந்த விலையில் கோல்ஃப் மைதானங்களுக்கும், சூதாட்ட விடுதிகளுக்கும், பணக்காரர்களின் கேளிக்கை மையங்களுக்குமாக ஏன் கொடுக்கப்படுகிறது என கேள்வி எழுப்புகிறார்.

அகமதாபாத்தை சேர்ந்த 37 வயதான மெகுல் குமார், “எனது முதுகலை மற்றும் பிஹெச்டி தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. 2017-இல் NET தேர்ச்சி பெற்ற போதிலும் இன்று வரை உதவிப் பேராசிரியர் வேலை கிடைக்கவில்லை. கல்வி நிறுவனங்களிலும் சமூகத்துறையிலும் களப்பணியாளர் முதல் மேலாளர் வரை கிட்டத்தட்ட 500 இடங்களுக்கு மேல் விண்ணப்பித்தும் எந்த வேலையும் கிடைக்கவில்லை” என்கிறார் விரத்தியுடன்.

கடந்த ஏப்ரலில் பொதுத்தேர்தலுக்கு மத்தியில் ஹரியானாவின் ஜிண்டில்(Jind) ஆயிரக்கணக்கானோர் கூடி வேலையற்றோருக்கான ஊர்வலம் நடத்தினர். கர்னாலிலும் இதே போல நடந்தது. நாடெங்கும் இது போன்ற போராட்டங்கள் நடத்துவதன் மூலம்தான் ஆளும் பாஜக – வின் கார்ப்பரேட் காவிப் பாசிச அரசுக்கு நிர்பந்தத்தை உருவாக்க முடியும்.

  • குரு

மூலக்கட்டுரை: ‘Survival Is Hard’: India’s Millions Of Unemployed Youth & The National Crisis Facing Modi 3.0 | Article-14

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here