அடிப்படைத் தேவைகள் நிறைவேறாத நாட்டில் ராணுவத்திற்கு எதற்கு இத்தனை லட்சம் கோடி செலவு?

இந்தியா அமெரிக்க ராணுவ கார்ப்பரேட்டுகள் உடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மட்டுமின்றி ஆசிய பிராந்தியத்தில் தன்னை ஒரு வல்லரசாக காட்டிக் கொள்கின்ற முயற்சியில் ஈடுபடுகிறது.

ந்தியாவின் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் போர் தயாரிப்புகளுக்கு எதிராக பாதுகாப்பு கண்ணோட்டத்தில் இந்திய ராணுவத்தை மேலும் மேலும் வலுப்படுத்துவதாக ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் அறிவித்துக் கொண்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ. 6,81,210 கோடியை ராணுவத்திற்காக மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளது.

மக்களின் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் மற்றும் மருத்துவம், கல்வி ஆகியவற்றில் பெரும்பான்மை மக்கள் கொடுமையான துன்பங்களை அனுபவித்து வருகின்ற சூழலில் இந்தியாவில் இயங்குகின்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் பாதுகாப்புக்காகவும், அவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பாதுகாத்து நிற்பதற்காகவும் எல்லையோரத்திலும் நாட்டின் குறுக்கு நெடுக்காகவும் ராணுவம் சேவை புரிகிறது.

அரசாங்கத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டைக்காக நாட்டை அகல திறந்து விட்டுக்கொண்டு ஆட்சி புரிகின்ற ஆர்எஸ்எஸ் பாஜகவின் பாதுகாப்புக்காகவும் சுமார் 14 லட்சம் பேருடன் இந்த ராணுவம் ஆயுதங்களை தூக்கிக் கொண்டு சுற்றிக் கொண்டுள்ளது.

பாகிஸ்தான், சீனா ஆகியவற்றை காட்டி எப்போதும் பயங்கரவாத, தீவிரவாத, பிரிவினைவாத பீதியூட்டுவது, அதற்கு எதிராக நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதாக நாடகமாடிக்கொண்டு கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகவே இந்திய ராணுவம் செயல்படுகிறது என்பது தான் மறுக்க முடியாத உண்மையாகும்.

அதுமட்டுமின்றி  உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள் கோரி போராடுகின்ற தேசிய இயக்கங்கள் முதல் மாற்று அரசியலை முன்வைத்து போராடுகின்ற மாவோயிச அமைப்புகள் வரை அனைவர் மீதும் தாக்குதல் தொடுப்பதற்கு பலமான உள்நாட்டு ராணுவம் தேவைப்படுகிறது.

இந்த ராணுவத்தில் கப்பல் படை, விமானப்படை மற்றும் தரைப்படை ஆகிய பிரிவுகள் செயல்படுகின்றன என்பது ஒவ்வொரு ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்ற நிகழ்வுகளின் மூலம் நாட்டு மக்களுக்கு தெரிகிறது.

ராணுவ அமைச்சகத்தின் தகவல் படி இந்திய விமானப்படையில் தற்போது 30 போர்விமானப் படைப்பிரிவுகள் மட்டுமே உள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று முன்வைத்து விமானப்படைக்கு 42 போர் விமான படைப்பிரிவுகள் தேவை என்று ராணுவத்தின் செலவினங்களை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.

இந்த போர் விமான படைப்பிரிவின் ஒரு பகுதியாக 90 சதவீதம் உள்நாட்டு பாகங்களையும், 10% அமெரிக்காவின் இஞ்சினையும் கொண்டு தயாரிக்கப்படுவதாக கூறிக் கொள்ளப்பட்ட தேஜஸ் ரக போர் விமானங்கள் தயாரிப்பதில் இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் செயல்பட்டுக் கொண்டுள்ளது. 2003 ஆம் ஆண்டில் தேஜஸ் என இந்த விமானத்திற்கு பெயரிடப்பட்டது. அதன் பிறகு 2016 ஆம் ஆண்டில் தான் பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த  உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரகப் போர் விமானம் தேஜஸ், 2023 ஜூலை 01 அன்று இந்திய விமானப்படையில் ஏழு வருட சேவையை நிறைவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன…

இது வான் பாதுகாப்பு, கடல்சார் உளவு மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பன்னோக்கு ரேடார் சுய பாதுகாப்பு அறை, லேசர் டெசிகினேஷன் பாட் ஆகிய நவீனத்துவத்துடன் இந்த விமானம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 40 தேஜஸ் மார்க்-1 ரக போர் விமானங்களை எச்ஏஎல் நிறுவனம் தயாரிக்க இந்திய விமானப்படை ரூ.8,802 கோடி மதிப்பில் ஆர்டர் கொடுத்திருந்தது. இவற்றில் இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் இதுவரை 38 விமானங்கள் மட்டும் விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 2021-ம் ஆண்டு 83 தேஜஸ் மார்க்-1ஏ ரக விமானங்கள் தயாரிக்க எச்ஏஎல் நிறுவனத்திடம் ரூ.46,898 கோடி மதிப்பில் ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதில் முதல் விமானம் இன்னும் விநியோகிக்கப்படவில்லை. இந்நிலையில் மேலும் 97 தேஜஸ் மார்க்-1ஏ ரக போர் விமானங்களை ரூ.67,000 கோடிக்கும் வாங்கும் திட்டமும் விமானப்படையிடம் உள்ளது.

அதன்பின் ஜிஇ எப்-114 இன்ஜின்கள் பொருத்தப்பட்ட 108 தேஜஸ் மார்க்-2 ரக விமானங்களை எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து வாங்கும் திட்டமும் உள்ளது.

பாசிச பாஜக ஆர்எஸ்எஸ் கும்பலால் பெருமையாக “மேக் இன் இந்தியா” என்று கூறிக் கொண்டாலும் இந்த இன்ஜின்களை இந்தியாவில் தயாரிக்க 1892 ஆம் ஆண்டு முதல் இயங்குகின்ற அமெரிக்க பன்னாட்டு மற்றும் கார்ப்பரேட் ஜிஇ நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டுள்ளது.

படிக்க:

♠  இராணுவ சாகசமும், கார்ப்பரேட் மூலதனமும்! தமிழகத்தின் ஏமாளித்தனமும்!

♠  பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து முற்றாக வெளியேற மறுக்கும் அமெரிக்க இராணுவம்!

உலக அளவில் போர் விமானங்களை தயாரிப்பதிலும் ராணுவ தளவாடங்களை தயாரிப்பதிலும் முன்னிலையில் உள்ள அமெரிக்காவின் போயிங் மற்றும் மார்ட்டின் லாக் ஷீட் ஆகிய நிறுவனங்கள் தவிர இந்த ஜென்ரல் எலக்ட்ரிக் நிறுவனமும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

உலகின் ராணுவ தளவாடங்களையும், போர் விமானங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்த நிறுவனங்களை மீறி எந்த நாடாவது உள்நாட்டு தயாரிப்பை மேற்கொண்டால் அவர்களுக்கு அதிகபட்ச விலையில் பாகங்களை விற்பது, என்ஜின்களை விற்பது, ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்ட காலத்தில் விநியோகிக்காமல் காலதாமதம் செய்து இழுத்தடிப்பது ஆகிய வேலைகளை இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த உண்மைகள் ஒரு புறம் இருக்க தேஜஸ் மார்க்-1ஏ போர் விமான தயாரிப்புக்காக அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் (ஜிஇ) ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.5,375 கோடி மதிப்பில், 99 எப்-404 ரக இன்ஜின்கள் வாங்க எச்ஏஎல் நிறுவனம் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆர்டர் கொடுத்திருந்தது.

ஆனால், இந்த இன்ஜின்களை விநியோகிப்பதில் அமெரிக்க நிறுவனம் 2 ஆண்டுகள் தாமதப்படுத்தியது. இதனால் தேஜஸ் போர் விமான தயாரிப்பில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஹெச்ஏஎல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியா அமெரிக்க ராணுவ கார்ப்பரேட்டுகள் உடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மட்டுமின்றி ஆசிய பிராந்தியத்தில் தன்னை ஒரு வல்லரசாக காட்டிக் கொள்கின்ற முயற்சியில் ஈடுபடுகிறது. அதன் ஒரு பகுதியாக மலேசியாவில் லிமா-2019, துபாய் ஏர் ஷோ-2021, 2021ல் இலங்கை விமானப்படை ஆண்டு விழா, 2022ல் ஏர் ஷோ மற்றும் 2017 முதல் ஏரோ இந்தியா ஷோ உட்பட பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில் விமானத்தை காட்சிப்படுத்தியதன் மூலம் இந்தியா போர் விமானத் தயாரிப்புகளில் வளர்ந்து வருவதை நிரூபித்துக் காட்ட முயற்சித்துள்ளது.

நாட்டின் பெரும்பான்மை மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வக்கில்லாத ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் இந்தியாவில் பாதுகாப்புக்காக பல்லாயிரம் கோடிகளை ஒதுக்குவதும் அதனையும் வெளிநாட்டு ராணுவ கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பி ஒப்படைப்பதும் இதனை வைத்துக் கொண்டு பெருமைப்படுவதும் நடந்து வருகிறது.

மேலும் மேலும் ராணுவ செலவினங்களை அதிகரித்துக் கொண்டே செல்கின்ற சூழலில் “ராணுவத்திற்கான செலவினங்களை குறை”, “போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் மீது தாக்குதலை தொடுக்காதே”, “மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்” என்று போராட்டத்தை துவங்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் தேவையாக மாறியுள்ளது.

  • மாசாணம்

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

1 COMMENT

  1. ஆர் எஸ் எஸ் பாசிச கும்பல் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகவே தேசம் கடந்த முதலாளிகளுடைய லாபத்திற்காக ராணுவத்திற்கு அதிகமா நிதி ஒதுக்கி ராணுவ தளவாட உற்ப த்திகளை அதிகரிக்க செய்கிறது பாசிச பிஜேபி அரசு அதற்கு அதிக நிதி ஒதுக்கீடும் செய்கிறது நாட்டில் வேலையின்மை பசி பட்டினியால் உழைக்கும் மக்கள் நாளுக்கு நாள் பொருளாதார பிரச்சினைகள் சந்திக்கிறார்கள் மக்களுக்கு மானியங்களை வெட்டுகிற மோடி அரசு கார்ப்பரேட்டுக்கு மட்டும் சலுகைகளை வாரி கொடுக்கிறது என்ற தலைப்பில் இந்த கட்டுரையை எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here