கர்நாடகா ஆடைத்துறையில் கடந்த 2014 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்ட ஊதியம் அதன் பிறகு 8 ஆண்டுகள்உயர்த்தபடாமல் உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட தொழில்களின் குறைந்தபட்ச ஊதியம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் சட்டத்தை துளியும் மதிக்கவில்லை முதலாளிகள்.
கடந்த 43 ஆண்டுகளில், ஆடைத் தொழிலுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மறுசீரமைக்க அரசாங்கம் சராசரியாக 9 ஆண்டுகள் எடுத்துள்ளது. இதனால், ஆடைத் தொழிலாளர்களின் ஊதியம், கர்நாடகாவில் உள்ள பிற அட்டவணைப்படுத்தப்பட்ட தொழில்களின் ஊதிய விகிதங்களை விட சுமார் 4 ஆயிரம் குறைவாக உள்ளது. குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதில் கூட, இந்த பாரபட்சமான கொள்கையை கடைபிடித்து ஆடைத் தொழிலாளர்களுக்கு அரசு அநீதி இழைத்து வருகிறது.
மோடி அரசு பதவியேற்ற கடந்த 8 ஆண்டுகளில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அன்றாடம் உழைத்து வாழும் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள். இது ஆடைத்துறையில் வேலைப் பார்த்தவர்களையும் பாதித்துள்ளது. ஏனென்றால் அவர்களின் குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட ஆடைத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 10,441/-.
கர்நாடகாவில் கார்மெண்ட்ஸ் தொழிலில் ஈடுபடுபவர்கள் 4 லட்சம் பேர். பல தொழிலாளர்கள் இந்த தொழிலையே சார்ந்துள்ளனர். இதில் 80 சதவீத தொழிலாளர்கள் பெண்கள். அவர்களில் பலருக்கு குறைந்த பட்ச ஊதியமே வழங்கப்படுகிறது. இந்த பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடங்களில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். சம்பளம் குறைவு என்பது அவர்களை மேலும் மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
2017 – 2018 ஆம் ஆண்டில், கர்நாடகாவில் அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் 30 க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட தொழில்களில் குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைத்தது, தொழில்துறையினரின்(முதலாளிகளின்) எதிர்ப்பின் காரணமாக அதைத் திரும்பப் பெற்றது. இதையடுத்து, குறைந்தபட்ச ஊதிய உயர்வை திரும்பப் பெறுவதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், தொழிலாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து முதலாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் .ஆனால் அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : நவ தாராளமயக் கொள்கைக்கு எதிராக உறுதிமிக்க போராட்டத்திற்கு தயாராகும் தோட்டத் தொழிலாளர்கள்!
2018 ஆம் ஆண்டு முதல், இந்த வழக்கு நடந்து வருவதால் ஆடைத் தொழிலாளிகள் குறைந்தபட்சமாக, மாதம் ரூ.3,000 ஊதியத்தை இழந்துள்ளனர். வழக்கை தொடர்ந்து நீட்டித்தும், மேல்முறையீடு செய்தும் தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறார்கள் முதலாளிகள்.
ரெப்டகோஸ் பிரட் வழக்கில் உச்ச நீதிமன்றம், பின்வருமாறு தீர்ப்பு கூறியது: “இன்றைய சூழலில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது, பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை பல்வேறு கூறுகளின் அடிப்படையில் நிர்ணயிப்பது தான் தொழிலாளர்களுக்கு நீதி வழங்க ஒரே வழி” அதன் அடிப்படையில் இன்றைய விகிதத்தில் கணக்கிட்டால் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 28,200/-. வழங்க வேண்டும். ஆனால் ஆடைத் தொழிலாளர்கள் இன்று வெறும் 1/3 தொகையில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவான ஊதியத்திற்கு தொழிலாளர்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டால், அதை கட்டாய வேலை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது தொழிலாளர்கள் குறைந்த பட்ச ஊதியத்தை விட குறைவான ஊதியமே பெறுகிறார்கள் இது கட்டாய உழைப்பைத் தவிர வேறில்லை. கர்நாடக அரசு லட்சக்கணக்கான பெண் தொழிலாளர்களை கட்டாயக் கூலி வேலை செய்ய வற்புறுத்துகிறதுஎன்று தானே அர்த்தம்.
ஒவ்வொரு முறையும் குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று ஆடைத் தொழிற்சாலைகளின் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் தீவிரமாகப் போராடி வருகின்றன. ஆனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, நிர்வாகங்களின் சார்பாக அரசு செயல்பட்டு வருகிறது. ஆடைத் தொழில்துறையின் நிர்வாகம் பில்லியன்களில் லாபம் ஈட்டும்போது, தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், மேலும் அரசாங்கம் அத்தகைய சுரண்டலை ஆதரிக்கிறது.
இந்த நிலையில் தான் தொழிலாளர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். கர்நாடகாவை ஆளும் பாஜக அரசும், ஆடைத் தொழில் நிர்வாகமும், பெண் தொழிலாளர்கள் சரியான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யக் கூட போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கூலி உயர்வை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு அதைச் செய்யத் தவறியதால், ஆடைத் தொழிலாளர்களுக்கு எதிரான அநீதி நீடித்து வருகிறது.
GATWU தலைவரான பிரதீபா கூறுகையில், “GATWU, ஆடைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தக் கோரி போராட்டத்தை நடத்துகிறது. இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, GATWU துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், அஞ்சல் அட்டை பிரச்சாரம், தொழிற்சாலை அளவிலான கூட்டங்கள் மற்றும் சுதந்திர பூங்காவில் தொழிலாளர்களால் மிகப்பெரிய போராட்டமும் நடத்தப்படும்” என்றார்.
தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடும் காலம் போய் இன்று, குறைந்த பட்ச ஊதியம் நிர்ணயிக்க கோரி போராட வேண்டிய அவல நிலைக்கு தொழிலாளி வர்க்கம் தள்ளப்பட்டுள்ளது. அதற்கு காரணம் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் பாசிச கும்பல். கார்ப்பரேட்டுகள் தங்கள் வயிற்றை வளர்க்க தொழிலாளர்களின் வயிறை காயப் போடும் வேலையை செய்கிறது பாசிச கும்பல். ஏற்கனவே பெயரளவில் இருந்த தொழிலாளர் சட்டங்கள் கார்ப்பரேட் கும்பலின் நலனுக்கு தகுந்தவாறு தொகுப்புகளாக மாற்றப்பட்ட நிலையில் இன்று தொழிலாளர் வர்க்கம் குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கவே கையேந்தும் நிலை உருவாகியுள்ளது.
கார்மெண்ட் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம். கார்ப்பரேட் கும்பலின் நலனுக்காக தொழிலாளர் வர்க்கத்தைஅடகு வைக்கும் காவி கும்பலை, தனித்தனி போராட்டங்களின் மூலம் வீழ்த்த முடியாது. கோடிக்கால் பூதமாய் வெகுண்டெழுந்து போராடினால் தான் வீழ்த்த முடியும்.
- மாரிமுத்து