தற்கொலைக் களங்கள் ஆகும்  உயர் கல்வி நிறுவனங்கள்!

ஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு படித்து பட்டம் பெரும் மாணவர்கள் அறிவில் சிறந்தவர்களாக, தொழில் திறன் படைத்தவர்களாக உலக அளவில் அங்கீகரிக்கப்படுகிறார்கள். இந்தியாவிற்குள்ளும் உலகின் வளர்ந்த நாடுகளிலும் இங்கு படித்த மாணவர்கள் மிக எளிதில் நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள்.

எனவே இங்கு படிப்பதற்கு அனைவரும் பெரிதும் விரும்புவது என்பது இயல்பு.

பழங்குடியின, பட்டியலின, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி மாணவர்கள் இங்கு படிப்பதற்கு தகுதி வாய்ந்தவர்களாக இருப்பினும் கூட படிப்பதற்கு சீட்டு வழங்காமல் புறக்கணிக்கும் வேலையை உயர்கல்வி நிறுவனங்கள் செய்து வருகின்றன.

அதற்கு உதாரணமாக, 2021ல் டெல்லி ஐஐடியில் உள்ள 8 துறைகளில் ஆராய்ச்சி படிப்பிற்கு (PhD) பட்டியலின ,பழங்குடியின மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மாணவர்களிடமிருந்து படிப்பதற்கு அனைத்து தகுதிகளும் உள்ள 637 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஆனால் அதில் ஒரு மாணவருக்கு கூட படிப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேசமயம், பொருளாதார ரீதியாக முன்னேறிய பொதுப் பிரிவு (சாதி ரீதியாக முற்பட்ட) மாணவர்கள் மட்டும் 53 பேர் படிப்பில் சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளனர்.


இதையும் படியுங்கள்: “மாணவர்களை உயர்கல்வியிலிருந்து விரட்டவரும் மோடியின் ABC”


 

இந்த மாதிரியான புறக்கணிப்புகள் நாடு முழுவதும் பரவலாக நடக்கின்றன. நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி களில் ஆய்வு செய்வதில் குறைந்தது 9 ஐஐடி களிலாவது இந்த நிலைமை தான் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

புறக்கணிப்பிற்கு உள்ளாகும் மாணவர்களின் நிலை

இத்தகைய சாதி, மத ரீதியான புறக்கணிப்புகளை மீறி இந்த கல்வி நிறுவனங்களுக்குள் படிப்பதற்கு வரும் வரும் மாணவர்களின் நிலை என்ன?

படிப்பில் மிகச் சிறந்து விளங்கும் மாணவர்கள் தான் இங்கு படிப்பதற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஆயிரம் ஆயிரம் கனவுகளுடன் படிப்பதற்காக இந்த நிறுவனங்களில் காலடி எடுத்து வைக்கும் பிற்படுத்தப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, சிறுபான்மை இன மாணவர்கள் பேராசிரியர்களாலும் முற்பட்ட சாதி மாணவர்களாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்படுகிறன்றனர். அதனால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

நடுவில் இருப்பவர் சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட பாத்திமா லத்தீப்

சென்னை ஐஐடியில் நிலவும் சாதி ரீதியான தீண்டாமை குறித்து ஆய்வு செய்ய வந்த தேசிய எஸ்சி ஆணைய உறுப்பினர் சுவராஜ் வித்வான் ஆய்வை முடித்த பிறகு அளித்த பேட்டியில் சென்னை ஐஐடியில் நடக்கும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகள் காரணமாக 2007 இல் இருந்து 2017 ஆம் ஆண்டுக்குள் (10 ஆண்டிற்குள்) 17 தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். மேலும், தாழ்த்தப்பட்டோர் மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தப்படுவதாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பிறகாவது இங்கு நிலைமை மாறியுள்ளதா என்று பார்த்தால் இல்லை.


இதையும் படியுங்கள்: பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் ஐஐடி நிர்வாகம்!

சென்னை ஐஐடி  பார்ப்பன கோட்டையில் விரிசலை உண்டாக்கி அடித்து நொறுக்குவோம்!


 

2019ம் ஆண்டில் ஐஐடியில் பாத்திமா லத்தீப் என்ற மாணவி பேராசிரியர்களின் மதரீதியான புறக்கணிப்பு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை ஐஐடியில் இப்படி என்றால் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்த தலித் மாணவரான ரோகித் வெமுலா சாதி ரீதியான புறக்கணிப்பு, ஒடுக்குமுறை காரணமாக 2016ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒன்றிய அமைச்சர் கொடுத்த தற்கொலை பட்டியல்

2014 – 21 இடைப்பட்ட ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎம் மத்திய பல்கலைக்கழகங்களில் மொத்தம் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அதில் 24 மாணவர்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் , பழங்குடியின மாணவர்கள் மூன்று பேர் , இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 41 பேர், சிறுபான்மையின மாணவர்கள் மூன்று பேர் ( என இந்தப்பிரிவுகளில் மட்டும் மொத்தம் 71பேர்) தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி அன்று லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக கொடுத்த பதிலில் கூறியுள்ளார்.

ஆக தற்கொலை செய்து கொண்ட 122 மாணவர்களில் 71 மாணவர்கள் மேற்படி பிரிவை சேர்ந்தவர்கள் என்பதும் எதைக் குறிக்கிறது? இத்தகைய உயர்கல்வி நிறுவனங்களில் சாதி, மத வெறியர்கள் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

மதவெறியர்களுக்கு பதவி கொடுக்கும் பாஜக

உயர்கல்வி நிறுவனங்களில் சங்கிகளை உயர் பதவிகளில் அமர்த்துவதை இப்பொழுது வெளிப்படையாக செய்யத் தொடங்கி விட்டது பாஜக கும்பல். இதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்கள் காவிகளின் கூடாரமாக மாற்றப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை.இதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரியில் சாந்திஸ்ரீ பண்டிட் என்ற பெண்மணி  பாஜக -வால் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இவர் எப்படிப்பட்டவர் தெரியுமா?

*     டெல்லியில் போராடிய  விவசாயிகளை ஒட்டுண்ணிகள், இடைத்தரகர்கள் 

*    ஜே என் யு வில் செயல்படும் இடதுசாரி செயல்பாட்டாளர்கள் நக்சல், ஜிகாதிகள்

*    லவ் ஜிகாத் போன்ற வேறு வகையான பயங்கரவாதத்தை தடுக்க முஸ்லிம்கள் அல்லாதார்   விழித்தெழ வேண்டும் , ஒன்றுபட வேண்டும்.

இது போன்ற விசக் கருத்துக்களை சமூகத்தில் பரப்பியதற்கான பரிசாக,  பாஜக சங் பரிவாரக் கும்பலால், ஜே என் யூ வின் துணைவேந்தர் பதவியில் சாந்தி ஸ்ரீ பண்டிட் அமர்த்தப்பட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில்  சாதி மத ரீதியான புறக்கணிப்புகள் காரணமாக நடக்கும் தற்கொலைகளை ஜேஎன்யு-விலும் பிற உயர்கல்வி நிறுவனங்களிலும் நாம் எதிர்பார்க்கலாம்.

நாம் வெறுமனே தற்கொலைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கலாமா அல்லது இதுபோன்ற  தற்கொலைகளை தடுக்க களத்தில் இறங்கலாமா?

முடிவு செய்வோம்.

  • பாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here