தேசிய கல்விக் கொள்கை 2020ல் பண்பாட்டு திட்டமும், அரசியல் பொருளாதாரத் திட்டமும்
தேசிய கல்விக் கொள்கை 2020 அமலாக்க கட்டத்தில் உள்ளோம். தேசிய கல்வி கொள்கை 2020 உருவாக்கத்திற்கான அடிப்படையாக கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை அமைந்ததும் நமக்குத் தெரியும் . கஸ்தூரிரங்கன் விண்வெளி ஆய்வு நிறுவன அறிவியலாளராக இருக்கலாம் ஆனால் கல்விக் கொள்கையை உருவாக்கக் குழுத் தலைவராக கல்வியாளர்களில் ஒருவரை போட்டிருக்கலாமே என எதிர்ப்பு குரல் எழுந்தது . ஆனால் பாஜக அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை என்பதும் நமக்குத் தெரியும் . தற்போது அதே கஸ்தூரிரங்கன் தலைமையில் தேசிய கலை திட்டத்தை( National curriculam framework ) வடிவமைக்க குழு அமைத்து உள்ளது பாஜக அரசு . அந்தக் குழுவில் ஆர்எஸ்எஸின் கல்வித்தள அமைப்பான வித்யா பாரதியின் தலைவர் கோவிந்த் பிரசாத் சர்மா உட்பட 12 பேர் உள்ளனர் . இந்தக் குழு தேசிய அளவிலான பள்ளி கல்வி சார்ந்த கலைத்திட்டத்தை (Curriculum) தீர்மானிக்கப்போகிறது. தேசிய கல்விக் கொள்கையின் அரசியல் மற்றும் பண்பாட்டு திட்டம் ( Political and cultural agenda)என்ன என்பது தெளிவாக வெளிப்படுகிறது.
தேசிய கல்வி கொள்கை 2020ன் பரிந்துரைப்படி மற்றொரு திட்டத்தை பல்கலைக்கழக நல்கைக் குழு (UGC)அறிவித்துள்ளது . கலவை கற்றல் (Blended learning) முறை , அதாவது இனி உயர்கல்வி நிறுவனங்கள் 40 சதம் இணையவழி ஆன்லைன் கல்வியையும் 60 சதம் வகுப்பறை கல்வியையும் உறுதி செய்ய வேண்டும் என கலவை கற்றல் அறிக்கை கூறுகிறது. அந்த அறிக்கையில் மாணவர்கள் நம்ம ஊர் ஆசிரியரிடம் நேரடியாக கற்பதோடல்லாமல் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் மூலமாகவோ , பன்னாட்டு கல்வி தொழில் நிறுவனங்கள்(Corporate Edutech industry) மூலமாகவோ கூடுதலாக கற்றுக்கொண்டு தகவமைத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது .கற்றல் மேலாண்மை அமைப்புகள் (LMS- Learning management system)என ஆஸ்திரேலியாவின் Moodle நிறுவனம் ஜெர்மனியின் ILIS நிறுவனம் அமெரிக்காவின் Pro Profs நிறுவனம் இந்தியாவில் உள்ள Edu wave,Eiademy, TVS நிறுனங்கள் , பிரான்சில் உள்ள SPOT நியூசிலாந்தில் உள்ள Totara learn,ஐரோப்பாவின் Matrix, அமெரிக்காவின் CALF, Adobe captive prime, Black board ,பின்லாந்தின் CLANED போன்ற நிறுவனங்களின் இணையதள முகவரிகளை தந்து ( UCG Note -Blended learning page-14) உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இந்த நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்ள பரிந்துரைத்துள்ளது. இந்த அறிக்கையில் பேராசிரியர்களைப் பற்றி குறிப்பிடும் போது
“Teachers are valuable coachs for helping students managing any learning situation; it is up to teachers and learning designers to offer blended activities that best suits the subject …. UCG note Blended learning page 7”
எத்தகைய கற்றல் சூழலையும் மாணவர்கள் எதிர்கொள்ள உதவும் பயிற்சியாளர்களே ஆசிரியர்கள். பாடங்களுக்கு உகந்ததாக இருக்கும் முறையில் ஆசிரியர்களுக்கும் கற்றல் வடிவமைப்பாளர்களுக்கும் கலவை செயல்முறைகளை வழங்க வேண்டும் எனக் கூறுகிறது.
தேசிய கல்வி கொள்கை 2020 ன் பார்வையில் ஆசிரியர்கள் வெறும் பயிற்சியாளர்கள், கலவை கற்றல் வடிவமைப்பாளர்கள் . அம்பானியின் கட்டிடமே இல்லாத ஜியோ பல்கலைக்கழகம் உட்பட 20 நிறுவனங்களுக்கு உயர்நிலை ( Institute of Eminance) வழங்கியதும் கலவை கற்றல் பரிந்துரையும் பா ஜ க அரசின் தல்விச்சந்தை ஊக்குவிப்பை வெளிப்படுத்துகிறது . காலப்போக்கில் நவ தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு உகந்த வகையில் கல்வி வணிக சந்தையை ஊக்கப்படுத்துவது ஒன்றிய அரசின் கல்வி சார்ந்த பொருளாதாரக் கொள்கை (Economic agenda) என தெளிவாகிறது.
கலவை கற்றல் முறையில் வெவ்வேறு பன்னாட்டு கல்விச் சந்தையில் கற்பதென்பது, அடித்தட்டு மாணவர்களுக்கு சாத்தியமான ஒன்றில்லை. மேலும் இதற்கான கட்டமைப்பு வசதிகளை அரசு கல்லூரிகளில் ஏற்படுத்தும் சாத்தியக்கூறும் நிதி வசதியும் இல்லாத சூழலில் யாருக்கான உயர்கல்வியை ஒன்றிய அரசு திட்டமிடுகிறது என புரிந்து கொள்ளலாம்.
மேலும் தேசிய கல்விக் கொள்கை 2020இல் கூறப்பட்டுள்ளது போல் பட்ட வகுப்பில் மூன்றாண்டுகளோடு சென்றுவிட்டால் ஒரு பட்டம் , நான்காண்டு படித்து முடித்தால் முதுநிலை படிப்புக்கு போக முடியும் பிஎச்டி படிக்கவும் முடியும் . மூன்றாண்டு படித்த மாணவன் தான் பெற்ற மதிப்பெண்களை சேமித்துவைக்க கல்வி மதிப்பெண் புள்ளி வங்கி (Academic credit Bank ) உருவாக்கப்படும் என்று தலைமை அமைச்சர் மோடி அறிவித்துள்ளார் . இந்த மாணவன் தொலை கல்வியில் படிப்பைத் தொடர்ந்து மதிப்பெண் புள்ளியை (Credit) சேமித்து வைத்துக்கொண்டால் பின்னர் எந்தக் கல்வி நிறுவனத்திலும் சேர கல்வி மதிப்பெண் புள்ளியை பயன்படுத்திக் கொள்ளலாமாம்; நான்காம் ஆண்டு படிக்கும் மாணவனும் இவ்வாறு புள்ளிகளை சேர்த்துவைக்க Academic credit Bankஉதவுமாம்.
மோடி அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தெளிவாக இறங்கிவிட்டது தேசிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவை ஒட்டி கடந்த ஜூலை 20-ஆம் தேதி Academic credit Bank, National digital education architecture, National technology forum போன்ற திட்டங்களை மோடி அறிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்ட மன்றத்தில் நீதி அரசர் ஏ.கே. ராஜன் குழு அறிக்கையை சமர்ப்பித்து, விலக்கு பெற சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புகிறது . இது குறித்து விவாதங்கள் நடந்தன. ஆனால் ஒட்டுமொத்த உயர்கல்வியின் உள்ளடக்கத்தில் ஒற்றை இந்துத்துவ பண்பாட்டு சாரத்தை திணிக்க ஒன்றிய அரசு முற்பட்டுள்ளதை எதிர்த்தும், கல்வியை பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து வணிகச் சந்தையில் தள்ளுவதையும் எதிர்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.
யூ ஜி சி என்ற அமைப்பு 1956 இல் உருவாக்கப்பட்டது. உயர் கல்வி நிறுவனங்களில் கல்வி மேம்பாட்டுக்கும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்புக்கும் நிதி உதவியும் ஆலோசனைகளும் கூறும் கல்வியாளர்களை கொண்ட அமைப்பாக இயங்கி வந்தது. இதை கலைக்கும் பரிந்துரை NEP 2020 இல் உள்ளது. இது இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதே நேரத்தில் இந்த யு ஜி சி பட்ட வகுப்பு வரலாற்று பாட திட்ட உள்ளடக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என சுற்றறிக்கை ஒன்றை கடந்த மே மாதம் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ளது. புராணங்களையும் இதிகாசங்களையும் வரலாறு எனக் குறிப்பிடுகிறது அந்த வரைவறிக்கை. புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர்கள் ஆர்எஸ் சர்மா மற்றும் இர்ஃபான் ஹபீப் போன்றவர்களின் வரலாற்று புத்தகங்களை தவிர்த்து சங்க்பரிவார ஆதரவாளர்களின் புத்தகங்களை பரிந்துரைத்துள்ளது. மேலும் இந்திய வரலாற்றில் இஸ்லாமியர் பங்களிப்பை ஓரங்கட்டியுள்ளது யு ஜி சி வரைவறிக்கை.
ஒன்றிய அரசு மார்ச் 2019ல் உயர் கல்வி தளத்தில் தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த செயல் திட்டமொன்றை வகுத்தது . அதற்கு EQUIP (Education quality upgradation and inclusion programe ) கல்வி தரம் மேம்பாடு மற்றும் உள்ளடக்கும் திட்டம் ஒன்றை உருவாக்க வெவ்வேறு பிரிவுகளில் பரிந்துரைகளை பெற 10 குழுக்களை அமைத்தது. அதில் உலகத்தரம் வாய்ந்த கற்பித்தல் கற்றல் முறை குழுவுக்கு தலைவராக கஸ்தூரிரங்கன் இருந்தார் என்பது கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த குழு பரிந்துரைகளை 2019 ஜூன் மாதம் வெளியிட்டது பாஜக அரசு. 183 பக்கங்கள் கொண்ட EQUIP அறிக்கையின் பல கருத்துரைகள் NEP2020 பரிந்துரைகளாக கொள்கை முடிவுகளாக வந்துள்ளன.
EQUIP திட்டமிட உருவாக்கப்பட்ட பத்துக் குழுக்களில் மொத்தம் 50 பேர் பங்கேற்றுள்ளனர் . அதில் ஒருவர் கூட தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் இல்லை. சென்னை ஐஐடி பாஸ்கர் ராமமூர்த்தி மற்றும் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்யா சுப்பிரமணியன் போன்றவர்களை மட்டும் பாஜக அரசுக்கு தெரிகிறத
மேலும் அந்தக் குழுவில் ஜிண்டால் பல்கலைக்கழகம் சிம்பியாசிஸ் பல்கலைக்கழகம், அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் போன்ற தனியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர்களும், அலுவலர்களும் உறுப்பினராக இருந்துள்ளனர் இத்தகைய உறுப்பினர்களை உள்ளடக்கிய EQUIP திட்ட அறிக்கை எவ்வாறு பன்னாட்டு நிறுவனம் சாராத கல்வித் திட்டத்தை உயர்கல்விக்கென பரிந்துரைக்கும்?
மோடி அரசின் Make in India திட்டம் போல் Study in India திட்டம் வெளிநாட்டு மாணவர்களையும் பேராசிரியர்களையும் இந்திய பல்கலைக்கழகங்களில் படிக்கவும் பணியாற்றவும் அழைக்கிறது. காட்ஸ் ( GATS ) ஒப்பந்தத்தின் ஒரு கூறுதான் அது. வெளிநாட்டு மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வையும் பரிந்துரைக்கிறது EQUIP.
மருத்துவ கல்லூரிக்கு நீட்தேர்வு போல கலை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்புக்கும் SAT எனப்படும் திறனறி தேர்வு கொண்டு வரவும் பல்துறைசார் படிப்புகளையும் பரிந்துரைத்துள்ளது EQUIP.
குழுவின் பரிந்துரைகள் 183 பக்க அறிக்கையில் பார்க்கலாம் அதன் சாரத்தை NEP 2020 காணலாம்.
பெருந்தொற்று காலத்தைப் பயன்படுத்தி ஆன்லைன் வர்த்தக குழுமங்கள் கல்விச் சந்தையில் காலூன்றி விட்டன ஜூம் ( Zoom) நிறுவன 2020 ஆண்டு வருமானம் 777 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது 2019ஆம் ஆண்டு விவரங்கள் படி ஒவ்வொரு நாளும் ஒரு கோடி பேர் ஜும் செயலி வழி உரையாடுகின்றனர் .கூகுள் மீட் ( Google meet) வழியாக நாள்தோறும் 30 லட்சம் பேர் கலந்துரையாடியுள்ளனர் இவை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்ற செய்தியாகும்.
இந்தியாவில் ஏறத்தாழ 95 லட்சம் பேர் ஆன்லைன் கல்வி பயிலுகின்றனர் 2021ல் 14,500 கோடிகள் வருமானம் உள்ள கல்விச்சந்தை உருவாகவுள்ளது 2026 ல் கல்விச் சந்தை 85800 கோடிகள் ஆக உயர கூடிய வாய்ப்பு உள்ளது
தேசிய கல்விக்கொள்கை ஆன்லைன் கல்விச் சந்தை பற்றியோ சுயநிதி கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்வி வணிகத்தை கட்டுப்படுத்துவதற்கோ கருத்து ஏதும் கூறவில்லை
இந்திய கல்விச் சந்தையில் உயர்கல்வித் துறையில் 49 மத்திய பல்கலைக் கழகங்களும் ஐஐடி என்ஐடி போன்ற நிறுவனங்கள் 135ம் மாநில அரசுகள் சார்ந்த பல்கலைக்கழங்கள் 386ம் அரசு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் 10-ம் உள்ளன
இவை 327 தனியார் பல்கலைக்கழகங்களுடனும் 80 தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுடனும் போட்டி போட வேண்டும். பாஜக அரசு அரசு பல்கலைக்கழகங்களுக்கு ஐஐடிக்கும் உயர்நிலை ( Institute of eminence) தந்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடனோ பன்னாட்டு நிறுவனத்துடனோ கூட்டு வைத்து பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களாக (PPP) காலப்போக்கில் மாற்ற தேசிய கல்விக் கொள்கை வழிவகுத்துள்ளது. மாணவர் எண்ணிக்கையை பார்த்தால் சுயநிதி மற்றும் உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை 1,80,16,404 ஆகும் ஆனால் அரசுக் கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கையோ 91,36, 335 மட்டுமே.
கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கும் எண்ணம் பாஜக அரசுக்கு இல்லை என்பது தெளிவு. இந்த கட்டுரையில் உயர் கல்வி சார்ந்த தாக்கங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது . பள்ளி கல்வி சார்ந்த திட்டங்களையும் SAT மற்றும் NEET போன்றவற்றின் அரசியலையும் விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது.
பாஜக அரசு ஆர்எஸ்எஸ் பண்பாட்டு அரசியலையும் கல்வி வணிகச் சந்தைக்கான கட்டமைப்பையும் உள்ளடக்கிய கல்வி கொள்கையை அமலாக்க தொடங்கிவிட்டது. ஆசிரியர் இயக்கங்கள் இந்த ஆபத்தை உணர்ந்து மாணவர்களையும் இளைஞர்களையும் திரட்டத் தவறினால் கல்வி அடித்தட்டு மாணவர்களுக்கு மறுக்கப்படும். தரப்படும் கல்வியும் ஒற்றை பண்பாட்டைத் திணிக்கும்.
கல்வி வணிக ஊக்குவிப்பு புதிய கல்விக் கொள்கையில் தொடங்கி தேசிய கல்விக்கொள்கை 2020ல் மேலும் உந்தி தள்ளப்படுகிறது. நாம் முன்னர் பார்த்த சுயநிதி கல்லூரி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தாலே சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் என ஊகிக்க முடியும். இவர்களைத் தவிர உதவி பெறும் கல்லூரிகளில் நிர்வாக ஆசிரியர்கள் உள்ளனர். அரசுக் கல்லூரிகளில் வருகை ஆசிரியர்கள் உள்ளனர் இவர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை . பாதுகாப்பு இல்லை.
சென்னையில் துரைப்பாக்கம் டி பி ஜெயின் கல்லூரி ஆசிரியர்கள் 11 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லயோலா கல்லூரியில் 14 பேர் பணி தேவையில்லை என்று விடுவிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீராம் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியர் மார்த்தாண்ட பூபதி உள்ளிட்ட 6 பேர் முறையற்ற பணிநீக்கம். மதுரை தியாகராஜர் கல்லூரியில் ஆசிரியர்கள் பணிநீக்கம். இதையெல்லாம் கேள்வி கேட்டு ஒன்றுபட்டு போராட நிரந்தர ஆசிரியர் சங்கங்கள் முனையவில்லை.
அரசுக் கல்லூரி வருகை விரிவுரையாளர்கள் மாதம் 20 ஆயிரம் மட்டுமே பெறுகின்றனர். சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் பதினைந்து இருபது என சகட்டுமேனிக்கு சம்பளம் தருகின்ற நிறுவனங்கள் உள்ளன. ஆவடி கல்லூரி ஒன்றில் பணியாற்றிய லோகநாதன் சம்பளம் இல்லாத காரணத்தால் நுங்கு வெட்டி விற்க மரம் ஏறி விழுந்து இறந்த கொடுமையான செய்தியும், ஐந்து மாதமாக சம்பளம் தராத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி இறந்த விழுப்புரம் வருகை பேராசிரியர் முருகானந்தம் மரணமும் கல்விக் கொள்கை தீர்மானிப்பவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.
புதிய கல்விக்கொள்கை 2020 உயர்கல்வித்துறை ஆசிரியரின் பணி பாதுகாப்பு, ஊதிய உத்தரவாதம் குறித்து விவாதிக்கவும் இல்லை, தீர்வுகளும் கூறவில்லை. கல்வி வியாபாரிகளை ஊக்குவிப்பது மட்டுமே அதன் நோக்கம்.
தமிழ்நாடு அரசு கல்விக் கொள்கை உருவாக்க போவதாக அறிவித்துள்ளது. கல்வி வணிக தாக்குதலில் பலியாகும் ஆசிரியர்களுக்கு தீர்வு காணப்படுமா? என பார்ப்போம்.
- பேராசிரியர் ப. சிவகுமார்
sivakumarpadmanabhan1946@gmail.com
தளம் கலை இலக்கிய இதழ்