பார்ப்பன கும்பலின் கோட்டையாக திகழ்கின்ற, சென்னை ஐஐடியில் மீண்டும் பொறியியல் படிப்பு படித்து வந்த மாணவர் ஶ்ரீவன் சன்னி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த வாரத்தில் மும்பை ஐஐடியில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரைச் சார்ந்த தர்ஷன் சோலங்கி என்ற தலித் மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கு சமகாலத்தில் ஆந்திராவில் பொறியியல் படிப்பு படித்து வந்த அகிலா என்ற 22 வயது மாணவி விடுதியில் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்தார்.

பாசிச ஆர் எஸ் எஸ்-மோடி ஆட்சிக்கு வந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஐஐடி மற்றும் உயர் பல்கலைக்கழகங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஒன்றிய அரசு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கொடுத்துள்ளது.

சென்னை ஐஐடியில் மட்டும் 14 மாணவர்கள் இதுபோன்று தற்கொலை செய்து கொண்டு உள்ளார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஐஐடியின் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட பாத்திமா லத்தீப் என்ற இஸ்லாமிய மாணவி தற்கொலை செய்து கொண்டார், அதன் மீது எந்த கடுமையான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ‘ஐஐடிக்குள் நடந்த விசாரணையில் மதப் பாகுபாடு எதுவும் இல்லை’ என்று அறிக்கை வெளியிட்டு ஊத்தி மூடி விட்டனர்.

சக மாணவர்கள் பேசாமல் ஒதுக்கி சித்ரவதை செய்தனர்" - தற்கொலை செய்த மும்பை ஐஐடி மாணவரின் குடும்பத்தினர் | Isolated and tortured: Relatives of Mumbai IIT student who ...

மும்பை ஐஐடியில் மரணமடைந்த தர்ஷன் சோலங்கி தற்கொலையை ஒட்டி அறிக்கையை வெளியிட்ட அம்பேத்கர் பெரியார் பூலே ஆய்வு வட்டம், “ஐஐடிகளில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கடும் துன்புறுத்தலையும், சாதி ரீதியிலான பாகுபாட்டையும் எதிர்கொள்வது அனைவரும் அறிந்த உண்மை” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் உள்ள ஐஐடி வளாகத்தில் மாணவர் ரோகித் வெமுலா மரணத்திற்குப் பிறகு இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு பல்வேறு துன்பங்களும், அவமானப்படுத்தல், இழிவுபடுத்தப்படுதல், புறக்கணிக்கப்படுதல், கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்படுதல் போன்ற அனைத்தும் நடந்து கொண்டிருப்பது வெட்ட வெளிச்சமாகியது.

பல நூற்றாண்டுகளாக இந்திய சமூக அமைப்பை, கல்வியின் மூலம் அதாவது பிறருக்கு கல்வியை மறுத்ததன் மூலம் தக்க வைத்துக் கொண்டிருந்த அல்லது ஆதிக்கம் செய்து கொண்டிருந்த பார்ப்பன கும்பலுக்கு தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகத்தைச் சார்ந்த முதல் தலைமுறை மாணவர்கள் கல்வி கற்க வந்தவுடன் சகித்துக் கொள்ள முடியவில்லை.


இதையும் படியுங்கள்: சென்னை ஐஐடி – பார்ப்பன கோட்டையில் விரிசலை உண்டாக்கி அடித்து நொறுக்குவோம்!


அதிலும் குறிப்பாக ஐஐடி, எய்ம்ஸ், மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தனது உல்லாச ஊதாரித்தனத்திற்கான சொர்க்க புரியாக, அரசாங்க பணத்தில் அதாவது மக்களின் வரிப்பணத்தில் உயர்கல்வி படித்து, நாட்டின் அனைத்து உயர்பதவிகளையும் கைப்பற்றிக் கொண்டிருந்த பார்ப்பன, மேல் சாதி கும்பலுக்கு ஒடுக்கப்பட்ட மாணவர்களின் வருகை எரிச்சல் ஊட்டியது என்பதுடன், சாதி ஆதிக்க வெறியாட்ட மனநிலையை பல மடங்கு தூண்டி விட்டது.

தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று ஆரம்ப பள்ளிகளில் படித்த வாசகங்களோ, சமூக நீதி போதனைகளோ, நீதிக் கதைகளோ அவர்களின் ஆதிக்க சாதி சிந்தனையை சிறிதும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை! மாறாக உயர்கல்வி நிறுவனத்திற்கு செல்ல செல்ல ஆதிக்க சாதி சிந்தனையும், வெறியாட்டமும் அதிகரித்துக் கொண்டு போவதன் வெளிப்பாடுதான் உயர்கல்வி நிறுவனங்களில் நடக்கும் சாதி அடக்குமுறை மற்றும் தற்கொலைகள்.

இத்தகைய தற்கொலைகளைப் பற்றி பலமுறை பல கோணங்களில் மாணவர் அமைப்புகளும் சமூக விடுதலைக்காக போராடுகின்ற புரட்சிகர அமைப்புகளும் அம்பலப்படுத்தி கண்டித்தது மட்டுமின்றி அதற்கு எதிரான கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும்   ” கல்வி சுமை மற்றும் பாடத்திட்டங்களின் அழுத்தம் போன்றவை பிரதானமான காரணமாகவும், பாலின சாதிய சமத்துவ மின்மை இரண்டாம் பட்ச காரணமாகவும் இருப்பதாக” ஆய்வு செய்கிறது இந்து தமிழ் நாளேடு.

இதற்கு தீர்வாக ‘சென்னை உள்ளிட்ட ஐஐடி களில் கவுன்சிலிங் கொடுப்பதற்கு தனி வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை ‘ என்று மாணவர்கள் மீது குற்றம் சுமத்துகிறது இந்து நாளேடு.

சென்னை ஐஐடி உள்ளிட்டு, இந்தியாவில் உள்ள அனைத்து ஐஐடிகளும் பார்ப்பன கும்பலின் பிடியில் சிக்குண்டு கிடக்கிறது. ஜனநாயக விரோத பண்புகளையும் ஆதிக்க சாதி திமிரையும் கொண்ட பூணூல்களின் ஆதிக்கத்திலிருந்து ஐஐடிகளை விடுவிக்காமல், நிரந்தரமாக பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது.

  • கணேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here