இலங்கையில் அதானிக்கு எதிராக வீசும் அரசியல் புயல்! 

ஜூன் 2024 - ல் 484 மெகாவாட் காற்றாலை மின் நிலையம் அமைப்பதற்கு அதானிக்கு வழங்கப்பட்ட ஒப்புதலை இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணையம் மறுத்ததால் பிரச்சினை வெடித்தது.

0
அனுர குமார திசாநாயக்க மற்றும் அதானி

சென்ற கட்டுரையில் கென்யாவில் கால் பதிக்க முயன்ற அதானி குழுமத்திற்கு எதிராக அங்கு போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற தலையீடுகளால் திட்டங்கள் செயல்படுத்தப்பட முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலைமையை பார்த்தோம். இப்போது இலங்கையில் அதானி குழுமத்துக்கு ஏற்பட்ட அனுபவங்களை பார்ப்போம்.

000

இலங்கையில் அதானிக்கு எதிராக வீசும் அரசியல் புயல்! 

இலங்கையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான அனுர குமார திசநாயகே தலைமையிலான அரசு, முந்தைய அரசாங்கத்தால் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட 440 மில்லியன் டாலர் மதிப்பிலான காற்றாலை மின் திட்டத்தை (Wind Power Project) மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் வெளிப்படைத் தன்மை குறித்து சந்தேகம் எழுந்ததையடுத்து, அண்மையில் நடைபெற்ற அலுவல் ரீதியிலான கூட்டத்திற்குப் பிறகு, திட்டத்தை மறு ஆய்வு செய்ய உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் அதானியின் தொழில் முதலீடானது, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய மையமாக விளங்கும் கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அங்கு பொது மக்களின் எதிர்ப்புகள், அரசியல் சர்ச்சைகள் என அதானி நிறுவனத்திற்கு எதிராக கொந்தளிப்பான சூழல் உருவானது. 2019 – ல் இலங்கை அரசாங்கம் அதன் முக்கிய பொருளாதார ஆதாரமான கொழும்பு துறைமுகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டது.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அங்கு இந்தியா தனது செல்வாக்கை நிலை நிறுத்த நீண்ட காலமாக முயற்சித்து வருகிறது. சீனா ஏற்கனவே இலங்கையின் பெரிய துறைமுகமான அம்பந்தோட்டாவை 99 வருட குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறது. இந்த நிலையில்தான் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (பெரிய கொள்கலன் கப்பல்களுக்கு இடமளிக்கும் வசதியுள்ளது) நன்கு லாபமீட்டும் வகையில் அதானி குழுமம் கைப்பற்றியது.

கோத்தபய ராஜபக்சே அதிபராக இருந்த 2020 காலகட்டத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்ற போது துறைமுகத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது. முக்கியமான தேசிய சொத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்றும், அது முழுவதும் இலங்கை அரசுக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் உறுதி காட்டினர்.


படிக்க: நாடு கடந்தும் அதானி கொள்ளையடிக்க தரகு வேலைப் பார்க்கும் பாசிச மோடி!


இப்படியான கடும் எதிர்வினைகளை எதிர்கொள்ள முடியாத இலங்கை அரசு, பிப்ரவரி 2021-ல் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. அதானி குழுமத்திற்கு இது பேரிடியாக இருந்தது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கும், இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த முயன்ற அதன் விருப்பத்துக்கும் பின்னடைவாக அமைந்தது. இலங்கை இந்திய உறவிலும் சிக்கலை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலை சமாளிக்கும் வகையில் கொழும்பு துறைமுகத்தின் மேற்குக் கொள்கலன் முனையத்தை அதானிக்கு தாரை வார்க்க இலங்கை அரசு முன் வந்தது. 35 ஆண்டு காலம் செயல்படுத்தப் போகும் இத்திட்டத்தில் அதானி குழுமத்திற்கு 85 % பங்கும், இலங்கை அரசுக்கு 15 % எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்து அதானி குழுமம் இலங்கையில் மிகப்பெரிய காற்றாலை மின் திட்டத்தை உருவாக்கி, நிர்வகிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றது. இலங்கை 2022 – ல் மாபெரும் நிதி நெருக்கடியில் சிக்கிய போது, இந்தியா 4 மில்லியன் டாலர் கடனை வழங்கியதை அடுத்து இத்திட்டம் ஒப்பந்தமானது. இந்திய அரசு கடன் கொடுத்ததற்கும், இந்திய கார்ப்பரேட் முதலாளி ஆதாயம் அடைவதற்கும் எத்தகைய தொடர்பு உள்ளது என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?

அதானி நிறுவனம் வலுக்கட்டாயமாக இலங்கையில் காலூன்ற வகை செய்தவர் பாசிச மோடிதான் என்பதால் இதற்கு எதிராகவும் போராட்டம் வெடித்தது. மன்னாரில் காற்றாலை மின்சார திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் மோடி இலங்கையின் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததாக, இலங்கை மின்வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் நாடாளுமன்றக் குழுவின் முன் சாட்சியளித்தார்.

இதன் வீடியோப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. எனினும் கிளாஸ்கோவில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் கோத்தபய – மோடி சந்திப்புக்குப் பின், அடுத்த சில நாட்களில் அரசியல் ரீதியான அழுத்தம் காரணமாக, அந்த அதிகாரி தனது வாக்குமூலத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு, வேலையையும் ராஜினாமா செய்தார்.


படிக்க: இலங்கை: இருப்பதையும் சூறையாடப்போகும் நிதி மூலதனம்!


இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB), அதானி பின்கதவு வழியாக இலங்கையில் நுழைவதாக குற்றம் சாட்டியது. இந்தியப் பிரதமர் மோடியின் நெருங்கிய கூட்டாளியான அதானிக்கு கோத்தபய முன்னுரிமை அளிப்பதாகவும் சாடியது. 10 MW திறனுக்கு மேல் உள்ள திட்டங்களுக்கான போட்டி ஏல முறையை ரத்து செய்வதாக மின்சார சட்டத்தில் திருத்தம் செய்த கோத்தபய அதானிக்கு சாதகமாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியது.

ஜூன் 2024 – ல் 484 மெகாவாட் காற்றாலை மின் நிலையம் அமைப்பதற்கு அதானிக்கு வழங்கப்பட்ட ஒப்புதலை இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணையம் மறுத்ததால் பிரச்சினை வெடித்தது. இதனையடுத்து இலங்கை உச்ச நீதிமன்றம், இத்திட்டத்திற்கான தங்களது ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

இப்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள புதிய ஜனாதிபதி திசநாயகே இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்கத்தை நீண்ட காலமாக விமர்சித்து வருபவர். நாட்டின் வடக்குப் பகுதியில் மன்னார் மற்றும் பூனேரியில் செயல்படுத்த உள்ள சர்ச்சைக்குரிய திட்டங்களை பற்றிக் குறிப்பிட்ட அவர், “இது நமது எரிசக்தி இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் நாங்கள் நிச்சயமாக அதை ரத்து செய்வோம்” என அறிவித்துள்ளார்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இப்போது உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இலங்கையில் சீனாவுக்கு போட்டியாக இந்தியா தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள துடிக்கிறது. அதே சமயம் தனது ஆருயிர் நண்பர் அதானி ஆதாயம் அடைய வேண்டும் என்பதிலும் மோடி கண்ணும் கருத்துமாக உள்ளார். அங்கு நடக்கும் போராட்டங்கள் இவர்களது கனவுகளை சிதைப்பதாக உள்ளன.

(தொடரும்…)

  • குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here