ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பும்! கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக  தொடரும் மக்கள் போராட்டமும்.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த அக்டோபர் 22 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் மனுவை கடந்த அக்டோபர் 22 தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்..

மிழகத்தின் தென் மாவட்டங்களை மிகக் கொடூரமான சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு உள்ளாக்கி புற்றுநோய் உள்ளிட்ட நிரந்தர நோய்க்கு தள்ளிய கொலைகார நிறுவனம் ஸ்டெர்லைட் தனது ஆலையை நடத்துவதற்கு மீண்டும், மீண்டும் சட்டபூர்வமான வழிகளில் முயற்சித்துக் கொண்டே இருந்தது.

2018 ஆம் ஆண்டு மே 22 தேதி அப்போதைய முதல்வர் பழனிச்சாமி-அதிமுக தலைமையிலான தமிழக அரசு மற்றும் போலீசு, மாவட்ட ஆட்சியர் மற்றும் வேதாந்தா ஒன்றிணைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டின் மூலமாக 15 உயிர்களை துள்ளத் துடிக்க கொல்லப்பட்டனர். அதன் பிறகு ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கொலைகார ஆலையைப் பற்றியும் மக்கள் போராட்டத்தை பற்றியும் ஆய்வு நடத்திய அருணா ஜெகதீசன் கொடுத்த அறிக்கையின் பரிந்துரைகள் முழுமையாக தமிழக அரசினால் இன்னமும் அமல்படுத்தப்படவில்லை.

சுருக்கமான வழக்கு விவரம்!

கடந்த 2020 ஆகஸ்டு 18 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்புராயன் அடங்கிய அமர்வு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை முடியதை எதிர்த்து ஸ்டெர்லைட் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது. ஆலையை நிரந்தரமாக மூடும்படி உத்தரவிட்டது.

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் (29.02.2024) தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இத்தகைய சூழலில் தான், ‘ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது’ என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து கடந்த அக்டோபர் 22 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அதன் நகல் சமீபத்தில் தான் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஊடகங்களின் கார்ப்பரேட் சேவையை நிரூபிக்க இது ஒன்றே போதுமானது.

இதுபற்றிய விசாரணையில், ”விதிமீறல்கள் பல இருப்பதால்தான் தமிழக அரசு மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் உரிய முடிவு எடுத்துள்ளது என்றும், சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று என்றும், தீர்ப்பை சீராய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்றும், மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணங்களை பட்டியலிட்டது.

மேலும் தனியார் நிலம் உட்பட கிட்டத்தட்ட 11 இடங்களில் தாமிர கசடுகளை அகற்ற வேதாந்தா நிறுவனம் தவறிவிட்டது என்றும் கூறியது. ஜிப்சம் விஷயத்தில் செயல்படுவதற்கு ஒப்புதல் அளிக்கும் நிபந்தனைகளுக்கு இணங்கவும் அது தவறிவிட்டது. அபாயகரமான கழிவுகளை அகற்றுவதற்கான அங்கீகாரத்தையும் வேதாந்தா நிறுவனம் பெறவில்லை” என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தனர். இதன் மூலமாக ஸ்டெர்லைட்டை மீண்டும் துவங்குவதற்கான அடிப்படையை உச்ச நீதிமன்றம் சட்டபூர்வமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

”தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆண்டுதோறும் 4,00,000 டன் உலோக தாதுக்களை உற்பத்தி செய்தது, இந்தியாவின் தாமிர உற்பத்தியில் 40 சதவீதத்தை கொண்டிருந்தது மற்றும் 5,000 பேருக்கு நேரடியாகவும், 25,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தந்தது” உள்ளிட்டவற்றை வேதாந்தா தரப்பு முன்வைத்து வாதிட்டது. இந்த வாதங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு விட்டன.

இந்திய வரலாற்றில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு இருந்தாலும் முதல் முறையாக மக்கள் திரள் போராட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனத்தை இழுத்து மூடி செயல்பட விடாமல் தடுத்த முதல் வெற்றி தமிழக மண்ணிற்கே உரியது.


படிக்க: ஸ்டெர்லைட்: நீதி வேண்டுமா? மக்கள் போராட்டங்களே தீர்வு!


15 இன்னுயிர்களை தியாகம் செய்து பல்வேறு நெருக்கடிகளையும், பொருளாதார இழப்புகளையும், கொலை மிரட்டல்களையும், பொய் வழக்குகளையும், போலீசின் குண்டாந்தடி அடக்குமுறைகளையும், துப்பாக்கிச் சூடுகளையும் எதிர்கொண்டு வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் காப்பர் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தை தூத்துக்குடி மக்கள் போராடி இழுத்து மூடியிருக்கின்றார்கள்.

மறுகாலனியாக்கத்திற்கு எதிராகவும், கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராகவும் போர்க் குணமிக்க முறையில் போராடி வெற்றி கண்ட தூத்துக்குடி மக்களின் போர்க்குணத்திற்கு மற்றும் ஒரு அரணாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

மீண்டும் ஸ்டெர்லைட்டை திறப்பது குறித்து வேதாந்தா குழுமமும், அதன் உரிமையாளரான அனில் அகர்வாலும் தற்போதைக்கு சிந்திக்க மாட்டார்கள். அதேசமயம் மக்களுடன் இணைந்து போராடிய மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் முன் வைத்துள்ள கீழ்க்கண்ட கோரிக்கைகள் இன்னமும் உயிருடன் தான் இருக்கின்றது. மக்களுடன் இணைந்து ஸ்டெர்லைட் மட்டுமல்ல! வேதாந்தா உள்ளிட்டு கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு அடிப்படையான கார்ப்பரேட்டுகளை இழுத்து மூடி அதன் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வரை மக்கள் போராட்டம் ஓயாது.

ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இருந்து பிரித்து அகற்ற வேண்டும்.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களை துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.

உயிர் தியாகம் செய்த 15 தியாகிகளுக்கு தூத்துக்குடி மையப்பகுதியில் நினைவு மண்டபம் கட்டப்படவேண்டும்.

  • கணேசன்

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here