மீபத்தில் சில நாட்களுக்கு முன்பு ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்ற குவாட் கூட்டமைப்பில் விவாதிக்கப்பட்ட முக்கியமான அம்சங்களில் செமிகண்டக்டர் குறித்த விவாதமும் இடம்பெற்றுள்ளது.

செமிகண்டக்டர் (Semiconductor) தேவையை ஈடு கட்டிக் கொள்வதற்கு தங்களுக்குள் வர்த்தக பரிமாற்றங்களையும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் போட்டுக் கொள்வதற்கு ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் முன்னணியில் நிற்கின்றன.
இந்தியாவில் காப்பர் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்ற வேதாந்தா நிறுவனம் இந்தியா மற்றும் உலக அளவில் செமிகண்டக்டர் தேவை அதிகரித்துள்ளது என்பதை பயன்படுத்திக்கொண்டு அந்தத்துறையில் குதிக்க கிளம்பியுள்ளது.
உடனடி முதலீடாக 20 பில்லியன் டாலர் தொகையை செமிகண்டக்டர் உற்பத்தித் துறையில் இறக்கப் போவதாக அறிவித்துள்ளார் வேதாந்தா நிறுவனத்தின் அதிபர் அனில் அகர்வால்.

தரகு முதலாளிகள் மற்றும் தேசங்கடந்த தரகு முதலாளிகள் இடையே நடக்கும் போட்டியில் அம்பானி, அதானிக்கு அடுத்தபடியாக ஆர்எஸ்எஸ் -பாஜக மோடியின் ஆசிபெற்ற தொழிலதிபர் அனில் அகர்வால். இவருக்கு செமிகண்டக்டர் உற்பத்தி துறையை படையல் வைத்துள்ளது மோடி அரசு.

சுருக்கமாக, செமிகண்டக்டர் என்றால் என்ன? என்பதை பார்ப்போம்.
நாம் பயன்படுத்தும் மின் சாதனத்தின் முக்கிய பகுதியானது கண்டக்டராக (conductor) இருந்து அதன் வழியே எலக்ட்ரான் (மின்சாரம்) பாய்வது எலக்ட்ரிகல் ஆகும்.

நாம் புரிந்து கொள்வதற்கு ஒரே வார்த்தையில் சொன்னால், உலகம் இன்று செமிகண்டக்டர் மூலமாகத்தான் இயங்கிக் கொண்டுள்ளது. “அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள்” ஒன்று- நிதி மூலதனம், இரண்டு- செமிகண்டக்டர் என்று சுருக்கமாகக் கூறலாம்.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்சாதன பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், மொபைல்கள் என அனைத்திலும் செமிகண்டக்டர் பயன்பாடு உள்ளது.
இந்தத் துறையில் அதிக லாபம் இருப்பதை உணர்ந்துள்ள வேதாந்தா நிறுவனம் மோடி அரசு அறிவித்துள்ள Production Linked Incentive ( PLI) என்ற திட்டத்தை பயன்படுத்திக்கொண்டு செமிகண்டக்டர் உற்பத்தியில் இறங்கியுள்ளது.
உலக அளவில் ஒரு ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி அளவில் சிப்புகள் தேவைப்படுவதால் மிகப்பெரும் சந்தை இருக்கிறது என்ற லாப வெறியுடன் செமிகண்டக்டர் உற்பத்தியில் இறங்கியுள்ள வேதாந்தா நிறுவனம் இந்தியாவை தைவான் நாட்டுக்கு போட்டியாக மாற்றப் போவதாக அறிவித்துள்ளது.
செமி கண்டக்டர்கள் மற்றும் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக PLI நிதியிலிருந்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது மோடி அரசு.

Also read துப்பாக்கி மட்டும் கையிலிருந்தால்!

அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த செமிகண்டக்டர் உற்பத்தியை அடித்தளமாகக் கொண்டு மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கான குவிமையமாக இந்தியாவை உருவாக்குவதற்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி நிதி வழங்க உள்ளதாக மோடி அரசு அறிவித்துள்ளது.

நவீன தொழில்நுட்பம் தேவை என்பதை பயன்படுத்திக்கொண்டு மக்களின் வரிப்பணத்தில் பல ஆயிரம் கோடிகளை தேசங்கடந்த தரகு முதலாளிகளான அம்பானி, அதானி, அனில் அகர்வால்களுக்கு வாரி வழங்கி கொண்டிருக்கும் ஆர் எஸ் எஸ் மோடி கும்பல், தேசபக்தி கூச்சல் போட்டுக் கொண்டே வளர்ச்சி என்ற பெயரில் நாட்டை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கி வருகிறது. அதை எதிர்த்து போராடுகின்ற மக்களை பாசிச முறையில் ஒடுக்கி வருகிறது.

உலகம் முழுவதும் குறுக்கு நெடுக்காக ஒரு நாளில் பல லட்சம் கோடி பாய்கின்ற நிதி மூலதனம், ஏற்கனவே உலகின் கனிம வளங்களை சூறையாடி கொழுத்தது போதாது என்று மூன்றாவது சுற்றில் அலைக்கற்றைகள், கடல் வழி, ஆகாய வழி பயண மார்க்கங்கள், விண்வெளி ஆராய்ச்சி, பூமிக்கு அடி ஆழத்தில் புதைந்து கிடக்கும் பலவகையான திட, திரவ, வாயு வடிவில் உள்ள கனிமங்களை சூறையாடுவது என்று கிளம்பியுள்ளனர்.

தோழர் லெனின் காலத்தில், “உற்பத்தியில் ஏகபோகம், அபரிமித உற்பத்தி” என்ற புதிய பாய்ச்சலுடன் உலகை சூறையாடிய ஏகாதிபத்திய நிதி மூலதனம் இன்று மீமிகு உற்பத்தியை கொண்டு சுரண்டலில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி உள்ளது.
இவற்றை ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொண்டு எதிர்த்துப் போராடி முறியடிக்க விழிப்புடன் இருந்து செயல்படுவோம்.

  • இரா.கபிலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here