
இந்தியப் பிரதமர் மோடி தனது பதவியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி தொழிலதிபர் கௌதம் அதானிக்கு துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரிச் சுரங்கம், மின்சாரம் மற்றும் ஆயுதங்கள் உற்பத்தி போன்ற துறைகளில் உள்நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் அவரது வணிக நலன்களை விரிவுபடுத்த உதவிக் கொண்டிருக்கிறார்.
மோடி ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே அவர் பயணித்த வெளி நாடுகளுக்கெல்லாம் அதானியும் அவருடன் செல்வது வாடிக்கையானது. இப்படி தனியொரு முதலாளிக்கு உதவியதன் மூலம், அதானியின் பன்னாட்டு தொழில் விரிவாக்க லட்சியங்களை வெட்கமின்றி ஊக்குவித்ததன் மூலம் மோடி சில சமயங்களில் தனது அண்டை நாடுகளுடனும், பிற நாடுகளுடனும் உறவில் விரிசலை ஏற்படுத்திக் கொண்டார்.
ஆனால் அதைப்பற்றி எல்லாம் துளியும் கவலைப்படாத நரேந்திர மோடியின் கார்ப்பரேட் விசுவாசத்தால் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் அதானி குழுமத்தின் வளர்ச்சி பன்மடங்கு பெருகியுள்ளது. அதானி நிறுவனங்களின் பல சர்வதேச ஒப்பந்தங்கள், அந்நாடுகளில் மோடியின் அரசு முறை பயணங்களுக்குப் பிறகு அல்லது அந்நாட்டு தலைவர்களின் இந்திய வருகைக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டன.
இத்தகைய தலையீடுகள் சில சமயம் மோடிக்கும், அதானிக்கும் மோசமான பின்னடைவையும் உருவாக்கியுள்ளன. ஒரு கார்ப்பரேட் முதலாளியின் வணிக நலன்களில் அக்கறை காட்டியதன் மூலம் கென்யா, இலங்கை மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை பிரதமர் மோடி பாதிப்படையவும் செய்துள்ளார்.
அதானி குழுமம் ஆஸ்திரேலியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம், கிரீஸ், இந்தோனேசியா, இஸ்ரேல், கென்யா, மியான்மர் மற்றும் தான்சானியா ஆகிய நாடுகளில் அதன் வர்த்தக சாம்ராஜ்யத்தை எப்படி விரிவு படுத்தியது என்ற உண்மையின் தொகுப்பைப் பார்ப்போம்.
கென்ய நாட்டிலும் அதானிக் குழுமத்துக்குக் கடும் எதிர்ப்பு!
அதானி குழுமம் சமீபத்தில் கென்ய நாட்டின் மிக முக்கிய விமான நிலையத்தை குத்தகைக்கு எடுத்து நவீனமயமாக்கும் திட்டத்தை துவங்கியதால் அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கென்யாவின் குடிமக்கள் பல சிவில் சமூக அமைப்புகளின் தலைமையில் தேசியத் தலைநகரான நைரோபியில் இத்திட்டம் நாட்டு நலனுக்கு எதிரானது என்று கூறி பெருமளவில் திரண்டு போராட்டம் நடத்தினர்.
டிசம்பர் 5, 2023 அன்று கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் (ஒன்றிய அரசின் ஆடம்பரமான விருந்தினர் மாளிகை) பிரதமர் மோடியை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென அதானியும் தோன்றினார். மோடி ரூட்டோவுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். அதில் ஒன்று விமான நிலையங்களை நவீனமயமாக்கும் ‘இந்திய நிபுணத்துவம்’ தொடர்பானது.
இந்த சந்திப்பு நடந்த மூன்று மாதங்களில், அதாவது மார்ச் 2024 – ல் அதானி குழுமம் நைரோபியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை புதுப்பித்து பராமரிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை கென்ய அரசிடம் சமர்ப்பித்தது. 30 ஆண்டுகள் குத்தகைக்கு ஈடாக 1.85 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்) வழங்க வேண்டும் என கோரி இருந்தது. இதையடுத்து ஜூன் 2024 – ல் கென்ய அரசாங்கம் விமான நிலையத்தை நவீன மயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டது.
The Adani JKIA deal is bad from all angles; Business sense, Legal framework, Company reputation and track record. #StopAdani pic.twitter.com/W7L3lQbnFf
— Nelson Amenya (@amenya_nelson) September 24, 2024
அர்ஜென்டினாவின் நிறுவனத்திடம் இருந்து குறைந்த தொகைக்கு வந்த விண்ணப்பத்தைப் புறக்கணித்து, முறைகேடாக அதானி நிறுவனத்திற்கு முன்னுரிமை வழங்கப் பட்டது. எனவே இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இந்த திட்டத்தை அதானி குழுமம் நடைமுறைப்படுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்தும் செயற்பாட்டாளரான நெல்சன் அமென்யா, ஸ்விட்சர்லாந்து, இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் அதானி குழுமமானது ஊழல், வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி செய்துள்ளது என்பதை அம்பலப்படுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். தற்போது பிரான்சில் வசிக்கும் அவர் விமான நிலைய ஒப்பந்த முறைகேட்டையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இது போன்ற தனது செயல்பாடுகளால் தனக்கு சக்தி வாய்ந்த பல எதிரிகள் உருவாகியுள்ளதாகவும், தனக்கு கொலை மிரட்டல்கள் அதிகம் வருவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
விமான நிலையத் திட்டம் தொடர்பான சர்ச்சை வெடிப்பதற்கு முன்பு, அதானி குழுமம் கென்ய நாட்டில் உயர் மின்னழுத்த பாதைகளை அமைக்க 1.3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இதுவும் 30 ஆண்டு குத்தகை காலத்துக்கு உரியதாகும். இந்தத் திட்டமும் சட்ட ரீதியான தடைகளை எதிர்கொண்டது. அக்டோபர் 25, 2024 அன்று இந்த ஒப்பந்தமானது அரசியல் அமைப்புக்கு முரணானது மற்றும் ஊழலை உள்ளடக்கியது என்று கூறி கென்யாவின் சட்ட சமூகம் (Law society) தொடர்ந்த வழக்கினை விசாரித்த கென்ய உயர் நீதிமன்றம் இத்திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
படிக்க: அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகளை மூடி மறைக்க முயலும் கூட்டுக் களவாணிகள்!
கென்யாவின் முன்னாள் பிரதமர் ரெய்லா ஒடிங்கா, அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்களை ஆதரித்தார். சமீபத்தில் அதிபர் ரூட்டோவின் அமைச்சரவையில் இணைந்த ஒடிங்கா, “பிரதமர் மோடி கென்யப் பிரதிநிதிகளை இந்தியாவிற்கு அழைத்து அங்குள்ள அதானி குழுமத்தின் துறைமுகம், மின் உற்பத்தி நிலையம், ரயில் பாதை மற்றும் விமான ஓடுதளம் போன்றவற்றை பார்வையிடச் செய்தார். அதானியையும் மோடி எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்” என்று கூறியுள்ளார்.
கென்யாவைச் சேர்ந்த நேஷன் என்ற செய்தி நிறுவனம் அதானி நிறுவனமானது ஐக்கிய அரபு அமீரகத்தைத் (UAE) தளமாகக் கொண்ட அபிரோ லிமிடெட் எனும் நிறுவனத்தின் மூலம் 806 மில்லியன் டாலர் மதிப்புள்ள உடல்நலக் காப்பீட்டு திட்டத்தை அளிப்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது என செய்தி வெளியிட்டது. ஆரம்ப மதிப்பீடுகளை விட செலவுகள் சுமார் 414 மில்லியன் டாலர் அதிகரித்துள்ளதால், இந்த சுகாதார பாதுகாப்பு திட்டம் சர்ச்சைக்குரியதாக மாறியது.
ஒக்கியா ஒம்டாடா எனும் செனட்டர் நீதிமன்றத்தில் இதற்கான சான்றுகளை சமர்ப்பித்தார். மேலும் அவர் இந்தத் திட்டத்தின் மூலம் சுகாதாரம் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதன் மூலம், அதன் சுமை மக்கள் மீது விழுகிறது என்று குற்றம் சாட்டுகிறார். இதன் மூலம் கென்யாவின் பொது சுகாதார உள்கட்டமைப்புகளை உருவாக்கும் சாக்கில், வெளிநாட்டு நிறுவனங்களின் நலன்களில் அக்கறை செலுத்தப்படுவது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் தெரிவிக்கிறார்.
ஆக, அதானி குழுமம் கென்ய அரசுடன் சேர்ந்து போடப்பட்ட 3 ஒப்பந்தங்களுமே முறைகேடான வழிகளில் போடப்பட்டுள்ளன. இதற்கு மோடியே ஏஜெண்டாக இருந்துள்ளார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. அங்கு நடைபெறும் மக்களின் போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளால் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் அதானி குழுமம் ஆடிய ஆட்டங்களை அடுத்தடுத்துப் பார்ப்போம்.
– (தொடரும்…)
- குரு