
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக கௌதம் அதானி எந்த அளவிற்கு களத்தில் இறங்கி வேலை பார்க்கிறார் என்பதற்கு நியூஸ்லாண்டரி மற்றும் தி நியூஸ்மினிட் ஊடகத்திற்கு அஜித் பவார், சரத் பவார் அளித்த பேட்டிகள் சான்றாகியுள்ளன.
2019 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா தேர்தலுக்கு பாஜக – தேசியவாத காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையை தன் வீட்டிலேயே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார் அதானி. அந்தளவு அவருக்கு பாஜக அல்லது பாஜக கூட்டணி ஆட்சி அமைவது அவசியமாகிறது.
இந்த விசயம் வெளியே வந்ததால், தற்பொழுது, 2024 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் யார் வென்று ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பது ஒரு புறம் இருக்க அதையும் தாண்டி தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கார்ப்பரேட் அதானியின் பங்கு பட்டவர்த்தனமாகியுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெல்ல நேரடியாக உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் முறையாக களமிறங்கி வேலை செய்ததையும், அதற்கு பரிசாக அமெரிக்க அரசில் தனித்துறை ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டு அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம். பாசிச பாஜக வெற்றி பெற அதானி இங்கு அதை மறைமுகமாக செய்கிறார்.
மோடியின் அரசை “அதானியின் அரசு” (அதானிக்கா சர்க்கார்) என்றும், எதிர்க்கட்சிகளை உடைத்து அதில் உள்ள எம்எல்ஏக்களை பிஜேபியில் இணைப்பது அல்லது பிஜேபிக்கு ஆதரவானவர்களாக மாற்றுவதற்கு அதானி பக்க பலமாக இருக்கிறார் என்றும், அஜித்பவார் தன் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் என்றும் “மகா விகாஸ் அகாடி” கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தன. அவை மறுக்க முடியாத உண்மை என்பதை அதானி வீட்டில் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தை உறுதிப்படுத்தியுள்ளது.
அதானி வீட்டில் நடந்த பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியாததன் விளைவுதான் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டது என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
2019 ஆம் ஆண்டில், டெல்லியில் உள்ள கௌதம் அதானியின் வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையில் சரத் பவார், அஜித் பவார், பிரபுல் படேல் (மூவரும் அப்பொழுது ஒன்றுபட்டிருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்), அமித்ஷா, தேவேந்திர ஃபட்னாவிஸ் (பாஜகவை சேர்ந்தவர்கள்) கௌதம் அதானி, ஆகியோர் கலந்து கொண்டதாகவும் இந்தப் பேச்சுவார்த்தை ஐந்து முறை நடைபெற்றதாகவும் அஜித் பவார் தற்பொழுது Newslaundry மற்றும் The News Minute -க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தற்போது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள தனது சித்தப்பா சரத் பவாரும் தன்னை போலவே பிஜேபியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு அதானியின் நன்மைக்காக வேலை செய்ய தயாராக இருந்ததை இப்படி பேட்டி கொடுத்ததன் மூலம் சரத் பவார் ஒன்றும் புனிதரல்ல, அவரும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்தான் என்று தன்னை நியாயப்படுத்திக் கொள்ள பார்க்கிறார்.
இனி தன்மீது வைக்கும் விமர்சனங்கள் அனைத்தையும், எதிர்க்கட்சிகள், தங்களது கூட்டணியில் உள்ள சரத் பவார் மீதும் வைக்க வேண்டும் என்ற நிலையை அஜித் பவார் விரும்புகிறார்.
இந்த நிலையில் “2019 ஆம் ஆண்டில் பிஜேபியுடன் பேச்சுவார்த்தைக்கு சென்றது ஏன்?” என்று ஒரு பேட்டியில் சரத் பவாரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பிஜேபியுடன் கூட்டணிக்கு சென்றால் எங்கள் கட்சியினர் மீது ஒன்றிய அரசு துறைகளால் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் கைவிடப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதால் கூட்டணிப் பேச்சு வார்த்தைக்கு தான் சென்றதாக சரத் பவார் பதில் அளித்துள்ளார். மேலும் பாஜகவினர் தங்கள் உறுதி மொழியை காப்பாற்றுவார்கள் என்று நம்பிக்கை இல்லாததால் கூட்டணி அமைத்துக் கொள்ளவில்லை என்றும் அந்தப் பேட்டியில் சரத்பவார் கூறியுள்ளார்.
அவர் ‘நம்பிக்கை’ பொய்த்துவிட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைப் பிளவுபடுத்தி தன்னுடன் கூட்டணிக்கு அஜித் பவார் மீதான ஊழல் வழக்குகளை ரத்து செய்து துணை முதல்வராக்கி சொன்ன வாக்கை காப்பாற்றியுள்ளனர் மோடி-ஷா..
அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து துணை முதல்வர் பதவி பெற்றதுவரை யாருடைய துணையுடன் செயல்பட்டுள்ளார் என்பதை இவற்றில் இருந்து புரிந்து கொள்ள முடியும். பாசிச பாஜகவின் ஒன்றிய ஆட்சியின்கீழ் ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் அதானியின் நலனுக்காக எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
2019 தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசு அமைந்ததன் காரணமாக கௌதம் அதானிக்கு கிடைத்த நன்மைகள் என்ன? என்பதற்கான ஒரு சான்று தான் தாராவி மறுசீரமைப்பு திட்டம். பாஜகவின் உதவியுடன், இந்தத் திட்டத்தினை செயல்படுத்தும் டெண்டரை கௌதம் அதானி வென்றதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை கொள்ளையடிக்க போகிறார். அந்த கொள்ளை ஒரு லட்சம் கோடி ரூபாய் வரைக்கும் கூட இருக்கலாம் என்று இப்பொழுது பொது வெளியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
படிக்க: தாராவி மறுசீரமைப்பு திட்டம் அதானியின் கொள்ளைக்காகவா?
ஒரு நாட்டில் உள்ள ஆளும் வர்க்கத்திற்கு உள்ளேயே இருக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நலனுக்காகத் தான் (அவர்களின் வரைமுறையற்ற கொள்ளைக்காக தான்) பாசிச ஆட்சி நடத்தப்படுகிறது.
மக்களுக்கு பல்வேறு நன்மைகள் செய்யப் போவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்து, ஆட்சியில் அமர்ந்து கொண்டு அம்பானி, அதானி போன்ற தேசங்கடந்த தரகு முதலாளிகளுக்கு சொத்து சேர்த்து கொடுப்பதற்காகத்தான் பிஜேபியின் பாசிச ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஒத்ததாக, இந்துராஷ்டிரத்தை நோக்கி முன்னேறும் விதமாக, காவி பாசிசத்தையும் பிஜேபி முன் தள்ளி கொண்டிருக்கிறது.
இந்திய நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள மிகப்பெரும் அபாயகரமான எதிரிகளில் ஒருவராக உள்ள கௌதம் அதானியுடனும் அவருக்கு ஆதரவாக பாசிசத்தை ஏவிக் கொண்டிருக்கிற பாஜகவுடனும் கூட்டணி அமைத்துக் கொள்வதற்காக 2019ல் பேச்சு வார்த்தை நடத்திய சரத் பவார் இப்பொழுது “இந்தியா கூட்டணி” யில் இருக்கிறார்.
பிஜேபியின் பாசிசத்தை வீழ்த்துவதற்காகத் தான் “இந்தியா கூட்டணி” உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், சரத்பவார் போன்றவர்கள்தான் அதில் உள்ளனர்.
இந்தியா கூட்டணி பாசிச எதிர்ப்பில் உறுதியாக இருப்பதும் இல்லாது போவதும் இந்திய நாட்டின் மக்கள் பாசிசத்திற்கு எதிராக எந்த அளவிற்கு விழிப்புணர்வு பெற்று களத்தில் இறங்கி போராடுகிறார்கள் என்பதை பொருத்தே அமையும்.
தேர்தலில் பாசிச பாஜகவை தோற்கடிப்பது என்பது பாசிசத்தை முழுமையாக வீழ்த்துவது ஆகிவிடாது. தேர்தலில் பாசிச பாஜகவை வீழ்த்துவது என்பது பாசிசத்தை வீழ்த்துவதற்கான முதல்படி எனலாம். தேர்தலுக்கு வெளியில் மக்கள் போராட்டங்களின் மூலமாகத்தான் பாஜகவின் பாசிசத்தை முற்று முழுதாக வீழ்த்த முடியும்.
மக்கள் விழிப்புணர்வு பெற்று பாசிசத்திற்கு எதிராக களம் காண்பது என்பது தானாக நடக்கப் போவதில்லை. கார்ப்பரேட்-காவிப் பாசிசத்திற்கு எதிராக ஏற்கனவே விழிப்புணர்வு பெற்ற நாம், விடாப்பிடியாக பாசிசத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதன் மூலமாகத்தான் மக்களை விழிப்படையச் செய்ய முடியும். இதன் மூலமாகத்தான் பாசிசத்திற்கு எதிரான போரில் மக்களை அணி திரட்டி பாசிசத்தை வீழ்த்த முடியும்.
— குமரன்