இந்தியா அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்தியப்பெருங்கடல் என முப்பகுதிகளிலும் கடலால் சூழப்பட்ட ஓர் தீபகற்பம். இந்தியாவின் கடற்கரை (Coastline) சுமார் 7,517 கி.மீ நீளமுடையது. 1,382 தீவுகளை உள்ளடக்கியிருக்கிறது. மேலும், இந்தியக் கடலில் 23 லட்சம் சதுர கி.மீ (2,305,143 sq.km) பரப்பளவு, சிறப்பு பொருளாதார மண்டலமாக (Exclusive Economic Zone (EEZ)) குறிக்கப்பட்டிருக்கிறது. இந்திய மக்களில் 30% சதவிகிதம் பேர் கடலோரத்தில்தான் வாழ்கின்றனர். இந்தியாவிலுள்ள ஒன்பது கடலோர மாநிலங்களில், சுமார் 3,827 மீனவ கிராமங்கள் உள்ளன.
கிழக்கே மேற்கு வங்கத்திலிருந்து துவங்கி மேற்கே குஜராத் வரை விரிந்து பரந்து கிடக்கும் கடற்கரை எங்கும் தனது இருப்பிடங்களை அமைத்துக் கொண்டு பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள் கடலோடிகளான இந்த மண்ணின் பூர்வ குடிமக்கள்.
மனிதன் ஆதிகாலத்தில் வேட்டையாடியது பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அவனுடைய துணைத் தொழிலாக மேற்கொண்ட மற்றொரு தொழில் மீன் பிடித்தல். இதிலே சமவெளிப் பகுதிகளில் உள்ள ஆறுகளிலும், குளங்களிலும், ஏரிகளிலும் மீன் பிடிப்பது ஒரு வகை. கடலோரப் பகுதியில் வசித்துக் கொண்டு ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்கின்ற மற்றொரு வகை.
இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் உள்ள மீன்பிடித் தொழில் கடந்த சில பத்தாண்டுகளாக ஒழித்துக் கட்டப்பட்டு வருகிறது என்பதுதான் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய அம்சமாகும்.
கடலோடிகள் என்றவுடன் சினிமாக்காரர்கள் எடுக்கின்ற திரைப்படங்களில் குப்பங்களில் வசித்துக் கொண்டு, கைலி கட்டிக்கொண்டு, நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்பவர்கள்; நகர்புறத்தில் நடக்கின்ற அனைத்து விதமான கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றிற்கு தலைமை தாங்குகின்ற தாதாக்களை உருவாக்குகின்ற இருப்பிடங்கள் என்பது தான் சமவெளிப் பிரதேசத்தில் வசிப்பவர்களின் மனதில் பதிக்கப்பட்டுள்ள வக்கிரமான அடையாளங்கள் ஆகும். நாட்டின் பூர்வக்குடி மக்களை இவ்வாறு சித்தரிப்பது அயோக்கியத் தனமாகும்.
சமவெளிப் பிரதேசத்தில் வசிக்கின்ற மனிதர்கள் அன்றாடம் கவிச்சி இல்லாமல் உணவு இறங்காது என்று பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ஒரு துண்டு கருவாடாவது இருந்தால் தான் என்னால் உணவை சாப்பிட முடியும் என்று கூறுகின்ற மக்கள் மத்தியில் கடலோடிகளின் வாழ்க்கையில் நிகழ்கின்ற அவலங்களை பார்க்கின்ற அளவிற்கு விசாலமான மனமில்லை.
அரசியல், பொருளாதாரம் மாற்றங்கள்; நாட்டின் வளர்ச்சிக்காக கொண்டு வரப்படும் திட்டங்கள் அனைத்தும் முதலில் பாதிப்பை ஏற்படுத்துவது, இந்த நீண்ட நெடிய கடற்கரை பரப்பிலிருந்தும், கடலில் இருந்தும் கடலோடிகளை அப்புறப்படுத்தி வீசி எறிவதற்கான திட்டங்கள் தான்.
ஏனென்றால் நீர்ப் பாசன வசதியுள்ள ஆற்றின் கழிமுகப்பகுதிகளிலும், கடலோரப் பகுதிகளிலும் மனித குலத்திற்கே ஆபத்தான அணு உலைகளையும், இரசாயன தொழிற் சாலைகளையும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் இன்ன பிற சூழலியல் பாதிப்புகளை உருவாக்குகின்ற ஆலைகளையும் நிறுவுவதில் இந்திய ஒன்றிய அரசாங்கங்கள் துவங்கி தமிழகத்தை ஆளுகின்ற திராவிட கட்சிகள் வரை எந்த வேறுபாடும் காட்டுவதில்லை.
”நாங்கள் அதிகாலை சூரியனின் வெளிச்சத்தை கடலில் இருந்து தான் கண்டு வருகிறோம்” என்று கூறுகின்ற கடலோடிகள் தனது வாழ்க்கையின் தேவைக்காக பெரும்பகுதி நேரத்தை கடலின் மீதும், குறுகிய நேரத்தை நிலப்பகுதியிலும் கழித்து வருகின்றனர் என்ற போதிலும் அவர்களின் வாழ்க்கை அமைதியாக செல்வதில்லை.
இந்தியா முழுவதும் உள்ள கடலோடிகளில் வாழ்க்கையை எடுத்துக்கொண்டு நாம் ஆய்வு செய்வதை விட நமக்கு மிகவும் பரிச்சயமான தமிழகத்தின் கடலோடிகளின் வாழ்க்கை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்வது, ஏற்கனவே ஆய்வு செய்த ஆய்வாளர்களின் உதவியுடன் அவர்களின் வாழ்க்கை நெருக்கடிகளை உணரச் செய்வது பொருத்தமாக இருக்கும் என்றே கருதுகிறோம்.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை அதிகரித்து விட்டதா? உடனே கடற்கரை எங்கும் செல்லுங்கள், நூற்றுக்கணக்கான அனல் மின் நிலையங்களையும், அணு மின் நிலையங்களையும் அங்கே உருவாக்குங்கள். அதிலிருந்து வெளியேறுகின்ற கழிவுகளை எந்தவிதமான கேட்டு கேள்வியும் இன்றி கடலில் கொட்டுங்கள் என்று கடலோடிகளின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.
எடுத்துக்காட்டாக சொல்வதென்றால் கடலூரில் நாகார்ஜுனா எண்ணை சுத்திகரிப்பு ஆலை கட்டுவதாக அனுமதி பெற்றனர். பின்னர் சிறு துறைமுகத்தை அமைத்து அங்கே அனல் மின் நிலையத்தை உருவாக்கி விட்டனர். காஞ்சிபுரத்தின் செய்யூர் பகுதியில் 4000 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத் திட்டம் செயல்பட்டு வருகிறது. எண்ணூர் அனல் மின் நிலையம், அதன் விரிவாக்கம் என சென்று கொண்டுள்ளது. தூத்துக்குடி, உடன்குடி, வட சென்னை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சென்னையிலிருந்து கல்பாக்கம் வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலை சினிமா வியாபாரிகளாலும், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளாலும் வளைத்து போடப்பட்டு அங்கே வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கொத்துக் கொத்தாக அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் 1076 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 14 மாவட்டங்களில் உள்ள கிழக்குக் கடற்கரையில் 608-க்கும் மேற்பட்ட கடலோர கிராமங்களில் வாழ்கின்ற சுமார் 11 லட்சம் மீனவர்கள் வாழ்க்கை படிப்படியாக கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமலாக்க துவங்கிய காலகட்டத்தில் இருந்து கடலோடிகளின் வாழ்க்கை மிக மிக கேள்விக்குள்ளாகி வருகிறது என்பதுதான் நாம் குறிப்பாக அவதானிக்க தக்கதாகும்.
கடலோடிகளின் வாழ்க்கையை முறைப்படுத்த போகிறோம் என்ற முகமூடியுடன் மீன்வள மசோதா 2009, கடலோர ஒழுங்காற்று அறிக்கை 2011 போன்றவை அந்த கடலோடிகளின் வாழ்க்கையில் உள்ள நெருக்கடிகளை பற்றி எந்த விவாதமும் நடத்தப்படாமல் இந்திய ஒன்றியத்தை ஆண்ட காங்கிரசு அரசால் கொண்டு வரப்பட்டது.
அது உருவாக்கிய பாதிப்புகளைவிட, தற்போது ஆண்டு வரும் ஆர்எஸ்எஸ் பாஜக வால் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட்த்திருத்தங்கள் அனைத்தும் அரசியலமைப்புக்கு மேலே நின்று கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்கின்ற வகையில் மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு, `தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தேசியநலன் சார்ந்த திட்டங்களுக்கு இனி சூழலியல் மதிப்பீடு தேவையில்லை’ என்ற கருத்துருவை உள்ளடக்கிய புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (Environmental impact assessment (EIA)) சட்டத்தையும் இந்திய அரசு கொண்டுவரப்பட்டு சில திருத்தங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. கடல்சார் மேம்பாட்டு திட்டம், இந்திய கடல் மீன் வள சட்ட மசோதா 2021, இந்திய துறைமுகங்கள் சட்ட மசோதா 2021 போன்றவை அரசியல் சட்டத்தை கிடப்பில் போட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்தியாவின் கடற்பகுதிகளில் ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெட்ரோலியம் எடுக்கின்றன. தமிழகத்தின் மரக்காணம் முதல் கோடியக்கரை வரை காவிரி டெல்டாவின் கடலோரப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் (Hydrocarbon Project), கச்சா எண்ணெய் எடுக்க இந்திய அரசுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி மற்றும் தனியார் வேதாந்தா நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது இந்திய அரசு. இந்த நிறுவனங்கள் கனிம வளங்களை எடுப்பதற்கு வசதியாக, கட்டுப்பாடுகள் நிறைந்த பழைய நெல்ப் (NELP- New Exploration Licensing Policy) லைசென்ஸ் சட்டத்தை மாற்றி, புதிதாக ஹெல்ப் (Hydrocarbon Exploration and Licensing Policy – HELP) எனும் ஒற்றை லைசென்ஸ் அனுமதியை இந்திய அரசு கொண்டு வந்துள்ளது.
படிக்க:
♦ 10 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. எண்ணெய் கழிவால் வாழ்விழந்து நிற்கும் மீனவர்கள்!
♦ மீனவர்கள் துயர் துடைக்க துடிக்கும் மங்குனி அமைச்சர்!
இந்தியப் பெருங்கடல் பரப்பில் அகழாய்வு திட்டம், வங்காள விரிகுடாவில் ஹைட்ரோகார்பன் திட்டம், சென்னை முதல் கன்னியாகுமரி முதல் கிழக்கு கடற்கரை சாலை அமைத்தல், இணையம், குளச்சல் துறைமுகத் திட்டம் போன்ற பல திட்டங்கள் தமிழ்நாட்டின் மாநில உரிமையைப் பறிப்பதோடு, தமிழக மீனவர் வாழ்வாதாரம் மற்றும் கடல்வளங்களைச் சிதைக்கிறது என்கிறார் அமிர்தராஜ் என்ற கடலோடி ஆய்வாளர்.
பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பத்தாண்டு காலத்தில் மட்டும் பல்வேறு கடல் சார்ந்த திட்டங்களைத் தீட்டியிருக்கிறது. அவை பெரும்பாலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழல் நலனையும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, சாகர் மாலா திட்டம், பாரத் மாலா திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம், ஆழ்கடல் ஆராய்ச்சித் திட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்து எஞ்சியுள்ள கடற்கரை பகுதிகளில் உள்ள கடலோடிகளை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு துடித்துக் கொண்டுள்ளது.
இவற்றையெல்லாம் நாட்டின் மூன்று கோடி மக்கள் தொகை கொண்ட கடலோடிகளின் வாழ்க்கையை பாதுகாக்க உத்தரவாதம் கொடுத்து வந்த அரசியலமைப்புச் சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் உள்ளது.
தங்களது வாழ்க்கையின் அவலங்களை, துன்ப துயரங்களை நெருக்கடிகளை, அன்றாட ம் உயிரைப் பணயம் வைத்து கடலில் இறங்கி மீன் பிடி தொழிலை செய்து வருகின்ற வாழ்க்கை முறையை எடுத்துச் செல்வதற்கு கடலோடிகளில் குறிப்பிட்ட சிலரைத் தவிர யாரும் இல்லை என்பதும், அவர்களை பயன்படுத்திக் கொண்டு ஓட்டு வங்கி அரசியலுக்காக நிரந்தரமாக அவர்களில் சிலரை அடியாள்களாகவும், பெரும்பானமையினரை கூட்டம் சேர்ப்பதற்கான நபர்களாகவும் மட்டுமே பயன்படுத்துவதில் இருந்து கடலோடிகளை வெளியேற்ற வேண்டும்.
அன்றாடம் தனது வாழ்க்கை தேவைக்காக கடலில் பயணம் செய்து நேர்மையாக உழைத்து வாழ நினைக்கின்ற கடலோடிகளை ஆழ் கடல் மீன் பிடிப்பு கப்பல்கள் சுட்டுப் பொசுக்குவதும், அவ்வாறு கடலோடிகள் கைது செய்யப்படும் போது சம்பிரதாயத்திற்கு கடிதம் எழுதுவது, கண்டன அறிக்கை வெளியிடுவது அல்லது தூதுவர்களை அனுப்பி எவ்வாறு மீன்பிடிப்பது என்று பம்மாத்து காட்டுவது போன்ற மோசடியான அணுகுமுறைகளை ஒழித்து கட்ட வேண்டும்.
”கடல் மீனவர்களுக்கே சொந்தம் எல்லைகள் எதுவும் இல்லை’ என்ற அறிவித்தால் அவரவர்கள் வசிக்கின்ற பகுதியை ஒட்டி உள்ள கடல் எல்லைக்குள் சென்று நிம்மதியாக மீன் பிடித்து வாழ்வார்கள். கடல் வளத்தையும் கடல் உயிரினங்களையும் பல நூற்றாண்டுகளாக காத்து வரும் அவர்களுக்கு எல்லையும், அதன் சிக்கலும் தெரியும்.
இத்தகைய அடிப்படை மாற்றங்களை உருவாக்க கடலோடிகளை நேர்மையான அரசியல் இயக்கத்தின் கீழ் கொண்டு வருவதும், மீனவர்கள் விடுதலை முன்னணியை உருவாக்கி நாட்டின் அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கும் அவர்களின் வாழ்க்கை நெருக்கடிகளுக்கும் உள்ள உறவை எடுத்துச் சொல்வதும், அதனை சமவெளிப் பிரதேசத்தில் உள்ள பிற மக்கள் உணர்ந்து கொள்வதும், கடலோடிகளுடன் ஒன்றிணைந்து போராடுவதுமே பாட்டாளி வர்க்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளாகும். இதுவே அரசியல் சட்ட மாயைகளில் இருந்து அவர்களை பாதுகாக்கும்.
- ஆல்பர்ட்.