தமிழக மீனவர்களுக்கு தொழில் செய்ய அற்புதமான ஆலோசனையை முன் வைத்துள்ளார் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா.

போராட்டத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் !

தமிழகத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை அன்று வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினர். ஜூலை 8 சனிக்கிழமையன்று மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 15 பேரை அவர்களின் இரண்டு விசைப்படகுடன் சேர்த்து இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.  அவர்கள் தற்போது யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறல்களை கண்டித்துதான் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. ராமேஸ்வரம் மீனவர்கள் தமது 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை நிறுத்தி ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்புடன் கொந்தளித்து நிற்கின்றனர். இந்திய மீனவர்களை தொடும் அளவிற்கு சிங்கள கடற்கரைக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது?

செவ்வாய்க்கிழமை தினசரிகளில் மற்றொரு செய்தி கண்ணை உறுத்துகிறது. அமெரிக்க போர்க்கப்பல் – யு எஸ் என் எஸ் சால்வர் என்ற மீட்புப் பணியில் ஈடுபடும் கப்பல் தனது பழுதை சரி செய்து கொள்ள  தமிழகம் நோக்கி வந்துள்ளது. ஏற்கனவே இரண்டு அமெரிக்க கடற்படை கப்பல்கள் சரி செய்யப்பட்ட நிலையில், மூன்றாவதாக ஒரு கப்பல் சென்னை காட்டுப்பள்ளி எல்&டி துறைமுகத்திற்கு வந்துள்ளது.

மீனவர்கள் துயர் துடைக்க துடிக்கும் மங்குனி அமைச்சர்!
அதானி காட்டுப்பள்ளி துறைமுகம்

அமெரிக்ககாரனே ஒத்துக்கொள்ளும் வகையில் மலிவாகவும், தொழில் திறமையுடனும் நாம் வேலை செய்து வருகிறோம். நம்மிடமும் பலம் வாய்ந்த நவீன போர்க்கப்பல்கள் பல உண்டு. ஆனாலும் இலங்கை கடற்படை மட்டும் எப்படி இந்திய மீனவர்களின் மீது கை வைக்கத் துணிகிறது? இந்த கேள்விக்கான பதில் தமிழகம் வந்த மத்திய அமைச்சரின் பேச்சிலேயே இருக்கிறது.

கடல்வளத்தை காவு வாங்கும் நீலப் புரட்சி!

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தேசிய மீன் விவசாயிகள் தினம் மாநாடு திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.  இரு நாட்கள் நடைபெறும் மாநாட்டை மத்திய அமைச்சர் பரிசோத்தம் ரூபாலா தொடங்கி வைத்து திருவாய் மலர்ந்துள்ளார்.

மோடி அரசு மீன்வளத் துறைக்கான தனி அமைச்சகத்தையே உருவாக்கி 38 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்து அற்புதமாக வேலை செய்து வருகிறதாம். இது மட்டும் இன்றி நீலப் புரட்சிக்காக 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இதன் மூலம் மீன்வளம் பெருக்கவும், இறால் ஏற்றுமதியை அதிகரிக்கவும் திட்டமிட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது என்று பெருமிதமும் பட்டுள்ளார். ஆனால் தமிழக மீனவர்களின் பல்லாண்டு கால துயரை இது துடைக்கவில்லை மாறாக புதிய சட்டங்கள் மூலம் அவர்களின் கழுத்தை நெரிக்கும் வேலைகளே ஒன்றிய அரசால் முன்னெடுக்கப்படுகின்றன.

படிக்க:

ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சரிடம் தமிழகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரூபாலாவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் பொறுப்பான அற்புதமான தீர்வு ஒன்றை முன் வைத்துள்ளார். மீனவர்கள் ஏன் கட்ச தீவுக்கு அருகில் மீன் பிடிக்க வேண்டும்? ஏன் மன்னார் வளைகுடாவிலேயே மீன் பிடிக்க வேண்டும்?. பேசாமல் அந்தமான் நிக்கோபார் கடல் பகுதிக்கு போய் பிடிக்க வேண்டியது தானே?. அங்கு மீன்வளமும் அதிகமாக இருக்கிறது. அதற்கு வேண்டுமென்றால் மத்திய அரசு தேவையான உதவிகளை செய்து தருகிறோம் என அளந்து விட்டுள்ளார்.

இது நடைமுறைக்கு சாத்தியமா?

நமது நாட்டின் மீன் வளத்தை கடல் வளத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்துவிட்டு, நம் நாட்டு மீனவர்கள் இவ்வளவு மீன் தான் பிடித்து வர வேண்டும் மீறினால் அபராதம் என தண்டித்து வரும் ஒன்றிய அரசு நமக்கு உதவும் என்பதை யாராவது நம்ப முடியுமா?

சொந்த முயற்சியில் சாத்தியமான தூரத்திற்கு ஃபைபர் படகு, விசைப்படகுகளில் சென்று தொழில் செய்து திரும்புகின்றனர். அமைச்சர் முன்வைக்கும் ஆலோசனையான அந்தமான் நிக்கோபருக்கு அருகில் செல்வது என்பது ராமேஸ்வரம் மீனவர்களை கொல்கத்தாவுக்கு போய் மீன் பிடி என்று சொல்வதற்கு சமமானது.

அந்தமான் கடற்பரப்பில் மீன் வளம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. அதே நேரம் மன்னார் வளைகுடாவுக்குள்ளேயே பன்னாட்டு கப்பல்கள் வந்து மீன் வளத்தை சுரண்டும்போது சர்வதேச கடற்பரப்பில் போட்டியிடுவது சாத்தியமா? அவர்களுடன் போட்டியிட்டு அந்தமான் கடல் பகுதியில் தொழில் செய்யும் வலிமையை நம் மீனவர்களுக்கு மத்திய அரசால் தர முடியுமா? அவர்களின் நவீன மீன் பிடி கப்பல்களுடன் மோதும் அளவிற்கு நமது மீன்பிடி படகுகளை மாற்றி அமைக்க கார்ப்பரேட் அடியாளான காவிகள் விரும்புவார்களா?

உள்ளூரில் பிழைக்க பாதுகாப்பு கொடு என கேட்டால் காதிலேயே வாங்காத காவி  பாசிஸ்டுகள் நமக்கு ஆலோசனை சொல்கிறார்கள். “நீ ஏன் கூரை ஏறி கோழி பிடிக்க பார்க்கிறாய் ; வானம் ஏறி வைகுண்டத்திற்கு போகலாமே”என்கிறார்கள்.

கடற்படையை வைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு  விசுவாசமாக சீனாவுக்கு எதிராக, ஜப்பானுடன், ஆஸ்திரேலியாவுடனும் இணைந்து கூட்டு பயிற்சி நடத்த இந்தியா தயார்.  இந்தியாவின் அடியாளாக இலங்கையை மாற்றுவதற்கு, அவர்களுக்கு ஆயுதங்கள் கருவிகளை தந்து கடலில் ரோந்து பயிற்சி அளிக்கவும் தயார் தான்.

தனது பிராந்திய மேலாதிக்க நோக்கத்திற்காக இலங்கைக்கு பொருளாதார, ராணுவ ரீதியாக உதவ இந்தியா – மோடி அரசு எப்போதுமே தயார் தான். ஆனால் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க, மீன்பிடித் தொழிலுக்கு துணை நிற்கத்தான்  இந்திய கடற்படையோ, பாசிஸ்ட் மோடியோ தயார் இல்லை என்பதையே அமைச்சரின் பேச்சு உறுதிப்படுத்துகிறது. பின்னர் எப்படி இலங்கை கடற்படை நம் மீனவர்களை கண்டு ஒதுங்கி செல்லும்?

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here