உருவாகின்றது அனைத்திந்திய அமித் ஷா திமுக!

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லை என்றும், கட்சிகள் அனைவரும் ஒரே ரகம் தான் என்று திடலடியாக பேசுகின்ற ‘அரசியல் அரைவேக்காட்டுத்தனத்தை’ நாங்கள் எப்போதும் ஆதரிப்பதில்லை.

1
உருவாகின்றது அனைத்திந்திய அமித் ஷா திமுக!
பித்தலாட்ட நாடகம் தற்போது முடிவுக்கு வந்து அமித்ஷா மூலம் மீண்டும் அண்ணா திமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

பாசிச ஜெயா உயிரோடும் இருந்த போது டிஎன் சேஷன், ‘நடுளவால்’ சங்கராச்சாரி, துக்ளக் சோ, ஆர். வெங்கட்ராமன் உள்ளடக்கிய ‘அடுப்பாங்கரைக் குழுவின்’ வழிகாட்டுதலில் கீழ் இயங்கியதால் திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி அனைத்திந்திய அய்யர் திமுக என்று முன்னேற்றம் அடைந்துள்ளது என்று விமர்சித்து புதிய கலாச்சாரம் இதழில் எழுதியிருந்தோம்.

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்பதை முன்வைத்து துவக்கப்பட்ட திராவிட இயக்கம் படிப்படியாக பாசிச ஜெயா காலத்தில் பார்ப்பன கும்பலின் காலடியில் அடகு வைக்கப்பட்டது. ஆனாலும் திமுக-கருணாநிதி எதிர்ப்பு என்ற எண்ணம் படைத்தவர்கள் முதல் மயிலாப்பூர் பார்ப்பன அகாடமி, மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு உள்ளடக்கிய மாபெரும் கூட்டணியினர் அதிமுகவை ஆதரித்து வந்தனர்.

‘அயர்ன் லேடி’ ‘துணிச்சலாக முடிவு எடுப்பவர்,’ ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்றெல்லாம் பட்டப் பெயர்களுடன் வலம் வந்த பாசிச ஜெயா தமிழகத்தை மாவட்டங்கள் வாரியாக செயலாளர்கள் மூலம் கொள்ளையடித்து மிகப்பெரும் தொகையை சுருட்டினார் என்பதும் அதனாலேயே பல்வேறு வழக்குகளில் சிக்கிய அவர் முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வந்தது. நான்கு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

பாசிச ஜெயா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து திரும்பாமல் உயிரிழந்த நிலையில் தமிழகத்தை பிடித்த அதிமுக என்ற மாபெரும் பீடை ஒழிந்தது என்று சமூக செயல்பாட்டாளர்கள் நிம்மதி பெரும் மூச்சு விட்டனர். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்க வில்லை.

பாசிச ஜெயா பரப்பன அக்ரஹாரா பெங்களூர் சிறையில் இருந்தபோது மிக்சர் பன்னீர் செல்வத்தை வைத்து நிழலாச்சி நடத்தி வந்ததை மாற்றி சின்னம்மா சசிகலா உதவியால் நேரடியாக ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் அடிமையான எடப்பாடி முதலமைச்சர் ஆக்கப்பட்டார்.

இந்த காலகட்டத்தில் இருந்து அதிமுக, ஆர்எஸ்எஸ்காரரும், ஆடிட்டருமான குருமூர்த்தியின் இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வந்தது.

எடப்பாடி ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு இந்திய ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டது எதிர்த்து வாய் திறக்காமல் கொள்ளையடிப்பது ஒன்றையே குறியாக வைத்துக்கொண்டு கொங்கு மண்டலத்தில் உள்ள வாக்கு வங்கியையும், மதுரை மண்டலத்தில் உள்ள வாக்கு வங்கியையும் வைத்துக்கொண்டு அரசியல் நடத்தி வந்தது அதிமுக.

இந்தக் கொள்ளை கூட்டத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்களிடமிருந்து மிகவும் அம்பலப்பட்ட சூழலில் 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக தேர்தலில் தூக்கி எறியப்பட்டது.

மூன்றாவது முறையாக 2024 ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசு அதிகாரத்தை கைப்பற்றிய பாசிச பாஜக பல்வேறு மாநிலங்களில் பிரதான கட்சியை தன்னுடன் இணைத்துக் கொள்வது; பிறகு அந்த கட்சியில் உள்ள முன்னணியாளர்களை மிரட்டி பணிய வைப்பது அல்லது கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலை பேசி தனது கட்சிக்குள் இழுப்பது என்ற ஃபார்முலாவை பயன்படுத்த துவங்கியுள்ளது.

இந்தியாவில் ‘சொல்லிக் கொள்ளப்படும் அரசியலமைப்புச் சட்டத்தின்’ ஆட்சியை முற்றாக ஒழித்துக் கட்டி, சனாதன ஆட்சியை அதாவது ஆரிய பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்கு வெறியுடன் அழைக்கின்ற பாசிச பாஜக அதனை கொள்கை அளவில் எதிர்க்கின்ற முக்கியமான கட்சிகளில் ஒன்றான திமுகவை ஒழித்து கட்டுவதற்கு சரியான தருணத்தை பார்த்துக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு நூற்றாண்டாக திராவிட இயக்கத்தின் மீது வன்மத்தை பொழிந்து வரும் பார்ப்பன கும்பலும், அதன் வழித் தோன்றல்களான ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலும் தமிழகத்தில் காலூன்றுவதற்கு தேர்ந்தெடுத்துள்ள கட்சி அதிமுக.

படிக்க:

  கேனோடு சிக்கிய அதிமுக புள்ளி! ஸ்டாலின் இதை செய்வாரா?

  அதிமுக: அடிமைகளின் அக்கப்போர்!!

இடையில் சில காலம் தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்த திருவாளர் அண்ணாமலை மூலம் அதிமுகவுக்கு எதிராக களமாடுவதைப் போல ஒரு பித்தலாட்டத்தை நடத்தி வந்தனர். அந்த பித்தலாட்ட நாடகம் தற்போது முடிவுக்கு வந்து அமித்ஷா மூலம் மீண்டும் அண்ணா திமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

“தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும்” என்ற பழமொழியை அமுல்படுத்துகின்ற வகையில் திமுகவை தமிழகத்தின் ஆட்சியில் இருந்து துரத்தி அடிப்பதற்கு துடித்துக் கொண்டுள்ள அதிமுக என்ற கொள்ளைக் கூட்டம் பாசிச பாஜகவுடன் இணைந்து மீண்டும் 2026 தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

பாசிச பாஜகவின் பார்முலா படி தேர்தல் வரை அண்ணா திமுக உயிருடன் இருக்குமா? எடப்பாடி தலைமையில் கூட்டணியாக தேர்தலை எதிர்கொள்வாளர்களா அல்லது தேர்தலுக்கு முன்னரே அந்த கட்சியை உடைத்து எடப்பாடியை வீட்டுக்கு அனுப்புவார்களா என்பதையெல்லாம் ஆர்எஸ்எஸ் சிந்தனைக்குழாமில் திட்டமிடப்பட்டு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

பார்ப்பன எதிர்ப்பு மரபில் எஞ்சி நிற்கும் தமிழகத்தை ஒழித்துக் கட்டுவது என்பது மட்டுமின்றி பொருளாதார ரீதியாக சுயசார்பு தன்மையுடன் விளங்குகின்ற தமிழகத்தை தேசங்கடந்த தரகு முதலாளிகளின் சந்தையாகவும், உற்பத்தி கூடமாகவும் மாற்றுவதற்கு பொருத்தமான அடிமை ஆட்சியை உருவாக்குவதற்கு ஆர்எஸ்எஸ் பாஜக முயன்று கொண்டிருக்கிறது என்பதை இணைத்து புரிந்து கொள்ளும் போது தான் இந்த கூட்டணியின் பின்னணி நமக்கு புரியும்.

பாசிச பாஜகவிற்கு இணையாக காங்கிரசை ஏன் விமர்சிப்பதில்லை என்றும், அதிமுகவிற்கு இணையாக திமுகவை ஏன் விமர்சிப்பதில்லை என்றும் ‘அரசியல் அரைவேக்காடுகள்’ குதிப்பதில் எங்களுக்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு இல்லை. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லை என்றும், கட்சிகள் அனைவரும் ஒரே ரகம் தான் என்று திடலடியாக பேசுகின்ற ‘அரசியல் அரைவேக்காட்டுத்தனத்தை’ நாங்கள் எப்போதும் ஆதரிப்பதில்லை.

தமிழகத்தை பார்ப்பனக் கோட்டையாக்க முயற்சிக்கின்ற எத்தகைய முயற்சியாக இருந்தாலும் அதனை முறியடிப்பதற்கு பாட்டாளி வர்க்கம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

  • கணேசன்.

1 COMMENT

  1. அதிமுக பாசக நேரடி அடிமை.

    திமுக நேரடி அடிமை அல்ல மறைமுக கூட்டாளி, கார்ப்பரேட் நல கள்ள கூட்டாளி.

    உதாரணம் பரந்தூர்.

    இன்னும் நிறைய உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here