கடந்த பத்தாண்டுகளாக, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசை முடக்கவும், சீர்குலைக்கவும் ஆளுநர்களைப் பயன்படுத்தி வருகிறது ஒன்றிய பாஜக அரசு. கடந்த 2021 – ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, ஒன்றிய பாஜக அரசால் R.N. ரவி என்பவர் ஆளுநராக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி, பயங்கரமான “ஸ்ட்ரிக்ட் ஆபிஸர்” என்றும், திமுக அரசுக்கு கடிவாளமாகவும், சிம்ம சொப்பனமாகவும் விளங்குவார் என்றெல்லாம் ஊடகங்கள் ஊதிப் பெருக்கின.
ஆனால் தமிழ்நாட்டில் அவரது பருப்பு வேகவில்லை. திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக எப்படி எப்படியோ முயன்றும் அவரது பாச்சா பலிக்கவில்லை. இவரைக் கடுப்பேற்றி காமெடி பீஸாக மாற்றி அலறவிட்டது தமிழ்நாடு. இறுதியாக அவருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அவரைக் கழுவி ஊற்றியுள்ளது. இந்த வழக்கின் மூலமாக நல்லதொரு நீதி பெறப்பட்டிருக்கிறது. அரிதிலும் அரிதாக சில நேரங்களில் நீதிமன்றங்களில் இப்படியான நீதி வழங்கப்படுகிறது.
ஆளுநர் என்ற அதிகாரத் திமிரில் வலம் வந்து கொண்டிருந்த ஆர்எஸ்எஸ் காரருக்கு ஆப்பு வைத்து விட்டது உச்ச நீதிமன்றம். இவருக்கு மட்டுமல்ல இனி இந்தியாவில் பணியில் இருக்கும் அனைத்து ஆளுநர்களுக்கும் சேர்த்து “ஓவராக ஆடக்கூடாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது உச்ச நீதிமன்றம். கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அடாவடியான ஆளுநர்களை நியமித்து, கூட்டாட்சி எனும் அடிப்படைக்கே வேட்டு வைக்கப்பட்டது. ஆளுநரை ஒன்றிய அரசின் அடியாள் போல பயன்படுத்தி வந்தது.
ஆளுநர் ராஜ்ஜியம் இனி இல்லை -வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!
இந்த நிலையில் தான் ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் ஏப்ரல் 8 அன்று வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் தங்களது 414 பக்க தீர்ப்பில் “அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு – 200, ஆளுநரின் பணியைத் தெளிவாக வரையறுத்துள்ளது. அதைத் தாண்டி தமிழக ஆளுநர் தனது பதவிக்காலத்தில் விருப்பம்போல அதிகாரத்தை செலுத்தியுள்ளார். திமுக அரசின் மசோதாக்களை முடக்க ஆளுநர் ரவி எடுத்த நடவடிக்கைகள் மிகவும் தவறானவை மற்றும் சட்டவிரோதமானவை” என்று தீர்ப்பளித்துள்ளது.
“ஆளுநர் என்பவர் அரசின் செயல்பாடுகளை தடுப்பவராக இல்லாமல் வினையூக்கியாக செயல்பட வேண்டும். அவர் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மரபுகளுக்கும், சட்டமன்றத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் மக்களின் விருப்பத்தையும் மக்களுக்கு பொறுப்பான தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையும் மதித்து செயல்பட வேண்டும். அவர் வகிக்கும் உயர் அரசியலமைப்பு பதவியின் கண்ணியத்தை மனதில் கொண்டு அவரது அனைத்து செயல்களும் இருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் மக்களுக்கு நேரடியாக பதிலளிக்க வேண்டிய சட்டமன்றத்தால் எடுக்கப்பட்ட முடிவுகளை காலவரையறை இன்றி மீற இந்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” என்று உச்ச நீதிமன்றம் ஆளுநரின் செவிட்டில் அடித்துள்ளது.
தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அப்படி நடித்துக் கொண்டிருப்பவர்களை எழுப்பும் விதமாக நீதிமன்றம் குண்டு வீசுவதைத் தவிர வேறு வழியில்லை. அதைத்தான் செய்துள்ளது உச்சநீதிமன்றம். பாசிச பாஜகவின் புல்டோசர் ராஜ் போலவே ஆளுநர் ராஜ் என்பதும் அரசியலமைப்பை அவமதிக்கும் ஒரு அராஜக போக்காக இருந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுகள் உருவாக்கிய சில சட்டங்கள், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.
படிப்படியாக கடுமை காட்டிய உச்ச நீதிமன்றம்!
ஆளுநர் பதவி என்பது உயர் அரசியலமைப்பு அதிகாரம் கொண்டது என்பதைப் புரிந்துதான், உச்ச நீதிமன்றம் ஆரம்பத்தில் சில ஆலோசனைகளை மட்டும் ஆளுநர்களுக்கு வழங்கியது. ஏப்ரல் 2023 – ல் தெலுங்கானா ஆளுநருக்கு எதிரான வழக்கில், அரசியல் அமைப்பின் 200 ஆவது பிரிவின்படி மசோதா மீது விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்கிற விதியை ஆளுநருக்கு நினைவூட்டியது.
படிக்க:
♦ தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உச்சந்தலையில் சம்மட்டியால் ஓங்கி அடித்த உச்சநீதிமன்றம்!
♦ தெண்டச்சோறு ஆளுநர் ரவியும் ஆர்.எஸ்.எஸ் ன் தேசப்பக்தியும்!
இருப்பினும் இதை ஆளுநர்கள் கடைபிடிக்கவில்லை என்பதால், நவம்பர் 2023 ல் பஞ்சாப் ஆளுநரின் வழக்கில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள், ஒப்புதலை நிறுத்தி வைப்பதன் மூலம் சட்டமன்றத்திற்கு மேலான அதிகாரத்தை செலுத்த முடியாது எனக் கடுமையாக குறிப்பிட்டது. மசோதாவுக்கு ஒப்புதல் தர மறுக்கும் நிலையில் உரிய காரணங்களுடன் சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இந்த வழிகாட்டல்கள் மற்றும் வலியுறுத்தல்கள் எல்லாம் தமிழ்நாடு மற்றும் கேரள ஆளுநர்களுக்கு உறைக்கும் விதமாக இருக்கும் என நீதிமன்றம் நம்பியது. சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றிய மசோதாக்களை நீண்ட காலம் கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர் ரவி, சட்ட விரோதமாக குடியரசு தலைவருக்கு அவற்றை அனுப்பி வைத்ததை தவிர வேறு எந்த முன்னேற்றமும் இல்லை.
எனவேதான் “இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு தமிழக ஆளுநர் உரிய மரியாதையை காட்டத் தவறியுள்ளார். அவரது நடத்தை நேர்மையற்றதாக உள்ளது. எனவே மீண்டும் இந்த விஷயத்தில் அவருக்கு உத்தரவிட விரும்பவில்லை” என ரவிக்கு குட்டு வைத்த நீதிபதிகள் பிரிவு 142 – ன் கீழ் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையில் பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கி விட்டனர்.
ஆளுநருக்கு மட்டுமல்ல, குடியரசு தலைவருக்கும் சேர்த்தே காலக்கெடு!
ஆளுநர் என்பவர் ஒன்றிய அமைச்சரவையுடன் கூட்டு சேர அனுமதிக்க முடியாது என்றும் நீதி மன்றம் கூறியுள்ளது. அப்படி அனுமதிக்கப்பட்டால், மாநிலத்தில் எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்ற விடாமல் செயல் இழக்க வைக்கும் அபாயம் உள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். ஒரு ஆளுநர் மாநில அரசின் மசோதாவை “பாக்கெட் வீட்டோ” எனும் அதிகாரத்தை பயன்படுத்தி கால வரையறையின்றி தாமதப்படுத்த முடியாது. எவ்வித விளக்கமும் கோராமல், ஒப்புதலும் வழங்காமல் நிறுத்தி வைப்பது மசோதாவை நிறைவேற்ற விடாமல் ஒழிப்பதற்கு சமமானது.
As soon as Possible (முடிந்தவரை விரைவில்) என்பதற்கு எத்தகைய காலக் கெடுவும் இல்லை என்பதால், இதை வசதியாக ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கால வரையறை இன்றி மசோதாவை முடக்கி வைப்பதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் எந்த அடிப்படையும் இல்லை என்று நீதிமன்றம் கூறி உள்ளது. இந்தத் தீர்ப்பில் நாட்டின் கூட்டாட்சி அமைப்பில் மாநில அரசின் நிர்வாக முடிவுகள் மற்றும் சட்டங்களை செயல் படுத்துவதில் தாமதங்களை தடுக்கும் விதமாக இப்போது காலக்கெடு விதித்தது என்பது மாட்டுக்கு முக்கணாங்கயிறு கட்டியது போன்றதாகும்.
இந்த காலக்கெடுவை பின்பற்றத் தவறினால் ஆளுநர்களின் செயலற்றத் தன்மை நீதித்துறையின் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த தீர்ப்புக்கு பிறகு ஆளுநர்கள் மசோசாவுக்கு ஒப்புதலை நிறுத்தி வைப்பது அல்லது அதை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது மற்றும் குடியரசு தலைவர் ஒப்புதலை நிறுத்தி வைப்பது போன்றவை நீதிமன்றங்களால் ஆராயப்படலாம்.
இந்தத் தீர்ப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் ஒப்புதல் விசயத்தில் காலக்கெடுவை நிர்ணயித்ததுதான். மாநில அரசு நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அதிகபட்சமாக ஒரு மாத காலத்திற்குள் அனுப்ப வேண்டும். ஒரு வேளை மசோதாவை நிறுத்தி வைத்தால், மீண்டும் அரசுக்கு மசோதாவை ஒரு செய்தியுடன் மூன்று மாதங்களுக்குள் திருப்பி அனுப்ப வேண்டும். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை மீண்டும் சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பினால் உடனடியாக (அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள்) ஒப்புதலை வழங்க வேண்டும்.
அரசியல் அமைப்புப் பிரிவு 200 – ன் படி அமைச்சரவையில் அவருக்கு வழங்கப்பட்ட ஆலோசனையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அதேபோல பிரிவு 201-ன் படி குடியரசுத் தலைவருக்கும் வீட்டோ அதிகாரம் இல்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அவருக்கும் அதிகபட்ச காலக்கெடுவாக 3 மாதம் வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் ரவி சில மசோதாக்களை பரிந்துரைத்த பிறகு குடியரசு தலைவர் அவற்றை மாதக்கணக்கில் நிறுத்தி வைத்திருந்தார். இனி அவரும் உரிய காலக் கெடுவுக்குள் அதன் மீது முடிவெடுக்க வேண்டும்.
பாசிஸ்டுகள் பதறுகிறார்கள்!
இந்தத் தீர்ப்பு இஷ்டம் போல ஜனநாயகப் படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருந்த பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு பீதியூட்டியுள்ளது. எனவே தான் இந்த பாசிஸ்டுகள் பதறுகிறார்கள், கதறுகிறார்கள். முன்பு மேற்கு வங்கத்தின் ஆளுநராக இருந்தபோது ஆர் என் ரவியைப் போலவே சட்ட விரோதமாக அடாவடியாக செயல்பட்டுக் கொண்டிருந்த இப்போதைய துணைக் குடியரசு தலைவரான ஜக்தீப் தன்கர், “நாடாளுமன்றத்தை விட உச்ச நீதிமன்றம் சக்தி வாய்ந்ததா? குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றங்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? பிரிவு 142 என்பதை அணு ஏவுகணை போல நீதிபதிகள் பயன்படுத்தி உள்ளனர். சூப்பர் பார்லிமெண்டாக நீதிமன்றம் செயல்படுகிறது” என்றெல்லாம் கொந்தளித்துள்ளார்.
இதுதான் பாசிஸ்டுகளுக்கே உரித்தான பாணி. ஜனநாயகப் பண்பு கிஞ்சித்தும் இன்றி தமது அதிகாரத்தை கேள்வி கேட்பவர்கள் யாராக இருந்தாலும் மிரட்டுவதே இவர்களது வாடிக்கை. சமீபத்தில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் அடுத்தடுத்த நாள் நிறைவேற்றப்பட்டு, அதற்கடுத்த நாளே குடியரசு தலைவரின் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டது. இதே போலத்தான் EWS உள்ளிட்ட சட்டங்களும் மிக விரைவாக நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறுகிறது.
ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் சட்டமன்றங்கள் இயற்றும் சட்டத்திற்கு ஆண்டுக் கணக்கில் அனுமதி வழங்காமல் ஆளுநர்கள் மூலம் இழுத்தடிக்கப் படுவது எந்த வகையில் நியாயம்? இதே கூட்டம்தான் தமக்கு சாதகமான “நீட்” உள்ளிட்ட விவகாரங்களில் “உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது. இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது” என வாதிட்டது. சாதகம் என்றால் ஆதரிப்பதும், பாதகம் என்றால் எதிர்ப்பதும்தான் சங்கிகளின் வழக்கம்.
மக்கள் நலன், சட்டத்தின் ஆட்சி, மாநில உரிமைகள், ஜனநாயக விழுமியங்கள் என அனைத்தையும் தூக்கியெறிந்து, தமது கார்ப்பரேட்-காவிப் பாசிசத் திட்டத்தை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்பவர்கள் தான் இந்தக் காவி பாசிஸ்டுகள். இவர்களை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தியாக வேண்டும் என்பதுதான் இன்றைய இன்றியமையாதத் தேவையாக உள்ளது.
- குரு