இந்தியாவில் வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் அரசியல், சினிமா, கிரிக்கெட் துவங்கி தனிப்பட்ட நபர்களின் அந்தரங்க வாழ்க்கை வரை அனைத்தையும் பற்றி எழுதி தள்ளுவது வரம்பை மீறி சென்று கொண்டுள்ளது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் 52% பேர், அதாவது 75.15 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். அதில் சுமார் 32.27% பேர் அதாவது 46.20 கோடி பேர் சமூக வலைதளங்களில் உள்ளனர்.
ஒரு மொபைல் போனும், 250 ரூபாய்க்கு ரீசார்ஜ்-சும் இருந்தால் போதும், தனக்குத் தெரிந்த, அரைகுறையாக தெரிந்த அல்லது ஒன்றுமே தெரியாத விஷயங்களில் கருத்துக்களை பதிவிட தொடங்குகிறார்கள் ’கருத்து கந்தசாமிகளாகிய” அறிவுக் கிரிமினல்கள்!
தான் பதிவிடும் பொருளைப் பற்றி எந்த விதமான அறிவோ இல்லாத போதிலும், யாராவது ஒருவர் போட்ட பதிவை வைத்துக்கொண்டு, அந்த பொருளை பற்றியோ அல்லது ஒரு நபரை பற்றியோ மனதில் தோன்றியபடி எல்லாம் எழுதித் தள்ளுகிறார்கள்.
பாத்ரூமில் குளிப்பவர்கள் எந்த விதமான இசை அறிவும் இல்லாவிட்டாலும், ஏதாவது ஒரு பாடலை முணுமுணுப்பதை போல இது போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கி முத்தெடுப்பவர்கள் தனக்குத் தெரியாத ஒன்று கிடையாது என்ற அப்பாட்டக்கர் மனநிலையில் செயல்படுகிறார்கள்.
அவர்கள் எழுதிய எழுத்துகளுக்கோ அல்லது youtube சேனல்களில் அவர்கள் பேசி வெளியிடும் வீடியோக்கள், ரீல்ஸ்கள் போன்ற எதற்கும் பொறுப்பான பதில் சொல்வதற்கு கடமைப்பட்டவர்கள் அல்ல என்றும் கருதிக் கொள்கிறார்கள்.
கேட்டால் பொழுதுபோக்காக இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம் என்று கதையளக்கிறார்கள் இப்படிப்பட்ட சமூக வலைதளங்களில் கருத்து கந்தசாமியாக மாறி அபத்தமான செய்திகளில் ஈடுபடுகின்ற நபர்கள்.
இதில் மிகவும் ஆபத்தானது சைபர் புல்லியிங் என்று சொல்லக்கூடிய ஒருவரை பற்றி மனம் போனபடி, கண்டபடி எழுதி தள்ளுவது. இதைப் பற்றி சமீபத்தில் வெளியில் வந்துள்ள ஆய்வறிக்கை இந்தியாவில் இணைய பயன்பாட்டாளர்களில் ஏறக்குறைய 38 சதவீதம் பேர் இது போன்ற சைபர் புல்லியிங் (Cyber Bullying) பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
,‘‘ஒருவரை மையப்படுத்தி அவரை தவறான முறையிலோ, குற்றம்சாட்டியோ அல்லது அவரின் சமூக அடையாளத்தை கொச்சைப்படுத்தும் படி விமர்சிப்பதை ‘இணையத் தொல்லை’ (Cyber Bullying) என்கிறோம். இது நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அதிகரிப்பதுடன், இதனால் மன நலம் பாதிப்போரும் அதிகரித்து வருகின்றனர்’’ என்கிறார் மனநல மருத்துவர் அனிஷா..
சமீபத்தில் இந்த சைபர் புல்லியிங் (Cyber Bullying) பிரச்சனையில் மாட்டிக் கொண்டு தனது உயிரை மாய்த்துக் கொண்ட சகோதரி ரம்யாவின் கதை மிகவும் கொடூரமானது.
சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் வெங்கடேஷ் (37), இவரது மனைவி ரம்யா (33). ஐ.டி துறையில் பணியாற்றி வந்த இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், 9 மாத பெண் குழந்தையும் உள்ளன.
கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரம்யா உணவு கொடுத்துக் கொண்டிருந்த போது, ஒன்பது மாத கைக்குழந்தை எதிர்பாராத விதமாக நான்காவது மாடி பால்கனியில் இருந்து தவறி கீழ் தளத்திலிருந்த ‘சன் ஷேடில்’ விழுந்தது. அருகில் குடியிருந்தவர்கள் ஜன்னல் கம்பியில் நின்றபடி, பெரும் போராட்டத்திற்கு பின் குழந்தையை உயிருடன் மீட்டனர்.
குழந்தை மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகத்தில் பரவியது. பகிரப்பட்ட வீடியோக்களில், குழந்தை பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்ததற்காக அவரது தாயைக் குற்றம்சாட்டி வெறுப்பு கருத்துகளை பலரும் பதிவிட்டிருந்தனர். இதுபோன்ற இணையவழி தொல்லையால் (Cyber bullying) ரம்யா மன ரீதியில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளார். இறுதியில் கோவையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று தற்கொலை செய்துக் கொண்டார்.
அந்த குழந்தையை பெற்றவர்களுக்கு – உங்களுக்கு கொழந்த ஒரு கேடாடா ? pic.twitter.com/0FUskMECMf
— Prashanth Rangaswamy (@itisprashanth) April 28, 2024
இந்தியாவில் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் ‘சைபர் ஃபுல்லியிங்’ பாதிப்பை எதிர்கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், சமீப நாட்களாக சாமானிய மக்களும் இந்த பாதிப்பை எதிர்கொள்வதும், அதனால் தற்கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது.
சமூக வலைதளங்களை கிரிமினல் குற்ற செயல்களுக்கு பயன்படுத்துகின்ற இது போன்ற கிரிமினல்களுக்கு, சட்டத்தின் வழியில் மட்டுமே தீர்வு காண முடியாது. ஏனென்றால் இது சமூகப் பொருளாதாரத்தின் வெளிப்பாடான பண்பாடு தொடர்பான பிரச்சனையாகும். சமூகம் பாசிச மயமாக்கப்படும் போது அதன் பண்பாடும் சீரழிந்து போகும் என்பதே நிலைமையாகும்.
சதா சர்வ காலமும் தன்னைப் பற்றிய சிந்தித்துக் கொண்டுள்ள அல்லது தன்னைத் தவிர வேறு யாருக்கும் அறிவு கிடையாது என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் பாசிச உளவியலோடு தொடர்புடையதாகும்.
நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகள், தொழிலாளர்களை பற்றி வாட்ஸ் அப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் வைத்திருக்கும் கருத்துக்கும், இது போன்ற சைபர் புல்லியிங் வேலையில் ஈடுபடுகின்ற தறுதலைகளுக்கும் வேறுபாடு கிடையாது.
பொதுவாகவே பெண்களை இழிவாக நடத்துகின்ற பார்ப்பன (இந்து) மதம் பெரும்பான்மை என்று தன்னை சொல்லிக் கொள்கிறது> ஆனால் பெண்கள் மீதான ஆணாதிக்க வக்கிரங்கள் இது போன்ற சைபர் புல்லியிங் (Cyber Bullying) தாக்குதல்கள் போன்ற எதையும் பற்றி கவலைப்படாத மனநிலையை இந்து சமூகத்தின் ஆண்கள் இருக்கின்றார்கள் என்பது தான் வெட்கக்கேடான நிலைமையாகும்.
இந்தியாவில் உள்ள படிப்பறிவற்ற பாமர மக்கள் இப்படி இருக்கிறார்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருந்தால் அது தவறு! உலகம் முழுவதும் மெத்த படித்த அறிவாளிகள், நவநாகரிக நாடுகள், உலகத்தை ஆதிக்கம் புரிய துடிக்கின்ற ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகிய அனைவரும் ஏதாவது ஒரு வகையில் இது போன்ற சைபர் புல்லியிங் (Cyber Bullying) விவகாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உலகின் மொத்த மக்கள் தொகையில் 67.10% பேர், அதாவது 544 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். அதில் சுமார் 62,6% பேர் அதாவது 500.70 கோடி பேர் சமூக வலைதளங்களில் உள்ளனர்.
இந்தியாவில் கார்ப்பரேட் காவி கும்பல் அதிகாரத்திற்கு வந்தது முதல் ஏகாதிபத்திய கழிசடைக் கலாச்சாரமும், பார்ப்பன (இந்து)மதம் கலாச்சாரமும் ஒன்றிணைந்து, புதிய வடிவிலான, ஒரு ’கலவை கலாச்சாரம்’ நாடு முழுவதும் தலைவிரித்தாடுகிறது.
தனது அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ள துடிக்கின்ற அதிகார வெறியர்கள் துவங்கி தனது விருப்பத்திற்கு உடன்படாத பெண்களை கொச்சையாக சமூக வலைதளங்களில் இழிவு படுத்துகின்ற பொறுக்கிகள் வரை அனைவரும் ஒரே மாதிரியான ”அறிவு கிரிமினல்களாக’ செயல்படுகின்றனர்.
ஆணாதிக்க வக்கிரங்களின் அடுத்த கட்ட தாக்குதல் தான் சைபர் புல்லியிங் (Cyber Bullying) நவீன விஞ்ஞானம் வளர்கிறது, அனைவர் கையிலும் அலைபேசி இருக்கின்றது, உலகம் சுருங்கி கொண்டுள்ளது, உலகம் உங்கள் கையில் என்பதெல்லாம் சரிதான்! ஆனால் இப்படிப்பட்ட கருவிகள் பெரும்பான்மை மக்களின், குறிப்பாக பெண்களின் வாழ்க்கையோடு விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதன் ஒரு எடுத்துக்காட்டுதான் சகோதரி ரம்யாவின் மரணம்.
இது போன்ற வக்கிரங்களுக்கு பாதிப்படைகின்ற பெண்களுக்கு, மனநல பாதிப்பு என்றும், அதற்கு புதிய புதிதாக பெயரை வைத்து, அவற்றிலிருந்து காப்பாற்றுவதற்கு புதிது புதிதாக மருத்துவர்கள் கிளம்புகிறார்கள். ஆனால் இந்த மருத்துவம் எதுவும் அவர்களை நிரந்தரமாக பாதுகாக்காது.
பெண்களை பண்டமாகவும், போகப்பொருளாகவும் மட்டுமே கருதுகின்ற ஆணாதிக்க சமூகத்திற்கு முடிவு கட்டுகின்ற, புதிய வகையான சமூகத்தை, பெண்களை சமமாக மதிக்கின்ற- அவர்களின் உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பு கொடுக்கின்ற சமூக அமைப்பை உருவாக்குவது என்பதே இதற்கு நிரந்தர தீர்வு.
அது கண்டிப்பாக சோசலிச சமுதாயமாக தான் இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
- கனிமொழி