“மோடியின் கேரண்டி” அதாவது மோடியின் உத்திரவாதம்… மோடியின் உத்திரவாதம்… என்று கூவிக் கூவி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மோடி, பிறகு என்னவெல்லாம் அயோக்கியத்தனமாக பேசினார் என்பது பற்றி நாம் இப்பொழுது கூற வரவில்லை.
மாறாக அவர் எந்தெந்த நாடாளுமன்ற தொகுதிகளில் அயோக்கியத்தனமாக பேசினாரோ அந்தத் தொகுதி மக்கள் பாசிச மோடியின் பேச்சுக்கு எப்படி செருப்படி கொடுத்திருக்கிறார்கள் என்பதை இங்கு நாம் பார்க்கப் போகிறோம்.
முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், அதன் பிறகு ஏப்ரல் 21 ஆம் தேதி அன்று ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி பேசும் பொழுதுதான் இந்தத் தேர்தலில், முதன் முதலாக, மதவெறிப் பேச்சை தொடங்கினார். அங்கு பேசிய மோடி இந்துப் பெண்களின் தாலியை பிடுங்கி “ஊடுருவல் காரர்களுக்கு” கொடுத்து விடுவார்கள்… “அதிகப்பிள்ளை பெற்றுக் கொள்பவர்களுக்கு” கொடுத்து விடுவார்கள்…. அதாவது முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்று விசத்தை கக்கினார்.
அந்த பன்ஸ்வாரா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மக்கள் ,மோடியின் மதவெறிப் பேச்சிற்கு பலியாகவில்லை. அந்தத் தொகுதியில் பாஜகவின் வேட்பாளரான மகேந்திரஜித் சிங் மாளவியா 2,47,054 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ராஜ்குமார் ரோட் (பாரத் ஆதிவாசி கட்சி)யிடம் படுதோல்வி அடைந்து விட்டார். இது அந்த பாஜக வேட்பாளரின் தோல்வியா? அல்லது மோடியின் மதவெறி பேச்சிற்கு கிடைத்த செருப்படியா? என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
அடுத்து இந்துத்துவத்தின் சோதனைச் சாலையான, நரவேட்டை நாயகர் மோடியின் குஜராத்திற்கு வருவோம். அந்த மாநிலத்திற்கு உள்ள பனாஸ்கந்தா நாடாளுமன்ற தொகுதியில் மோடி பேசும்பொழுது உங்களிடம்(இந்துக்களிடம்) இரண்டு எருமை மாடுகள் இருந்தால் அதில் ஒன்றை பிடித்து இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கொடுத்து விடும் என்று பீதியூட்டி, வாக்குகளைப் பெற மதவெறி நஞ்சை கக்கிக் கொண்டிருந்தார்.
அந்த பனாஸ்கந்தா நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் , காங்கிரஸ் வேட்பாளரிடம் 30,406 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். அதாவது மோடியின் மதவெறி பேச்சுக்கு மக்கள் செருப்படி கொடுத்து விட்டார்கள்.
பாபர் மசூதியை இடித்து ராமர் கோயிலை கட்டியுள்ள அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் நாடாளுமன்ற தொகுதியிலும் பாஜக வேட்பாளர், சமாஜ்வாடி கட்சி வேட்பாளரை விட 54,567 வாக்குகள் குறைவாகப் பெற்று தோற்றுப் போய் மண்ணை கவ்வி விட்டார். அது மட்டுமா? அயோத்தியை சுற்றியுள்ள 9 நாடாளுமன்ற தொகுதிகளில் 5ல் பிஜேபி தோற்கடிக்கப்பட்டு விட்டது. தெய்வத்தின் குழந்தை மோடி போட்டியிட்ட வாரணாசி பகுதியில் மொத்தம் 12 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் 9 தொகுதிகளில் பிஜேபி தோற்றுவிட்டது. 2019 ஆம் ஆண்டு தேர்தலில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 64 ஐ பாஜக கூட்டணி (NDA) வென்று இருந்தது. ஆனால் இந்த முறை வெறும் 36 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. ஆனால் “இந்தியா” கூட்டணி 43 இடங்களை கைப்பற்றியுள்ளது.
படிக்க:
♦ 2024 நாடாளுமன்ற தேர்தல்: மக்கள் சக்தி வென்றது! பாசிச பாஜக வின் ’ஒற்றை சர்வாதிகார’ கனவு வீழ்ந்தது!
♦ தேர்தல் முடிவுகளும், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் கடமைகளும்!
அயோத்தி ராமர் கோயிலை முன்வைத்து இந்து மத வெறியை கிண்டிக் கிளறி விட்டு, இஸ்லாமியர்களின் ரத்தத்தை குடித்து கட்சியை வளர்த்த பிஜேபி, அந்த அயோத்தி மண்ணிலேயே வீழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த பாசிச பயங்கரவாதிகளின் அயோக்கியத்தனங்களை புரிந்து கொண்ட மக்கள் அவர்களை வீழ்த்தி விட்டார்கள். மோடியின் கேரண்டியை அதாவது மோடியை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து விட்டார்கள்.
மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த 22 அமைச்சர்கள் இந்தத் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பிஜேபியின் தேர்தல் அறிக்கையே பிஜேபியின் பெயரால் வெளிவரவில்லை. மாறாக மோடியின் பெயரால் “மோடியின் கேரன்டி” என்றுதான் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையிலும் கூட மோடியின் பெயர் 67 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக, இந்தத் தேர்தல் என்பது மோடிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான தேர்தல் தான். அதாவது எங்கள் தரப்பில் மோடி தான் பிரதமர். இந்தியா கூட்டணி தரப்பில் யார்?அந்த கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் என்பதே இல்லை. மோடி ஆட்சி அமைத்தால் தான் நாடு முன்னேறும். எனவே மோடிக்கு வாக்களியுங்கள் என்பதுதான் பிஜேபியின் முழக்கம். இப்படி முழுக்க முழுக்க மோடியை முன்வைத்து தேர்தலை சந்தித்த பிஜேபிக்கு ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மையில்லாமல் போனது என்பது மோடி பிரதமராகக் கூடாது என்ற மக்களின் விருப்பத்தை தான் காட்டுகிறது.
400 இடங்களுக்கு மேல், அவ்வளவு ஏன் 300 இடங்களை பாஜக வென்று இருந்தால் கூட இது மோடியின் வெற்றி. மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக நாட்டு மக்கள் அளித்துள்ள வாக்கு என்று தான் மோடி கூவிக்கொண்டிருந்திருப்பார்.
இப்போதைய நிலை என்ன? பிஜேபிக்கு தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இது மோடி பிரதமராகக் கூடாது என்ற நாட்டு மக்களின் விருப்பத்தைத் தான் காட்டுகிறது. ஓட்டுக்காக, பிரதமர் பதவிக்காக நாட்டு மக்களை மதரீதியாக பிளவு படுத்தி மோத விட்ட பாசிச பயங்கரவாதி, நரவேட்டை நாயகர்..ர்..ர் மோடிக்கு பிரதமராவதற்கு தார்மீக தகுதியே இல்லை என்பது இதிலிருந்து விளங்கவில்லையா?
தெய்வக் குழந்தையான மோடி, தகுதி – தார்மீகத் தகுதி, நியாயம் – நேர்மை இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். இப்பொழுது அயோத்தி ராமன் மோடியை கைவிட்டால் என்ன? மோடிக்கு பூரி ஜெகந்நாதர் இருக்கிறார். இனி அதை வைத்து ஏதாவது செய்ய முடியுமா? என்றும் கூட மோடி – அமித் சா கும்பல் சிந்திக்கத் தொடங்கி இருப்பார்கள். அதன் வெளிப்பாடு தான் “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற முழக்கத்தை கைவிட்டு விட்டு இப்பொழுது “ஜெய் ஜெகந்நாத்” என்று ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகந்நாதரை (கடவுளைத்தான்)மோடி முழங்க ஆரம்பித்திருக்கிறார்.
மோடி போன்ற பாசிஸ்டுகளின் முழக்கங்களுக்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர். இதனை கார்ப்பரேட்-காவி பாசித்திற்கு எதிரான விழிப்புணர்வாக வளர்த்தெடுக்க வேண்டும்.
மக்கள் தானாக விழிப்படையட்டும் என்று நாம் காத்திருப்பது அறிவீனம். மக்களை விழிப்படையச் செய்யும் பணியில் நாம் ஈடுபடுவது தான் அறிவுடமை. அதுவே நமது கடமை.
— குமரன்