பத்திரிக்கைச் செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் முடிவு!

தேர்தலில் கிடைத்துள்ள பாசிச பாஜகவிற்கு எதிரான இந்த உந்து சக்தியை பயன்படுத்தி மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தையும், கார்ப்பரேட் - காவி பாசிசத்தை முற்றாக வீழ்த்துவதற்கான போராட்டத்தையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

05.06.2024

2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி “பாசிச பாஜகவை தோற்கடிப்போம்! இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்” என்ற முழக்கத்துடன் தேர்தல் பரப்புரைகளை 2023 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கியது எமது மக்கள் அதிகாரம் அமைப்பு. அதன் பிறகு இந்தியா முழுவதும் பாசிச பாஜக வை தோற்கடிக்க வேண்டும்; இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்து ஜனநாயக சக்திகள் மற்றும் மக்களிடம் வலுப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தேர்தலில் வாக்களித்த மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகின்ற வகையில் தில்லு முல்லு செய்வதற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது என்பதை கண்டித்து திருச்சியில் மே 30  முற்றுகை போராட்டமும் நடத்தியது.

தமிழகத்தில் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள் பாசிச பாஜகவிற்கு எதிராக ஒரே அணியில் திரண்டு போராடியதால் தேர்தலில் பாசிச பாஜக முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளதுடன் பாஜக-வை ஆதரித்த கட்சிகளையும் மக்கள் தோல்வியடைய செய்துள்ளனர். சில மாநிலங்களில் பெரும்பான்மை இடங்களையும், சில மாநிலங்களில் குறைவான இடங்களையும் பெற்றுள்ள பாஜகவிற்கு தமிழகத்தில் ஒரு இடமும் கிடைக்கவில்லை என்பதற்கு முக்கிய காரணம் ஆர் எஸ் எஸ் பாஜகவிற்கு எதிரான கருத்து உடைய அனைவரும், ஒரே அணியில் திரண்டு போராடியதுதான்.

எனினும், தேர்தல் ஆணையம் பல்வேறு தில்லு முல்லுகளையும், மோசடிகளையும் செய்து தனது திட்டப்படியே பாஜகவை வெற்றி பெறச் செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் மோசடிகள், ஊடகங்களின் கைக்கூலித்தனங்கள், அதிகார வர்க்கத்தின் கூட்டணி, அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் நிதியுதவி ஆகிய அனைத்தையும் தாண்டி இந்திய மக்கள் பாசிச பாஜகவிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள். பாஜக கூட்டணிக்கு 44 சதவீத வாக்குகளும் இந்தியா கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் பாசிச பாஜகவை முழுமையாக தோற்கடிக்க முடியாமல் போயிருந்தாலும் மக்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக பாஜகவின் கோட்டையான உத்தர பிரதேசத்தில் பின்னுக்கு தள்ளி இருக்கிறார்கள். அறுதிப் பெரும்பான்மை கொண்ட ஒரு கட்சி சர்வாதிகாரம் என்பதை மாற்றி கூட்டணி ஆட்சி அமைக்க நிர்பந்தித்துள்ளனர் மக்கள்.

தேர்தலில் கிடைத்துள்ள பாசிச பாஜகவிற்கு எதிரான இந்த உந்து சக்தியை பயன்படுத்தி மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தையும், கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முற்றாக வீழ்த்துவதற்கான போராட்டத்தையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

கடந்த பத்தாண்டு காலத்தில் பாசிச பாஜக பறித்தெடுத்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுப்போம். ஜி எஸ் டி வரிவிதிப்பு, மாநிலங்களின் நிதியாதாரங்களை கைப்பற்றிக் கொள்வது, மாநிலங்களின் உரிமையை மறுக்கின்ற பாசிச சர்வாதிகாரம், அம்பானி, அதானி போன்றவர்களை மேலும் மேலும் கொழுக்க வைக்கின்ற கார்ப்பரேட் பொருளாதாரக் கொள்கை, இந்து மதத்தின் பெயரால் நடத்தப்படும் காவி பாசிச பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகிய அனைத்தையும் முறியடிக்கின்ற வகையில் தொடர்ந்து போராடுவோம்.

நாட்டின் பெரும்பான்மை மக்களான விவசாயிகள், தொழிலாளர்கள், அறிவுத்துறையினர், சிறு குறு தொழில் முனைவர்கள் மற்றும் தேசிய முதலாளிகள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாக்கின்ற வகையிலான பொருளாதார கொள்கையைக் கட்டமைக்கின்ற ஜனநாயகக் கூட்டரசு ஒன்றே தீர்வு என்ற முழக்கத்தை முன்வைத்து தொடர்ந்து களமாடுவோம்.

தோழமையுடன்,

சி. ராஜு
மாநில பொதுச் செயலாளர்
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு-புதுச்சேரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here