அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

”அமைப்பின் சித்தாந்த மட்டத்தில் ஒரு பெரும் உந்துதலை ஏற்படுத்தும் வகையிலான இந்த உட்கட்சி விவாதமானது, “அராஜகவாத செயல்தந்திரக் கண்ணோட்டமும் மா-லெ செயல்தந்திரக் கண்ணோட்டமும்” என்ற தலைப்பில் 21-10-2023-இல் தொடங்கப்பட்டது. எனினும் எடுத்துக் கொண்ட உள்ளடக்கத்தின் ஆழம் மற்றும் விரிவான தன்மை காரணமாக ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீடித்தது.” ”அந்தவகையில், கடந்த மே மாதம் 12-ஆம் தேதி அன்று இந்த சிறப்புக் கூட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.” என்று மிகப்பெரும் பீடிகையுடன் 25-07-2024 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது வினவு கும்பல்.

மே-12 அன்றே முடிந்த ’மாபெரும் கூட்டத்தின்’ முடிவுகளை பொது வெளியில் அறிவிக்க ஏன் இவ்வளவு ’ நீண்ட காலமானது’ (இரண்டரை மாத கால அளவிற்கு) என்று தெரியவில்லை.

பிரிட்டன் காலனியாதிக்கத்துக்கு பின்னர் நிலவிய இந்தியாவின் சமூக, பொருளாதார அடிப்படைகளை பற்றி மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து இந்திய சமூக அமைப்பின் அடிப்படையான முரண்பாடுகள், புரட்சியின் அடிப்படை அம்சங்கள் ஆகியவற்றை பற்றி பருண்மையாக ஆய்வு செய்து, அதற்கு பொருத்தமான புதிய ஜனநாயகப் புரட்சிகர பாதையை முன்வைத்து போராடி வருகின்றன நக்சல்பாரி அமைப்புகள்.

புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களை அணிதிரட்டுவதில் போர்த் தந்திரம், செயல் தந்திரம் வகுத்து புரட்சியை முன்னெடுப்பதில் வேறுபாடுகள் இருப்பினும், புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றே தீர்வு என்ற அடிப்படையில் இருந்து பல குழுக்களாக பிரிந்து கிடக்கும் மா.லெ அமைப்புகள் விலகவும், மாறவும் இல்லை.

2021 ஆம் ஆண்டு எமது அமைப்புகளின் தலைமையை கைப்பற்றுவதற்கு உள்ளிருந்து சதித்தனங்களை செய்த வினவு கும்பல் அம்பலப்பட்டு போனதால், எமது அமைப்புகளில் நீண்ட காலமாக செயல்பட்டு வருகின்ற பல்வேறு தோழர்களை அமைப்பை விட்டு நீக்குவதாக பொதுவெளியில் அறிவித்து ஆளும் வர்க்கத்திற்கு உவப்பான சேவை செய்தது.

மா.லெ இயக்கத்தில் இல்லாத அளவுக்கு தனிநபர் தாக்குதல்கள், முன்னணி தோழர்களின் சாதிய பின்னணி, கமிட்டிக்குள் தோழர்களின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் போன்றவற்றையும், மக்கள் திரள் தலைவர்கள் கட்சியைக் கைப்பற்ற போகிறார்கள் போன்ற மலிவான பிரச்சாரங்களின் மூலம் உள்ளூர் அளவில் முன்னணியாளர்களுடன் அதிருப்தி கொண்டவர்களை வென்றெடுத்து ’கட்சியைக்’ கட்டினர். இந்த கேடான செயல்களுக்கு முன்னாள் செயலர் அன்பழகனையும் பயன்படுத்திக் கொண்டனர். பின்னர் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் அன்பழகனை நீக்கியது மட்டுமின்றி கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி கொன்றொழித்தனர்.

அதன் பிறகு வினவு பெயரில் எஞ்சியிருந்த ஒரு சிறு கும்பல், அரசியலற்ற, சித்தாந்தமற்ற லும்பன் கும்பலாக சீரழிந்து போனது. அதற்கு அடிப்படையான சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தின் காரணமாக எந்த திசை வழியில் செல்வது என்று தடுமாறி வந்தனர். அதே சமயம் இவர்களின் புரட்சிகரமான வாய்வீச்சு மற்றும் சவடால்கள் மூலம் பல்வேறு பித்தலாட்டங்களை செய்து ஏமாற்றி கொண்டுவரப்பட்ட அணிகளை ஏய்க்கவும் வேண்டும்; புரட்சிகர அமைப்புகளின் மரபையும் பயன்படுத்திக் கொண்டு பிழைப்புவாதத்தை நடத்தவும் வேண்டும் என்ற சூழலில் அமைப்பை எந்த திசைவழியில் கொண்டு செல்வது என்பது தெரியாமல் பல்வேறு தகிடுதத்தங்களை செய்து வந்தனர்.

அது மட்டுமன்றி புதிய ஜனநாயகப் புரட்சியை போர்த் தந்திர இலக்காக முன்வைத்து செயல்படுகின்ற மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி போன்ற அமைப்புகளின் பெயரையும், புதிய ஜனநாயகப் புரட்சிக்கு இடைக்கட்டமாக தோன்றியுள்ள கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவ வேண்டும் என்ற செயல்தந்திரத்தை முன்வைத்து செயல்படுகின்ற மக்கள் அதிகாரம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளின் பெயர்களையும் கேடாக பயன்படுத்தி அரசியல் பிழைப்புவாதத்தை நடத்தி வந்தனர். அவ்வாறு அவர்கள் முன் வைத்து செயல்பட்ட போலியான அமைப்புகளில் கீழே அணிகள் இல்லாத போதிலும் ஒருங்கிணைப்பு குழு என்று பேரை போட்டுக்கொண்டு எமது அமைப்புகளின் பிரபலத்தை பயன்படுத்தி அரசியல் பிழைப்பு செய்து வந்தனர்.

வெறும் அவதூறுகள், புரட்சிகர அமைப்பு தோழர்களின் மீது வசவுகள், கற்பனையில் சிந்திக்க முடியாத அளவிற்கு ஆசிரியரின் கட்டுக்கதைகள் போன்று பல வழிமுறைகளை செய்து பார்த்த பின்னரும் இவர்களின் பிழைப்புவாதம் அணிகள், ஜனநாயக சக்திகள் மத்தியில் எடுபடாமல் போகவே கணிசமான அணிகள் செயல்பாடின்றி முடங்கினர்.

தற்போது இந்திய சமூக அமைப்பை பற்றிய ஆய்வு செய்து விட்டதாகவும், அந்த ஆய்வு முடிவுகளில் இருந்து நக்சல்பாரி அரசியலின் அடிப்படை அம்சமான நீண்ட கால மக்கள் யுத்த பாதை என்பதைக் கைவிட்டு, முதலாளித்துவ நாடுகளுக்கு பொருத்தமான ஆயுதம் தாங்கிய பேரெழுச்சிப் பாதை ஒன்றே தீர்வு என்ற முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

”1980-களில் நிலவிய அன்றைய இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவத்தின் நிலைமைகளிலிருந்து நீண்டகால மக்கள் யுத்தப் பாதை என்கிற இராணுவப் போர்த்தந்திரப் பாதையானது இந்தியாவுக்குப் பொருத்தப்பாடு உடையது என்று தீர்மானித்தோம். இந்த பாதையில் விவசாயிகளின் விவசாயப் புரட்சியைச் சாதிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

படிக்க: சொந்த அணிகளையே ஏய்க்கும் வினவு குழுவினர்!

தற்போதைய மறுகாலனியாக்க டிஜிட்டல் யுகத்தில் நீண்டகால மக்கள் யுத்தப் பாதைப் பொருந்தாது என்று முதல்நிலையிலேயே முடிவெடுத்தாலும், இது தொடர்பாக 1980-களில் நாம் வகுத்த முடிவுகளைப் பரிசீலிக்கும் போது, அன்றைய காலத்தில், புறநிலைமை குறித்து அரசியல் கோட்பாட்டு ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள நிலைமைகளின் அடிப்படையிலேயே அன்றைக்கே நீண்டகால மக்கள் யுத்தப் பாதை நமது நாட்டிற்குப் பொருத்தமானதல்ல என்ற முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.” (வினவு 25-07-2024 வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து…)

மார்க்சிய லெனினிய இயக்கத்தின் அடிப்படை அம்சங்களில் இருந்து விலகிச் செல்வதற்கு இவர்களுக்கு உரிமை உள்ளது என்ற போதிலும், எமது அமைப்பு இந்தியாவில் நிலவுகின்ற சமுதாய, பொருளாதாரப் படிவங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்திய காலத்திலேயே, ”நீண்ட கால மக்கள் யுத்தப்பாதை பொருத்தமானதல்ல” என்று கைவிட்டிருக்க வேண்டும் என்று உபதேசிப்பதற்கும், மா.லெ இயக்கங்களுக்கு மேல் நின்று நக்சல்பாரி இயக்கத்தை கொச்சைப்படுத்தும் அளவுக்கு பேசவும், எழுதவும் துணிச்சலையும், அதிகாரத்தையும் யார் இவர்களுக்கு கொடுத்தது?

”நக்சல்பாரி இயக்கம் என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்காக நாம் நீண்டகால மக்கள் யுத்தப் பாதையில் செயல்படுவதாகக் கூறிக் கொண்டாலும், நடைமுறையில் முற்றாக நிராகரித்துவிட்டோம் என்பதுதான் நமது சிறப்பம்சமாகும்”. அதேவேளையில், நீண்டகால மக்கள் யுத்தப் பாதையில் முன்னேறுவதாகக் காட்டிக் கொள்ள, இத்துடன் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிரந்தரப் போராட்ட வடிவத்தை இணைத்துக் கொண்டோம். அந்த காலத்தில், தேர்தல் பங்கேற்பு என்பது திரிபுவாதம், தேர்தல் புறக்கணிப்பு மட்டுமே புரட்சிப் பாதை என்று வறட்டுத்தனமான அணுகுமுறை நக்சல்பாரி இயக்கத்தில் செல்வாக்கு செலுத்தியதானது நம்மையும் பீடித்துள்ளது என்பதை உணர்கிறோம். (வினவு 25-07-2024 வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து…)

படிக்க: சொந்த அணிகளையே ஏய்க்கும் வினவு குழுவினர்! பாகம்-2

இவ்வாறு நக்சல்பாரி இயக்கத்தின் அடையாளத்தையே புறக்கணிக்கும் அளவுக்கு சென்றுவிட்ட பின்னர் அந்த அமைப்பின் பெயர்களை பயன்படுத்துவதற்கும், குறிப்பாக புதிய ஜனநாயகம் என்ற இதழை பயன்படுத்துவதற்கும், மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளின் பெயர்களையும் பயன்படுத்துவதற்கு எந்த அருகதையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏனென்றால் தற்போது இவர்கள் நடத்தப் போவதாக கூறிக்கொள்ளும் இந்தியப் புரட்சிக்கு முன் வைத்துள்ள முதலாளித்துவ நாடுகளில் முன்வைக்கப்படும் பேரெழுச்சிப் பாதை என்ற வகையிலான புரட்சிக்கும், நீண்ட கால மக்கள் யுத்தப்பாதையை முன் வைக்கும் புதிய ஜனநாயக புரட்சிக்கும் தொடர்பு கிடையாது என்பதால், இனியும் இவர்கள் எமது அமைப்புகளின் பெயரை பயன்படுத்திக் கொண்டு பிழைப்பு நடத்துவதை அனுமதிக்காதீர்கள் என்று எமது ஆதரவாளர்கள், நண்பர்கள் மற்றும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளைக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இவர்களை நம்பி பின்னால் சென்றதால் ஏமாற்றப்பட்டுள்ள, மா.லெ இயக்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட நேர்மையான அணிகளை எம்முடன் மீண்டும் இணைந்து செயல்பட அழைக்கிறோம்.

அரசியல், சித்தாந்தமற்ற லும்பன் கும்பலான வினவு கும்பலின் தகிடுதத்தங்களை, மார்க்சிய லெனினிய ஆய்வு என்ற பெயரில் பிற குழுக்களிடமிருந்து திருடிய இரவல் சித்தாந்தம் மற்றும் ‘ஆய்வு முடிவுகளை’ விரைவில் அம்பலப்படுத்துவோம்.

தோழமையுடன்,

ஆசிரியர் குழு,
வினை செய்.

5 COMMENTS

  1. மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்திலிருந்தே ஓடிப் போனவர்களை, சிறப்டாகத் தோளுரிக்கப் பட்டுள்ளது.
    பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!

    மேலும் மேலும் கட்டுரைகள் வர வேண்டும்!

  2. உருப்படியா எதையும் செய்யாமல் மாறி மாறி லாவணி பாடிக்கிட்டேயிருங்க வெளங்கிடும்!புரட்சி தானா வந்திடும்!!

    • நீங்கள் உருப்படியா என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் தர்ம பிரபுவே… இதுபோல் அமைப்புகளை குறை சொல்வதை தவிர கடந்த காலங்களில் என்ன செய்துள்ளீர்கள் என்பதை பரிசீலியுங்கள்.

      • அந்த நபர் ஒரு அழுகிப் போன வெங்காயம். ஈரம் இருக்கிற வரைக்கும் நாறிகிட்டுதான் கெடக்கும்.

    • நண்பர் தர்மர் அவர்களுக்கு வணக்கம். மக்கள் அதிகாரம் உருப்படியா எதையும் செய்யவில்லை என்பதை எதை வைத்து சொல்றீங்க. நீங்களும் ஒரு காலத்தில் இந்த அமைப்பில் இயங்கியவர். அமைப்பு பிளவுபடுவதற்கு முன்பே அமைப்பை விட்டு வெளியேறி பாதுகாப்பாக உள்ளீர்கள். அடுத்தவர்கள் அதில் என்ன குறை கூறலாம் என்ற பண்பு அசிங்கமான செயல். உங்கள் கருத்தை அரசியல் ரீதியில் வையுங்கள். மக்கள் அதிகாரத்தின் செயல்பாட்டில் தங்களுடைய விமர்சனம் என்ன என்று கூறுங்கள். அதை விடுத்து யாராவது போராடுவார்கள் அதில் என்ன குறை கண்டுபிடிக்கலாம் என அலையாதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here