பாட்டாளி வர்க்கத்தின் மாமேதை தோழர் லெனின் பிறந்த நாளான இன்று, இந்தியாவில் மார்க்சிய-லெனினிய இயக்கம் துவங்கிய தினமும் இன்று தான் என்பது வரலாற்றின் உயர்ந்த சூழ்நிலைகளின் ஒத்திசைவு ஆகும்.
ஜார் மன்னனின் கொடுங்கோன்மையின் கீழ் பல்வேறு துன்ப துயரங்களை அனுபவித்து வந்த ரஷ்ய மக்கள் ஜாரிசத்துக்கு எதிராக 1905-ல் நடந்த முதலாளித்துவ ஜனநாயக புரட்சி நடத்தி வெற்றி கண்ட சில தசாப்தங்களுக்குள் நவம்பர் புரட்சியை சாதித்தனர்..
அவ்வாறு புரட்சியை சாதித்து முன்னேறிச் சென்ற சோவியத் ரஷ்யாவின் வெற்றிக்குப் பின்புலமாக இருந்தது உருக்குலையாத போல்ஷ்விக் கட்சி தான் என்பது மறுக்க முடியாத உண்மை.
பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதியாக செயல்படுகின்ற கம்யூனிச இயக்கம் தங்களுக்கு வெளியில் தோன்றுகின்ற பல்வேறு எதிர்ப்புரட்சி கருத்துக்கள், ஆளும்வர்க்கத்தின் அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் போன்றவற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டே கட்சிக்குள் தோன்றுகின்ற பாட்டாளி வர்க்கத்திற்கு விரோதமான போக்குகளையும், தன்னை ஒடுக்குகின்ற முதலாளித்துவ வர்க்கத்தின் கருத்துக்களை சுமந்து வருகின்ற பல்வேறு விதமான திருத்தல்வாத போக்குகளையும் எதிர்த்து முறியடிப்பதற்கு போராட வேண்டும் என்பதைத்தான் ரஷ்யப் புரட்சியின் அனுபவங்களும், சீன புரட்சியின் அனுபவங்களும் நமக்கு கற்றுத் தருகின்றன.
ரசியாவில் தோழர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி பல்வேறு நெருக்கடிகளிலும், எதிரிகளின் அடக்குமுறை காலகட்டங்களிலும் உட்கட்சியில் தோன்றிய பல்வேறு கலக சூழல்களிலும், கட்சிக்குள் வலது-இடது திரிபுவாத போக்குகள் தலையெடுத்து புரட்சிக்கு எதிராக கலகம் செய்த சூழல்களிலும் உருக்குலையாமல் நின்று புரட்சியை இறுதி வரை முன்னெடுத்துச் சென்றது போல்சவிக் கட்சி.
“ரஷ்யாவில் சமூக ஜனநாயகத்தின் அரசியல் பணிகளைப் பற்றிய பிரச்சனை திரும்பவும் இப்பொழுது முன்நிலைக்கு வந்திருக்கிறது. இப்பிரச்சனைக்கு அளிக்கப்பட்ட மேற்கண்ட பதில் சரியானதுதானா என்று நமது இயக்கத்தின் பிரதிநிதிகள் பலர் சந்தேகப்படுகின்றனர். பொருளாதாரp போராட்டமே முதன்மையான முக்கியத்துவம் உடையது என்பதாகப் பேசப்படுகிறது; பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் குறுகலாக்கப்பட்டும், வரம்பிட்டு கட்டுப்படுத்தப்பட்டும் வருகின்றன; இது சுயேச்சையான பாட்டாளி வர்க்க கட்சி ஒன்றை ரஷ்யாவில் அமைக்க வேண்டும் என்பது பற்றி சொந்த சிந்தனையின்றி அயலார் பேச்சை அப்படியே திருப்பிச் சொல்வதே ஆகும்” என்று கட்சி துவக்கப்பட்ட காலத்திலேயே நமது இயக்கத்தின் அவசர, அவசிய பணிகள் குறித்து தோழர் லெனின் முன் வைத்துப் போராடினார்.
இதற்கு அடித்தளத்தை உருவாக்கிக் கொண்டதற்கு கம்யூனிச தத்துவத்தின் மீதான சமரசமற்ற உறுதிபாட்டை கடைபிடித்தது தான் என்பதை நாம் உரக்கச் சொல்வோம்.
ரசியாவின் மாபெரும் தலைவராக போற்றப்பட்ட தோழர் ஸ்டாலினே, ரஷ்ய புரட்சிக்கு வெகு காலத்திற்குப் பின்பு 1957-களில் ரசிய கம்யூனிஸ்ட் கட்சியில் நடந்த இருபதாவது காங்கிரஸில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இது பற்றி தோழர் மாசேதுங் மாகாண, நகராட்சி, தன்னாட்சிப் பிரதேசங்களின் கட்சிக்குழுக்களின் செயலாளர்கள் கூட்ட்த்தில் ஆற்றிய உரையிலிருந்து கீழ்க்கண்ட அம்சங்களை அறியத் தருகிறோம்.
”சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது காங்கிரஸில் அடித்த சூறாவளியின் விளைவாக ஸ்டாலின் ஆதரவாளர்களாக இருந்த பலர் அவரது தீவிர எதிரியாக மாறினார்கள் இவர்கள் மார்க்சிய லெனினியத்தை உள்வாங்கிக் கொள்ளாதவர்கள் என்பதும் சூழ்நிலையை சரியாக பகுத்தாராயும் திறனற்றவர்கள் என்பதும் புரட்சிகர அறச்சிந்தனையற்றவர்கள் என்பதும் எனது கருத்து.
மார்க்சிய லெனினிய தத்துவம் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர அறச் சிந்தனையை தழுவியதாகும். நீங்கள் இதற்கு முன் ஸ்டாலினை மிக தீவிரமாக ஆதரித்தவர்கள், இப்போது முற்றிலும் அவருக்கு எதிராக திரும்பி உள்ளீர்கள் என்றால் அதற்கு ஒரு சில காரணங்களையாவது நீங்கள் சொல்லியாக வேண்டும். ஆனால் உங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் ஸ்டாலினை ஆதரித்தது இல்லை என்பது போல இப்போது நீங்கள் மௌனம் காக்குறீர்கள். ஸ்டாலின் என்ற விஷயம் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் பாதிக்கின்ற விஷயம் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது காங்கிரஸ் ஸ்டாலின் விஷயத்தில் எல்லை மீறிய விமர்சனம் செய்து விட்டது என நமது கட்சியில் பல தோழர்கள் கருதுகிறார்கள். இப்படி ஒரு கருத்து எழுதுவது இயற்கையே. ஆனால் சில தோழர்கள் ஊசலாட்ட மனநிலையில் உள்ளார்கள். சூறாவளி அடிப்பதற்கு முன் மழை அடிக்கும். அதற்கு முன்பாகவே எறும்புகள் புற்றிலிருந்து வெளியேறும். எறும்புகள் மிகத் திறமையான வானிலை ஆய்வாளர்கள். சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருபதாவது காங்கிரசில் சூறாவளி அடிக்க தொடங்கும் முன்பாகவே நமது நாட்டில் உள்ள சில எறும்புகள் புற்றில் இருந்து வெளியேறத் தொடங்கிவிட்டன, நமது கட்சிக்குள் இருக்கும் இந்த எறும்புகள் கடுமையான சோதனைக் காலம் வரும்போது எல்லாம் ஊசலாட்டத்தில் ஆழ்ந்து சந்தர்ப்பவாத நிலை எடுக்கின்றன, ஸ்டாலின் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்றவுடன் உடனடியாக அடுத்த பக்கத்திற்கு குருசேவ் அணிகளுக்கு தாவினார்கள்.
குருச்சேவின் கொள்கைகளை நியாயமானவை சரியானவை என்று ஆரவாரம் செய்தார்கள். நாங்கள் நெடுங்காலமாகவே குருச்சேவ் ஆதரவாளர்கள் தான் என்றும் கூறிக் கொண்டார்கள், பின்னர் ஏகாதிபத்திய சக்திகள் தங்களது தாக்குதலை தொடுத்தார்கள், சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கமும் தனது பங்குக்கு விமர்சனங்களை முன் வைத்தது. உச்சகட்டமாக குருச்சேவே தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டி வந்தது. இந்த ஊசலாட்டக்காரர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் பாடுதான் திண்டாட்டம் ஆகிவிட்டது
எறும்புகள் மட்டுமல்ல. ஆமைகள், கடலாமைகள் பிற ஜந்துக்கள் எல்லாம் தனது மறைவிடத்திலிருந்து வெளியே வருகின்றன. கோமுல்காவின் பாட்டுக்கு ஆடுகின்றன. கோமுல்கா அதிக ஜனநாயகம் பற்றி பேசினால் இந்த ஜந்துகளும், ”ஆம் அதிக ஜனநாயகம்” என்று கூச்சலிடுகின்றன. இப்போது சூழ்நிலை மாறியுள்ளதால் இவை வாயை மூடி மௌனமாக இருக்கின்றன. ஆனால் அவை வாய் திறக்கும் நாளை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றன என்பதை மறக்க வேண்டாம்.
சூறாவளி வீசும் போது அதன் வேகத்தை தாங்க முடியாத அனைத்தும் தள்ளாடும். அது இயற்கை விதி. இவ்வாறு தள்ளாடிய ஊசலாடிய சிலர் ஒரு சில தள்ளாட்ட அனுபவங்களுக்குப் பிறகு தடுமாறாமல் இருக்க கற்றுக் கொள்வதும் உண்டு. ஆனால் ஒரு சிலரோ தள்ளாடுவதையே தனது குணமாக கொள்வதும் உண்டு. இவர்கள் நெற்ப்பயிரை போன்றவர்கள் சிறிய காற்று அடித்தாலும் அப்படியும் இப்படியும் தள்ளாடுவார்கள். சோளப் பயிர் சற்றே பலமானது. ஆனால் பெரிய மரங்கள் மட்டுமே சூறாவளிகளை தாங்கி நிற்கும் பலம் வாய்ந்தவை. சூறாவளி ஒவ்வொரு வருடமும் வருவது போல நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும், தத்துவார்த்த சூறாவளியும், அரசியல் சூறாவளியும் ஒவ்வொரு வருடமும் வந்து போகின்றன. இது சமூகத்தில் இயல்பாக நிகழ்கின்ற ஒன்றுதான். ஒரு அரசியல் கட்சியும் சமூகத்தை போன்றது தான். அரசியல் சமூகத்தின் அடிப்படையான கூறுகளாக அரசியல் கட்சிகளும் அரசியல் குழுக்களும் இருக்கின்றன. அரசியல் கட்சி என்பது ஒரு வர்க்க அமைப்பாகும்.
படிக்க:
♠ தோழர் லெனின் 154வது பிறந்ததினம் நிகழ்வுகள்!
♠ ஏப்ரல் 22 தோழர் லெனின் பிறந்தநாள்! மீள்பதிவு.
நமது சீன கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்க அரசியல் கட்சி, தொழிலாளி வர்க்கமும், அரை உழைப்பாளர்களும், ஏழை விவசாயிகளும் நமது கட்சியின் முக்கிய அம்சங்கள். நிலப் பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், முதலாளிகள், வசதி படைத்த நடுத்தர விவசாயிகள், நகர்ப்புற சிறு முதலாளிகள் குடும்பங்களில் இருந்தும் கூட நமது கட்சியில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பல நீண்ட வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட்ட அனுபவம் நமது உறுப்பினர்களுக்கு இருந்தாலும் இவர்களில் பலர் இன்னும் கூட மார்க்சிய தத்துவத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை. தத்துவார்த்த ரீதியாகவும் சிந்தனை ரீதியாகவும் இவர்கள் நெற்ப்பயிரைப் போன்றவர்கள். சிறிய காற்று அடித்தாலும் தள்ளாடி துவண்டு விடுவார்கள்.
ஹங்கேரியில் ’அதிக ஜனநாயகம்’ வீதிக்கு வந்தவுடன் அது கட்சியை அழித்தது. அரசைக் கவிழ்த்தது. இராணுவத்தையும் கலைத்தது. சீனாவில் இத்தகைய சீரழிவு சூழ்நிலை ஏற்பட அனுமதிக்க மாட்டோம். ஒரு சில பள்ளிக் குழந்தைகள் ஒன்று சேர்ந்து நமது கட்சியை அழிக்க முடியும். அரசை தவிர்க்க முடியும். இராணுவத்தை கலைக்க முடியும் என்றால் நாம் அறிவிலிகளாக தான் இருக்க முடியும். எனவே தோழர்களே ’அதிக ஜனநாயகம்’ என்றவுடன் மிரண்டு விடாதீர்கள். அப்படித்தான் ஒரு கலகம் நடக்கும் என்றால் நடக்கட்டும். சீழ் பிடித்துள்ள புண் உடைந்து தான் ஆறும். ஆறட்டும் ஏகாதிபத்தியங்களை கண்டும் அஞ்சாதவர்கள் நாம் அன்றும், இன்றும், என்றும்.. சியாங்கே ஷேக் என்ற சர்வாதிகாரியை வென்றவர்கள் நாம். அதிக ஜனநாயகத்தை கண்டா அஞ்சிடப் போகிறோம். ’அதிக ஜனநாயகம்’ என்ற பெயரில் சோசலிசத்தை அழிக்கவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை தூக்கி எறியவும் சதி வேலைகளில் யாராவது ஈடுபட்டால் அந்த சதிகாரர்களுக்கு எதிராக நாம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பிரகடனம் செய்வது உறுதி.
அறிவு ஜீவிவுகளைப் பற்றிய கேள்வி. அரசாங்கம் இவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துகிறார்களே தவிர இவர்களை மறு உருவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்பதை யாரும் புரிந்து கொள்ளவே இல்லை.
மாணவர்கள், அறிவு ஜீவிகளிடையே இப்போது தத்துவ வறட்சியும் அரசியல் பணியில் தேக்கமும் ஏற்பட்டுள்ளது. விரும்பத்தகாத போக்குகளும் தலைதூக்கி உள்ளன. அரசியலில் ஈடுபட்டது போதும். தாய் நாட்டுக்காக மனித குலத்துக்காக பாடுபட்டது போதும் என்று சிலர் நினைக்கவும் தலைப்பட்டு விட்டார்கள். ஒரு காலத்தில் எல்லோராலும் பேசப்பட்ட மார்க்சியம் இப்போது தனது வசீகரத்தை இழந்து விட்டதா? இந்த போக்குகளை ஆபத்தானவை. இவற்றை மேலும் வளர விடாமல் கிள்ளி எறிய வேண்டுமெனில் நமது தத்துவார்த்த அரசியல் பணிகளை மேலும் கூர்மைப்படுத்த வேண்டும், மாணவர்களும் அறிவு ஜீவிகளும் அரசியல் கல்வியை மேலும் கருத்தூன்றி பயில வேண்டும்.” என்கிறார் தோழர் மாசேதுங்.
இந்தியப் பொதுவுடமை இயக்கத்தில் வலது-இடது திரிபுவாத போக்குகளுக்கு எதிராக போராடி உருவாகிய நக்சல்பாரி இயக்கம் தோன்றி அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு மக்களின் இயக்கமாக மாறாததற்கும், கட்சி தன்னை பற்றி சுய பரிசோதனை செய்து கொண்டு முன்னேறுவதில் உள்ள குறைபாடுகளுக்கும், நெருக்கமான உறவு உள்ளது.
ஆண்டுதோறும் ஏற்படும் சூறாவளிகளைத் தாங்கி நிற்பதை போன்று தான் கட்சிக்குள் ஏற்படுகின்ற, ”அதிகாரத்துவம், புகழ் நாட்டம், பதவி உயர்வு குறித்த சிந்தனைகள், தனிப்பட்ட வாழ்க்கையில் தோன்றுகின்ற ஊசலாட்டப் போக்குகள், அரசு பயங்கரவாதத்தின் மீதான அச்சங்கள், பாசிச ஒடுக்குமுறை குறித்து முன்கூட்டியே உணருகின்ற கூர்த்த சிந்தனை” போன்றவை உருவாக்குகின்ற அனைத்து விதமான சூறாவளிகளையும் எதிர்த்து முறியடிப்பதற்கு போல்சவிக் உறுதி தேவைப்படுகிறது.
பல்வேறு நெருக்கடியான தருணங்களிலும் சமரசமின்றி பாட்டாளி வர்க்கத்தை வழிநடத்திச் செல்வதற்கு, பல்வேறு இன்னல்களை சொந்த வாழ்க்கையில் மேற்கொண்டு அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இறுதிவரை நேர்மையாக போராடிய மாமேதை லெனின் வழியில் பயணிப்போம்.
”உறுதியாக இரு! தியாகத்திற்கு அஞ்சாதே! எல்லா இன்னல்களையும் கடந்து வெற்றி பெறு!” என்கின்ற தோழர் மாசேதுங் வழிகாட்டலுடன் முன்னேறி செல்வோம்.
- கணேசன்.
உறுதிமிக்க எஃக் குறுத்திக் கொண்ட போல்ஸ்விக் கட்சியின் தலைமையில் பாட்டாளி வர்க்க சர்வதிகாரத்தை நிறுவ புதிய ஜன நாயக புரட்சி நோக்கி செல்லுவோம்
ஏப்ரல் 22 லெனின் 154 வந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள்