தோழர்களே! ஆசான் லெனின் மறைவுக்குப் பின்னர் சோவியத் ரஷ்யாவை கட்டிக் காப்பாற்றிய பெருமை – ஜெர்மெனியின் பாசிஸ்ட் ஹிட்லரை வீழ்த்திய மாபெரும் கடமையைச் செய்த மகத்தான ஆசான் ஸ்டாலின் என்பது உலகில் உள்ள அனைத்து முற்போக்காளர்களுக்கும் – மக்களுக்கும் தெரிந்த விடயமே ஆகும்!
ஆனாலும் தோழர் ஸ்டாலின் 1954 ஆம் ஆண்டு மறைவுற்ற பிறகு அவருடைய பதவியை இறுகப்பற்றிக் கொள்ளவும், சோவியத்து சோசலிசப் பூமியை மீண்டும் முதலாளித்துவ சீரழிவுக் கட்டமைப்பிற்கு மீட்டெடுக்கவும்- முனைந்து நின்ற துரோகி குருச்சேவ், தனக்கான ஒரு அணிச்சேர்க்கையை ஏற்படுத்திக் கொண்டு, கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையையும், ஆட்சி அதிகாரத்தையும் அபகரித்துக் கொண்டான்! லெனின் தலைமையில் நடந்த அந்த மகத்தான நவம்பர்-7 சோசலிசப் புரட்சியை தலைகீழாகப் புரட்டிப் போட்டு சோவியத் மண்ணுக்கு மட்டுமல்ல; உலக நாடுகளிலுள்ள அனைத்து கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கும் மாபெரும் மன்னிக்கவே முடியாதத் துரோகத்தை இழைத்தான் இந்த இழி பிறவி, கம்யூனிசத் துரோகி குருச்சேவ்! அப்படிப்பட்ட தருணத்தில் ஆசான் ஸ்டாலின் மீது அடுக்கடுக்கான பொய்களையும், அவதூறுகளையும் சோவியத் மண்ணில் மட்டுமல்ல; உலக நாடுகள் முழுமைக்கும் பரவச் செய்தான்! அவனுடைய பொய்கள் அனைத்தையும் வெட்டமளிச்சமாக்கி “ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்”– என்று தோழர் குரோவர் ஃபர் எழுதி, தோழர் செ. நடேசன் என்பவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட, ஒரு அரிய நூலை திருப்பூர் ‘பொன்னுலகம் பதிப்பகம்’ முன்பே வெளியிட்டுள்ளது. அதனுடைய ஒரு துளியை தோழர்களும் மக்களும் புரிந்து கொள்வதற்காக இந்தப் பதிவு வெளியிடப்படுகிறது” – முழு உண்மைகளையும் அறிந்து கொள்ள மேற்கண்ட நூலை தோழர்கள் படித்துத் தெரிந்து கொள்ளத் தவறாதீர்கள்!
எழில்மாறன்.
000
தோழர் நதேழ்தாவிடம் ஸ்டாலின் நடந்து கொண்டது குறித்து வாகோனோ கோவ் மற்றும் புக்காரின் கூற்றுப்படி:
டிசம்பர் 24 காலையில் ஸ்டாலின், காமனேவ் மற்றும் புக்காரின் ஆகியோர் நிலவரத்தைப் பற்றி விவாதித்தனர். அவர்கள் தங்கள் தலைவரை
(லெனின்) அமைதியாக இருக்கும்படி கட்டாயப்படுத்த அவர்களுக்கு உரிமை இல்லை என்றும்; ஆனால், லெனினுக்கு கவனிப்பும், மிகவும் அதிக அளவுக்கான அமைதியும் அவசியம் என்றும் நினைத்தனர். இதன்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
1) விளாதிமிர் இலியீச்சுக்குத் தினந்தோறும் 5 முதல் 10 நிமிடங்கள் வரை விரும்பிய வற்றைச் சொல்லும் உரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் இது கடிதத் தொடர்புகள் வடிவத்தில் அல்ல. எந்த குறிப்புக்களும் விளாதிமிர் பதிலை எதிர்பார்க்கக் கூடாது. சந்திப்புகள் எதுவும் அனுமதிக்கப்பட மாட்டாது.
2) நண்பர்களோ அல்லது குடும்ப உறுப்பினர்ளோ அரசியல் வாழ்க்கை பற்றிய எந்த ஒன்றையும் லெனினுக்குத் தகவலாக அறிவிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவரது பரிசீலனையை முன் வைப்பதோ, அல்லது உணர்ச்சியைக் கிளறி விடும் பொருட்களை அளிப்பதோ கூடாது.
ராபர்ட் சர்வீஸ் கூற்றுப்படி, லெனின் உடலில் தீவிரமான நிகழ்வுகள் (மூளையைத் தாக்கிச் செயலிழக்க வைப்பது) கீழ்க்கண்ட தேதிகளில் நடைபெற்றன.
- 1922 மே 25- மிகப்பெரிய மூளை தாக்குதல்.
- 1922 டிசம்பர் 22- 23 – லெனின் தனது உடலின் வலது பக்க செயல்பாட்டை கொஞ்சம் இழந்தார்.
- 1923 மார்ச் 6 -7– இரவில் லெனின் தனது வலது பக்க செயல்பாட்டை முற்றிலுமாக இழந்தார்.
டிசம்பர் 18 அன்று அரசியல் தலைமை குழு லெனின் உடல்நலத்தைப் பேணவும் அவருடன் எவர் ஒருவரும் அரசியல் பற்றிய விவாதத்தை மேற்கொள்வதைத் தடுக்கவும் ஸ்டாலினை பொறுப்பாக்கியது. டிசம்பர் 22 அன்று குரூப்ஸ்கயா இந்த விதியை மீறினார்; அதனால் ஸ்டாலினால் கண்டிக்கப்பட்டார். அதே இரவில் லெனின் ஆபத்தான மூளைத் தாக்குதலால் துன்பப்பட்டார்.
1923 மார்ச் 5 குரூப்ஸ்கயா டிசம்பரில் ஸ்டாலின் தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என்று லெனினி டம் கூறினார். கோபம் கொண்ட லெனின் புகழ்பெற்ற அந்தக்குறிப்பை ஸ்டாலினுக்கு எழுதினார்.
என்ன நடந்தது என்று குரூப்ஸ் கயாவின் செயலாளர் வி. டிரிட்ஸோ இந்த நிகழ்ச்சி பற்றி எழுதியது 1989-இல் வெளியானது.
“இப்போது குரூப் ஸ்கயா வின் பெயரும், அவர் ஸ்டாலினோடு கொண்டிருந்த உறவு பற்றியும் மிகவும் அடிக்கடி சில வெளியீடுகளில் குறிப்பிடும் போது, அந்த விஷயம் பற்றி எனக்கு உறுதியாக தெரிந்தவற்றைக் கூற விரும்புகிறேன்.
குரூப்ஸ்கயாவோடு ஸ்டாலினின் முரட்டுத்தனமான சம்பாசனைகள் நடைபெற்ற இரண்டு மாதங்களுக்குப் பின்பு ஏன் வி. ஐ. லெனின் ஒரு கடிதத்தை ஸ்டாலினுக்கு எழுதி, அதில் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினார்? அது சாத்தியம்தான். அது எவ்வாறு உண்மையில் நடந்தது என்பதை அறிந்த ஒரே நபர் நான் மட்டுமே. ஏனென்றால் நதேழ்தா அடிக்கடி அதைப்பற்றி என்னிடம் கூறியுள்ளார்.
இது 1923 மார்ச் மாதத்தின் துவக்கத்திலேயே நடைபெற்றது. நதேழ்தாவும், விளாத்திமிர் இலியீச்சும் எதையோ பற்றி பேசிக் கொண்டிருந்தபோது தொலைபேசி ஒலித்தது. நதேழ்தா தொலை பேசியில் பேசச் சென்றார். (லெனின் அறையில் தொலைபேசி எப்போதும் நடந்து செல்லும் இடைவெளியில் இருக்கும்) அவர் திரும்பியபோது அவரிடம் லெனின் கேட்டார், ‘யார் அழைத்தார்கள்?’
ஸ்டாலின் தான் என்றார் நதேழ்தா. கூடவே ‘நானும் அவரும் சமாதானமாகி விட்டோம்’ என்றும் கூறினார்.
‘நீ என்ன கூறுகிறாய்?’ என லெனின் வினவினார்.
நதேழ்தா ‘ஸ்டாலின் அழைத்தது அவருடன் முரட்டுத்தனமாக பேசியது அவரைக் கட்டுப்பாட்டுக் குழுமுன் நிறுத்தப் போவதாக அச்சுறுத்தியது என எல்லாவற்றையும் சொல்ல வேண்டியதாய் விட்டது. அதை கவனத்தில் கொள்ள வேண்டாம் என்றும் எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடிந்துவிட்டன என்றும் நதேழ்தா லெனினிடம் கேட்டுக் கொண்டார்.
ஆனால், லெனின் பிடிவாதமாக இருந்தார். அவர் நதேழ்தாவிடம், ஸ்டாலின் மரியாதைக் குறைவாக நடந்து கொண்ட போக்கால் மிகவும் வருத்தம் அடைந்தார். 1923 மார்ச் 5 அன்று ஸ்டாலினுக்கு ஒரு கடிதத்தை எழுதுமாறு கூறி அதன் நகல்களை ஜியானோவீவ், காமனேவுக்கும் அனுப்பச் செய்தார். அதில் ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வற்புறுத்தினார். ஆனாலும் ஸ்டாலினின் நடத்தையை அவர் ஒருபோதும் மறக்கவே இல்லை. அதே நேரத்தில் ஸ்டாலினும் நதேழ்தாவை மன்னிக்கவும் இல்லை. இது ஸ்டாலின் குரூப் ஸ்கயா ஆகியோருக்
கிடையிலான உறவில் சிறு சிக்கலை ஏற்படுத்தியது.
ஆனால், அடுத்த நாள் லெனின் மேலும் ஒரு கடுமையான மூளைக் தாக்குதலுக்கு உள்ளானார்.
குரூப்ஸ்கயா அரசியல் விஷயங்களை அவருடன் விவாதித்த ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னும் லெனினுக்கு மூளைத் தாக்குதல் ஏற்பட்டது. கட்சி உறுப்பினர் என்ற முறையில் அவர் (குரூப்ஸ்க யா) அதை செய்திருக்கக் கூடாது. இது ஏதோ தற்செயலாக ஒரு நேரத்தில் நடந்த நிகழ்வு அல்ல. ஏனெனில் லெனின் டாக்டர்கள் அவர் மன அமைதி இழப்பதற்கு வாய்ப்புள்ள எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் அவரிடம் தெரிவிக்கக் கூடாது என தெளிவாக எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். ஆகையால் லெனினின் கடைசி இரு மூளை தாக்குதல்களும் குரூப்ஸ்கயாவின் செயல்பாடு களால் தான் நிகழ்ந்தன. என்பதற்கான சாத்தியங்கள் நிறையவே இருந்தன.
லெனின் நீண்டகால செயலாளர்களில் ஒருவர் என்ற முறையில் லிடியா ஃபோட்டியேவா சொன்னார்:
“நதேழ்தா தான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு அவர் ஒருபோதும் நடந்து கொள்ளவே இல்லை. அவர் லெனினிடம் சொல்லக்கூடா தனவற்றைச் சொல்லி இருக்கக்கூடும். அவர் எல்லாவற்றையும் லெனினோடு பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் செய்திருக்கவே கூடாத சூழ்நிலையிலும்கூட– எடுத்துக் காட்டாக, தொலைபேசியில் தன்னிடம் முரட்டுத்தனமாக ஸ்டாலின் நடந்து கொண்டார் என்று அவர் ஏன் லெனினிடம் சொன்னார்?”
எதிர்பாராதவிதமாக ஸ்டாலின் மனைவி 1932 ல் மரணம் உற்றார். கீழ்க்கண்டவாறு ஒரு ஆறுதல் கடிதத்தை குரூப்ஸ்கயா ஸ்டாலினுக்கு எழுதினார். அது 1932 நவம்பர் 16 ‘பிராவ்தா’ இதழில் வெளியிடப்பட்டது.
அன்புள்ள இயோசிஃப் விசாரியனோவிச், இந்த நாட்களில் ஒவ்வொரு விஷயமும் எப்படியோ என்னை உங்களைப் பற்றியே சிந்திக்கச் செய்கிறது. உங்கள் கைகளை பற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் விருப்பமும் உருவாகிறது. உங்களுக்கு நெருக்கமான ஒருவரை இழப்பது மிகவும் கடினமானது. இலியீச்சின் அலுவலகத்தில் அவர் நோய் வாய்ப்பட்டிருந்தபோது உங்களோடு பேசிய அந்த பேச்சுக்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். அவை இந்த நேரத்தில் எனக்கு தைரியத்தை அளித்தன. நான் உங்கள் கரங்களை மீண்டும் அழுத்துகிறேன்.
-என்.குரூப்ஸ்கயா.
இந்தக் கடிதம் 1922 டிசம்பர் விவாதங்களுக்குப் பிறகு லெனினின் மனைவியிடம் இருந்து ஸ்டாலின் உறவை முறித்துக் கொள்ளவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை காட்டுகிறது.
லெனின் வீட்டில் அனைவராலும் ஸ்டாலின் மிக உயர்வாக மதிக்கப்பட்டார். எழுத்தாளர் அலெக்ஸாண்டர்பெக், லிடியா ஃபோடியேவாவின் கடந்த கால மகிழ்ச்சி கரமான அனுபவங்களை எழுதினார். அதில் அவர் (லிடியா) சொன்னார்:
ஸ்டாலின் எத்தகைய ஒரு மகத்தான தனிச்சிறப்பைப் பெற்றிருந்தார் என்கின்ற அந்த நேரங்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. ஸ்டாலின் மகத்தானவர்….. மரியா இல்லிச்னா உலியனோவா (லெனினின் சகோதரி) விளாதிமிர் இலீயீச் வாழ்ந்த நேரத்தில் என்னிடம் கூறினார்: ‘லெனினுக்குப் பிறகு கட்சியில் ஸ்டாலின் தான் மிகப்பெரிய அறிவாளி. ஸ்டாலின் தான் எங்களுக்கானவற்றைச் செய்யும் உரிமை பெற்றவர். நாங்கள் ஸ்டாலினை நேசிக்கிறோம். அவர் ஒரு மகத்தான மனிதராக விளங்கினார். இருந்த போதிலும் ஸ்டாலின் அடிக்கடி சொன்னார்: ‘நான் லெனினுடைய ஒரு மாணவன் மட்டுமே’ ( In Bec.op.cit)
என்ன நடந்தது என்பதைப் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல், குருச்சேவ் ஸ்டாலினை மோசமானவராகக் காட்ட வெறுமனே முயற்சிக்கிறார்.
லெனின் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தை, அந்த விஷயத்துக்குப் பொருந்தாத வகையில் குருச்சேவ் எடுத்துக் கொண்டார் என்பது தெளிவாகிறது. அவ்வாறு செய்கையில் அவர் இந்த சூழ்நிலையை மிகத் தீவிரமாக சிதைத்து விட்டார். லெனினின் உடல்நலத்தைப் பேணவும், மற்றவர்களின் தொந்தரவுகளிலிருந்து லெனினைப் பாதுகாத்துப் பராமரிக்கவும் மத்திய குழு ஸ்டாலினுக்கு அறிவுறுத்தியது என்ற உண்மையை விட்டுவிட்டார். இந்தத் தடை லெனினின் பாதுகாப்புக் கருதி ‘நண்பர்களுக்கும்’ மற்றும் ‘குடும்ப உறுப்பினர்களுக்கும்’ பொருந்தும் என வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
லெனினின் செயலாளர்களும் கூட மத்தியக் குழுவின் வழிகாட்டுதலை மீற விரும்ப வில்லை. ‘குடும்ப உறுப்பினர்கள்’ என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் குறிப்பாக லெனினின் சகோதரியை யும், அவரது மனைவி குரூப்ஸ் கயாவையும் உள்ளடக்குவதாகும். இதிலிருந்து தனக்கு மட்டும் விதிவிலக்கைத் தானாகவே எடுத்துக் கொண்டு மீறியதற்காக குரூப்ஸ்கயாவை ஸ்டாலின் குறை கூறினார்.
குருச்சேவ், 1923 மார்ச் 7 அன்று லெனினின் குறிப்புக்கு, ஸ்டாலின் அளித்த பதிலையோ, பின்னர் லெனின் விஷம் வேண்டுமென்று ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டதையோ குறிப்பிடவே இல்லை. இந்த உண்மையை குறிப்பிடாமல் விட்டுவிடுவதன் மூலம் எந்தச் சூழலில் 1923 மார்ச் 5 அன்று லெனின் குறிப்பு ஸ்டாலினுக்கு எழுதப்பட்டது என்பதை குருச்சேவ் சீர்குலைத்தார். ஆழ்ந்து சிந்தித்தே அவர் ஸ்டாலினுடனான லெனின் உறவுகளை மேலும் சீர்குலைத்தார்.
குருச்சேவ் வேண்டுமென்றே தவிர்த்து விட்ட லெனினின் சகோதரி மரியா இல்லினிசானா, லெனினின் செயலாளர் வோலோடிச்சேவோ மற்றும் ஃபோட்டீவா ஆகியோரின் குறிப்புகள் இன்றும் உயிருடன் உள்ளன. ஆனால் அவற்றின் உண்மைத் தன்மை கண்டறியப்படவில்லை. மத்தியக் குழுவின் தடையை மீறி குரூப்ஸ்கயா மேற்கொண்ட நடவடிக்கைகளே லெனினை நிலைகுலைய வைத்தது. லெனினுக்கு ஏற்பட்ட இரண்டு மூளைத் தாக்குதல்களுக்குக் காரணமாயின என்ற ஆதாரங்களையும் குருச்சேவ் வேண்டுமென்றே தவிர்த்தார். ஸ்டாலினோடு எந்த முடிவையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இரண்டு வாரங்களுக்கு பிறகு லெனின் ஸ்டாலின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து அவரிடம் விஷம் வேண்டும் என கோரிக்கை வைத்தார் என்ற உண்மையையும் குருச்சேவ்
திட்டமிட்டுத் தவிர்த்தார். கடைசியில் குரூப்ஸ்கயா ஸ்டாலினோடு இணக்கமானதையும் குருச்சேவ் மறைத்துவிட்டார்.
இந்த விஷயத்தில் எல்லா வகையிலும் ஸ்டாலின் மீது மோசமான இருளைப் படர விட குருச்சேவ் மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். உண்மையாக நடந்தது என்ன? என்பதிலோ, அந்த நிகழ்ச்சிகள் எந்த சூழ்நிலையில் நடைபெற்றன? என்பதைப் புரிந்து கொள்வதிலோ குருச்சேவ் ஆர்வம் காட்டவே இல்லை.
-குரோவர் ஃபர்.
(“ஸ்டாலின் பற்றிய – குருச்சேவின் பொய்கள்” – என்ற நூலிலிருந்து)