
மணிப்பூரில் பெரும்பான்மை இனத்தவரான மைய்ட்ரீஸ்கள் (மெய்தேய்) நடத்தும் போராட்டத்தில் நான்கு எம்எல்ஏக்களின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பிரேன் சிங் வீட்டையும் போராட்டக்காரர்கள் தாக்க முயற்சித்துள்ளனர். மாநிலத்தில் பிரச்சனையை ‘முடிவுக்கு‘ கொண்டு வர அரசுக்கு 24 மணி நேர கெடுவையும் விதித்துள்ளனர். என்னதான் நடக்கிறது?
சில நாட்களுக்கு முன்னர் குக்கி இன பள்ளி ஆசிரியை சோசங்கிம் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலையானார். AT எனப்படும் அரம்பை தெங்கோல் அமைப்பின் மெய்தேய் இன வெறியர்கள் செய்த இப்படுகொலைக்கு நீதி கேட்டு வந்த இளைஞர்கள் 10 பேரை சிஆர்பிஎப் படை சுட்டுக் கொன்றது. இதனால் ஆத்திரமடைந்த போராளிகள் மெய்தேய் கிராமத்தில் புகுந்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். ஆற்றில் இவர்களின் சடலங்கள் மிதப்பதை கண்டு மீண்டும் பள்ளத்தாக்கில், இம்பாலில் கலவரம் வெடித்துள்ளது.
கடந்த 14ஆம் தேதியிலிருந்து மணிப்பூரின் ஜிரிபாம் உள்ளிட்ட பதட்டம் நிறைந்த பகுதிகளில் மீண்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ஒன்றிய அரசு ஏவியுள்ளது. மாநில அரசால் ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, இணையம் உள்ளிட்டு தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு திணித்துள்ள சட்டத்தை நீக்க வேண்டுமென மணிப்பூர் மாநில அரசு கடிதமும் எழுதி உள்ளது.
ஏன் மணிப்பூர் பற்றி எரிகிறது?
கோழி முதலில் வந்ததா? அல்லது, முட்டை முதலில் வந்ததா? என முடிவில்லாமல் விவாதிப்பதை போன்று, மணிப்பூர் கலவரத்திற்கு யார் காரணம் என்பதை மாற்றி மாற்றி பேசுகிறார்கள்.
பொதுவாக சொல்வதென்றால் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையினரான மெய்தேய் இன மக்கள் சிறுபான்மையினரான குக்கிகளின் உரிமைகளை ‘சட்டப்படியே‘ பறிக்க விரும்புகிறார்கள். அதற்காக தம்மையும் பழங்குடியினர் என அங்கீகரிக்க அரசுக்கு அழுத்தம் தந்து போராடி வருகின்றனர். இந்த கேடான முயற்சிக்கு ஆதரவு தீர்ப்பை எழுதியதன் மூலம் நீதிமன்றமும் பெரும்பான்மை இனவெறிக்கு துணை போனது.
படிக்க: மணிப்பூரில் தொடரும் பாலியல் வல்லுறவு படுகொலை! மோடி எங்கே?
தற்போது நவம்பர் மாதத்தில் நடந்து வரும் கலவரத்திற்கு எது காரணம் என்று குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் AT (அரம்பை தெங்கோல்) நடத்திய படுகொலைதான் முதலில் நிற்கிறது . குக்கி இனப் பெண்ணை காலில் சுட்டு, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி, வீடுகளையும் கொளுத்தி வெறியாட்டம் போட்ட அரம்பை தெங்கோல் தீவிரவாத அமைப்புதான் இப்போதைய கலவரத்தின் முதன்மை குற்றவாளி.
ஆர் எஸ் எஸ் இன் துணை அமைப்பாக ஆயுதம் ஏந்திய வெறியர்களைக் கொண்ட அரம்பை தெங்கோலால் கொல்லப்பட்ட ஆசிரியைக்கு நீதி கேட்டு போராட வந்த குக்கி இளைஞர்கள் 10 பேரை சுட்டுத்தள்ளிய CRPF ஆயுதப்படையும், அரசும்தான் அனைத்துக்குமான குற்றவாளி. யார் தரும் ஆதரவில் இப்படி வெறியாட்டம் போட மணிப்பூர் அரசால் முடிகிறது ? அவர்கள் தானே அனைத்துக்குமான காரணகர்த்தாவாக இருக்க முடியும்? அதையும் பார்ப்போம்.
இன வெறி பிடித்தவர்களின் கொடிய ஆட்சியை கண்டு மனம் பூரித்து, தனது முழு ஆதரவையும் தந்து, குக்கி பழங்குடியினர் மீது, கிறிஸ்தவ மதத்தினரின் வழிபாட்டுத்தலமான சர்ச்சுகளின் மீது நடக்கும் தாக்குதல்களை ஊக்குவித்து வரும் பாசிச மோடி தலைமையிலான ஒன்றிய அரசுதான் அனைத்துக்கும் அடிப்படையான குற்றவாளி.
ஆயுதப் படையால் கொல்லப்பட்ட 10 இளைஞர்களின் உடலை அடக்கம் செய்யாமல், பிரேத பரிசோதனை அறிக்கையை முதலில் தாருங்கள் என பலியானவர்களின் உடல்களை வைத்துக்கொண்டு போராடி வருகின்றனர் குக்கி பழங்குடியின மக்கள். இவர்களை நசுக்கத்தான் 24 மணி நேர கெடுவை விதித்துள்ளனர், மெய்தேய் இன வெறியர்கள்.
அரசு பயங்கரவாதத்தின், மெய்தேய் இனவெறி தாக்குதல்களின் எதிர் வினையாகத்தான் குக்கி உள்ளிட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களின் தாக்குதல்கள் அமைந்துள்ளன. பாலஸ்தீனியர்களின் இடத்தில் குக்கிக்களும், இஸ்ரேலின் இடத்தில் மெய்தேய்களும் உள்ளனர் . இஸ்ரேலுக்கு டிரோன்களை சப்ளை செய்த அதானியின் இடத்தில், ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ஏவியும், அசாம் பைபிள்ஸ் CRPF உள்ளிட்ட படைப்பிரிவுகளை அனுப்பி இன வெறியர்களுக்கு துணை நிற்கும் மோடி அரசும் உள்ளது.
சிறுபான்மை இன மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் போராளி குழுக்கள் மெய்தேய் இன மக்களின் மீது, அரம்பை தெங்கோல் உள்ளிட்ட இனவெறி அமைப்புகளின் மீது எதிர்தாக்குதலை நடத்தி வருகின்றன. இருதரப்பிலும் உழைக்கும் மக்கள் பலியாவதை நாம் ஆதரிக்கவோ, கண்டும் காணாமலும் கடந்து செல்லவோ முடியாது.
அந்த வகையில் தற்போது கொல்லப்பட்டுள்ள பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்தேய்களான 6 பேர் உள்ளிட்டு இருதரப்பிலுமாக சுமார் 250 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரம் மக்கள் அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மெய்தேய்களுக்கு கெடு விதிக்க தகுதி உள்ளதா?
“ ஓடறான் புடி” என்று கத்திக்கொண்டு ஓடும் திருடனை ஞாபகப்படுத்துகிறது மணிப்பூர். இம்பாலில் கலவரம் நடத்தும் சங்கிகள், தமது இனத்தைச் சேர்ந்த பைரேன் சிங்கின் தலைமையிலான அரசுக்கு கலவரத்தை நிறுத்த 24 மணி நேர கெடுவை விதித்துள்ளனர். குக்கிகளை படுகொலை செய்த அரம்பை தெங்கோல் உள்ளிட்ட இன வெறி அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்க கோரவில்லை. வேறு யாரின் மீது நடவடிக்கை எடுப்பது? குக்கி ‘தீவிரவாதிகளின்‘ மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்.
மலை மாவட்டமான ஜிரிபாமில் ஏவப்பட்ட தமது தாக்குதலின் எதிர்வினையாகத்தான், அரசுப் படைகளின் துணையோடு நடக்கும் தாக்குதலின் எதிர்வினையாகத்தான் பள்ளத்தாக்கின் மீது எதிர் தாக்குதல் நடக்கிறது. மெய்தேய்களின் கிராமத்திற்குள் நுழைந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரை இழுத்துச் சென்று கொன்று விட்டனர். இப்படி எதிர்வினையாக திருப்பித் தாக்கி கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக மட்டுமே 24 மணி நேர கெடுவை விதித்துள்ளனர். எது முதலில்? முட்டையா- கோழியா?
பம்மும் பாஜக !
வளைகுடா நாட்டில் நடக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் முதல், ரஷ்ய – உக்ரைன் போர் வரை அனைத்தையும் தலையிட்டு நிறுத்தக்கூடிய திறமை வாய்ந்தவர் என்று 56’’ இன்ச் மோடி தனது ஊடக அடியாட்படைகளாக செயல்படும் ஊடகங்களால் முன் நிறுத்தப்படுகிறார். அப்படி ‘பில்டப்’ செய்யும் ஊடகங்கள் எதுவும் “பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் பக்கம் எட்டியே பார்க்கவில்லை?” என மறந்தும் கேட்பதில்லை.
படிக்க: மணிப்பூர் கலவரம்: நெருப்பை அணையாமல் பாதுகாக்கிறது பாஜக!
பாஜக-வின் தேசிய தலைவர் மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட முடியாதபடி மணிப்பூரின் நிலைமை நிர்பந்திக்கிறது . ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு விரைந்துள்ளார். அதிகாரிகளை கூட்டி ஆலோசனையும் செய்கிறார்.
ஒன்றிய அமைச்சரை திடீரென கடமை உணர்ச்சி உந்தி தள்ளி உள்ளதா என யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை. உள்துறை அமைச்சரின் டெல்லிக்கு பயணம் என்பது குடிமக்கள் மீது கொண்டுள்ள அக்கறையினால் அல்ல; மணிப்பூரில் தமது கூட்டணி அரசு கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தால் தான் நடந்துள்ளது .
மணிப்பூரில் நடந்து வரும் பாஜக கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றிருந்த தேசிய மக்கள் கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. அக்கட்சியின் 7 எம்எல்ஏக்களின் ஆதரவை பாஜக கூட்டணி அரசு இழந்துள்ளது. இதனால் பாஜகவின் பைரேன் சிங் ஆட்சியில் நீடிக்க தேவையான பெரும்பான்மையை இழக்காத போதும், இது ஒரு எச்சரிக்கை மணியாகவே பாசிஸ்ட்டுகளுக்குப் படுகிறது.
எரியும் கலவரத்தீயில் பிடுங்கியது வரை ஆதாயம் என கணக்குப் போட்டு விலகத் தொடங்குகின்றன கூட்டணி கட்சிகள். பாஜக எம்எல்ஏக்களே முதல்வருக்கு எதிராக கலகக் கொடியை உயர்த்தி வருகின்றனர்.
குதிரை பேரத்தில் இறங்கி தேர்தலில் வென்றவர்களை விலைக்கு வாங்கியும், ED, IT ரெய்டுகள் மூலம் அச்சுறுத்தி கட்சிகளை பிளந்தும் ஆதாயம் அடைந்து வரும் பாஜக, மணிப்பூரின் தற்போதைய நிலைமையை கவலைக்குரியதாகவே பார்க்கும். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள கலவரத்தீயை மேலும் விசிறிவிடத்தான் செய்யும் .
தீர்வு எது?
அவ்வப்போது வரும் பிரச்சினைகளின் பின்னால் நின்று தீர்வை தேடக் கூடாது; மூல காரணம் எது என்பதை கண்டறிந்து அதை தீர்ப்பதுதான் அறிவியல் பூர்வமானது. பெரும்பான்மையினரான மெய்தேய்களிடம் தூண்டி வளர்க்கப்பட்டு வரும், குக்கி உள்ளிட்ட சிறுபான்மையினரின் மீதான வெறுப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் . ஏ டி எனப்படும் ஆரம்பை தெங்கோலை முழுமையாக தனிமைப்படுத்தி முடக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் தமது ஆட்சியை தக்க வைக்கவும், நீட்டிக்கவும், குடிமக்களை சாதி இன மத அடிப்படையில் பிளவு படுத்தி மோத விட்டு கலவரத்தீயில் குளிர் காயும் பாஜக – வை ஒன்றிய அரசின் தலைமைப் பொறுப்பில் இருந்து விரட்டியடித்தாக வேண்டும்.
ஒருத்தரப்பிற்கு ஆதரவாக செயல்படும் அசாம் ரைபிள்ஸ், சிஆர்பிஎப் உள்ளிட்ட ஆயுதப் படைகள் விலக்கப்பட வேண்டும்.
இதற்கு பாசிச பாஜகவை வீழ்த்த விரும்பும் அனைத்து கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங்களும் ஒரே அணியாக திரள வேண்டும்.
- இளமாறன்