இந்தியாவின் பொருளாதாரத்தையும், அரசாங்கத்தின் கையிருப்பு தொகையையும் நிர்வகித்து வருகின்ற ரிசர்வ் வங்கி 2014 ஆம் ஆண்டு பாசிச மோடி ஆட்சிக்கு வந்தது முதல் படிப்படியாக ஆர்எஸ்எஸ் பிடியில் சிக்கிக்கொண்டது.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி வரிச்சலுகையையும், வராக் கடன் தள்ளுபடியையும் வாரி வழங்கிய பொதுத்துறை வங்கிகளை தட்டிக் கொடுத்து பாதுகாத்து வரும் ரிசர்வ் வங்கி, தனது கையிருப்பு தொகையையும் அடியோடு வழித்து இந்திய ஒன்றிய பாஜக அரசின் காலடியில் கொட்டி வருகிறது.
குறிப்பாக, 2019 பாராளுமன்றத் தேர்தலின் போது 1.76 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி வாரிக் கொடுத்தது அதேபோல தற்போதைய 2024 பாராளுமன்ற தேர்தல் காலத்தில் 2.11 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கி வாரி வழங்கியுள்ளது சீரியசாக கவனிக்கத்தக்கதாகும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கனிக்கா பஸ்ரிச்சா அண்மையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ரிசர்வ் வங்கி நிதி 2023-24 ஆம் ஆண்டிற்கு ₹1 லட்சம் கோடி அரசுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். ரிசர்வ் வங்கி டிவிடெண்ட் கணக்கீட்டில் பல காரணிகள் இருந்தாலும், வலுவான டிவிடெண்ட் தொகை வழங்குவதை மீண்டும் காணும் வாய்ப்பு உள்ளது” என தாங்கள் நம்புவதாகத் தெரிவித்தார்.
அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. ரிசர்வ் வங்கி ஒன்றிய அரசுக்கு நடப்பு நிதியாண்டுக்கான டிவிடெண்டாக இதுவரை இல்லாத அளவாக ரூ.2.11 லட்சம் கோடியை அள்ளிக் கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவின் 608-வது கூட்டம், அதன் கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் மும்பையில் நடந்தது. அப்போது ரிசர்வ் வங்கியின் உபரி வருவாயை ஒன்றிய அரசுக்கு டிவிடென்டாக வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், 2023-24 நிதியாண்டுக்காக ஒன்றிய அரசுக்கு ரூ.2,10,874 கோடி வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டு, இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.
ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கி வந்த டிவிடென்டில் இதுவே உச்சபட்ச தொகையாக உள்ளது. ஒன்றிய அரசின் நிதிப்பற்றாக்குறை இலக்கான 5.1 சதவீதத்தை எட்டுவதற்கு ரிசர்வ் வங்கி வழங்க உள்ள மேற்கண்ட டிவிடென்ட் தொகை உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு உபரி நிதி ரூ.52,637 கோடி உட்பட ரூ.1,76,051 கோடியை ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியிருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் இருப்பு நிதி என்றால் என்னவென்று பார்க்கலாம். அதாவது நமது நாட்டில், தங்கம், அன்னிய நாட்டு பணம் (டாலர்), அரசு பத்திரங்கள் ஆகிய வடிவத்தில் ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் கையிருப்புதான் ரிசர்வ் வங்கியின் இருப்பு நிதி (Reserve) என்று அழைக்கப்படுகிறது. இதன் மதிப்பு தற்போது சுமார் 6,42,631 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்த மதிப்பு நிலையானதாக இருக்காது. நாட்டுற்குள் வரும் அன்னிய முதலீடுகள், தங்கம், வெளிநாட்டு நாணய விற்பனை வாங்கல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பு மாறுபடும்.
இந்த இருப்பு தொகையிலிருந்து ரிசர்வ் வங்கி ஒவ்வோர் ஆண்டும் ஒன்றிய அரசுக்கு டிவிடென்ட் தொகை வழங்குவது வழக்கம் தான். 2011-0.15 லட்சம் கோடியாக இருந்த டிவிடெண்ட் தொகையானது, 2012-0.16 லட்ச்ம் கோடியாகவும், 2013- 0.33 லட்சம் கோடியாகவும், 2014- 0.53 லட்சம் கோடியாகவும், 2015- 0.66 லட்சம் கோடியாகவும், 2016- 0.66 லட்சம் கோடியாகவும், 2017- 0.31 லட்ச்ம் கோடியாகவும், 2018- 0.50 லட்சம் கோடியாகவும், 2019-ல்-1.76 லட்சம் கோடியாகவும் இருந்தது. 2019 க்கு பிறகு இது பல ஆயிரம் கோடிகளாக உயர்ந்து வந்தது. இப்போது 2.11 லட்சம் கோடியாக உயர்ந்து நிற்கிறது.
இதற்கு முக்கிய காரணம் கடந்த 2014-ம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து டிவிடென்ட் பெறுவதில் புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டன. ரிசர்வ் வங்கி கவர்னராக பிமல் ஜலான் இருந்தபோது, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி நிதியையும், டிவிடென்டுடன் சேர்த்து வழங்க வேண்டும் என ஒன்றிய பாஜக அரசு நிர்பந்தம் செய்ய தொடங்கியது.
இதற்காகவே ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் ஒன்றிய அரசு தனது ஆதரவானவர்களை நியமனம் செய்து, ரிசர்வ் வங்கியை நிர்ப்பந்தித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இதனால் அன்றைய ரிசர்வ் வங்கி கவர்னர், துணை கவர்னர் இருவரும் ராஜினாமா செய்தனர். அவருக்கு பதிலாக பாஜக அரசு இன்றைய கவர்னர் சக்தி காந்ததாஸ் (M A வரலாறு) IAS ஐ அவர் பொருளாதாரம் படிக்காத போதிலும் கவர்னராக நியமித்து
இந்நிலையில், 2019 ஆகஸ்ட்டில் பிமல் ஜலான் தலைமையிலான பொருளாதார நிபுணர்கள் குழு சமர்ப்பித்த அறிக்கைப்படி, ரிசர்வ் வங்கியின் இடர்பாட்டு நிதியை 5.5 சதவீதமாக பராமரித்து வருவது என முடிவு செய்யப்பட்டு, 2020-21ல் ரூ.99,122 கோடியை டிவிடென்டாக வழங்க, கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இவ்வளவு பெரிய தொகை, அந்த நிதியாண்டில் மார்ச் 2021 உடன் முடிவடைந்த 9 மாதங்களுக்கான டிவிடென்டாக கணக்கிட்டு வழங்கப்பட்டதாகும்.
இடர்பாட்டு நிதி 5.5 சதவீதம் என பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், பொருளாதார வளர்ச்சி, சர்வதேச அளவிலான ஸ்திரமன்ற தன்மையால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றுக்கு ஏற்ப இடர்பாட்டு நிதியை 2023-24 நிதியாண்டில் 6.5 சதவீதமாக பேணுவது என ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இருப்பினும், இதுவரை இல்லாத அளவாக நடப்பாண்டில் ரூ.2.11 லட்சம் கோடியை ஒன்றியஅரசுக்கு டிவிடென்டாக ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது
நாம் வங்கியில் போடுகின்ற அளவிற்கு சேமிப்பு உள்ளவர்கள் அல்ல. ஆனால் நாட்டில் உள்ள அனைவரையும் நேரடி பணப்பரிவர்த்தனை முறையை ஒழித்து விட்டு, டிஜிட்டல் பரிவர்தனைக்காக வங்கி கணக்கு வைக்க வேண்டும். அதன் மூலமே பணபரிமாற்றம் செய்ய வேண்டும் என்று படிப்படியாக அனைவரையும் வங்கிக்குள் கொண்டு வந்தது ஆர்எஸ்எஸ்-பாஜக. இதன் மூலம் வங்கிகளின் இருப்பு தொகை 140 லட்சம் கோடியாக உயர்ந்தது. இந்த பெரும் தொகையை கார்ப்பரேட்டுகள் கடனாக வாங்கிக் கொள்கின்றனர். இதன் மூலம் நாட்டின் சொத்துக்களை சூறையாடுவது மட்டுமின்றி, மக்களின் சிறுசேமிப்பையும் சூறையாடுவதற்கு ஒப்புக்கொடுத்துள்ளது இந்திய ஒன்றிய அரசு.
நாடாளுமன்ற தேர்தலின் போதே ரிசர்வ் வங்கியின் சேமிப்பு தொகையை வாரி கொடுத்திருப்பது சாதாரண விவகாரம் அல்ல. நாட்டின் பொருளாதாரம் நிலையாக இருப்பதற்கும் மக்களின் தேவைகளை ஈடு கட்டுவதற்கும் இந்த கையிருப்பு தொகை பயன்படுத்தப்பட வேண்டும் ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள 2.11 லட்சம் கோடி ரூபாயை உடனடியாக பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றுவதும், அந்த வங்கிகள் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்குவதும் நடந்து கொண்டுள்ளது.
படிக்க:
♦ ரூ. 25000000000000 மக்கள் வரிப்பணத்தை முதலாளிகளுக்கு வாரிக்கொடுத்த மோடி!!
♦ ரெப்போ வட்டி உயர்வு! அதானிகளுக்கு அள்ளிக் கொடுக்கவா?
இதனால் மீண்டும் ஒரு முறை ’ரிசர்வ் இல்லாத வங்கியாக’ ரிசர்வ் வங்கி மாறியிருக்கிறது. தனது கையிருப்பிலிருந்து 2.11 லட்சம் கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு கொடுத்துள்ளது ரிசர்வ் வங்கி. இத்தொகை ஒன்றிய அரசு ஓராண்டிற்கு கல்விக்கு செலவிடும் தொகைக்கு சமம்.
ரிசர்வ் வங்கிக்கு கையிருப்பு என்பது மிக மிக அவசியம். 2008 சப் பிரைம் நெருக்கடி போன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்பட்டால் இந்திய பொருளாதாரத்தை காக்க வேண்டிய பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கும், அரசு வங்கிகளுக்கும் இருக்கிறது. எனவே போதுமான கையிருப்பு இல்லையென்றால் ரிசர்வ் வங்கி தன்னையே காத்துக் கொள்ள முடியாது
ரிசர்வ் வங்கியின் கவர்னரான சக்தி காந்ததாஸ் ஆர்எஸ்எஸ் பாஜகவின் எடுபிடி மற்றும் ஏவலாளி என்பதால் தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ அதற்கு முன்பாகவே கார்ப்பரேட்டுகளுக்கு பல்லாயிரம் கோடி வரிச்சலுகைகளை வாரி வழங்குவது என்று இறுதி கட்ட தாக்குதலில் இறங்கியுள்ளது பாஜக.
வழக்கமான செய்திகளை போல இதையும் படித்துவிட்டு கடந்து செல்வது நமது காலுக்கு அடியில் வெடிக்க காத்திருக்கும் எரிமலையை பற்றி அறியாமல் சாவகாசமாக ஓய்வெடுப்பதற்கு சமம்.
- கனகசபை.