டந்த பிப்ரவரி மாதம் 15ந்தேதியன்று பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் மக்களின் தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எதிரானது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் பெற்ற நிதி குறித்த விவரங்களை  மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஒப்படைக்க வேண்டும். அந்த விபரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் நாட்டு மக்கள் அறியும்படி வெளியிட வேண்டும் என்றும்  அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

உச்சநீதிமன்றம் கேட்கும் விவரங்களை கொடுத்தால் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த முதலாளிகளிடம் இருந்து எவ்வளவு நிதி பெற்றார்கள் என்பது வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். இதன்மூலம் பாஜக வின் ஆட்சியில் அம்பானி, அதானி போன்ற முதலாளிகளின் சொத்து மதிப்பு உயர்ந்து கொண்டே போவதற்கும் அந்த முதலாளிகள் பாஜகவிற்கு தேர்தல் நிதி கொடுத்ததற்கும் உள்ள நேரடியான இணைப்பு மக்களுக்கு தெரிந்து விடும். நாட்டை காக்க வந்ததாக, நாட்டு மக்களை முன்னேற்ற வந்துள்ளதாக கூறும் மோடியின் முகத்திரை கிழிந்து விடும், அது பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் இவ்விசயம் ஆளும் பாஜக-வின் தூக்கத்தை கலைத்திருந்தது.

எனவே உச்ச நீதிமன்றம்  போட்டுள்ள உத்தரவை செல்லாக் காசாக்குவதற்கு பல்வேறு தகிடுதத்தங்களை கையாள்வார்களே தவிர தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை  எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் கொடுக்கப்போவது இல்லை என்றும் “ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்” மோடி அதற்குத் தேவையான அத்தனை வழிமுறைகளையும் கையாள்வார் என்றும் உச்ச நீதிமன்றத்தீர்ப்பு வந்த அந்த நிமிடத்திலிருந்து மக்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

மக்களின் கணிப்பை எஸ்.பி.ஐ அதிகாரிகள் உண்மையாக்கிவிட்டனர்.
‘உச்சநீதிமன்றம் கூறுகின்ற விவரங்களை திரட்டுவதற்கும் தொகுப்பதற்கும் மிகுந்த கால அவகாசம் தேவைப்படுகிறது.  எனவே அந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பதற்கு ஜூன் 30-ம் தேதி  வரை அவகாசம் வேண்டும்’ என்று எஸ் பி ஐ கேட்டுள்ளது. அதையும் உடனடியாக சொல்லாமல் ஏறக்குறைய 15 நாட்களை கடத்தி விட்டு உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிவடையும் தேதிக்கும் சற்று முன்பாக இப்படி கூறியுள்ளது. அதாவது பாராளுமன்றத் தேர்தல் முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு, புதிய அரசு அமைந்த பிறகு தான்  அந்த விவரங்களை கொடுக்க முடியும் என்று மறைமுகமாக கூறுகிறது.

இதையும் படியுங்கள்: தேர்தல் பத்திர விவரங்கள்: பாஜக-வின் அரணாக SBI!

இது உண்மையே அல்ல; மாபெரும் பொய் என்று நாம் மட்டும் கூறவில்லை, நாட்டிலுள்ள பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

“தேர்தல் பத்திரத் தகவல்களைக் கொடுக்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு ஒரு நாள் போதும்”என்றும் “கணினியில் ஒரு பொத்தானை அழுத்தினாலே இந்த தகவல் கிடைத்துவிடும்” என்றும் 2019 ஆம் ஆண்டு விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை உச்ச நீதிமன்றத்திற்கு எஸ்பிஐ வங்கி வழங்கியது என்றும் அப்படி கொடுப்பதற்கு எஸ் பி ஐ க்கு 48 மணி நேரம் கூட தேவைப்படவில்லை என்றும் திரு சுபாஷ் சந்திர கர்க்  (தி வயர் இணைய தளத்திற்கு அளித்த பேட்டியில்) கூறுகிறார்.  இவர் சாதாரணமான நபர் அல்ல. தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது பொருளாதார விவகாரங்களின் செயலாளராக இருந்த ஒன்றிய அரசின் முன்னாள் நிதிச் செயலாளர்.

2018 ஆம் ஆண்டின் தேர்தல் பத்திர வழிகாட்டுதலின்படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை நீதிமன்றங்கள் கேட்கும் பொழுது உடனடியாக  கொடுக்க வேண்டும்    நீதிபதி தீபக் குப்தா கூறுகிறார். மேலும் அவர் இப்பொழுது மட்டும் எஸ் பி ஐ க்குஏன் கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்றும் கேட்கிறார். இந்த நீதிபதி தீபக் குப்தா அவர்கள் 2019 ஆம் ஆண்டில் அத்தகைய பதிவுகளை பராமரிக்க வங்கிக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற பெஞ்சில் ஒரு நீதிபதியாக இருந்தவர்.

தேர்தலின் போது ஒவ்வொரு முறையும் தேர்தல் பத்திரங்கள் விற்கப்படுகின்றன.
2019 மற்றும் 2020 ஆண்டுகளில் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ் பி ஐ வங்கி மிக மிகக் குறுகிய நேரத்திற்குள், சில சமயங்களில் 48 மணி நேரத்திற்குள்ளாக கூட அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. இந்த விபரம் சமூக ஆர்வலர் கொமடோர் லோகேஷ் பத்ரா என்பவர் தி கலெக்டிவ் நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்ட ஆவணங்களின் தொகுப்பில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய நிதி அமைச்சகம் கேட்டுக்கொண்டதன் பேரில், தேர்தல் பத்திரங்களை பணமாக்குவதற்கான காலக்கெடு முடிந்த 48 மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் உள்ள தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை எஸ்பிஐ தொகுக்க முடிந்தது என்பதை இந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.

ஆக,  ஆளும் பிஜேபி கேட்டால் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை 48 மணி நேரத்திற்குள்ளாக எஸ்பிஐ ஆல் கொடுக்க முடிகிறது. ஆனால் அதே விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கும்படியும் அந்த விவரங்களை நாட்டு மக்கள் அறியும் வகையில் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறினால் அதைக் கொடுப்பதற்கு எஸ்பிஐ-க்கு பல மாதம் கால அவகாசம் தேவைப்படுகிறதாம். இதை நம்புவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் முட்டாள்களாக தான் இருக்க வேண்டும்.

இந்த நிலையில், மார்ச் 11ந்தேதி, எஸ்.பி.ஐ வங்கியின் கால அவகாசம் கோரிய மனுவையும், எஸ்.பி.ஐ மீது CPIM, ADR ஆகியோர் தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரித்தது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தேர்தல் பத்திரங்கள் வாங்கியவர்கள் யார்? தேர்தல் பத்திரங்களை பணமாக மாற்றிய கட்சிகள் பற்றிய விவரங்களை தனித்தனியாக கொடுக்க எஸ்.பி.ஐக்கு உத்தரவிட்டது. இது புரியாதது போல இரண்டையும் இணைத்துச் சொல்லதான் காலம் அதிகம் தேவை. இரண்டையும் தனித்தனியாக கொடுப்பது எனில் 3 வாரங்களுக்குள் கொடுக்க முடியும் என எஸ்பிஐ சார்பாக மூத்த சட்ட அறிஞர் ஹரிஷ் சால்வேவை வாதிட்டடார்.

ஆனால் அதை ஏற்க மறுத்து சீல் செய்யப்பட்ட கவர்களில் ஆவணங்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறீர்கள். “அந்த சீல் செய்யப்பட்ட கவர்களைத் திறந்து, பெயர்களைத் தொகுத்து, விவரங்களை வழங்கவும்.” அதைதான் நேரடியாக நாங்கள் கூறுகிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாட்டின் நம்பர் 1 வங்கி எஸ்.பி.ஐ. இந்த விஷயத்தைச் சரியாக கையாள வேண்டும் எனக் கருதுகிறோம்.” என்றுக் கூறி எஸ்.பி.ஐயின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம் மார்ச் 12ந்தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக எஸ்.பி.ஐ சேர்மன் உறுதிமொழி மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையம் அவற்றைத் தொகுத்து மார்ச் 15ந்தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்ற வேண்டும் எனக் கூறியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளுக்குள் தற்போதைக்குச் செல்லத் தேவையில்லை எனக் கூறி முடித்து வைத்துள்ளது.

காத்திருப்போம்! விழிப்போடு இருப்போம்!

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here