அன்பார்ந்த உழைக்கும் மக்களே
நவம்பர் 7, நாம் வழக்கமாக கடந்து போகும் ஒரு நாள் அல்ல. அரசாங்கம் வேறு மக்கள் வேறு என்று இருந்த பழைய உலக வரலாற்றை மாற்றி, மக்களே அரசாங்கம் என திருத்தி எழுதிய நாள். புரட்சியின் மூலம் பெருவாரியான மக்களை ஒட்டச்சுரண்டி கொழுத்துக் கொண்டிருந்த முதலாளித்துவத்தை உலகின் ஆறில் ஒரு பங்கு நிலப்பரப்பிலிருந்து தூக்கியெறிந்து, உழைக்கும் வர்க்கத்தை ஆட்சியதிகாரத்தில் அமர்த்திய ரசிய சோசலிசப் புரட்சி நாள் நவம்பர் 7, 1917. சோசலிசம் நம் நாட்டிலும் மலராதா என ஏங்கிக் கொண்டிருக்கும் உலக மக்கள் அனைவரும் உயர்த்திப் பிடிக்க வேண்டிய. கொண்டாட வேண்டிய உண்மையான மக்கள் திருவிழா!
இன்று, உலகம் முழுவதிலும் பாசிச சக்திகள் ஆட்சியில் அமர்ந்து கொண்டு உலக மக்களை வாட்டி வதைக்கிறது. இந்தியாவில் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள பாசிச பாஜகவின் 11 ஆண்டுகால கொடுர ஆட்சியின் கீழ் இந்தியா மிகப்பெரும் பாசிச பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. இந்திய ஒன்றிய அரசை ஆண்டு வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் நாட்டை அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் காலனியாக, நாட்டை மறுகாலனியாக்க மூர்க்கத்தனமாக செயல்பட்டு வருகிறது.
அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டு துறைகளில் மட்டு மின்றி அயலுறவு கொள்கைகளிலும் கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு துணை புரிகின்ற கொள்கைகளை முன்வைத்து பெரும்பான்மை மக்களின் மீது பயங்கரவாத தாக்குதலை தொடுத்து வருகிறது.
இதனை எதிர்த்து முறியடித்து ஜனநாயக கூட்டரசை நிறுவவும் அதன் மூலம் மாற்றுத் திட்டத்தை அமுல்படுத்தவும் நாட்டில் உள்ள புரட்சிகர, ஜனநாயக சக்திகள், பாசிச எதிர்ப்பு சிந்தனை கொண்ட மக்கள் அனைவரையும் ஒன்றிணைய இந்த நவம்பர் புரட்சி தினத்தில் அறைகூவல் விடுக்கின்றோம்.
- ஏகாதிபத்திய நிதி மூலதனக் கொள்ளைக்கு வழிவகுக்கும் மறுகா ஜனியாக்கத்தை ஒழிப்போம்! இந்தியாவில் பெருகிவரும் 1:99 அடிப்படையிலான தேசங்கடந்த தரகு முதலாளிகள் Vs பெரும்பான்மை மக்கள் என்ற இருதுருவ ஏற்றத் தாழ்வுகளுக்கு முடிவு கட்டுவதை இலக்காக அறிவிப்போம்.
- தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அனைத்து வகை ஜனநாயக உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசம் மீண்டும் தலையெடுக்காத வண்ணம் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம். UAPA போன்ற ஆள்தூக்கி பாசிச கருப்பு சட்டங்களை ரத்து செய்வோம்.
- இந்திய ஒன்றியம் என்பதை அனைத்து தேசிய இனங்களுக்கும், மொழி வழி அமைந்த மாநிலங்களுக்கும் பிரிந்துப் போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை வழங்குகின்ற உண்மையான மாநிலங்களின் ஒன்றியமாக கட்டமைப்போம்.
- இந்திய மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகின்ற பாசிச பயங்கரவாத அடக்குமுறைகளையும், கருத்துரிமைகளை பறிக்கின்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் முறியடித்து உண்மையான ஜனநாயக உரிமைகளை பாதுகாப்போம்.
- இந்தியாவில் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு தேர்தல் உள்ளிட்ட அனைத்துவகை போராட்ட வடிவங்களையும் பயன்படுத்துவோம். தற்போது நிலவும் பாசிச சர்வாதிகாரமும், மாற்றாக முன் வைக்கப்படும் போலி ஜனநாயகமும் மக்களை பாதுகாக்காது. ஜனநாயக கூட்டரசு ஒன்றே தீர்வு. அதற்கு மேலிருந்து ஐக்கிய முன்னணியும், கீழிருந்து மக்கள் முன்னணியும் கட்டுவோம்.
- பார்ப்பன (இந்து) மதக் கொடுங்கோன்மையின் கீழ் அடக்கி ஒடுக்கப்படும் பட்டியலின மக்கள், பழங்குடிகள் மட்டுமின்றி பார்ப்பன மதத்தை ஏற்காத பல்வேறு பிரிவுகளையும், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளையும் பாதுகாக்கின்ற வகையில் ஜனநாயக கூட்டரசு செயல்படும். அதற்கு முன்னர் சமூக நல்லிணக்க குழுக்களின் மூலம் மக்களிடையே ஒற்றுமையை உருவாக்குவோம்.
கார்ப்பரேட் காவி பாசிச தாக்குதலின் கீழ் அதிகரித்துள்ள பட்டியலின, பழங்குடி மக்களின் மீது ஏவப்படும் சாதி-தீண்டாமை வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க வன்முறைகள், சமூகத்திற்கு எதிரான அனைத்து வகையான கிரிமினல் குற்றங்கள், இணையவழி மோசடிகள், பொருளாதார மோசடிகள் அனைத்துக்கும் முடிவு கட்டும் வகையில் சட்டங்களை இயற்றி மக்களை ஜனநாயக கூட்டரசு பாதுகாக்கும். - அதானி, அம்பானி உள்ளிட்ட தேசங்கடந்த தரகு முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வோம்! தரகு முதலாளிகளுக்கு செல்வ வரி, சொத்து வரி விதிப்போம்!
- கிராமப்புறங்களில் கார்ப்பரேட் காவி பாசிசத்தின் குதிகால் நரம்புகளாக சொத்துடமையை காத்து நிற்கும், நிலப்பிரபுத்துவ-சாதி ஆதிக்க சக்திகளின் நிலங்களை பறிமுதல் செய்வோம். குத்தகை, பகடி, கிஸ்தி போன்ற வழிகளில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவு கட்டுவோம். முதற்கட்டமாக குறைத்து படிப்படியாக ரத்து செய்வோம்.
- ஆதீனங்கள், கோவில்கள், மடங்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள், வக்ஃப் வாரியங்களிடம் குவிந்துள்ள இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை பறிமுதல் செய்து நிலமற்ற கூலி, ஏழை விவசாயிகளுக்கு வினியோகிப்போம்.
- பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிவரும் சிறு, குறு நிறுவனங்களையும், தேசியத் தொழிலையும் ஆதரிப்போம்! இவர்கள் மூலப்பொருட்களை வாங்குவதற்கும், உற்பத்தியை தொடர கடன்கள் பெறவும், விநியோகத்திற்கு உதவிகள் செய்தும் வளர்த்தெடுப்போம்.
- * விவசாயத்திற்கு முன்னுரிமை. இலகுரக எந்திரங்களுக்கு இரண்டாம்பட்ச முன்னுரிமை, கனரக எந்திரங்களுக்கு மூன்றாவது முன்னுரிமை என்ற வகையில் பொருளாதாரக் கொள்கையில் மாற்றத்தை கொண்டு வந்து சுயசார்பு பொருளாதாரத்தை கட்டமைப்போம்.
- கார்ப்பரேட்டுகளுக்கு 25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி: உழைக்கும் மக்கள் பயன்படுத்தும்அனைத்து பொருட்களின் மீதும் ஜிஎஸ்டி வரி! இந்த கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம். பன்முக வரி, ஜிஎஸ்டி வரி விதிப்பை ஒழிப்போம்!
- கல்வி, மருத்துவம், சுகாதாரம், தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகள் போன்றவற்றில் தனியார்மயத்தை முற்றிலுமாக அகற்றுவதற்கு படிப்படியாக செயல்படுவது, அவற்றை கூட்டுறவு நிறுவனங்களின் கீழ் படிப்படியாக கொண்டு வருவதற்கு முன்னுரிமை தருவது.
- இயற்கை வளங்கள், கனிம வளங்கள், காட்டு வளங்கள், கடல் வளங்கள் அனைத்தையும் பாதுகாப்போம். தண்ணீர் கொள்ளை முதல் மணல் கொள்ளை வரை அனைத்துக்கும் மக்களுக்கு அதிகாரம் கொண்ட கண்காணிப்பு கமிட்டிகள் மூலம் முடிவு கட்டுவோம் ! பொருளாதார அடியாட்களின் தாக்குதலில் இருந்து, பாசிஸ்டுகளிடமிருந்து மக்களை தற்காத்துக் கொள்ளும் அமைப்புகளைக் கட்டுவோம்!
- இந்தியாவில் நிலவுகின்ற தனியார்மயம் என்ற கார்ப்பரேட் கொள்ளை கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அடிப்படையான தேவைகள் முதல் ஆலைகள், வேலைவாய்ப்புகள் அனைத்திலும் நீடிக்கிறது. எனவே தனியார்மயத்தை முற்றாக ஒழித்து கூட்டுறவு நிறுவனங்களின் கீழ் கொண்டு வருவோம். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைத்திலும் இலவசமாக அறிவியல் பூர்வமான கல்வி முறையை அமுல்படுத்துவோம். மாணவர் பேரவை மூலம் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வோம்.
- இளைஞர்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் சீரழிக்கின்ற டிஜிட்டல் ஆன்லைன் வீடியோ கேம்களை முற்றாக ஒழிப்போம். கிரிக்கெட் போன்ற சோம்பேறி விளையாட்டை புறக்கணித்து உடல் வலிமை திறனை அதிகரிக்கின்ற நீச்சல், தனித்திறன் போட்டிகள், மல்யுத்தம், மல்லர் கம்பம், கபடி, சிலம்பம், களரி, கால்பந்து, சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை முன்னிறுத்துவோம்.
- நாட்டுப்புற உழைக்கும் மக்கள் மத்தியில் நிலவுகின்ற பாரம்பரிய மரபு சார்ந்த விளையாட்டுகள், கலாச்சாரங்களை உயர்த்திப் பிடிப்போம்.
- ஆணாதிக்க, பார்ப்பன மதவாத பிற்போக்கு பண்பாடுகளை ஒழித்து ஆண் பெண் சமத்துவத்தை கற்றுக் கொடுப்பதும், கைம்பெண் மறுமணம், சாதி, மத, இன மறுப்பு சீர்திருத்த, புரட்சிகர திருமணங்களை ஊக்குவிப்போம். பாசிச எதிர்ப்பு உள்ளடங்கிய உண்மையான நாட்டுப்பற்றை பண்பாடாக வளர்ப்போம்.
- • கஞ்சா, அபின், ஹெராயின், கள்ளச்சாராயம், டாஸ்மாக் போன்ற அனைத்துவகையான போதைப் பொருட்களையும் முற்றாக தடை செய்வோம், இணையதள ஆபாச வக்கிர தொடர்கள், பாலியல் சீரழிவு பரப்பும் திரைப்படங்கள் அனைத்தையும் தடை செய்வோம்.
- நாட்டின் மீது மறு காலனியாக்கத்தை திணிக்கின்ற அனைத்து வகையான சமனற்ற ஒப்பந்தங்களையும் ரத்து செய்வோம்.
- அண்டை நாடுகளுக்கு எதிரான தேசவெறி, போர்வெறி பயங்கரவாத பீதியூட்டுகின்ற நடவடிக்கைகளை முற்றாக ஒழிப்போம்! சார்க், குவாட் உள்ளிட்ட பிராந்திய வல்லாதிக்க கொள்கைகளை மறுபரிசீலனை செய்வோம். உலகை மேலாதிக்கம் செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்புகளில் இருந்து வெளியேறுவோம். சர்வதேச அளவில் பஞ்சசீலக் கொள்கைகளை அமல்படுத்துகின்ற வகையில் செயல்படுவோம்.
- சர்வதேச நிதி மூலதனத்திற்கு எதிராக, பாசிச வலதுசாரி சிந்தனைக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தை ஒன்றிணைப்பது, கலாச்சார பண்பாட்டு மையங்களை உருவாக்குவது. காலனியாதிக்க எதிர்ப்பில் களமாடும் மக்களின் ஒன்றிணைப்பை உருவாக்குவது போன்ற அனைத்தையும் பயன்படுத்தி சர்வதேச பாட்டாளி வர்க்க ஒற்றுமைக்கு பாடுபடுவோம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
சிறப்பு…
தோழர்கள்
அனைவருக்கும் சோசலிச புரட்சி நாள் நல்வாழ்த்துக்கள்… 💐💐💐✊
ருஷ்ய சோசலிசப் புரட்சி 1917 நவம்பர் 7 குறித்த சுருக்கமான – அதே நேரத்தில் நறுக்குத் தெறித்தாற் போன்ற வரலாற்றுண்மை போற்றுதலுக்குரியது! இந்திய நாட்டின் பிரத்தியேக நிலைமைகளையொட்டி வடித்து எடுக்கப்பட்ட மக்களுக்கான அரை கூவும் முழக்கங்கள் வெகுசிறப்பு!!
நவம்பர் தின புரட்சிகர வாழ்த்துக்கள்