மெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டவுடன் கைமேல் பலன் கிடைத்ததாக கொடண்டாட வேண்டியவன் டெஸ்லாவின் எலான் மஸ்க்தான். இவரின் டெஸ்லா நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 2.19  அல்லது 2.23 லட்சம் கோடி வரை உயர்ந்துள்ளதாக வெவ்வேறு செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் மோடியின் மூன்றாவது தேர்தல் ‘வெற்றி’யை எப்படி அம்பானி, அதானிக்கள் கொண்டாடினரோ, அதேபோல் டிரம்ப்பின் வெற்றியை அமெரிக்க ஏகபோக கார்ப்பரேட் நிறுவனத்தின் முதலாளிகளும் கொண்டாடுகின்றனர்.

ஒரே நாளில் சில கார்ப்பரேட் கம்பெனியின் சொத்து கூடுவதற்கு எது அடிப்படை? அந்நிறுவனம் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகெங்கும் கொழுத்த லாபங்களை அள்ளும் ஒப்பந்தங்களை போடவும், உலக நாடுகளை வரைமுறையின்றி சுரண்டவும், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்ப ரீதியில் ஏகபோகமாக தொடர்ந்து கோலோச்சவும், அமெரிக்க ’பேரரசின்’ தலைமைப்பொறுப்பேற்றுள்ள டிரம்ப் விசுவாசமாக இருப்பார் என பங்குச்சந்தையில் சூதாடுபவர்கள் கணிக்கின்றனர்;  அல்லது, இக்கருத்தை பரப்புகின்றனர். இதன் விளைவாக டெஸ்லாவின் பங்குகளின் விலை ஏறுகிறது; அல்லது ஏற்றப்படுகிறது.

எலான் மஸ்க் மட்டும் அல்லாமல் அமெரிக்க மற்றும் உலக நிதியாதிக்க கும்பல்களின் சொத்துக்களும் கூட பெருகியே உள்ளன. அமேசானின் ஜெப் பெசோஸ் ஒரே நாளில் 7.14 பில்லியன் டாலரையும் (60 ஆயிரம் கோடி ரூபாய்), ஆரக்கிளின் லாரி எலிசன் 9.88 பில்லியன் டாலரையும் (83 ஆயிரம் கோடி ரூபாய்) ‘சம்பாதித்து’ள்ளனர்.

ட்ரம்ப்பின் நண்பர்கள் கொழுக்கும்போது அவரின் நண்பரான மோடியும் அவரது கூட்டாளிகளுக்கும்கூட  (புல்லுக்கும்) சிறிது பொசியும் தானே. இந்தியாவில் முகேஷ் அம்பானிக்கு 1.3 பில்லியன் டாலரும்(11 ஆயிரம் கோடி ரூபாய்), கவுதம் அதானிக்கு 3.62 பில்லியன் டாலரும் ‘(30 ஆயிரம் கோடி ரூபாய்) சம்பாதித்துள்ளனர்.

உலக பணக்காரன் மஸ்க்!

எலான் மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 24.46 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது உலகிலேயே முதன் முறையாக செயற்கைக்கோள்களை விண்ணில் கொண்டு சென்று நிலைநிறுத்திவிட்டு மீண்டும் ஏவுதளத்திற்கே திரும்பி வரும் வகையிலான  சூப்பர் ஹெவி பூஸ்டரை வெற்றிகரமாக சோதித்துள்ளது.  இதன்மூலம் தொழில்நுட்பத்தில் அமெரிக்க நாசாவையே விஞ்சியுள்ளது.  2026 இல் தனது ஸ்டார்ஷிப் ராக்கெட்டில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் கனவுடன் உள்ளார் எலான் மஸ்க்.

உலகின் முன்னணி பணக்காரனான எலான் மஸ்க் வெளிப்படையாக டிரம்ப்பை ஆதரித்தார். இதன் பொருளை சரியான கோணத்தில் பரிசீலிக்க வேண்டும். ஒருவேளை கமலா ஹாரிஸ் அதிபராகியிருந்தால் எலான் மஸ்க்குகளுக்கு எதிராகவா இருந்திருப்பார்? அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. இதை புரிந்துகொள்ள அமெரிக்க வரலாற்றை புரட்ட வேண்டும்.


படிக்க: மோடியை ஏமாற்றிய எலான் மஸ்க் ’விசிட்’!


முன்னர் பாரக் ஓபாமா வந்தபோது கருப்பின மக்களுக்கு எதிரான நிறவெறி முடிவுக்கா வந்தது? ஒன்றும் மாறவில்லையே. ஆப்பிரிக்க நாடுகளை அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரண்டிக்கொழுப்பதும், வளைகுடா நாடுகளை மேலாதிக்கம் செய்து எண்ணை ஏற்றுமதியில் உள்ள அமெரிக்க கார்ப்பரேட்டுகள் கொழுப்பதும் தொடரத்தானே செய்தது.

கமலா ஹாரிஸ்ஸின் தோல்வியை வைத்து தமிழகத்தில் சிலர் துக்கத்தை கடைபிடிக்கின்றனர். அவர் வென்றிருந்தால் கூட அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கோ, இந்தியாவுக்கோ, தமிழகத்திற்கோ தானாக எதையும் செய்துவிட முடியாது. அனைத்தையும் அமெரிக்க ஆளும் வர்க்கமான ஏகபோக கார்ப்பரேட்டுகளே முடிவு செய்யும். பிறகு எதற்காக தேர்தல்கள்?

தேர்தல்கள் கண்துடைப்புக்கே!

உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாக அமெரிக்கா தனது நாடகத்தை தொடரத்தான் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. குடியரசுக்கட்சி அல்லது ஜனநாயக்கட்சி ஆகிய இரண்டில் எது என்பதைத்தான் அமெரிக்க வாக்காளர்கள் தமது ஓட்டால் தேர்ந்தெடுக்க முடியும். முதலாளித்துவ கட்சிகளான இவை இரண்டும் கார்ப்பரேட்டுகளுக்கானதுதான். அமெரிக்காவை பொருத்தவரை, உழைக்கும் மக்களுக்கானதாகவோ, மாற்று சித்தாந்தத்தை – கம்யூனிசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவோ ஒன்றும் இல்லை.

உலகமேலாதிக்கத்தை முன்னெடுப்பதில், பராமரிப்பதில் தனியாக அமெரிக்க அதிபர் எதையும் தன் விருப்பத்திற்கு செய்துவிட முடியாது. அமெரிக்க ஆளும்வர்க்கமான எலான்மஸ்க் உள்ளிட்ட நிதிமூலதன ஏகபோக கும்பலகளின் விருப்பமே அரசுத்துறைகளுக்கான உத்தரவுகளாக்கப்பட்டு அமலாகும். அதை முன்னெடுக்கும் விதத்தில் வேண்டுமானால் டிரம்ப்புக்கும், கமலாவுக்கும் இடையே வேறுபாடுகள் வரக்கூடும்.


படிக்க: டொனால்டு ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு! பயங்கரவாதிகளின் கூடாரத்தில் வேட்டுச் சத்தம்!


அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமையை தொடர்ந்து தருவதா என்பதை டிரம்ப் விரைவில் அறிவிப்பார். படித்தும் வேலையின்றி அலையும் அமெரிக்க இளைஞர்களை திருப்திப்படுத்த எதையாவது செய்யவும் வாய்ப்புள்ளது. இந்தியர்கள் அமெரிக்க முன்னணி நிறுவனங்களில் ஊழியர்களாகவும், தலைமை நிர்வாக அதிகாரிகளாகவும் ஆக்ரமித்துள்ளதால்தான் அமெரிக்கர்களுக்கு வேலைகிடைப்பதில்லை என ஏற்கனவே விசத்தை கக்கியும் உள்ளார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் சூறையாடப்பட்டு, அரசியல் படுகொலைகள் மற்றும் ஆட்சிக்கவிழ்ப்புகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்கள் புலம்பெயர்கின்றனர். தனது முந்தைய ஆட்சியில் மெக்சிகோ வழியாக அகதிகளாக வரும் மக்களை தடுக்க சுவர் எழுப்பவும் முயற்சித்தார் டிரம்ப்.

ஒருபுறத்தில் தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கையை உலகெல்லாம் திணித்துக்கொண்டே, மறுபுறத்தில் தன்நாட்டில் மட்டும் காப்புவாதத்தில் ஈடுபட்டால் அது அமெரிக்க கூட்டாளிகளாலேயே- ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களாலேயே விமர்சிக்கப்படும்.

இப்பொழுது டிரம்ப்பின் வெற்றியை தொடர்ந்து அதிகரிக்கும் உலகின் முன்னணி கார்ப்பரேட்டுகளின் சொத்து மதிப்பானது பங்குசந்தை சூதாட்டத்தால் ஊதிப்பெருக்கப்பட்டதுதான். இதைப்போல் பல மடங்காக புதிய திட்டங்கள், ஒப்பந்தங்கள் மூலம் உலகை சூறையாடி டாலர்களை குவிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

பாசிஸ்ட்டும், தீவிர நிற வெறியனுமான டிரம்ப்பை மட்டுமின்றி, அவனின் எஜமானர்களான மஸ்க்குகளையும் வீழ்த்த அமெரிக்க மக்கள் களமிறங்க வேண்டும். தமது வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்க இத்தேர்தலோ, ஆட்சிமாற்றமோ உதவவில்லை என்பதை அவர்கள் உணரும் தருணத்தில் அது நடக்கும். நாம் டிரம்ப்பின் நண்பனான பாசிஸ்ட் மோடியையும், எலான் மஸ்க்குகளின் கூட்டளிகளான அம்பானி அதானி உள்ளிட்ட தேசங்கடந்த தரகு முதலாளிகளையும் வீழ்த்துவதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு முன்னுதாரணமாவோம்.

  • இளமாறன்

2 COMMENTS

  1. ட்ரம் அமெரிக்கா அதிபர் தேர்தலில் அறிவிக்கப்பட்ட உடனே பங்கு சந்தை பல லட்சம் கோடி உயர்ந்தது என்ற உண்மையும் மோடியின் கூட்டாளி டிரம்ப் என்பதையும் எலான் மாஸ்கின் சொத்து மதிப்பு அதிகரித்தது எலான் மாஸ்கின் கூட்டாளிகளான அம்பானி அதானிகளுடைய சொத்தும் மதிப்புகள் உயர்ந்துள்ளது என்ற இந்த கூட்டு களவாணிகளின் விஷயத்தை கட்டுரை மூலமாக அம்பலப்படுத்திய ஆசிரியருக்கு மிக்க நன்றி அதேபோல் அமெரிக்கா மக்களுக்கு இந்திய மக்களாகிய நாம் தான் இந்த உண்மையை உரைத்து சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது என பதிவிட்டுள்ளது மிகச் சிறப்பாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here