ஹரியானா பிளஸ் டூ படிக்கும் மாணவன் படுகொலை: பசு காவல் பெயரில் நடக்கும் பயங்கரவாதம்!

0
கொல்லப்பட்ட பிளஸ் டூ மாணவன் மிஸ்ரா

சுவளையம் என்று சொல்லக்கூடிய இந்தி பேசும் மாநிலங்களில் பெரும்பான்மை இந்துக்களிடம் அம்பலப்பட்டு நாறிப் போய்விட்ட ஆர்எஸ்எஸ் பாஜகவினர் இழந்த செல்வாக்கை மீட்பதற்காக துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களின் இழந்த செல்வாக்கை மீட்பதற்காக பல்வேறு  வழிகளில் காவிகள் முயற்சி செய்வது என்பது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். அந்த வகையில், இந்திய மக்களை மத ரீதியாக பிளந்து மோத விட்டு அப்பாவி இந்துக்களின் ஆதரவைப் பெற்று அதன் மூலமாக இந்துராஷ்டிரத்தை அமைத்து விட வேண்டும் என்பதற்காக அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதங்களில் மிக முக்கியமான ஒன்று பசுப் பாதுகாப்பு.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நிதீஷ் ரானே “மசூதிகளுக்குள் புகுந்து ஒருவர் விடாமல் தாக்குவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக மிரட்டல் விடுத்தான். கடும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்த பின் அந்த பேச்சு தொடர்பாக அவன் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த பேச்சு சமூகத்தில் உள்ள சங்கிகளின் செயல்பாட்டுக்கு உந்துதலாக உள்ளது.

சட்டமன்றத்தில் பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்படுகிறது; நடைமுறையில் பசுவைக் கொல்கிறார்கள்; பசுவை கொல்வதற்காக கடத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டி இஸ்லாமியர்களை கொல்வதற்கு நாயாய் அலைந்து கொண்டிருக்கிறது காவி கும்பல்.

கடந்த ஆகஸ்ட், 23 ஆம் தேதி அன்று ஒரு காரில் பசுவை கடத்துபவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று, அந்தக் காரை, 30 கிலோமீட்டர் தூரம் டெல்லி ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் துரத்திக் கொண்டு சென்று கத்புரி டோல்கேட் அருகில்  அந்தக் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் பிளஸ் டூ படிக்கும் மாணவன் மிஸ்ரா கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ‘பசு காவலர்கள்’ ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் காரில் சென்றவர்கள் பசுக்களை கடத்துபவர்கள் அல்ல. ஒருவேளை பசுக்களை கடத்திச் செல்பவர்களாக இருந்தாலும் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு இந்த பசு காவலர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது?  “பசுக்களை கடத்திச் செல்கிறார்கள்” என்ற குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை உயர் அதிகாரிகள்கூட யார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு அதிகாரம் கொண்டவர்கள் அல்ல என்ற நிலையில் இந்தக் காவி கும்பலுக்கு எப்படி அந்த துணிச்சல் வந்தது?

மத்தியிலும், ஹரியானா மாநிலத்திலும் பாஜக தான் ஆட்சியில் இருக்கிறது. இப்படிப்பட்ட கொலைகளைச் செய்தாலும் தங்களை பாஜக அரசுகள் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் தான் இந்த காவி பாசிஸ்டுகள் வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க:

♦ ஒடிசா, தெலுங்கானாவில் கலவரத்தை தொடங்கியுள்ள பசுக் காவலர்கள்!

♦ மாட்டுக்கறி பெயரில் முதியவரை தாக்கிய கும்பல்! சமூகமயமாகியுள்ள பாசிசத்தின் அறிகுறி!

கடந்த ஜூன் மாதத்தில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஒரிசாவிலும் தெலுங்கானாவிலும் பசுக்களை கடத்துகிறார்கள், கொல்கிறார்கள் என்று புரளியை கிளப்பி விட்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக கலவரங்களை நடத்த காவி பாசிஸ்டுகள் பல்வேறு முயற்சிகளை செய்தது அனைவரும் அறிந்ததே.

இப்படிப்பட்ட கலவரம் முயற்சிகளை தொடர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பதும்  இத்தகைய முயற்சிகளை முறியடிப்பதற்காக மக்களிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்பதும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் தவிர்க்க முடியாத கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம். காவி பாசிசத்தை வேரோடு அறுத்தெறிவோம்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here