சிவன் சொத்து குல நாசம் – நிலப்பிரபுத்துவத்தைக் காக்கும் பழமொழி!


லகம் முழுக்க நிலம் மத தலைவர்கள் கைகளில்தான் இருந்தது. ஆனால் மாபெரும் பிரெஞ்சுப் புரட்சி அதை மாற்றி அமைத்து தொழிலாளர்களுக்கு உரிமைகளை வரையறுத்த முதலாளித்துவத்தை உலகிற்கு வழங்கியது. நிலவுடமையில் இருந்து திருச்சபை வெளியேற்றப்பட்டு மக்களுக்குச் சொந்தமானது நிலம். ஆனால், இந்தியாவில் இன்னும் நிலம் மக்களிடம் இல்லை. பெரும்பான்மை நிலம் எண்ணிக்கையில் குறைந்தவர்களிடமே உள்ளது.

பிரெஞ்சுப் புரட்சி

காவிரி பெரு நிலப்பரப்பின் பெரும்பான்மை நிலங்கள் மடங்கள், ஆஸ்ரமங்கள், ஆதீனங்கள், வாண்டையார்கள், நிலச்சுவான் தார்களிடம் மட்டுமே இருந்தது. இதில் பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் கூலித் தொழிலாளர்களாக இருக்க வில்லை. கூலி அடிமைகளாக இருந்தனர்.பண்ணை நிலபிரபுக்களுக்கும், ஆதீனங்களுக்கும், மடாதிபதிகளுக்கும் காரியக்காரர்களாக இருந்தார்கள். காரியக்காரர்கள் என்றால் அது ஒரு அடிமை முறை நேரம் காலம் இல்லாமல் உழைத்தால் மீந்து போன உணவை தொழிலாளர்களுக்கு கொடுப்பார்கள்.அத்தக் கூலி என்ற முறை உண்டு சூரியன் விடிவதற்கு முன்னால் நிலத்தில் இறங்கி சூரியன் அடைந்த பின்னர் கரையேற வேண்டும் சில படிகள் நெல் மட்டும் கொடுப்பார்கள். இது போக சாதிக்கொடுமைகள் சாணிப்பால் சவுக்கடி வேறு. இதுதான் நிலச்சுவான் தார்களின் தொழிலாளர்களை நடத்திய விதம். பெரும்பான்மை மக்களிடம் நிலம் இல்லை. இன்று சிறு விவிசாயிகளாக உருவாகி இருக்கும் பல லட்சம் பிற்படுத்தப்பட்ட மக்களும் அக்காலத்தில் கூலி அடிமைகளாக இருந்தவர்களே!

கூலித் தொழிலாளர்களின் கொடுமை

இந்த நிலையை மாற்றியதில் கம்யூனிஸ்ட் இயக்கம், சீனிவாசராவ்,திராவிட இயக்கம், ஏ.ஜி.கஸ்தூரிரங்கன்,மணலூர் மணியம்மை என பலரையும் சொல்லலாம். அறிஞர் அண்ணாவின் எழுத்துக்களில் கூலித் தொழிலாளர்களின் கொடுமை பிரதானமாக இருந்தது. அவரது செவ்வாழை சிறுகதை ஆண்டைகள் கோர முகத்தையும் குணத்தையும் தோலுரித்துக் கட்டியது. கலைஞர் இந்த கொடுமைகளை நேரடியாகக் கண்டுணர்ந்தவர் நேரடியாக விவசாயிகள் கிளர்ச்சியில் அவர் ஈடுபடா விட்டாலும் இந்தக் கொடுமைகளுக்கு கோட்பாட்டு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்த பண்ணையார் சிந்தாத்தையும், மதத்தையும் எதிர்த்தார். இந்த போராட்டங்களும் குரல்களும் அத்தக் கூலியை விழுந்த கூலியாக மாற்றியதே தவிற நிலமை மாறி விடவில்லை. வெண்மணி கிராமத்தின் கடைசி குடிசையான ராமையாவின் குடிசைதான் அதை பெருமளவு மாற்றக் காரணமாக இருந்தது.

ஆதீனங்களின் சொத்துக்களும் கூலிக்கான போராட்டமும்…!

’சிவன் சொத்து குலநாசம்’ என்ற பழமொழி உண்டு. பழமொழிகள் மக்களிடம் இருந்து உருவாகிறது. ஆனால் இந்த சிவன் சொத்து பழமொழியை உருவாக்கியவர்கள் ஆதீனங்களும், மடாதிபதிகளும் கோவில் சொத்துக்களை மக்கள் எடுத்து விடக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட ஏற்பாடுதான் இந்த பழமொழி. பக்தியால் வருமானம் இல்லாத போது பயபக்தியை உருவாக்கி எப்படி வருமானம் ஈட்டினார்களோ அதற்கு இணையானதுதான் இதுவும்.

தமிழ்நாட்டின் உணவு உற்பத்திக்கு ஆதாரமான மொத்த விளை நிலங்களில் 30 சதவிகிதம் காவிரி பெரு நிலப்பரப்பில் இருந்தது.காவிரி கடைமடை வரை ஓடி வளம் கொழித்த காலமது. ஆனால். அந்த பயனை மக்கள் அனுபவிக்கவில்லை. நிலம் குறைவானவர்களிடம் இருந்தது. பெரும்பான்மை நிலங்கள் ஆதீங்களிடமும் மடாலயங்களிடமுமே இருந்தன. இப்போதும் இருக்கின்றன.

தமிழகத்தில் 38 ஆயிரத்து 491 கோயில்கள் மடங்கள் உள்ளன என்கிறது இந்து சமய அறநிலையத்துறை. இதில் சைவ, வைணவ மடங்கள் 56 இந்த மடங்களுக்குக் கீழ் 57 கோவில்கள் இருக்கிறதாம். இந்த கோவில்களுக்கு 4 லட்சத்து 22 ஆயிரத்து 930 ஏக்கர் நிலங்களும்,. மடங்களுக்கு 55 ஆயிரத்து 8245 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 4 லட்சத்து 78 ஆயிரத்து 755 ஏக்கர் நஞ்சை புஞ்சை நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களின் மதிப்பு சுமார் 12 ஆயிரம் கோடிக்கு மேல். உண்மையில் அளவிட முடியா அளவுக்கு 6 லட்சம் ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளதாக பலரும் சொல்கிறார்கள்.

மடங்களில் கோடீஸ்வர மடம் தருமபுரம் ஆதின மடமும், திருப்பனந்தாள் காசிமடமும்தான். இவை இரண்டும் காவிரி பாசன நிலத்தில் அமைந்துள்ளது. அதன் பின்னர் திருவாடுதுறை மடங்கள், சங்கர மடம் என தமிழகம் முழுக்க சென்னை முதல் கன்னியாகுமரி வரை மடங்களின் சொத்துக்கள் பரந்து விரிந்துள்ளன. திருப்பனந்தாள் மடத்துக்கு மட்டும் 6 ஆயிரம் வேலை நிலம் உள்ளதாகச் சொல்கிறார்கள். ஒரு வேலி என்பது 6.5 ஏக்கர் நிலம். சுமார் 40 ஆயிரம் ஏக்கர். இது போக திருவாவடுதுறை ஆதீனம், வானமாமலை ஆதீனம், திருக்குறுங்குடி ஜீயர் மடம், தர்மபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம், அகோபில மடம், காஞ்சி சங்கர மடம் போன்ற சில ஆதீன மடங்களுக்குச் சொந்தமாகத்தான் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குவிந்துகிடக்கின்றன. திருவாவடுதுறை ஆதீனத்துக்கு மட்டும் சுமார் 19,000 ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. இவை அனைத்தில் இருந்தும் குத்தகைப்பணம் கோடி கோடியாக வருகிறது.

அடிவானம் வரை விரிந்து பரந்த நிலத்தில் எந்த ஆண்டையின் வியர்வையோ, ஆதீனத்தின் வியர்வையோ சிந்தியதில்லை. கண்காணாத அளவுக்கு பரந்து விரிந்த இந்த நிலத்தை வளம் கொழிக்கும் முப்போக நிலமாக மாற்ற கூலி அடிமை முறையும், அவர்களை அடக்கி ஆள சாதிக்கொடுமைகளும், சாஸ்திர சம்பிரதாயங்களும் தேவைப்பட்டன.

அக்காலத்தில் கம்யூனிஸ்டுகள் இந்த தொழிலாளர் பிரச்சனையில் தலையிட்ட பிறகு கூலியைப் பெற பல போராட்ட வடிவங்கள் உருவாக்கப்பட்டன. அதிலொன்று கூலி கொடுப்பதில் ஏமாற்று வேலையைச் செய்யும் ஆதீனங்கள் முன்னால் கூலித் தொழிலாளர் பெண்கள் தலைவிரிகோலமாக மாரடித்து ஒப்பாரி வைத்து அழுவார்கள். சைவ மடத்திற்கு தோஷமாகி விடும் என பயந்து தொழிலாளர்களுக்கு கூலி கொடுத்து விடுவார்கள். மிகப்பெரிய கொடுமைகளைச் சந்தித்துதான் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை நிலை நாட்டிக் கொண்டார்கள். அதற்கு ஈடாக தங்கள் இன்னுயிரை ஈந்தார்கள் மக்கள். ராமையாவின் குடிசையில் பலியான 44 பேர் மட்டுமல்ல. சாணிப்பால் சவுக்கடிக்கு எதிராகப் போராடி கொல்லப்பட்ட ஒவ்வொரு தியாகியின் வரலாற்றிலும் ஆதினங்களின் ரத்தம் உள்ளது.

ஜமீன் தாரி முறை

ஜமீன் தாரி முறை ஒழிக்கப்பட்டது, அதற்கு முன்பே சதி பழக்கத்தை வெள்ளையர்கள் ஒழித்தார்கள். பின்னர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்று நான்கு ஏக்கர் ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளை நாம் தஞ்சையில் பார்க்கிறோம். தங்களுக்கு இந்த நிலம் எப்படி வந்தது என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனாலும் இன்னமும் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆதீனங்களுக்கும் மடாதிபதிகளுக்கும் எதற்கு என்ற கேள்வி மக்களிடம் எழவில்லை? அப்படி ஒரு எண்ணம் உருவாகாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மடங்களைப் பாதுகாக்கும் தத்துவம் எது?

படிக்க:

 அயோத்தியா மண்டபம்: அரவான் களப்பலி, நந்தனார் சரித்திரம் அரங்கேற்ற உரிமை கேட்போம்!

 பார்ப்பன(இந்து) மதத்தை மறுத்து சுத்த சன்மார்க்கம் கண்ட வள்ளலாரை காவிகளிடம் இருந்து மீட்போம்!

இன்று காவிரியில் நிலமை மாறி விட்டது. கூலிக்கு ஆள் கிடைப்பதே பெரும்பாடாகி விட்டது. வேகாத வெயிலில் வெந்து தணிவதை இட திருப்பூரிலோ, ஈரோட்டிலோ பனியன் கம்பெனியில் வேலை செய்யலாம் என்ற நிலைக்கு கூலித் தொழிலாளர்களின் வாரிசுகள் சென்று விட்டார்கள். காவிரி தண்ணீர் கடைமடை வரை வருவதில்லை. கர்நாடக மாநிலத்தின் வஞ்சம் கடைமடையை தென்னை விவசாயத்தின் பக்கம் தள்ளி விட்டது. விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகள் ஏழ்மையில் உழல்கிறார்கள். விவசாயம் பலவீனமாகி விட்ட இக்காலத்தில் நிலத்திற்கு பெரும் மதிப்பு கூடியிருக்கிறது. அந்த நிலங்களைக் காட்டி ஆதீனங்களின் ஆசையை பாஜக தூண்டியிருக்கிறது. அதனால்தான் அவர்கள் பல்லக்குத்தூக்கும் மரபு உரிமை என இப்போது பேசுகிறார்கள்.

மனிதனை மனிதன் சுமப்பது இழிவு. மனிதனை மனிதன் சுமக்கலாம் என்றால் முன்பொரு காலத்தில் வேதத்தின் பெயரால் சொன்னவை செய்தவை அனைத்தையும் இனி வருங்காலங்களிலும் செய்யலாம்தானே!

அருள் எழிலன்
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here