சமகாலத்தில் உலகின் கொடிய பயங்கரவாதியாகவும் யூத, ஜியோனிச இனவெறியுடன் பாலஸ்தீனியர்களை இன அழிப்பு செய்வதற்கு வெறியுடன் அலைந்து கொண்டிருக்கும் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரது நாட்டைச் சேர்ந்த பிணைக் கைதிகள் ஆறு பேர் காசாவில் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக நாடகமாடியுள்ளார்.
அதேபோல இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஆரவாரத்துடன் நிறுவப்பட்ட சத்திரபதி சிவாஜி சிலை சமீபத்திய காற்று வீசிய காலத்தில் உடைந்த நொறுங்கியதை கண்டு மனம் நொந்து போய் இருப்பதாகவும் சிவாஜியிடம் மன்னிப்பு கேட்பதாகவும் இந்தியாவின் பிரதமரான பாசிச மோடி மன்னிப்பு கேட்டுள்ளார்.
இந்த மன்னிப்புகளின் பின்னணியில் நடந்தது என்ன?
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்.,7 அன்று தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரைக் கொலை செய்தனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனையடுத்து ஹமாஸ் அமைப்புக்கு எதிராக பாலஸ்தீன மக்களை அடியோடு கொன்று ஒழிக்கின்ற வகையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் நாட்டைச் சார்ந்த பிணைக்கைதிகள் 6 பேரை கொன்றதாக செய்திகள் பரவியது. அவர்களின் உடல்களை சுரங்கத்தில் இருந்து இஸ்ரேலிய ராணுவம் மீட்டது. இந்த சூழலில் இஸ்ரேல் மக்கள் அந்நாட்டின் பல நகரங்களில் இஸ்ரேலின் பிரதமரான பாசிச நெதன்யாகுவுக்கு எதிராக, “பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்து! பிணை கைதிகளை காப்பாற்று!” என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் நெதன்யாகு அரசு, பிணைக்கைதிகளை மீட்க தவறிவிட்டதாக குற்றம் சுமத்துகின்றனர்..
இந்நிலையில் நேற்று நிருபர்களை சந்தித்த பெஞ்சமின் நெதன்யாகு,: “பிணைக்கைதிகளை உயிருடன் மீட்க முடியாததற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன். அவர்களை நாங்கள் நெருங்கியும் மீட்க முடியவில்லை. இதற்காக ஹமாஸ் அமைப்பினர் கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்”. என்று ஒருபுறம் மன்னிப்பு கேட்பதைப் போலவும், மறுபுறம் ஹமாஸ் இயக்கத்திற்கு எச்சரிக்கின்ற வகையிலும் பேசியுள்ளார்.
அதுபோலவே சத்திரபதி சிவாஜி சிலை உடைந்து நொறுங்கியதை பற்றி இந்தியாவின் பிரதமர் மோடி கூறுகையில், “சத்ரபதி சிவாஜி மகராஜா என்பது நமக்கு வெறும் பெயர் அல்ல… இன்று நான் என் கடவுள் சத்ரபதி சிவாஜி மகாராஜாவிடம் தலை வணங்கி மன்னிப்பு கேட்கிறேன். அவர் மீது நாங்கள் அளவுக் கடந்த மதிப்பு வைத்துள்ளோம்”. என்று பேசியுள்ளார்.
பாசிஸ்டுகள் மன்னிப்பு கேட்பது அப்பட்டமான நாடகம் என்ற போதிலும், அவர்கள் உண்மையை மறைத்து மன்னிப்பு கேட்பதை வைத்து, அவர்கள் ஏதோ மனம் திருந்தி விட்டதைப் போல ஊடக நரிகள் பிரச்சாரம் செய்கின்றன..
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக கொடூரமான தாக்குதலை நடத்தி வருகின்ற நெதன்யாகு பல்லாயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்த போது அவரது மனம் சிறிதும் இரங்கவில்லை; குழந்தைகள், பெண்கள் என்று வீதியில் நின்று கதறி அழும்போதும் அவரது மனம் இறங்கவில்லை; இந்தக் கொடுமைகளுக்கு பதிலடியாக ஹமாஸ் இயக்கத்தினர் ஆறு பேரைக் கொன்றதாக செய்தி கிடைத்தவுடன் இஸ்ரேல் மக்களுக்காக கவலைப்படுவதாக நீலி கண்ணீர் வடித்து இஸ்ரேல் மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக நாடகமாடியுள்ளார்.
படிக்க:
♦ பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்பு போருக்கு எதிராக போராடுவோம்!
♦ சிவாஜி சிலை உடைந்ததும், பார்ப்பன அடிமைத்தனத்தின் குறியீடான சிவாஜி வீழாததும்!
அதேபோல சிவாஜி சிலையை அமைப்பதற்கு ஒப்பந்தம் ஏற்று அதை கட்டிக் கொடுத்த நிறுவனம் எந்த லட்சணத்தில் கட்டியிருந்தால் இவ்வளவு குறுகிய காலத்தில் சாதாரண காற்றடிக்கு கூட தாங்காமல் சிலை இடிந்து விழுந்தது என்பதை பற்றி பரிசீலிக்க மோடி தயாராக இல்லை. அந்த நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய்களை பெற்றுக்கொண்டு இவ்வளவு மட்ட ரகமான முறையில் சிலையை கட்டிக் கொடுத்ததற்கு ஊழல் தான் அடிப்படை என்பதை பற்றி கவலைப்படவில்லை.
இதே சமகாலத்தில் தான் விண்வெளி தொழில்நுட்பத்துடன் கூடிய பாலங்களை கட்டுகின்றோம் என்று மார்தட்டிக்கொண்ட மோடி அரசாங்கத்தினால் கட்டப்பட்ட பல்வேறு பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. ‘குஜராத் முன்னுதாரணம்’ என்று பெருமை பீற்றிய குஜராத்தில் சாலைகள் பேப்பரைப் போல் பிய்த்துக் கொண்டு வருகின்றன. இதையெல்லாம் பற்றி கொஞ்சமும் குற்ற உணர்ச்சி அடையாத மோடி, சிவாஜி சிலை இடிந்து விழுந்ததன் மூலம் தனது ஓட்டு வங்கி பாதிக்கப்பட்டு விடும் என்ற பதட்டத்தில் மன்னிப்பு கேட்கிறார்.
தனது நாட்டு மக்களை போரில் ஈடுபடுத்தி பல்லாயிரக்கணக்கான கோடி டாலர் கடனை அவர்கள் தலையில் சுமத்தி வரும் நெதன்யாகுவும், தமது நாட்டு மக்கள் பயன்படுத்துகின்ற பாலங்கள், சாலைகள் ஆகியவற்றில் பல்லாயிரம் கோடி ஊழல் நடந்ததை மூடி மறைத்து அதன் பாதிப்புகளை மக்கள் தலையில் சுமத்தி கொடுமைப்படுத்தி வரும் பாசிச மோடியும் கேட்கின்ற மன்னிப்புகள் ஒருபோதும் ஏற்கப்பட மாட்டாது. ஏற்கப்படவும் கூடாது.
நாட்டு மக்களுக்கும், நாட்டின் சொத்துக்களுக்கும் எதிராக செயல்படுகின்ற இது போன்ற பாசிச பயங்கரவாதிகளை உரிய முறையில் விசாரணை நடத்தி தண்டிப்பதன் மூலம் தான் உண்மையான நீதியை நிலை நாட்ட முடியும்.
போலித்தனமான மன்னிப்புகள் பெரும்பான்மை மக்களுக்கு எந்தப் பயனையும் தராது! பாசிஸ்டுகளின் நாடகத்திற்கு மயங்கி பலியாக கூடாது என்பதை பட்டாளி வர்க்கத்திடம் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது.
- மாசாணம்.