
மும்பை நகரின் தாராவியில் உள்ள உழைக்கும் மக்களுக்கு வீடுகட்டிக் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த அதானி குழுமம் மகாராஷ்டிரா அரசிடம் இருந்து ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. இந்திய நாட்டின் வளங்களை, இந்திய அரசின் சொத்துக்களை சுருட்டி தனதாக்கிக் கொள்வதில் இணையற்ற ஆற்றலுடன் விளங்கும் அதானி குழுமம் இந்தத் திட்டத்திலும் தனது கைவரிசையை காட்ட முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
தாராவி, மும்பையில் உழைக்கும் மக்கள் வாழக்கூடிய சேரி பகுதி. இது இரண்டரை சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சேரிப் பகுதியான தாராவியில் தலித் மற்றும் பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களும் முஸ்லிம்களும் என சுமார் 6.5 லட்சம் மக்கள் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) வாழ்கிறார்கள். இப்பொழுது இந்த மக்கள் தொகை இரட்டிப்பாகி இருக்கும்.
கடந்த நூற்றாண்டில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்தும் குஜராத் போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் இருந்தும் தாராவிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து குடியேறியுள்ளனர்.
இம்மக்கள் தாராவிக்கு வந்த பொழுது தாராவி, மக்கள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக இல்லை. தங்கள் தலைகளில் மண்ணையும் கற்களையும் சுமந்து வந்து சதுப்பு நிலத்தில் கொட்டி அந்த நிலத்தை பண்படுத்தி வீடுகளைக் கட்டி வசிக்கத் தொடங்கினர்.
அடுத்தடுத்த தலைமுறைகளில் தங்கள் குடும்பம் விரிவடைவதற்கு ஏற்ப தங்களின் வீடுகளின் மீது மேலும் அறைகளைக் கட்டி வசிக்கின்றனர். இந்த வீடுகள் மிகவும் சிறியவை. போதிய வசதிகள் அற்றவை. தாராவியில் அமைந்துள்ள வீடுகள் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தகுதியற்றவை. மேலும், சிறு பட்டறைகள் வைத்து தங்கள் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொண்டனர். பல ஆண்டுகளாக தாராவி இந்திய வறுமையின் குறியீடாகவே பல்வேறு நாடுகளால் பார்க்கப்படுகிறது. தாராவியைச் சுற்றியுள்ள மிக பணக்காரர்கள் வசிக்கும் பகுதிகளும் இருந்து வருகிறது. தாராவி அவர்களுக்கு இழிவான சுற்றுப்புறமாக இருப்பதாலும் மும்பையின் விலையுயர்ந்த நிலத்தில் இந்த தாராவி சேரி அமைந்திருப்பது ஆளும் வர்க்கத்தின் கண்களை உருத்த செய்தது.
தாராவியை மறு சீரமைப்பு செய்வதற்கான ஒரு திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் அந்தத் திட்டம் பல்வேறு இடர்பாடுகளால் செயல்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.
படிக்க: கொடூரமான சுரண்டல் பேர்வழியான டாடா மறைவும் –சமூக ஊடகங்களின் ஒப்பாரியும்!
இந்த நிலையில், தாராவியின் வீடுகளை, அதாவது சேரியை, அகற்றிவிட்டு நவீன நகர்ப்புற வாழ்விடமாக அப்பகுதியை மாற்றப் போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சுமார் ரூ.20,000 கோடி மதிப்பிலான 259 ஹெக்டேர் தாராவி கிளஸ்டர் மறுவடிவமைப்பு திட்டத்திற்கான டெண்டரை 2022ல் அதானி குழுமம் வென்றுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக அதானி குழுமம் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்து விடும் என்பது உறுதி.
அதானி குழுமத்தால் இந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்பட உள்ளது? மக்களுக்கு எந்த இடத்தில் வீடுகள் ஒதுக்கப்படும்? ஏற்கனவே மக்களின் வீடுகளும் அவர்களின் தொழில் பட்டறைகளும் சேர்ந்து இருக்கின்றன. அதானி குழுமத்தால் ஒதுக்கப்படும் வீட்டுடன் இணைந்ததாக பட்டறைகள் இருக்குமா? அல்லது வேறு இடத்தில் ஒதுக்கப்படுமா? அல்லது பட்டறைகள் என்று எதுவும் ஒதுக்கப்பட மாட்டாதா? என்பன போன்ற எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை.
வெறுமனே, 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு தாராவிக்கு வந்தவர்களுக்கு வாடகைக்கு வீடுகள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2020 ஆம் ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட கட்டுமானங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு 350 சதுர அடி இடம் (வீடு) ஒதுக்கப்படும். ஏற்கனவே இதைவிட அதிகமான சதுர அடி உடைய வீடுகளை கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் இதற்கு மேல் ஒதுக்கப்பட மாட்டாது என்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க: தேர்தல் மூலமாக தாராவியை சட்டப் பூர்வமாக திருடத் துடிக்கும் அதானி!
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இங்கு வசிக்கும் மக்கள் தங்களின் வீடுகள், பட்டறைகள் என பாதிக்கும் மேல் இழக்க நேரிடும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த தாராவியில் உள்ள நிலங்கள் மட்டுமின்றி மும்பை நகரில் உள்ள பகுதிகளான முலுண்ட், குர்லா பால் பண்ணை, உப்பள நிலங்கள், தியோனார் குப்பை கிடங்கு மற்றும் மத் தீவு ஆகிய பகுதிகளில் கூடுதலாக 1,080 ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மாநிலத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நில ஒதுக்கீடு, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாகியுள்ளது. இந்த நில ஒதுக்கீடு என்பது மாநிலத்தில் உள்ள நிலங்களை அதானி குழுமம் ஆக்கிரமிப்பதற்கான ஏற்பாடு என்பதாகவே மக்களால் விமர்சிக்கப்படுகிறது.
தேர்தலில் பாஜக கூட்டணி வெல்லுமா தோற்குமா என்று தெரியாத நிலையில், தேர்தல் நெருங்கி வரும் கடைசி கட்ட பரபரப்பிலும் கூட, பாஜக கூட்டணி அரசு அதானிக்கு சொத்து சேர்ப்பதை எவ்வளவு கனகச்சிதமாக செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்து அதானி புல்லரித்துப் போக வாய்ப்பு உண்டு.
—குமரன்
செய்தி ஆதாரம்: Thewire