இரண்டு மகன்கள், இரண்டு நீதி கட்டமைப்புகள். இவை இரண்டும் விடுக்கும் ஒரே ஒரு செய்தி: “பணிந்து போ.”


இந்தியாவில் சமீபத்தில் இரண்டு பெரிய வீட்டுப் பிள்ளைகள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் அவர்கள் இருவரும் வெவ்வேறு விதங்களில் நடத்தப்பட்ட விதம் இந்திய சட்டத்துறையின் கேலிக்குரிய நிலையை அம்பலப்படுத்தி உள்ளது. அவர்களது வழக்குகள் கையாளப்பட்ட விதமோ தற்போது சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் தொடர்புதான் நீதியை, நியாயத்தை தீர்மானிக்கின்றன என்பதையும், இருவரில் யார் கொடூரமான அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார் என்பதையும் தெளிவாகவே காட்டிவிட்டன.

ஆஷிஷ் மிஸ்ரா, மத்திய அமைச்சரவையில் உள்ள இளம் உள்துறை அமைச்சரான அஜய் மிஸ்ராவின் அருமை மகன். அஜய் மிஸ்ரா பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அதிக சக்தி வாய்ந்த உறுப்பினர் என்பது முக்கிய செய்தி. அக்டோபர் 3 அன்று நடைபெற்ற எஸ்யூவி (SUV – Sports Utility Vehicle) கார்களின் அணிவகுப்பில் ஆஷிஷ்மிஸ்ரா பங்கேற்று விட்டு திரும்பி வரும் வழியில் லக்கிம்பூர் கெரி என்ற பகுதியில் அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் கூட்டத்தின் மீது கார்களை ஏற்றி விவசாயிகளைக் படுகொலை செய்திருக்கிறான்.

இந்த தாக்குதல் காரணமாக சம்பவ இடத்திலேயே நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டார்கள். கொலை செய்தவர்கள் வந்த வண்டிகள் வந்த அதே வேகத்தில் சிட்டாய் பறந்து ஓடி விட்டன. இதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னால்தான் மத்திய அமைச்சரான அஜய் மிஸ்ரா அதே பகுதியில் போராடும் விவசாயிகளுக்கு எதிராக வெறுப்பைக்கக்கி பேசியிருக்கிறார். விவசாயிகளை கொலை செய்வதற்கு தூண்டும் வகையில் அது தெளிவானதொரு முன்னோட்டமாகவே இருந்தது. “இரண்டே நிமிடம் போதும் உங்களை அடக்கி ஒழுங்குக்குக் கொண்டு வந்துவிடுவேன்” என்று எச்சரித்தார். மத்திய அமைச்சரான அஜய் மிஸ்ரா. இவர் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னால் ஒரு பெரிய ரவுடி. 2003-இல் கொலை குற்றம் சாட்டப்பட்டு 2004-இல் அதில் இருந்து விடுவிக்கப்பட்டார். இடையில் வழக்குமன்றத்தில் வைத்து அவரைக் கொலை செய்ய முயன்றார்கள் ஆனால் தப்பிவிட்டார். இவரது எச்சரிக்கைகளுக்கு முன்பே பா.ஜ.க.-வின் ஹரியானா மாநில முதல்வர் தன் அடியாட்களை அழைத்து “வெறிகொண்டு போராடும் விவசாயிகளைக் கட்டையால் தாக்கி, மண்டையை பிளங்கள், சண்டை போடுங்கள்” என்று கட்டளை போட்டிருக்கிறார்.

இந்திய விவசாயிகள், கடந்த ஓராண்டாகவே விவசாயத்தை ஒழித்துக்கட்டும் மோடியின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். கடந்த ஓராண்டாக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தின் மீது அரசின் கொடூரமான தொடர்தாக்குதல்களும் நடந்தன. சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அரசு அதிகாரிகள் நியாயப்படுத்திப் பேசினார்கள். அமைச்சர் அஜய் மிஸ்ரா தன் பங்குக்கு விவசாயிகள்தான் முதலில் வண்டியை தாக்கினார்கள் என்று சொன்னார். ஆனால் அமைதியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது வரிசையாகக் கார்கள் பாய்ந்து தாக்கியதை வீடியோக்கள் மிகத்தெளிவாகக் காட்டின.

விவசாயிகள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்த பிறகு, சம்பவம் நடந்து பல நாட்கள் கழிந்த பிறகு அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஷ்ரா கைது செய்யப்பட்டான். இந்த ஈவிரக்கமற்ற செயலை செய்த அவன் நாட்டின் ஆகப்பலமிக்க நபர்களால் பாதுகாக்கப்பட்டான், ஆதரிக்கப்பட்டான். அதிகாரிகளும் உள்ளுக்குள்ளே கருவிக் கொண்டுதான் அவனை கைது செய்து விசாரணையைத் தொடங்கினார்கள்.

கார்களை ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட நாளுக்கு முந்தின நாள் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 23 வயது மகன் ஆர்யன்கான் போதை தடுப்பு அதிகாரிகளால் (NCB – Narcotics Control Bureau) கைது செய்யப்பட்டார். எங்கே? மும்பை கடற்கரையை ஒட்டி சுற்றுலா கப்பல் ஒன்றில் வைத்து செய்தியாளர்களின் கேமராக்கள் முன்பு வெட்ட வெளிச்சமாகவே கைது செய்யப்பட்டார். அந்த இடத்தில் பா.ஜ.க. நிர்வாகி, தனியார் துப்பறிவாளர் என்றும் அறியப்பட்ட ஒரு நபர் கேள்வி எழுப்பியபடி அங்கு சுற்றி வந்திருக்கிறார்.

உண்மையில் ஆர்யன்கான் போதையில் இருந்ததாகவோ, அவர் வசம் போதைப்பொருள் இருந்ததாகவோ எந்த ஒரு தடயமும் இல்லை. ஆனால் சடுதி வேகத்தில் திரையுலகின் ஒழுக்கக்கேடு பற்றி செய்தி ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துத் தீவிரமாக விவாதிக்கத் தொடங்கின. ஆனால் அவை உ.பி விவசாயிகள்  மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் பற்றி சட்டையே செய்யவில்லை.

இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்களே எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். ஷாருக்கான் ஏதோ பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவர் மட்டும் இல்லை, அவர் உலக அளவில் இஸ்லாமிய குறியீடு. அவர், நாட்டில் மதசகிப்புத் தன்மையற்ற இந்துமதவெறி பற்றியும், மதரீதியான பாரபட்சம் இந்தியாவில் காட்டப்படுகிறது என்றும் எதிர்த்து துணிவுடன் பேசினார்.

அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு உலக அளவில் முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவது பற்றி பேசும் படமான “என் பெயர் கான்” என்ற படத்தில் 2010-இல் நடித்தார்.

“சக்தே இந்தியா” என்ற படத்தில் கான் ஒரு ஹாக்கி பயிற்சியாளராக நடித்திருப்பார். அவர் தன் திறமையை பாகிஸ்தானுக்கு விற்றுவிட்டதாக பெரும்பான்மை சமூகம் பார்க்கும்போது தேசபக்திமிக்கவராக தன்னை நிரூபிக்க நிர்ப்பந்திக்கப்பட்டவராக நடித்திருப்பார். ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் இப்படம் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் இன்றைய இந்தியாவில் மோடியின் ஆட்சியின் கீழ் நடக்கும் பல பிரச்சினைகளை அப்படம் தொட்டுக்காட்டுவது போலவே இருக்கும். அதாவது முஸ்லிம்கள் பழிதூற்றப்படுவதை, பயங்கரவாதியாக சித்திரிக்கப்படுவதை அது காட்டியது.

2015-ல் ஷாருக்கான் இந்தியாவில் மதசகிப்புத்தன்மை அற்றுப் போகின்றது என்று வெளிப்படையாக பேசிய பிறகு அவர் ஒரு பயங்கரவாதி என்று குற்றம் சாட்டப்பட்டார். இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் முதல்வரும், தீவிர இந்து சாமியாருமான யோகி ஆதித்யநாத் ஒருமுறை ஷாருக்கானை பாகிஸ்தானிய பயங்கரவாதியாக ஒப்பிட்டுப் பேசினார். வலதுசாரி அதிகாரவர்க்கமும், சமூக ஊடகங்களும் தொடர்ந்து அவரைப்பார்த்து “பாகிஸ்தானுக்கு போ” கூவின.

தன் தந்தை “சக்தே இந்தியா” படத்தின் கதைகளத்தை மறுபடி வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஆர்யன்கான் இன்னமும் சிறையில் இருக்கிறார். மோடி அரசாங்கத்தின் அதிகாரிகள் உட்பட பலரும் சமூக ஊடகங்களில் ஷாருக்கானை துரோகி என்றே அழைக்கின்றனர். பிரபல ஆன்லைன் கல்வி நிலையம் ஒன்று ஷாருக்கானோடு போட்டிருந்த ஒப்பந்தத்தை கிடப்பில் தூக்கிப்போட்டு விட்டது. அவர் வேலை மும்பை திரைத்துறையோ அரசியல் அழுத்தத்திற்கு அதிகமாக வளைந்து கொடுக்க தொடங்கிவிட்டது. அவரை துறையில் இருந்து ஓரம்கட்ட பச்சையான நிர்ப்பந்தம் தொடங்கிவிட்டது.

அக்டோபர் 2 அன்று சொல்லிவைத்தாற்போல பிரபல இயக்குனர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் வாழ்க்கை வரலாற்றை படம் எடுக்கப் போவதாக அறிவிக்கிறார். எந்த ட்விட்டர் செய்தி ஷாருக்கானையும் அவரது படங்களையும் புறக்கணிக்க கூறுகிறதோ, துரோகி என்று அவருக்கு முத்திரை குத்துகிறதோ அதே செய்திகள் கோட்சேவை கதாநாயகன் என்று புகழ்ந்து தள்ளுகின்றன. மோடியின் இந்தியாவில் உயிர்வாழ வேண்டுமானால் நம்மைச் சூழ்ந்துள்ள வெறுப்பு அரசியலை துடைத்தெறிவது ஒன்றே வழி. இந்த இரு புத்திரர்களின் வாழ்க்கை கட்டத்தைக் கவனித்து வரும் எவர் ஒருவருக்கும் இந்நேரம் செய்தி தெட்டத்தெளிவாக இருக்கும், அது “பணிந்து போ” என்பதே.

ஒரு புத்திரன் அரவணைத்து பாதுகாக்கப்படும் போது மற்றொரு புத்திரன் அதட்டி கண்டிக்கப்படுகிறான் அவனது பிரபல நட்சத்திர தந்தைக்கு பாடம் கற்றுக் கொடுப்பதற்காக. இது ஏதோ ஒரு ஷாருக்கான் பற்றிய சில்லறை செய்தி அல்ல. மாறாக, மோடியின் முன்னால் அவரது தேசிய காட்சி உருவின் முன்னால் உடலின் எட்டு அங்கங்களும் தரையில் பட பணிந்து வணங்க மறுப்பவர் எவரோ அவர்மீது கோபத்தோடும், சீற்றத்தோடும், வன்மத்தோடும் அரசாங்கம் பாயும் என்பதுதான் இவை சொல்ல வரும் செய்தி.

பொதுவாழ்வில் தாக்கம் விளைவிக்கும் வலுவான குரல் உள்ள எல்லா இந்திய குடிமக்களுக்கும் இது ஒரு கணக்குத் தீர்க்கும் தருணம் – “ஒன்றுபடு, போராடு அல்லது பயந்து பயந்து அழிந்து போ.”

ராணா அய்யூப், ஜம்மு-காஷ்மீர்.
உலகளாவிய கருத்துப்பரிமாற்ற எழுத்தாளர்.
அக்டோபர் 13, 2021.

 

 

 

நன்றி: வாஷிங்டன் போஸ்ட் (WASHINGTON POST)  “Democracy Dies in Darkness”

தமிழில்: இராசவேல்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here