ந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் வாங்கியதாக கூறப்பட்ட காலத்தில் இருந்து அமல்படுத்தி வந்த வெள்ளைக்காரர்கள் கொண்டு வந்த மெக்காலே கல்வி முறை இந்த நாட்டில் உள்ள பார்ப்பனர்கள், மேல் சாதிகள் மற்றும் ஆதிக்க சாதிகளுக்கு பல்வேறு பயன்களை அளித்து வந்தது.

‘நெல்லுக்கு பாயும் தண்ணீர் ஆங்கே புல்லுக்கும் பொசியும்’ என்பதைப் போல நாட்டின் பெரும்பான்மை மக்களான பட்டியலின மக்கள், பழங்குடிகள் மற்றும் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தப்படும் பிற்படுத்தப்பட்ட சாதியில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு மெக்காலே கல்வி முறை சில வாய்ப்புகளை உருவாக்கியது.

பிரிட்டன் காலனி ஆதிக்கத்திற்கு முன்பு இந்தியாவில் நிலவிய குருகுலக் கல்வி முறை பார்ப்பனர்கள் மட்டுமே படிக்கின்ற வகையில் கட்டமைக்கப்பட்டிருந்தது என்பதை இங்கே வரலாற்றில் கருப்பு பக்கங்களாக நாம் அறிந்துள்ளோம்.

”கல்வி என்பது அறிவைப் புகட்டுவதற்காக மட்டுமல்லாமல், ஒரு மனிதனுக்கு உயரிய பண்புகளை போதித்து, அவனை மேன்மையான மனிதனாகச் செய்வதே கல்வியின் உண்மையான நோக்கம். அத்தகைய கல்விமுறைதான் அன்றைய குருகுலத்தில் கற்பிக்கப்பட்டது. குருகுலத்தில் கற்பவர்கள் எப்போதும் தவறான வழிக்குச் செல்ல மாட்டார்கள்; மற்றவர்களின் மனம் புண்படும்படிப் பேச மாட்டார்கள்; அநாகரிகமாக நடந்துகொள்ளவும் மாட்டார்கள். நம் நாட்டில் ஆங்கிலக் கல்வி முறை வருவதற்கு முன்பு பெரும்பாலும் குருகுலக் கல்விமுறையே இருந்து வந்தது.” அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்த குருகுலக் கல்வியின் மேன்மை பற்றி விவரிக்கிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

கற்றுக் கொள்வதற்கு தகுதி மட்டுமல்ல, சொல்லிக் கொடுப்பதற்கும் எங்களுக்கு தான் தகுதி உண்டு என்று ’வர்ணமாம் பிராமணே குரு’ என்று கொட்டமடித்து வந்தது பார்ப்பனக் கும்பல்.

இந்த குருகுலக் கல்வி முறைகளுக்கு சாவு மணி அடித்தது மெக்காலே கல்வி முறை என்ற வகையில் அது முற்போக்கு பாத்திரத்தை வகித்தது என்பது உண்மைதான். ஆனாலும் அதன் நோக்கம் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் கல்வி அறிவு பெற்று முன்னேற வேண்டும் என்பது அல்ல.

தனது அரசு நிர்வாகத்திற்கு தேவையான குமாஸ்தாக்களை உருவாக்குகின்ற, ’உடலால் இந்தியனாகவும், மூளையால் வெள்ளையனாகவும்’ செயல்படுகின்ற அடிமைகளை உருவாக்குகின்ற கல்வி முறைக்கு பெயர் தான் மெக்காலே கல்வி முறை.

இந்தியா போலியான சுதந்திரம் பெற்ற பிறகு கல்வியை மேம்படுத்த பல்கலைக் கழகக் கல்வி ஆணையம் மற்றும் மேல்நிலை கல்வி ஆணையம் உள்பட பல்வேறு ஆணையங்களை காங்கிரசு அரசு அமைத்தது.

அதேபோல, தேசிய கல்விக் கொள்கையை வகுக்க தௌலத் சிங் கோத்தாரி தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகளை 1968ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முதலாவது தேசியக் கல்விக் கொள்கையை வெளியிட்டார்;. 1986 ஆம் ஆண்டில் இரண்டாவது தேசிய கல்விக் கொள்கையை அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி வெளியிட்டார்.

படிக்க:

 புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் தொடர் கட்டுரை!
 புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் பகுதி 2

இதற்குப் பின் நரசிம்மராவ் பிரதமரான போது, 1986 ஆம் ஆண்டு கல்விக் கொள்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பிறகு 2005 ஆம் ஆண்டில் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு ஒரு கல்விக் கொள்கையை முன்வைத்தது.

ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வருவது வரை இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வந்த கல்வி முறைகளுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட இரண்டாவது புதிய கல்விக் கொள்கை கல்வியில் பல மாற்றங்களை உருவாக்கியது. அந்த மாற்றத்தில் முதல் அம்சமே கல்வியில் அரசு தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழித்து விட்டு தனியார்கள் கொள்ளையடிப்பதற்கு, முழுமையாக கல்வி துறை என்ற பணம் காய்க்கும் மரத்தை உலுக்குவதற்கு தனியாரை அனுமதித்தது தான்.

கடந்த 2019-ம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் கல்வி குழு மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின்படி 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 29ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் 34 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கல்விக்கொள்கை முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது.

தற்போது பாசிச பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை 2020 ஏற்கனவே இருந்த கல்விக் கொள்கையே பரவாயில்லை என்ற வகையில் கல்வியை முழுக்க காவிமயமாக மாற்றியுள்ளது. ஆபாச வக்கிர கருத்துகளை திணிக்கும் புராண, இதிகாச குப்பைகள், அறிவியலுக்கு புறம்பான கட்டுக்கதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய கல்விக் கொள்கை புதுமையானது அல்ல.

பகுத்தறிவு கொண்டு எதனையும் சிந்திக்காத அடிமைகளை உருவாக்குகின்ற அதாவது ’உடலால் இந்தியனாகவும், மூளையால் ரோபோக்களை’ போல செயல்படுகின்ற நவீன காட்டுமிராண்டிகளைப் பெற்றெடுக்கின்ற கேடுகெட்ட கல்வி முறையாகும். இந்தக் கல்விக் கொள்கையை எதிர்க்கும் அல்லது புறக்கணிக்கும் மாநிலங்களுக்கு பாசிச பாஜக கல்விக்கான நிதியை நிறுத்தி ஆட்டம் போடுகிறது.

அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha Scheme) படி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும். அந்த வகையில் ஆண்டின் மொத்த செலவான ரூ.3586 கோடியை மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. அந்த வகையில் பார்த்தால் மொத்தமுள்ள ரூ.3,586 கோடியில் தமிழகத்திற்கு மத்திய அரசு மொத்தம் ரூ.2152 கோடி வழங்க வேண்டும். இதில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

மாநிலங்களின் பட்டியலில் இருந்த கல்வி படிப்படியாக இந்திய ஒன்றிய அரசின் கை கொண்டு செல்லப்பட்டு, தற்போது முழுக்க என்ன படிக்க வேண்டும்; எதை படிக்க வேண்டும்; எப்படி படிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கின்ற அனைத்து அதிகாரங்களும் இந்திய ஒன்றியத்திற்கே என்று மாறி உள்ளது. ”புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாட்டோம், எங்கள் மாநிலத்திற்கு வேறு ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கிக் கொள்வோம்” என்று தமிழகம் எதிர்ப்பு குரல் தெரிவித்ததாகவே தமிழகத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய தொகை நிறுத்தி வைக்கப்படுகிறது.

இதனை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை வன்முறையாளர்கள் என்றும், தீவிரவாதிகள் என்றும், தேசத்திற்கு விரோதமான கருத்துக்களை பரப்புகிறார்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறது ஆர்எஸ்எஸ் பாஜகவின் பாசிச குண்டல்படைகளில் ஒன்றான அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் (ABVP) என்ற அமைப்பு.

சூத்திரர்களும், பஞ்சமர்களும் வேதத்தின் படியும், புராண, இதிகாசங்களின் படியும், கல்வி கற்கவே முடியாது என்ற நிலையை மாற்றுவதற்கு இரண்டு, மூன்று நூற்றாண்டுகள் போராடி இந்த அளவிற்கு கல்வி கற்கும் உரிமையை பெற்றுள்ளோம். ஆனால் இவை அனைத்திற்கும் ஆப்பறைகின்ற வகையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை எந்த வடிவத்தில் திணிக்கப்பட்டாலும் அதை எதிர்த்து போராடுவோம்.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here