பூமியில் மனிதகுலம் தோன்றிய காலம் முதலே வாழ்வாதாரத்திற்காக பல்வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து   வாழ்ந்து வருகிறார்கள் என்பதை பல்வேறு தொல்லியல் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. நாடோடியாகத் திரிந்த மனிதகுலம்  தனக்கான உற்பத்தி போக உபரி எஞ்சியபோது,  உற்பத்தியை இலாபநோக்கில் செய்ய பல்வேறு பகுதிகளிலிருந்து மக்களை அடிமையாகப் பிடித்துவந்து உற்பத்தியில் ஈடுபடுத்தினர்.

இதற்கு மாற்றாக 18,19 நூற்றாண்டுகளில் அடிமை வர்த்தகத்திற்கு மாற்றாக இந்தியாவிலிருந்தும் பிற காலனி நாடுகளில் இருந்தும் ஒப்பந்த தொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள்தான் இன்று அமெரிக்காவிலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள ஆப்பிரிக்க இனத்தவர் மற்றும் தென்னாப்பிரிக்கா, கரிபீயத்தீவுகள், மலேசியா, சிங்கப்பூர், மியான்மார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழர்கள் மற்றும் இலங்கையின் மலையகத் தமிழர்களும்.

“குறைந்த கூலி நிறைந்த இலாபம்” என்பதே முதலாளித்துவ உற்பத்திமுறையின் நியதியாக இருந்ததால் இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை தங்களின் காலனி  ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளுக்கு அடிமைகளாகக் கடத்திச்சென்று கரும்பு, தேயிலை, ரப்பர் தோட்டங்களிலும், சுரங்கங்களிலும் வேலைக்கு அமர்த்தினர் ஆங்கிலேயர்கள்.

குறைந்த் கூலிக்கு சுரண்டப்படும் வடமாநிலத் தொழிலாளர்கள்

தொழிலாளிகள் புலப்பெயர்வுக்கு

என்ன காரணம்?

1990-களில் அறிமுகப்படுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் மூலதனத்தின் எல்லை கடந்த பாய்ச்சலுக்கு வழிவகுத்தது. எங்கெல்லாம் மூலதனம் பாய்ந்ததோ அங்கெல்லாம் குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். அதற்கேற்ப நாடுகளின் விசா மற்றும் குடியேற்ற நடைமுறைகள் மாற்றப்பட்டன. மூலதனத்தின் உலகமயமாக்கல் உழைப்பையும் உலகமயமாக்கியது.

எந்த ஒரு நாட்டிலும் உழைப்பில் ஈடுபட்டு, பொருளாதார ரீதியிலும், கல்வி அறிவிலும் மேம்படும் சமூகம் படிப்புக்கு ஏற்றவாறு வேலைதேடிச் செல்லும். ஒரு கூலித்தொழிலாளியின் மகன் தனது தந்தையின் தொழிலைச் செய்வதில்லை, அவன் படிப்புக்கேற்ற வேலையை தேடிக்கொள்கிறான் அல்லது சொந்தத்தொழில் செய்கிறான். அதனால் அதிக தொழில்திறன் தேவைப்படாத (unskilled) துறைகளில் காலியிடங்கள் உருவாகுவது இயல்பே. இத்தகைய துறைகள் குறிப்பாக, விவசாயம், கட்டுமானம், உணவகங்கள், உற்பத்திக்கூடங்கள், சுகாதாரம் போன்றவை மக்களின் அடிப்படைத் தேவைகளை உள்ளடக்கி இருப்பதால் இத்துறைகளின் கடைநிலையில் உருவாகியுள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டிய தேவை உள்ளது. இதற்கு பொருளாதாரத்திலும், கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் பின்தங்கிய பகுதியிலிருந்து வரும் தொழிலாளர்களைக் கொண்டு நிரப்புவதுதான் உலகம் முழுவதும் நடந்துவருகிறது.

அவ்வாறுதான் தமிழ்நாட்டிலிருந்து வெளியேறி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற கிழக்கு ஆசிய நாடுகளிலும் புலம்பெயர் தொழிலாளர்களாக லட்சக்கணக்கான தமிழர்கள் பணி செய்து வருகிறார்கள். உள்நாட்டிலேயே, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர்.

மற்றொரு பக்கம் குறைந்தபட்ச கூலி, 8 மணிநேர வேலை, வார விடுமுறை, ESI, PF, மருத்துவக் காப்பீடு, இழப்பீடு, ஓய்வூதியம், தொழிலாளியின் வர்க்க உணர்வு, தொழிலாளிக்காக வாதிடும் சங்கங்கள் போன்றவற்றால் இலாபம் குறையுமென்று நினைக்கும் முதலாளிகள் மேற்சொன்ன உரிமைகளைக் கோராத, அவற்றைப் பற்றிய எந்த புரிதலும் இல்லாத புலம்பெயர் தொழிலாளிகளை ஏஜெண்டுகள் மூலம் வரவழைத்து பணிக்கமர்த்துகின்றனர். அத்தொழிலாளர்களை எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத தகரக்கொட்டகைகளில் அடைத்துவைத்து நேர கட்டுப்பாடுகளோ, விடுமுறையோ இல்லாமல் கொடூரமாக உழைப்பை உறிஞ்சி இலாபத்தைக் குவிக்கும் முதலாளிகள் தங்களின் உழைப்புச் சுரண்டலை தந்திரமாக மறைத்து உள்ளூர் தொழிலாளிகள் சோம்பேறிகள், குடிகாரர்கள், அதிக விடுமுறை எடுக்கின்றனர் என்று இதுநாள்வரைக்கும் அவர்களுக்கு உழைத்துக்கொட்டிய தொழிலாளர்களையே குற்றவாளி யாக்குகின்றனர்.

எந்தவித பணி பாதுகாப்பும் இல்லாமல் பணியின்போது விபத்து ஏற்பட்டு காயம், நிரந்தர ஊனம், மற்றும் மரணம் ஏற்பட்டால் அத்தொழிலாளியின் பிணத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல கூட முதலாளியின் தயவு இருந்தால்தான் நடக்கும் என்ற நிலையில்தான் புலம்பெயர்த் தொழிலாளிகள் இருக்கின்றனர். “கடுமையான உழைப்பாளிகள், விடுமுறை எடுப்பதில்லை, எந்தநேரமும் வேலை செய்யச்சொன்னால் செய்கிறார்கள், குறைந்த கூலிதான் கேட்கிறார்கள்” என்று புளகாங்கிதம் அடையும் முதலாளிகள் கொரோனா ஊரடங்கின்போது அவர்களை ஈவு இரக்கமின்றி மொத்தமாக கைகழுவி விட்டனர். இலட்சக்கணக்கான தொழிலாளிகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே சொந்த ஊருக்குச் சென்றபோது எத்தனை முதலாளிகள் அவர்களுக்கு உணவு, வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்தனர்?

வடமாநில தொழிலாளிகள்தான்

உள்ளூர் தொழிலாளியின் வேலையிழப்புக்கு காரணமா?

குடும்பம், வீட்டு வாடகை, எரிபொருள், குழந்தைகள் படிப்பு, நிரந்தரமற்ற வேலை போன்ற கூடுதலான வாழ்க்கைச் செலவுகளை எதிர்கொள்ளும் உள்ளூர் தொழிலாளிக்கு கட்டுப்படியாகும் கூலியைக் கொடுக்க வக்கில்லாத முதலாளிகள், தங்களது தோல்வியை தந்திரமாக மறைத்து இந்திக்காரன் குறைந்த கூலி கேட்கிறான், உள்ளூர் தொழிலாளி அதிகக்கூலி கேட்கிறான் அதனால்தான் அவர்களை வேலைக்கு எடுக்கிறேன் என்று பசப்புகிறார்கள்.

இத்தகைய சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் சீமான், மணியரசன், வியனரசு போன்ற பிழைப்புவாத இனவெறி கும்பல் வேலை இழப்புக்கும் குறைவான கூலிக்கும் காரணமே புலம்பெயர் தொழிலாளிகள் என்று இனவெறியூட்டி தொழிலாளி வர்க்கத்தின் பிரிவை தம்பால் ஈர்த்து வருகின்றன. இவர்கள் தவிர கோபி, சுதாகர் போன்ற அரசியலற்ற யூடியூபர்களும், சாட்டை துரைமுருகன், பாரிசாலன் போன்ற தமிழ்தேசிய முட்டாள்களும் தொடர்ந்து செய்துவரும் இனவெறி பிரச்சாரங்களும், “இரயிலிலிருந்து ஆயிரக்கணக்கில் வந்திறங்கும் வடக்கன்ஸ், இரயில்களை ஆக்கிரமிக்கும் வடக்கன்ஸ், தமிழர்களைத் தாக்கும் வடக்கன்ஸ், மாணவர்களைத் தாக்கும் வடக்கன்ஸ், ATM-களை உடைக்கும் வடக்கன்ஸ்” என்று பரப்பப்படும் காணொளிகளும் மக்கள் மத்தியில் வடமாநில தொழிலாளர் மீது வெறுப்பை விதைத்து வருகின்றன. வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு அப்பாவி வடமாநில இளைஞரை ஒரு  இனவெறியன் தாக்கி  தமிழனாக ’பெருமிதம்’ கொண்டது சமீபகால உதாரணம். இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நாள்தோறும் நடந்துவருகிறது. இவற்றை குஜராத்தைப்போல ஒருங்கிணைந்த முறையில் இன்னும் கொடூரமாக, ஒரு இன அழிப்பைப்போல நடத்தவேண்டும் என்பதுதான் இந்த இனவெறி கும்பலின் எதிர்பார்ப்பு. அதன் மூலம் தமது அரசியல் ஆதாயத்தை அடைவதுதான் அவர்களின் இலக்கு.

சமனற்ற வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டுள்ள முதலாளித்துவத்தால் பின்தங்கிய பகுதியிலுள்ள மக்களும், இந்தியாவில் தனிச்சிறப்பாக சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களும் நகரங்களை நோக்கி அத்துக்கூலிகளாக நெட்டித்தள்ளப்படுகிறார்கள். முதலாளித்துவத்தின் வளர்ச்சியினால் வாழ்விழந்த நகர்புறத்து தொழிலாளர்களும் அத்துக்கூலிகளாக வேலைதேடி அலைகின்றனர். இதனால் நகரங்களில் மிகப்பெரிய ரிசர்வ் பட்டாளம் உருவாகிறது. நகரங்களில் கிடைக்கும் சிற்சில வேலைவாய்ப்புக்காக இவர்கள் அனைவரும் போட்டியிடும் நிலை உருவாகிறது. ஏற்கனவே உள்ள உள்ளூர் தொழிலாளர்களுக்குப் போட்டியாக முதலாளிகளால் இறக்குமதி செய்யப்பட்ட வடமாநில தொழிலாளர்களும் இருப்பதால் போட்டி கடுமையாகின்றது. இப்போட்டியை தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும் முதலாளிகள் கூலியை உள்ளூர் தொழிலாளிக்கு கட்டுப்படியாகாத அளவுக்கு தரைமட்டத்துக்குக் குறைத்து விடுகின்றனர்.  இதனால் உள்ளூர் தொழிலாளிக்கு வேலை கிடைப்பதில்லை. முதலாளித்துவத்தின் இந்த இயல்பை மறைக்கும் இனவெறியர்கள் இப்பிரச்சினைகளுக்குக் காரணம் குறைந்த கூலி கேட்கும் வடமாநிலத்தார்தான் என்று பொய்பரப்பித் திரிகின்றனர்.

இனவெறியர்கள் உண்மைமுகம்!

ஆண்களுக்கு வேலை இல்லாமல் போவதற்கு காரணம் பெண்கள் குறைந்த கூலிக்கு வேலைக்கு வருவதே என்று முதன்முதலாக பெண்கள் வேலைக்கு வந்த போதும், தமிழ்நாட்டில் மலையாளிகள் நுழையாத இடமே இல்லை என்றும் மலையாளிகளுக்கு எதிராகவும் முன்னர் பிரச்சாரம் செய்யப்பட்டது வரலாறு.

தனியார்துறையில் மட்டுமல்ல அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தினக்கூலி அடிப்படையில் போனஸ், ஓய்வூதியம் போன்ற எந்தவித பணிப்பயன்களும், பணிப்பாதுகாப்பும் இல்லாமலேயே உள்ளூர் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவது பற்றி இந்த இனவாதிகளுக்கு எந்தவித அக்கறையும் இல்லை, அவர்களுக்காக குரல் கொடுத்ததும் இல்லை. உள்ளூர் மக்களையே வேலைக்கு எடுக்க வேண்டும் என்று எந்த இனவெறியனும் முதலாளிகளுடன் மல்லுகட்டுவதுமில்லை.

முன்பின் அறிமுகமில்லாத, மொழி தெரியாத ஒரு மாநிலத்தில் எப்படி ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர் வேலை தேடிக்கொள்ள முடியும்? இங்குள்ள முதலாளிகள் அவர்களை கூட்டி வருவதற்கென்றே உள்ள ஏஜென்ட்களின் மூலம் கிராமங்களிலிருந்து கூட்டிவரச் செய்கிறார்கள். அதுமட்டுமின்றி முன்னர் தொழிலாளியாக இருந்து இன்று ஆட்களை இறக்குமதி செய்யும் வடமாநிலத்தவரும் ஏராளமாக உள்ளனர். குறைந்த கூலிக்கு ஆட்கள் கிடைக்கும்போது முதலாளிகளுக்கும் இலாபம் என்ற அடிப்படையில்தான் வெளிமாநிலத்தவரின் வருகையும் உள்ளது. இனவாதிகள் இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு ஏதோ வடமாநிலத்தவர் இங்கு வந்து ஒரு படையெடுப்பையே நடத்துகிறார்கள் என்பது போல வெறியூட்டுகின்றனர்.

இதையும் படியுங்கள்: பஞ்சம் பிழைக்க வரும் வட மாநிலத்தவர்கள் நம் எதிரிகளா?

இத்தகைய இனமோதல்கள் பேராசான் மார்க்ஸ் காலம்தொட்டே இருந்துவருகிறது. அவர் காலத்தில் பிரான்ஸ் தொழிலாளிகள் மற்றும் அங்கு பெருமளவில் புலம்பெயர் தொழிலாளர்களாகச் சென்ற ஜெர்மனிய தொழிலாளிகள் மத்தியிலும் இதே போன்ற பிரச்சினை எழுந்தது. இம்மோதல்களுக்கு காரணம் முதலாளித்துவம்தான் என்று சரியாக வரையறுத்து அவர்களிடையே வர்க்க ஒற்றுமையை ஊட்ட முயன்றார் மார்க்ஸ். ஆனால் ஹிட்லர், முசோலினி போன்ற பாசிஸ்டுகளோ பாட்டாளி வர்க்கங்களை மோதவிட்டு அதில் தெறிக்கும் இரத்தத்தை சுவைத்தனர். தற்போது அவர்களின் வாரிசுகளாக மோடி, டிரம்ப், பால் தாக்கரே, வாட்டாள் நாகராஜ்  என நீளும் பட்டியலில் சீமான், மணியரசன் போன்ற தமிழ் தேசிய இனவெறியர்களும் சேரத்துடிக்கின்றனர்.

புலம்பெயர் தமிழர்களை சுரண்டிக் கொழுக்கும்

தமிழ்த்தேசிய இனவாதிகள்!

இதில் ஒரு பெரும் நகைமுரண் என்னவென்றால் புலம்பெயர் தமிழர் கொடுக்கும் பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தும் இந்த பிழைப்புவாத  கும்பல் இங்கிருக்கும் புலம்பெயர் தொழிலாளிகளை எதிரிகளாக  சித்தரிப்பதுதான். இனவாதிகளின் கூற்றுப்படி வடமாநில தொழிலாளிகளால் உள்ளூர் தமிழருக்கு வேலை போகிறது என்றால் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் தமிழர்களால் அந்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படாதா? இல்லை வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களை நாடு திரும்புமாறு அழைத்து வடமாநில தொழிலாளர்களுக்குப்  பதில் அவர்களை வேலைக்குத்தான் அமர்த்துவார்களா? அப்படிச் சொன்னால் முதலுக்கே மோசம் ஆகிவிடும்.  ஏனென்றால் இவர்களுக்கு வேண்டியது புலம்பெயர் தமிழர்களின் டாலரும், தினாரும்தான்.

உழைப்பு சக்தியைத் தவிர எந்தவித பொருளாதார, அரசியல், வர்க்க ரீதியான அடிப்படையும் இல்லாத வடமாநிலத் தொழிலாளிகளை எதிரிகளாக காட்டும் தமிழ் இனவாதிகள் தமிழகத்தில் காலூன்றி ஜவுளி, இரும்பு, பலசரக்கு, மின்னணு, மின்சார பொருட்கள் உள்ளிட்டவைகளின் மொத்தவிலை சந்தையை  தம் பிடியில் வைத்துள்ள பனியாக்களை பற்றி எதுவும் சொல்வதில்லை.  மோடியை கைக்குள் போட்டுக்கொண்டு தமிழக கடற்கரைகளை கபளீகரம் செய்யும் அதானியை எதிரியாகக் காட்டுவதில்லை, மூலப்பொருட்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தி தமிழகத்தின் தொழில்களை நாசப்படுத்தும் அம்பானியை எதிரியாகக் காட்டுவதில்லை, தமிழகத்தின் சுற்றுச்சூழலை கெடுக்கும் அனில் அகர்வாலை எதிரியாகக் காட்டுவதில்லை, தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகளை வடவர்க்கு தாரை வார்க்கும் பாசிச பாஜக-வை எதிரியாகக் காட்டுவதில்லை, ஒன்றிய அரசுப்  பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதைப் பற்றி இவர்களுக்கு கவலை ஏதுமில்லை.

இனவாதிகளின் கூற்றுப்படி வடமாநில தொழிலாளிகளை தமிழகத்தில் இருந்து வெளியேற்றி விட்டால் இன்றுவரை அவர்களை கடுமையாக சுரண்டி கொழுத்த முதலாளிகள் நாளையே தமிழக தொழிலாளிகளை பணி பாதுகாப்பு, நியாயமான கூலி கொடுத்து வேலைக்கு எடுத்துக்கொள்வார்களா?

மார்க்சிய-லெனினியமே தீர்வு!

பிழைப்புக்காக தமிழ்நாட்டுக்குள் வெளிமாநில தொழிலாளிகள் வருவதும் தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநில மற்றும் நாடுகளுக்கு தொழிலாளிகள் செல்வதும் முதலாளித்துவப் போக்கு என்பதை நாம் உணரவேண்டும். அப்போதுதான் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் முதலாளித்துவத்தின் கொடூரத்தையும், தொழிலாளர்களின் இரத்தத்தை ருசிக்கக் காத்திருக்கும் இனவெறியை ஓநாய்களையும் நாம் இனம்காண முடியும்.

அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இதேபோன்ற இனமோதல்கள் நடந்தபோது தோழர் லெனின், “முதலாளிகளின் உள்நோக்கத்தை வெற்றிகரமாக எதிர்கொண்டு பதிலடி கொடுப்பதற்கு இங்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது. அது குடியேற்றத் தொழிலாளர்கள் ஏற்கனவே உள்ள வெள்ளையினத் தொழிலாளர்களின் சங்கத்தில் இணைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், வெள்ளை நிறமல்லாத தொழிலாளர்களின் ஊதியத்தை வெள்ளை இனத் தொழிலாளர்களின் ஊதியத்திற்குச் சமமாக உயர்த்தப்பட வேண்டும் எனக் கோர வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகளின் இத்தகைய முயற்சி முதலாளித்துவ உள்நோக்கங்களை அம்பலப்படுத்தும். கூடவே சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் எந்த விதமான இன வேறுபாட்டிற்கும் இடமளிக்காது என்பதை வெள்ளை நிறமல்லாத தொழிலாளர்களுக்கு உணர்த்தும்”  என்று கூறினார்.

பிரச்சினைகளுக்கு சரியான தீர்வைத்தரும் மார்க்சியத்தையும், மார்க்சிய ஆசான்களின் கருத்துக்களையும் உள்வாங்கி செயல்படுவோம்.

செயற்கை நுண்ணறிவு (artificial intelligence), தானியங்கிமயம் (automation) என்று முதலாளித்துவ வளர்ச்சிப்போக்கினாலும், முதலாளித்துவ நெருக்கடியினாலும் நாள்தோறும் வேலையிழந்துவரும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளுடன்  தோளோடு தோள்நின்று தோற்றுவிட்ட முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டுவோம்!

கடும் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் வடமாநில தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி நிர்ணயம், 8 மணிநேர வேலை, முறையான ஓய்வு, விடுமுறை, பணிப் பாதுகாப்பு, மற்றும் பயன்களுக்காகக் குரல் கொடுப்போம்!

பண்பாட்டு ரீதியிலும், கலாச்சார ரீதியிலும் இந்துமதவாதத்தால் கட்டுண்ட பகுதிகளிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வூட்டுவோம்! தொழிலாளர் உரிமைகளை கற்றுக்கொடுப்போம்!

சமூகநீதி கருத்துகளையும், கம்யூனிச கோட்பாடுகளையும் பிரச்சாரம் செய்து அரசியல் படுத்துவோம்!

சொந்த ஊரில் இக்கருத்துகளை கொண்டுசேர்க்கப் போராடுவோம்!

அனைத்திந்திய பாசிச எதிர்ப்பு தொழிலாளர் முன்னணியைக் கட்டுவோம்! பாசிச சக்திகளை வேரோடு சாய்ப்போம்!

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!” என்ற பேராசான் மார்க்ஸ்-ன் முழக்கம் உணர்த்துவது இதைத்தான் என உலகறிய ஓங்கி ஒலிக்க செய்வோம்!.

மதியழகன்

புதிய ஜனநாயகம் (மா-லெ)
மார்ச் மாத இதழ் 2023

படியுங்கள்
பரப்புங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here