காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய பிறகு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. பல மாதங்கள் அம்மாநிலத்தின் அரசியல் தலைவர்கள், முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா, மெகபூஃபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்டோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.
காஷ்மீர் முழுவதும் இணையம் முடக்கப்பட்டு அங்கு நடப்பது வெளியில் தெரியாமல் மறைப்பதற்காக ஜனநாயக உரிமைகளுக்கு சாவு மணி அடித்து காஷ்மீரை தனித்த தீவாக மாற்றியது பாசிச பாஜக.
கடந்த 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. அன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் தொலைபேசி தொடர்புகள் இணைய சேவைகள் முடக்கப்பட்டன.
சில மாதங்களுக்கு பிறகு ஜனவரி 2020-ல் 2ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டாலும் 4ஜி சேவை பிப்ரவரி 2021-ல் மட்டுமே வழங்கப்பட்டது.
சட்டப்பரிவு 370 ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல் பாசிஸ்டுகளுக்கு ஏற்றவாறு அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தனர். இதனை நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றினார்கள். ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை இருக்கும். லடாக்கில் இருக்காது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் அனைத்து விதிகளும் மற்ற மாநிலங்களுக்கு பொருந்துவது போல் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும். இதை வைத்து தான் இங்குள்ள சங்கிகள் இனி காஷ்மீரிலும் நிலம் வாங்கலாம் என்று கொக்கரித்தார்கள்.
சட்டப்பிரிவு 370 நீக்கம் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அனைத்து வழக்குகளையும் ஒருசேர விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு 11 டிசம்பர் 2023 அன்று சட்டப்பிரிவு 370 நீக்கம் செல்லும் என பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
தனது இந்துராஷ்டிர கனவுக்கு தடையாக இருந்த சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகிய பிரிவுகளை நீக்குவோம் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தொடர்ச்சியாக கூறிவந்தது. அதற்கு ஏதுவாக மெகபூஃபா முப்தி கூட்டணியில் இருந்து வாபஸ் வாங்கி ஆட்சியை கவிழ்த்து சதி செய்தது. ஆளுநரை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி அமைக்கவிடாமல் தடுத்து 6 மாதங்கள் ஆளுநர் ஆட்சியும் பிறகு குடியரசு தலைவர் ஆட்சியும் அமலில் இருந்தது. இவையனைத்தும் பாசிஸ்டுகளால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது.
இந்நிலையில் இடைப்பட்ட 5 ஆண்டுகளில் பாசிஸ்டுகள் தனக்கேற்றவாறு மேல் கட்டுமானங்களை உருவாக்கிவிட்டு தேர்தலை அறிவித்தார்கள். கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.
மொத்தமுள்ள 90 இடங்களில் 48 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் 29 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றன.
இந்த வாக்கு எண்ணிக்கை துவங்கும் முன்பே துணைநிலை ஆளுநர்(லெப்டினன்ட் கவர்னர்) தனக்குள்ள அதிகாரத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டு 5 நியமன எம்எல்ஏக்களை பாஜக-வை சேர்ந்தவர்களாக நியமித்தார். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தாலும் பாசிஸ்டுகள் சிறிதும் கண்டுக் கொள்ளவில்லை. துணைநிலை ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்-ஆக இருக்கும் பொழுது அவர்களுக்கு கவலை என்ன?
காஷ்மீர் சட்டமன்ற தேர்தல்கள்; ஜனநாயகம் மீண்டதா?
காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு வரம்பிற்கு உட்பட்டே அதிகாரம் இருக்கும். அனைத்து அதிகாரமும் லெப்டினண்ட் கவர்னர் என்று சொல்லக்கூடிய ஆர்.எஸ்.எஸ் நபரிடமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கான அதிகாரத்தை சுருக்கி விட்டது பாசிச கும்பல்.
ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டம் 2019 என்பது மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றும் அடிப்படை சட்டமாகும். இந்த சட்டத்தின் படி சட்ட அமலாக்க முகமைகள் ஒன்றிய அரசு மற்றும் அதன் பிரதிநிதியான லெப்டினண்ட் கவர்னரின் கட்டுப்பாட்டில் உள்ளன.
கடந்த ஜூலை மாதம் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் கவர்னரின் அதிகார வரம்பை மேலும் விரிவுபடுத்தியது. காவல்துறை, பொது ஒழுங்கு, அகில இந்திய பணியாளர்கள் விஷயங்களில் முடிவெடுக்க லெப்டினன்ட் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் துறைகளைச் சேர்ந்த பணியாளர்களின் நியமனம் மற்றும் இடமாறுதல் தொடர்பான அதிகாரமும் துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நிதித்துறையின் ஒப்புதலை பெறுவது அவசியம்.
அட்வகேட்- ஜெனரல் நியமனம், சட்ட அதிகாரிகள் நியமனம், வழக்கு தொடர அனுமதி வழங்குவது அல்லது மறுப்பது அல்லது மேல்முறையீடு செய்வது தொடர்பான அரசின் நடவடிக்கைகளுக்கு ஆளுநரின் ஒப்புதல் அவசியமாக்கப்பட்டுள்ளது
லெப்டினன்ட் கவர்னர் தேவையான கருதினால் எந்த சட்டத்தையும் முடக்கி விடலாம் என்று ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
தற்போது தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தாலும் அதிகாரமனைத்தும் பாசிச கும்பலால் நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் கவர்னர் கையில் உள்ளது. யூனியன் பிரதேசமான டெல்லியை விட மோசமான நிலையிலேயே காஷ்மீர் சட்டமன்றத்தின் நிலை உள்ளது.
இவையெல்லாம் பாசிஸ்ட்கள் முன்பே திட்டமிட்டு செய்துள்ளார்கள். ஆனால் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளோ தன்னுடைய சுயநலனை மட்டும் கருத்தில் கொண்டு பாசிஸ்டுகளின் பலம் அறியாது எப்போதும் நடைபெறும் சாதாரண தேர்தலை போலவே எதிர்கொள்கின்றன. பாசிசத்தை தேர்தலில் வீழ்த்த மக்களிடம் நம்பிக்கையை விதைக்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்தினை கூட வைக்க தயாரில்லாமல் பாசிஸ்டுகள் முன்னே வீழ்ந்து போகின்றன.
பாசிச பாஜக மாநில அதிகாரம், சுயாட்சி உரிமை அனைத்தையும் ஒழித்துக்கட்டி ஒற்றை ஆட்சியை நிறுவ முயல்கிறது. அதற்கேற்றார் போல் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை உள்வாங்கிக் கொண்ட நபர்களை மாநிலத்தின் ஆளுநராக நியமித்து மாநில அதிகாரத்தை கட்டுப்படுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க மறுத்து புறந்தள்ளுகிறது. பாசிசத்தை தேர்தலில் மட்டுமல்ல தெருவிலும் போராடி வீழ்த்த வேண்டியுள்ளது.
- நலன்