சூரியனை கைகளால் மறைக்க முடியாது! மாநில தன்னாட்சி உரிமை முழக்கம் தமிழகம் எங்கும் எதிரொலித்தது!

மிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஒருங்கிணைத்த மே தின நிகழ்ச்சிகளில் தமிழகத்தில் திருச்சி, கோவை, வேலூர், சென்னை ஆகிய பகுதிகளிலும், புதுச்சேரியிலும் அதன் தோழமை அமைப்புகளான விவசாயிகள் விடுதலை முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் 300 முதல் 500 வரை தொழிலாளர்களையும், விவசாயிகளையும், இதர பிரிவு உழைக்கும் மக்களையும் திரட்டி “ஒன்றிய அதிகாரக் குவிப்பை தடுத்திடு, மாநில தன்னாட்சிக்கு போரிடு” என்ற முழக்கத்தின் கீழ் ஒன்றிணைத்துள்ளனர்.

தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அவர்களது சொந்தக் கோரிக்கைகள், பொருளாதாரக் கோரிக்கைகள் போன்றவற்றை முன்வைத்து அணி திரட்டுகின்ற தொழிற்சங்கவாத அரசியலில் இருந்து வேறுபட்டு குறிப்பிட்ட தருணத்தில் செயல் தந்திர அரசியலின் கீழ் மக்களை திரட்டுவது என்ற மார்க்சிய- லெனினிய சமூக விஞ்ஞானத்தை புரட்சிகர அமைப்புகள் 90களில் இருந்து கடைப்பிடித்து வருகின்றன.

“நாடு மீண்டும் காலனி ஆவதை முறியடிப்போம்! பார்ப்பன (இந்து) மதவெறி பாசிசத்தை முறியடிப்போம்!” என்ற அரசியல் செயல்தந்திர முழக்கத்தின் கீழ் திருச்சியில் நடத்தப்பட்ட கருவறை நுழைவுப் போராட்டம், காட் ஒப்பந்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ரயில் மறியல் போராட்டங்கள், விவசாயத்தை ஒழித்துக் கட்டி அன்னிய ஏகபோக நிறுவனங்களிடம் உணவுக்கு கையேந்த வைக்கின்ற வகையில் கொண்டுவரப்பட்ட இறால் பண்ணைகளை எதிர்த்து சீர்காழி பகுதியில் நடந்த போராட்டங்கள், மின்சார உற்பத்தியை அந்நிய ஏகபோக நிறுவனங்களுக்கு ஒப்படைப்பதை எதிர்த்து நெய்வேலியில் நடத்தப்பட்ட ஜீரோ யூனிட் முற்றுகை, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்திய விவசாயிகளின் தலையில் கட்டுவதற்கு முயற்சித்த அமெரிக்க மான்சாண்டோ கம்பெனியை எதிர்த்து மதுரையில் நடைபெற்ற போராட்டங்கள், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய ஏகபோகத்தை முறியடிக்க சென்னையில் ரிலையன்ஸ் முற்றுகைப் போராட்டங்கள், தண்ணீரை தனியார் மயமாக்குவதை எதிர்த்து நெல்லையில் நடத்தப்பட்ட அமெரிக்க கோக்கே வெளியேறு போராட்டங்கள், இரண்டாவது நெற்களஞ்சியமான கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளை ஒழித்து கட்டுவதற்கு கொண்டுவரப்பட்ட தேக்கு பண்ணைகள் அழிப்பு போராட்டம், காவிரி டெல்டா பாசன பகுதியை பாலைவனக்குவதற்கு எதிராக நடத்தப்பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டங்கள், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களை சுடுகாடக்குவதற்கென்றே கொண்டுவரப்பட்ட கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள், தென் தமிழக கடற்கரையை சூறையாடி வந்த தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு எதிரான போராட்டங்கள், தூத்துக்குடியின் இயற்கை வளத்தையும், கடல் வளத்தையும், முற்றாக ஒழித்துக் கட்ட கொண்டுவரப்பட்ட ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்திற்கு எதிரான போராட்டங்கள் போன்ற அனைத்தும் அரசியல் செயல் தந்திர முழக்கத்தின் கீழ் மக்களை அணிதிரட்டுவதற்கு புதிய வழியை காட்டியது.

இந்தப் போராட்டங்கள் அனைத்தும் மே தினம் என்ற அரசியல் ஆர்ப்பாட்டத் தினத்தை ஒட்டி போர்க்குணமிக்க போராட்டங்களாக கட்டமைக்கப்பட்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி மறியல் போராட்டங்கள், முற்றுகைப் போராட்டங்கள் என தமிழகத்தின் பாட்டாளி வர்க்கத்திற்கு அரசியல் ரீதியாக போராடுகின்ற கண்ணோட்டத்தை கற்றுக் கொடுத்தது.

இந்தப் போராட்ட மரபின் வரிசையிலிருந்து 2025 ஆம் ஆண்டு மே தினத்தை, “ஒன்றிய அதிகாரக் குவிப்பை தடுத்திடு! மாநில தன்னாட்சிக்கு போரிடு!” என்ற அரசியல் முழக்கத்தின் கீழ் மக்களைத் திரட்டி பேரணி மறியல் நடத்தியது கார்ப்பரேட் – காவி பாசிசத்தை எதிர்த்து போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் தொழிற்சங்கங்களின் முன்னோடிகள், அரசியல் கட்சியில் உள்ள முன்னணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

சென்னையில் கடைசி நேரத்தில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றாலும் அதனையும் மீறி பேரணி நடத்தப்பட்டது. திருச்சியிலும், புதுச்சேரியிலும், கோவையிலும், வேலூரிலும் செங்கொடிகள் பறக்க பறை இசை முழங்க மாநில தன்னாட்சி உரிமைகளை முன்வைத்தும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களின் மீது நடத்தப்படுகின்ற கார்ப்பரேட் காவி பாசிசத் தாக்குதல்களை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இளம் வயது சிறுவர், சிறுமியர் முதல் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரும் செங்கோடியின் கீழ் திரண்டனர்.

கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிராக பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியை உருவாக்க வேண்டும் என்ற அறைகூவலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மே தின போராட்டங்கள் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

இத்தகைய அரசியல் போராட்டங்கள் செயல்தந்திர ரீதியாக ஒருங்கிணைக்கப்படுவதின் அவசியத்தை உணராத அரசியல் அரைவேக்காடுகள், அரசியல் சித்தாந்தமற்ற லும்பன் கும்பல்கள் இதனை “அல்லேலுயா பஜனை” என்று எமது எதிரிகளை விட கீழ்த்தரமாக பிரச்சாரம் செய்தது. செயல்தந்திர அரசியலின் கீழ் மக்களை திரட்ட முடியாது என்ற வினவு மற்றும் செங்கனல் கும்பலின் பித்தலாட்டங்களுக்கு இந்த மே தினம் முடிவு கட்டியுள்ளது.

படிக்க:

♠  மக்கள் அதிகாரம் 2 வது மாநில அமைப்பு மாநாடு | பத்திரிகை செய்தி

புரட்சிகர அமைப்புகளின் அரசியல் செயல்பாட்டையும் அது மக்கள் இயக்கமாக பரிணமித்து வருவதையும் சகிக்க முடியாத ஆர்எஸ்எஸ் பாஜக பார்ப்பன கும்பல் முதல் ஈழத்தமிழர் பெயரால் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் சீமான், மே 17 இயக்கம் உள்ளிட்டு எமது அமைப்புகளில் இருந்து வெளியேறி ஓடிய வினவு மற்றும் செங்கனல், சொந்த வாழ்க்கையில் செட்டிலாகி பொழுதுபோக்காக புரட்சிகர அரட்டை அடிக்கின்ற மாஜி புரட்சியாளர்கள் வரை எமது இயக்கத்திற்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.

நக்சல்பாரி இயக்கம் தோன்றியது முதல் மக்கள் திரள் பாதையில் செயல்பட்டுக் கொண்டே பல்வேறு அடக்குமுறைகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டு போராடி வருகின்ற தோழர்களை பொதுவெளியில் நாக்கூசாமல் எழுதி இழிவுபடுத்துவதன் மூலம் மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவது என்பது இன்று நேற்றல்ல. பார்ப்பனக் கும்பலின் பிடியில் உள்ள இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் முதல் டைம்ஸ் ஆப் இந்தியா, ஆர்எஸ்எஸ் கும்பலின் ஆர்கனைசர், பஞ்சஜன்யா, தமிழகத்தில் துக்ளக் வரை அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக செய்து வருகின்ற அவதூறுகள் தான்.

சமூக வலைதளங்கள் வந்த பிறகு கம்யூனிசத்திற்கு எதிராகவும்,, புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு எதிராகவும்,, வர்க்க ஒற்றுமையை முன்வைத்து பேசுகின்ற அமைப்புகளுக்கு எதிராகவும் களமாடுவதற்கு நூற்றுக்கணக்கான ரெக்ரூட் பிழைப்புவாதிகள் களமிறங்கியுள்ளனர்.

உளவுத்துறையின் எடுபிடிகளாகவும், பாசிச பாஜகவின் விருப்பத்தை ஈடேற்றுகின்ற வகையிலும் இந்த கும்பல் செயல்பட்டு வருவதை நேர்மையுடன் செயல்படுகின்ற பெரும்பான்மை உழைக்கும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதையெல்லாம் ஒருபுறம் தள்ளி நாங்கள் எடுத்துக் கொண்ட அரசியல் செயல்பாட்டில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மத்தியில் முன்னேறி வருகின்றோம் என்பதை எமது மே தின நிகழ்ச்சிகள் நிரூபித்துள்ளன.

அரசியல் செயல் தந்திர முழக்கத்தின் கீழ் தொடர்ச்சியாகவும், விடாப்பிடியாகவும், பெரும்பான்மை உழைக்கும் மக்களின் மீது நம்பிக்கை வைத்து செயல்படும்போது அவர்களை அணி திரட்ட முடியும் என்பதையும் அமைப்பு ரீதியாக செயல்பட வைக்க முடியும் என்பதையும் இந்த மே தினத்தின் செய்தி பாட்டாளி வர்க்கத்திற்கு அறிவித்துள்ளது.

மருது பாண்டியன்.

1 COMMENT

  1. நிகழ்ச்சித் தொகுப்பு சிறப்புர வடிவமைக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here