கண்ணகி – முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கு: கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி!

கண்ணகி முருகேசன் படுகொலைக்கு முன்னர் ஆணவப் படுகொலை என்பது தமிழ்நாட்டில் அவ்வளவாக அறியப்பட்டிருக்கவில்லை. அதற்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அது அதிகரித்து வருகிறது.

0
கண்ணகி – முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கு: கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை உறுதி!
ஆணவ படுகொலை செய்யப்பட்ட கண்ணகி முருகேசன்

மிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ள வன்னிய சாதி உழைக்கும் மக்கள் மத்தியில் தனது கட்சியை கட்டுவதற்காக வன்னிய சாதி வெறியை ஊக்குவித்து வருகின்ற பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாசு, வன்னியர்கள் மற்றும் பட்டியலின மக்கள் மத்தியில் நடைபெறுகின்ற சாதி மறுப்பு திருமணங்களை நாடக காதல் என்று பெயரிட்டு இழிவு படுத்தி வருகின்றார் என்பது நாடறிந்த உண்மை.

இந்திய சமூக அமைப்பில் படிநிலை அடிப்படையில் அடுக்குகளாக உருவாக்கப்பட்டுள்ள சாதிய கட்டமைப்பு பார்ப்பனர்களை மேலடுக்கிலும், பஞ்சம சாதியினரான பட்டியலின மக்களையும் பழங்குடி மக்களையும் கீழடுக்கிலும் நிலை நிறுத்தி வைத்துள்ளது.

இவ்வாறு சாதி ரீதியாக பார்ப்பன (இந்து) மதத்தினால் பிளவுபடுத்தப்பட்டு இருந்தாலும் நிலவுடமை உற்பத்தி முறையில் இருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறுகின்ற நிகழ்ச்சி போக்கில் சாதிய ரீதியிலான உறவுகளையும், சாதிக்குள் திருமணம் செய்து கொள்வது என்ற அகமண முறையையும் கடைபிடிக்க முடியாமல் போகிறது.

சமூகத்தில் உற்பத்தி முறையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் நவீன அறிவியல் தொழில்நுட்பம், நாகரீக வளர்ச்சி போன்றவற்றுடன் சாதிய அமைப்பு முரண்பட்டு நிற்பதால் சாதியை கட்டிக் காக்க வேண்டும் என்று பாடுபடுகின்ற சனாதனவாதிகள், ஆதிக்க சாதி வெறியர்களுக்கு அது மிகப்பெரும் ஆத்திரமூட்டும் நிலைமையாக உள்ளது.

பல நூற்றாண்டுகளாக கீழ் அடுக்கில் ஒடுக்கப்பட்டு க் கிடக்கும் பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் கடந்த அரை நூற்றாண்டுகளாக பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கல்வி கற்பது முதல் வேலை வாய்ப்பு வசதிகளை பெறுவது வரை ஒரு சில முன்னேற்றங்களை பெறுவதை ஆதிக்க சாதி வெறியர்கள் பொறுத்துக் கொள்வதில்லை.

இயல்பாக உழைப்பாளிகளாக தொழிலாளர்களாக ஒன்று சேர்கின்ற மக்கள் மத்தியில் சாதி பெருமைகளை எடுத்துரைத்து, ‘ஆண்ட பரம்பரை, சத்திரிய குலம்’ என்றெல்லாம் பெருமை பேசுவதன் மூலம் சாதி ஒழிந்து விடக்கூடாது என்பதிலும், சாதிகளுக்கு இடையில் கலப்பு ஏற்பட்டுவிட க் கூடாது என்பதிலும் உறுதியாக நிற்கின்றனர் இத்தகைய ஆதிக்க சாதி வெறியர்கள்.

ஆதிக்க சாதி வெறியர்களின் கொடூரமான காட்டுமிராண்டித்தனத்திற்கு துவக்கமான எடுத்துக்காட்டு தான் விருத்தாச்சலம் அருகில் குப்பநத்தம் கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சார்ந்த பொறியியல் பட்டதாரியான முருகேசன் மற்றும் வன்னியர் சாதியைச் சேர்ந்த வணிகவியல் பட்டதாரியான கண்ணகி இருவருக்கும் இழைக்கப்பட்ட அநீதி.

படிக்க:

  கண்ணகி – முருகேசன் கொலையாளிகளுக்கு தண்டனை! ஆதிக்க சாதிவெறிக்கு முழுமையாக முடிவு கட்டுவது எப்போது?

  அழகேந்திரன் ஆணவப்படுகொலை! மக்களுக்கு விடப்படும்  எச்சரிக்கை!

இருவர் மத்தியில் மலர்ந்த காதல் உணர்வையும் , சட்டரீதியான அவர்களின் திருமணத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சாதி வெறியர்கள் பெற்றோர்கள் முன்னிலையே மனம் புதைக்க புதைக்க விஷத்தை கொடுத்து உயிருடன் எரித்துக் கொன்றனர்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட போதே அதற்கு எதிராக அப்பகுதியில் இயங்கிய எமது விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்புகள் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியது.

விருத்தாசலம் போலீசின் உதவியுடன் இந்த வழக்கு முடிக்கப்பட்ட தருணத்தில் உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ரத்தனம் மற்றும் நெய்வேலியில் உயர் அதிகாரியாக பணியாற்றிய தோழர் துரைக்கண்ணு, மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் வழக்கறிஞர் ராஜு போன்றவர்களின் முன் முயற்சியால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

அதன் பிறகும் வழக்கில் தீர்ப்பு வராத நிலையில், “நாடகக்காதல் என்ற பிரச்சாரத்தை நம்புகிறவர்கள் கண்ணகி முருகேசன் கொலையை நினைத்துப் பார்க்க வேண்டும். 2003 -ல் விருத்தாசலத்தில் தலித் இளைஞர் பொறியியல் பட்டதாரி முருகேசன். வன்னியர் வகுப்பை சேர்ந்த கண்ணகி  வணிகவியல் பட்டதாரி. இவர்களது காதலின் எதிர்வினையாக, இருவர் வாயிலும் விஷம் ஊற்றி உயிரோடு எரித்துக்கொல்லப்பட்னர்.

இருவரின் பெற்றோரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று அவர்களையே குற்றவாளியாக்கி குற்றப்பத்திரிக்கையையும் தாக்கல் செய்து போலீசார் வழக்கை முடித்தனர். பிறகு சி.பி.ஐ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது. பெண்ணின் தந்தை சகோதரன் உள்பட 15 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அதனுடன் சாட்சியத்தை அழிக்க முயன்றதாக விருத்தாசலம் போலீசு ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளரையும் அந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்து உள்ளது சி.பி.ஐ. 16 ஆண்டுகள் ஆனபிறகும் கண்ணகி முருகேசன் வழக்கு நீதிக்காக காத்திருக்கிறது. என்று 2019 ஆம் ஆண்டில் மக்கள் அதிகாரம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் தோழர் ராஜு கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கண்ணகி, முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கண்ணகியின் சகோதரர் மருது பாண்டிக்கு தூக்கு தண்டனையும், இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெகடர் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது. 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதே சமயம் கண்ணகியின் தந்தை உள்ளிட்ட பத்து பேருக்கான ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்,

“கடலூர் மாவட்டம் குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணகி- முருகேசன் ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த வாழ்நாள் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்துள்ளது. 22 ஆண்டுகள் கழித்து அந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

இதுபோன்ற ஆணவக் கொலைகள் இனிமேல் நடக்காமல் தடுப்பதற்குத் தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். .

கண்ணகி முருகேசன் படுகொலைக்கு முன்னர் ஆணவப் படுகொலை என்பது தமிழ்நாட்டில் அவ்வளவாக அறியப்பட்டிருக்கவில்லை. அதற்குப் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அது அதிகரித்து வருகிறது. இந்தப் புதுவிதமான வன்கொலையைத் தடுக்க வேண்டியது சட்டம் ஒழுங்கு அதிகாரத்தை வைத்துள்ள மாநில அரசுகளின் கடமையாகும்.

“சக்தி வாஹினி -எதிர்- இந்திய ஒன்றிய அரசு” – என்ற வழக்கில் 2018 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு அரசாங்கம் சட்டம் இயற்ற வேண்டுமெனத் தீர்ப்பளித்துள்ளது. ஏழு ஆண்டுகள் கடந்த பின்னரும்கூட அந்த சட்டத்தை ஒன்றிய அரசோ அல்லது தமிழ்நாடு மாநில அரசோ இயற்றவில்லை என்பது கவலையளிக்கிறது. எனவே, இனியும் காலந்தாழ்த்தாமல் அந்த சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டுமெனத் தமிழ்நாடு மாநில அரசை வலியுறுத்துகிறோம்”. என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பிறப்பால் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் சொல்லிக் கொள்ளப்படும் ஆதிக்க சாதிகளை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு சாதி வெறி தலைக்கேறி பெற்ற பெண்ணையே படுகொலை செய்ய தூண்டுகிறது.

இத்தகைய கொடூரமான சிந்தனை முறைகளை பாசிச பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பல மடங்கு ஊக்குவித்து அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வந்த சாதி தீண்டாமை கொடுமைகள் மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களை படுகொலை செய்வது என்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டுமே சுருக்கி பார்க்க முடியாது.. “தீண்டாமை குற்றம் புரியும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமையை ரத்து செய்” என்ற முழக்கத்தை முன்வைத்து போராடுவதும், இருதரப்பிலும் உள்ள உழைப்பாளி மக்கள் மத்தியில் வர்க்க ஒற்றுமையை உருவாக்குகின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வேண்டும்.

அவரவர் பிறந்த சாதிக்குள் திருமணம் செய்து கொள்கின்ற அகமணமுறை நீடிக்கின்ற வரை சாதி மீதான பற்றும் அதன் இறுக்கமும் ஒருபோதும் குறையாது என்றார் அம்பேத்கர்.

எனவே திட்ட வகைப்பட்ட சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்பதும் அதற்கு எதிராக வருகின்ற அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து எதிர்த்தாக்குதல் தொடுக்கின்ற அளவிற்கு மக்களை தயார்படுத்த வேண்டி உள்ளது.  செய்வோம்.

  • கணேசன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here