‘எனக்கு ஒரு சத்தமான மரணம் வேண்டும்’ என்று எழுதிய காசாவில் பணிபுரிந்த புகைப்பட பத்திரிகையாளர் பாத்திமா ஹசௌனாவின் ’கடைசி ஆசை’ இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலினால் நிறைவேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன..
அடுத்த சில நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டு கையில் கேமராவுடன் பாலஸ்தீனத்தின் மீதும், காசாவின் முனையில் மீதும் இஸ்ரேலின் யூத-ஜியோனிச பயங்கரவாத ராணுவம் நடத்திய வெறியாட்டத்தை உலகிற்கு வெளிக்காட்டிய புகைப்படப் பத்திரிகையாளர் பாத்திமா ஹசௌனாவின் படுகொலை என்னை உலுக்கிக் கொண்டிருக்கிறது.
இரண்டு மாதம் கழித்து நடக்கவிருக்கும் திருமணத்திற்காக பத்திரிகையை கையில் அடித்து வைத்துக் கொண்டு உறவுகளை தேடி, நண்பர்களை தேடி அழைப்பிதழ் கொடுத்து கொண்டிருக்கும் இந்திய சமூக அமைப்பில் வாழ்வதற்கு நான் வெட்கித் தலை குனிகிறேன்.
25 வயதான பாலஸ்தீன பத்திரிகையாளரான பாத்திமா ஹசௌனா “நான் இறந்தால், எனக்கு ஒரு சத்தமான மரணம் வேண்டும். நான் வெறும் செய்தியாகவோ அல்லது இறப்பவர்கள் குழுவில் ஒரு எண்ணாகவோ இருக்க விரும்பவில்லை. உலகம் கேட்கும் ஒரு மரணத்தை நான் விரும்புகிறேன்.” என்று எழுதினார்.
ஏப்ரல் 16, 2025 அன்று, அவரது திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு வடக்கு காசாவில் உள்ள அவரது வீட்டைத் தாக்கிய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டபோது அவரது மனதிலிருந்து வெடித்துக் கிளம்பிய வார்த்தைகள் உண்மையாகின. இந்தத் தாக்குதல் அவரது நிறைமாத கர்ப்பிணியான சகோதரி உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் எட்டு பேரின் உயிரையும் பறித்தது, காசாவின் குரல் மௌனமாக்கப்பட்டது.
கடந்த 18 மாதங்களாக காசாவில் நடந்து வரும் போரை ஆவணப்படுத்துவதில் ஹசௌனா முழுமையாக பணியாற்றினார். இஸ்ரேலின் இராணுவத்தினால் முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீன மக்களின் வாழ்க்கையின் அவலங்களை மட்டறுக்கப்படாத காட்சிகளை புகைப்படம் எடுத்து அதனை சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்து வந்தார்.. அவரது சக்திவாய்ந்த புகைப்படக் காட்சிகள் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றன, மேலும் பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்கள் பலிகொடுத்த மனித இழப்பை எடுத்துக்காட்டுகின்றன. அவரது கடைசி பதிவில் கூட காசாவின் மீனவர்கள் மற்றும் அவர் நேசித்த நகரத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் ஒரு கவிதை இடம்பெற்றது.

பாத்திமா உயிருடன் இல்லை. ஆனால் அவரது புகைப்படங்கள் ஈரானிய திரைப்படத் தயாரிப்பாளர் செபிதே ஃபார்சி இயக்கிய “புட் யுவர் சோல் ஆன் யுவர் ஹேண்ட் அண்ட் வாக்” என்ற ஆவணப்படத்தின் கருப்பொருளாகவும், அவரே அதன் கருப்பொருளாகவும் இருக்கிறார். மே 2025 இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள இந்தப் படம் பாத்திமா ஹசௌனாவின் கண்கள் வழியாக காசாவின் யதார்த்தத்தை முன்வைக்கப் போகிறது என உறுதியாக நம்பலாம்.
அக்டோபர் 7, 2023 முதல் நடந்து வரும் காசா மீதான தாக்குதலில் 212 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை மையம் தெரிவித்துள்ளது – இது முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது கருத்துரிமை, ஜனநாயக உரிமை பேசும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் முகத்திரையை கிழிக்கிறது.
சமகாலத்தில் நடக்கின்ற அரசு பயங்கரவாத தாக்குதல்களையும், இன வெறியர்கள் மதவெறியர்கள், சாதி வெறியர்கள் நடத்துகின்ற தாக்குதல்களையும் களத்தில் நின்று துணிச்சலோடு மக்களுக்கு எடுத்துச் செல்கின்ற இதுபோன்ற துணிவுள்ள நேர்மையான ஊடகவியலாளர்கள் மத்தியில், ’வயிற்றுப் பிழைப்புக்காக’ சில லட்சம் பார்வையாளர்களை கையில் வைத்துக் கொண்டு கண்டதையும் எழுதி குவிக்கின்ற ஊடகவியலாளர்களை கண்டால் காறித் துப்பச் சொல்கிறது.
இதோ மேலும் ஒரு எடுத்துக்காட்டாக நேற்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதல் குறித்து தேசிய ஊடகங்கள் முதல் சமூக ஊடகங்கள் வரை பல்வேறு கருத்துகளை பரப்பி வருகின்றன. ஆனால் மறந்தும் அதில் ஆகப்பெரும்பான்மையினரின் கைகள் ஆளுகின்ற பாசிச மோடி அரசாங்கத்தின் மீது திரும்பவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி, இராணுவ பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அடங்கிய முக்கூட்டு மீது கேள்விகளை எழுப்பவில்லை.
மாறாக காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தின் 570 வது பிரிவு ஏன் நீக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பபவர்கள் மீதும், காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்கள் மீது ஏன் தாக்குதலை தொடர்ச்சியாக நடத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்புபவர்கள் மீதும், மதச்சார்பின்மை தான் உண்மையிலேயே ஜனநாயகத்தின் அடிப்படை என்று உரக்கச் சொல்பவர்கள் மீதும் அவதூறுகளும் வசவுகளும் வீசப்படுகிறது.
’இல்லை, இது போன்ற கொடூரமானத் தாக்குதல்கள் நிகழும் போது உடனடியாக அதனை கண்டிக்க வேண்டும். மனிதாபிமானம் மட்டும்தான் இங்கு இருக்க வேண்டும். ’இசங்கள்’ தேவையில்லை” என்பவர்களுக்கு கீழ்க்கண்ட செய்திகளின் மீது நேர்மையாக பதில் தர வேண்டும் என்று வலியுறுத்துவோம்.
நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள்.
2014: உரி தாக்குதல் (டிசம்பர் 5) 11 பேர் கொல்லப்பட்டனர்.
2016: பதான்கோட் விமானப்படைத் தளத் தாக்குதல் (ஜனவரி 2) ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
2016: உரி தாக்குதல் (செப்டம்பர் 18) 19 பேர் கொல்லப்பட்டனர்.
2017: அமர்நாத் யாத்திரை தாக்குதல் (ஜூலை 10) 7 பேர் கொல்லப்பட்டனர்.
2019: புல்வாமா தாக்குதல் (பிப்ரவரி 14) 41 பேர் கொல்லப்பட்டனர்.
2024: ரியாசி யாத்திரை தாக்குதல் (ஜூன் 9) 10 பேர் கொல்லப்பட்டனர்.
2025: பஹல்காம் தாக்குதல் (ஏப்ரல் 22) குறைந்தபட்சம் 28 மரணங்கள்.
போன்றவை உடனடியாக நினைவுக்கு வரும் தாக்குதல் சம்பவங்களின் பட்டியல் மட்டுமே. இது போன்று தொடர்ந்து வரும் தாக்குதல்களைப் பற்றிப் பேசாமல் ஊடக அறம் பேசும் ’காரியவாதிகளுக்கு’ என்ன பெயர் வைப்பது?
படிக்க:
♠ இந்திய இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட 3 காஷ்மீர் பழங்குடிகள்
♠ காஷ்மீர்: இப்படியும் அழிக்கலாம் ஜனநாயகத்தை! -ரியாஸ்
இத்தகைய இழிபிறவிகளுக்கு மத்தியில் உண்மையான ஜனநாயகத்தை நேசிக்கும் சிலரும் உள்ளனர் என்பது நம்பிக்கையூட்டுகிறது. பஹல்காம் தாக்குதல் குறித்து பாசிச பயங்கரவாத ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சியின் கீழுள்ள போதிலும் உண்மையின் மீதும், நேர்மையின் மீதும் நம்பிக்கை கொண்ட சிலரின் எக்ஸ் பக்க செய்திகளையும் காண முடிகிறது.
*ஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரஸ்) ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தபோது, பலவீனமான தலைமையின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அரசியல் ராஜினாமாக்களுக்கான கோரிக்கைகள் உடனடியாகத் முன் வைக்கப்பட்டன. *இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி (பாஜக) ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தபோது, ‘முஹ் தோத் ஜவாப்’ என்று பேசும் அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி கேள்விகள் எழும்பவில்லை. மாறாக மதசார்பின்மையை முன் வைப்பவர்கள் (‘செக்கியூலரிஸ்டுகள்’ (sic) என்று அழைக்கப்படுபவர்கள் உட்பட) அனைவரும் குற்றம் சாட்டப்படுகிறார்கள். மேலும், குடிமக்களின் உள் மற்றும் வெளிப்புறப் பாதுகாப்பிற்கு இப்போது அரசாங்கத்தில் இருப்பவர்களே பொறுப்பாவார்கள்” என்கிறார் ராஜ்தீப் சர்தேசாய் என்ற ஊடகவியலாளர்.
”நேற்றிரவு முதல் செய்தி சேனல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கோபத்தின் ஒவ்வொரு துளியும், நீதிக்கான ஒவ்வொரு கோரிக்கையும் நியாயமானது. ஆனால், அமைதி மற்றும் இயல்புநிலையைக் கூறி மோடி அரசாங்கத்திடம் நீங்கள் பொறுப்புக்கூறலைக் கோரவில்லை என்றால், நேற்று மாலை படுகொலை செய்யப்பட்ட ஒவ்வொரு பாதிக்கப்பட்டவருக்கும் நீங்கள் துரோகம் செய்கிறீர்கள்.” என்கிறார் பிரபலப் பத்திரிக்கையாளரான ராணா அய்யூப்.
2019 ஆம் ஆண்டு காஷ்மீரின் அரை தன்னாட்சி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து, சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பானவரும், மோடியின் துணைத் தலைவராக பரவலாகக் கருதப்படும் உள்துறை அமைச்சரான அமித் ஷாவும், இந்திய ஒன்றியப் பிரதம்ரான மோடியும், காஷ்மீரில் “இயல்புநிலை” இருப்பதாகவே மீண்டும், மீண்டும் கூறி வருகின்றனர்.
ஆனால் காஷ்மீர் உள்ளிட்டு தெற்காசிய நாடுகளின் தீவிரவாத தாக்குதல் குறித்து ஆய்வு செய்து வரும் அஜய் சாஹனி காஷ்மீர் பற்றி முன் வைப்பவை இதுதான். முதலாவதாக, காஷ்மீரில் குறைந்தபட்சம் ஒரு அரசியல் தீர்வு இல்லாத நிலையில் பூஜ்ஜிய தீவிரவாதம் என்பது அடைய முடியாத ஒரு குறிக்கோள்,,” என்றும். “இரண்டாவதாக, மோடி-அமித்ஷா, முன் வைக்கும் ‘இயல்புநிலை விவரிப்புகள்’ இயல்பைக் குலைக்க திட்டமிடும் குழுக்களின் தாக்குதல்களை ஊக்குவிக்கும் சூழ்நிலையை உருவாக்குகிறது.” ஏனெனில், “ஒரு சிறிய தாக்குதல் நடந்தாலும், அது இனி சாதாரணமானது அல்ல” என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்.
பிபிசி மற்றும் அல் ஜசிராவின் ஊடகவியலாளர்கள் தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில் தனது உயிரை பணயம் வைத்து பஹல்காம் பகுதிக்கு சென்று உண்மையைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றனர்.
ஆனால் குளிரூட்டப்பட்ட ஸ்டூடியோக்களில் அமர்ந்து கொண்டு நரம்பு புடைக்க தேச பக்தி கூச்சலிடும் அர்னாப் கோஸ்வாமி முதல் உள்ளூரில் உள்ள ’அன்றாடங்காய்சி’ சமூக வலைதளங்கள் வரை சம்பவ இடத்திற்கு நேரடியாக செல்லாமலோ அல்லது அதைப்பற்றி ஆழமான விசாலமான அறிவு இல்லாமலோ, ’கடலுக்குள் அமிழ்ந்திருக்கும் பனிப்பாறையின் முனையை மட்டும் பார்த்துவிட்டு’ தேசபக்தி கூச்சலிடுகின்றனர். இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பை உமிழ்கின்றனர்.
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த மஞ்சுநாத்தின் மனைவி பல்லவி கூறுகிறார்.
“திகிலின் மற்றும் இயலாமையின் அந்த நொடியில் மூன்று காஷ்மீரி இளைஞர்கள் வந்து எங்களை காப்பாற்றினார்கள். எங்களை காப்பாற்றும் போது, அவர்கள், ’பிஸ்மில்லா, பிஸ்மில்லா’, என்று முணுமுணுத்தார்கள். எங்களை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு கொண்டுச் சென்றார்கள். நான் இங்கே இருக்கிறேன். அவர்கள் இப்போது எனக்கு அந்நியர்கள் அல்ல. அவர்கள் என் சகோதரர்கள்’’. என்று தெரிவிக்கிறார். இதுதான் உண்மையான காஷ்மீரி இன மக்களின் உன்னதமான வாழ்க்கை.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தின் தாழ்நிலை போரை சந்தித்து வருகின்ற காஷ்மீரி மக்களுக்காக, அவர்களின் அமைதியான வாழ்க்கைக்காக, சமாதானத்திற்காக குரல் கொடுப்போம். இதன் ஊடாக நேர்மையான ஊடகவியலாள்ர்களை கண்டறிந்து கார்ப்பரேட் காவிக்கு எதிராக களமாடுவோம்.
- பார்த்தசாரதி.